கன்யாகுமரி, வினாக்கள்

பேரன்பிற்குரிய ஜெயமோகன்  அவர்களுக்கு

தங்களின் கன்னியாகுமரி நாவல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இம்முறை மறுவாசிப்பு செய்யும்பொழுது எனக்குத் தோன்றியவைகளை நான்கு கேள்விகளாக வகுத்து, அவைகளுக்கு பதில் தேடும் விதமாக என் வாசிப்பனுபவத்தை பகிர்ந்துள்ளேன்.

நன்றிகள்

இப்படிக்கு

பாண்டியன் சதீஷ்குமார்
தென்கொரியா

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

1. ரவி போன்ற ஒரு சராசரி குணாதிசயம் கொண்ட மனிதனால் எப்படி ஒரு சிறந்த கலை படைப்பான “ஏகையாய ராஜகுமாரி” போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்க முடிந்தது?

தொடர் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு, ஒழுக்கம் தவறி, கௌரவத்தையும் உறவுகளையும், மொத்த வாழ்வையும் படிப்படியாக இழந்து, தனிமைப்பட்ட ஒரு பெண்ணில் எந்தச் சக்தியாலும் எடுத்துவிட முடியாத ஒன்றாக தாய்மை மட்டும் மிஞ்சுவதை சொன்ன படம் ஏகயாய ராஜகுமாரி. அப்படி ஒரு உச்சத்தை தன் உள்ளத்திலிருந்து ரவியால் தொட்டு எடுக்க முடிந்திருக்கிறது. எப்படி?

பெண்களுடனான உறவுகளில் எதிலும் ரவி ஒரு மதிப்புமிக்க மனிதனாக நடந்து கொள்ளவில்லை. ஒருவேளை அவன் சென்று முட்டி விழி பிதுங்கி நிற்கும் முனை அந்த தாய்மை தான் போல. அப்படி என்றால் ரவியின் அகத்தகம் விமலாவிடம் அந்த தாய்மையை கண்டுகொண்டதா, அதை தன்னால் எதிர்கொண்டு வாழ முடியாது என்று அவன் பிரங்கை சொன்னதை கேட்டு தான் அவளை விட்டு விலகி சென்றானா?

ரவி முதன் முதலில் கன்னியாகுமரிக்கு சென்றது அவன் சிறுவனாக இருக்கும் பொழுது. அங்கு முக்கடலையும் தன் காலடியில் கொண்டு மலை உச்சியில் ஒற்றை காலில் நின்று தவம் புரியும் கன்னி தேவியை கண்டபோது அவன் அகத்தின் அகம் அறிந்து கொண்டது “கன்னிமை – தாய்மை” என்ற கருத்துருவை தான். அப்படி குழந்தைமையினால் தொன்மம் மூலம் தான் பெற்றுக்கொண்ட கனவை அல்லது ஒரு தரிசனத்தை, தான் கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்ற கிராப்டின் மூலம், ஒரே ஒரு முறை வெளிப்படுத்தி, சிறந்த கலை படைப்பான ஏகையாய ராஜகுமாரி திரைப்படத்தை உருவாக்கி பெருவெற்றி பெற்று விட்டான். ஆனால் அதை அவன் பிரங்கை முழுதும்‌ அறிந்து கொண்டிருக்கவில்லை. தனக்குள் இருந்து வெளிவந்து பலரை ஆட்கொண்ட அந்த ஒரு துளி என்ன என்றும் அது எதனால் தனக்கு அருளப்பட்டது என்றும் அவன் முழுவதுமாக உணர்ந்திருக்கவில்லை. அதை பிரவீனா வந்து சுட்டி காட்டுகிறாள் “இனிமேல் உன்னால் அக்கனவிலிருந்து எதையும் வெளி கொண்டு வர முடியாது ரவி, நீ திரிந்து விட்டாய், உனக்குள் இருந்த குழந்தைமையை இங்கு வாழ்முறையில் வேரூன்றி இருக்கும் பெண்ணிய ஒழுக்கவியல் விழுமியங்கள் மிதித்து கொண்டு விட்டது” என்று.

அப்படி என்றால் இங்கு வாழ்க்கையில் இருந்தும் தொன்மம் குறியீடுகளில் இருந்தும் ஒருவன் தன் அகத்தகம் உணர்ந்ததை மொழியாக அறிதலாக வாழ்க்கையாக விழுமியங்களாக மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவன் வாழ்க்கையும் ரவியோட வாழ்க்கை மாதிரி தானா?. அப்படி இங்கு எத்தனை பேர் தன் அகம் உணர்ந்ததை அறிதலாக மாற்றிக் கொள்ளும் மொழிவளம் கொண்டிருக்கிறார்கள்? தன் அறிதலாக மாற்றிக் கொண்டவற்றை வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளும் தவம் கொண்டிருக்கிறார்கள்? அப்ப மிக மிக சிறுபான்மையினர் தவிர அனைவரும் ரவி தான் இங்கே.

2. விமலாவின் அப்பா முற்போக்கு மனம் கொண்டவரா?

இதை தன் மகளிடம் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை விட தன் மனைவியிடம் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்து தான் மதிப்பிட முடியும். கடந்த கால வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட ஒழுக்கவியல்களுக்கும், நவீனகால தனி மனித உரிமைகளுக்கும் நடுவே அல்லாடும் தற்கால மனிதன், தன்னால் செயல்பட முடிந்த எல்லைக்குள் மட்டுமே தன் மனைவி பறந்து பாடி (மகிழ்ந்து!) செயல்பட வேண்டும் என்று நினைக்கிறான், தன் மகள் என்று வரும் பொழுது தன்னால் பார்க்க முடிந்த தொலைவு வரை (மட்டும்!) மகள் பறந்து ஆள வேண்டும் என்று நினைக்கிறான். இது மனிதன் கொள்ளும் இருநிலை தான். ரவி தன் மகளிடம் கொண்டிருக்கும் உறவை நாம் பார்க்க முடிந்தால் நீ இவ்வளவு நல்லவனா என்று பொரும்பும்மபடிதான் அமைந்திருக்கும்.

3. விமலா வாசகர்களுக்கு அளிக்கும் தரிசனம் ?

ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது சிறு வயதில் பள்ளி ஆசிரியரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண், அந்த காயத்தை மனதில் சுமந்து கொண்டே, குற்ற உணர்வுடன் அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்து, படித்து மேல் ஏறி ஒரு நல்ல நிலைக்கு வருகிறாள். தன் கல்யாணத்திற்கு அப்பள்ளி ஆசிரியரின் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்து “என்னுடைய தன்னம்பிக்கை எப்படி எல்லாம் உங்களின் வக்கிர செயல் சிதைத்தது, பாருங்கள் நானும் ஒரு ஆளாகி விட்டேன்’ என்று தன் வெற்றியை காண்பித்து பறை சாற்றி விட்டு வருகிறாள். முதிரா பெண்ணியவாதிகளுக்கு இக்கதை உகக்கலாம். தன்னை சுற்றி இருக்கும் ஆண்கள் எல்லோரையும் திருத்தி தேவதூதர்களாக ஆக்கி சொர்க்கத்தையே இங்கு உண்டு பண்ணும் பகற்கனவில் லயித்து கரைய பயன்படலாம். ஆனால் அது மேலும் குற்ற உணர்வு கொண்ட அத்து மீறும் சமூகத்தை தான் உருவாக்கும் என்று தோன்றுகிறது.

கன்னியாகுமரியின் விமலா வாசகர்களுக்கு கடத்தும் தரிசனமே வேறு. தன்னை மாபெரும் கனவுக்கு ஒப்புக்கொடுத்தல்; அதை நோக்கிய செயல் உத்வேகம்; அதன் மூலம் இங்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் தூசி என்று சொல்லும் அளவுக்கு சிறுமையாக்குதல். சராசரி குடும்பப் பின்னணியில் இருந்து வந்த ஒரு பெண் விமலா. தன் காதலனுடன் தனித்து இருக்கையில் வன்முறை பின்னனி கொண்ட குழுவால் தன் பிறப்புறுப்பே சேதப்படும் அளவுக்கு கூட்டுவன்புணர்வு செய்யப்படுகிறார். அதன் பிறகு அவள் மனநிலை என்ன?. இச்சூழ்நிலையில் அனைவரும் மனமும் தேரும் அதே பாதையில் தான் அவள் மனமும் செல்கிறது.

முதலில் தோன்றும் எண்ணம் இக்கொடுமையை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க வேண்டும், களங்கம் ஏற்படும் என்பதுதான். பிறகு வேறு ஒரு காரணத்திற்கு செய்து கொள்வது போல் தற்கொலை செய்து சாகவேண்டும்.  தற்கொலை செய்து சாவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல என்பதை மனம் அறிந்தவுடன், காதலனிடம் கருணையை எதிர்பார்ப்பது, அவனும் சராசரி தான் ஒன்றும் தேற மாட்டான் என்று தெரிந்ததும், இதை அறிந்து ஏற்று தன்னை முழுமையாக அரவணைத்து செல்லக்கூடிய கருணை உள்ளம் கொண்ட கணவனை எதிர்பார்த்து உருகுவது. அப்படியே குற்ற உணர்வு கொண்டு அதை நினைத்து நினைத்து புலுங்கிக் கொண்டே வாழ்ந்து மடிவது என்றுதான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முடிந்து விடும். இங்கு மேலதிகமாக விமலாவுக்கு கிடைக்க கூடியது ஒரு கனவு, ” நீ படிச்சு பெரிய டாக்டராய்டுவேன்னு நெனச்சேன் என்னை ஏமாற்றி விடாதே” என்ற அவர் அப்பாவின் சொல்.

அந்தக் கனவை தன்னறமாக எடுத்துக் கொண்டு விரிகிறாள். ‘தன் உடலின் எல்லைக்கும் , உள்ளத்தின் அரதிக்கும் எதிராக சவால் விட்டுக்கொண்டு, ஓட்டத்தளத்தில் குறிக்கோளை நோக்கி உத்வேகத்துடன் ஓடிவரும் வீரர்களைத்தான் கடவுளுக்கு பிடிக்கும். அவர்களை பாதி தூரத்தில் கடவுளே வந்து கைபிடித்து மீதி தூரம் அழைத்து செல்கிறார்’ என்ற பிரவீனாவின் கூற்றுக்கேற்ப விமலாவின் உத்வேகத்திற்கிணங்க குரோமோசோம் பற்றிய அவளது ஆய்வில் விமலாவின் உள்ளுணர்வு திறக்கிறது, பிறகு வாழ்க்கை எல்லாமே அதுதான் என்று ஆகிறது.

விமலாவின் ஆராய்ச்சி உலகம் எப்படிப்பட்டது என்ற சித்திரம் கதையில் உள்ளது. காலையில் ஒரு சாக்லேட் மில்க், மதியம் உணவே இல்லை, இரவில் ஒரு சாண்ட்விச் மட்டும்தான். சாப்பிடும் போது தான் மெயில் பார்க்கும் நேரம், கழிவறையில் அமர்ந்து இருக்கும் போது தான் தட்டச்சு செய்து மெயில் அனுப்புவது, ஆய்வகத்தின் அருகிலேயே படுக்கை, ஆராய்ச்சி ஆராய்ச்சி ஆராய்ச்சி மட்டும்தான் வருடத்தின் 10 மாதங்களுக்கும். இப்படி மாபெரும் செயலால் ஆட்கொள்ளப்பட்டு அடித்து செல்லப்படும் ஒரு நபருக்கு மற்றவைகள் என்னதான் பொருள் படும். இங்குள்ள ஒழுக்க விழுமியங்கள், கற்பு,காமம், வன்புணர்வின் தடம்கள், கைவிட்டு சென்ற காதலன், வன்புணர்ந்த வன்முறையாளன் யாருக்கு தான் ஒரு பொருட்படுத்த தக்க பார்வையை அவள் அளிக்க முடியும்.அந்நிலையில் எல்லாம் சிறியவைகள் மிக மிக சிறியவைகள். முக்கடலும் எடையுடன் மோதி சங்கமித்து ஆர்ப்பரிக்கும் பேரலைகளின் கீழே, ஆழத்தின் அமைதியை தன் காலுக்கு கீழ் உணர்ந்து காலம் காலமாக அமைதியாக நின்றிருக்கும் தாய்மைதான் கன்னிமை, அக்கன்னி தாய்மைதான் பிரவீனா விமலா சைலஜா ரமணி மேரி எல்லாரும்.

4. ரவி விமலாவை இந்த அளவிற்கு வெறுப்பது எதனால்?

விமலாவால் இந்த காரணத்தை கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை அல்லது ரவி ஒரு கோழை என்ற பதிலில் அவள் கடந்து சென்று விட்டாள். பெண்களுக்கு எப்படி கற்பு என்கிற ஒழுக்கவியல் விழுமியம் இங்கு கட்டி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறதோ, அதேபோன்றுதான் ஆண்களுக்கும் ‘ஆண்மை’ என்று விழுமியமும் கட்டி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இணைவில் தன் துணையை கதறி அழ வைக்கவில்லை என்றால் அவன் ஆண்மையே அற்றவன் என்ற நம்பிக்கை இங்கு பொது புத்தியில் ஆழ வேரூன்றியுள்ளது. ஆனால், ஆண் பெண்ணின் உடல் நிலையின் அடிப்படையான வேறுபாடுகள் என்ன, இணையும்போது தெரிந்து கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச முறைமைகள் என்ன என்ற கல்வியறிவு பெரும்பாலான ஆண்களுக்கு துளியும் இருப்பதில்லை. டாக்டர் காமராஜ், டாக்டர் ஷாலினி போன்றவர்களின் ஒன்றிரண்டு புத்தகங்கள் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய விஷயம் தான் இது என்றாலும்.

இங்கு கன்னியாகுமரி நாவலில் என்ன நடக்கிறது. ரவி தன் காதலி விமலாவை கெஞ்சி கொஞ்சி பேசி, கன்னியாகுமரியில் லாட்ஜ் எடுத்து ஒரு நாள் இணைந்து இருக்க சம்மதம் பெறுகிறான். இருவரும் முதலில் இணைந்திருக்கையில் ரவிக்கு விரைந்து வெளியேறி விடுகிறது. அந்த நேரத்தில் விமலா சொல்கிறாள் “பரவாயில்லை பரவாயில்லை, இப்படித்தான் ஆண்களுக்கு சீக்கிரம் ஆகிவிடும் என்று புத்தகத்தில் படித்தேன், அடுத்தடுத்து சரியாயிடும்”. இடுப்புக்குக் கீழேதான் எல்லா வெற்றிகளும் என்று நம்பும் ஒரு ஆண் மைய சமூகத்தில் இவ்வளவு சொல்வது என்பதே கத்தியை வைத்து நெஞ்சுக்குள் இறக்குவதுக்கு ஒப்பானதுதான். ரவிக்குள் அந்த வார்த்தை கனன்று சுழன்று கொண்டு தான் இருக்கும் அவன் சாகும் வரை. அது அவனுடைய அகங்கார சாவேதான். அதன் பிறகு நடந்தவை அனைத்துக்கும் அவன் அளிக்கும் விளக்கம் இந்த அகங்காரச் சாவிலிருந்து தான் என்று நினைக்கிறேன். அவனுக்கு பெண்ணை உடலாக மட்டும் தான் பார்க்க முடிகிறது என்பதும் சரி, அதிலேயே இந்த ஆணுலகம் பகற்கனவில் கற்பிதம் செய்து வைத்திருக்கும் ‘ஆளப்பட வேண்டிய பெண்ணுடலாகத்தான்’ பார்க்க முடிகிறதே ஒழிய, டாக்டர்கள் குறிப்பிடும் பெண்ணுடலாக அல்ல. அப்படி பார்த்திருந்தால் கூட அவன் பிரச்சினையில் பாதி தோன்றாமலே போயிருக்கலாம்.

எனக்கு நச்சரிக்கும் ஒரு கேள்வி ஒன்று உண்டு ஒரு வேலை விமலாவிற்கு ரவிக்கும் இடையே முதல் பாலியல் உறவு சுமூகமாக, இருவருக்கும் ஒரு பிளசன்ட் பீலிங் உடன் நடந்து முடிந்து, பிறகு இவ்வன்புணர்வு காட்சி நடந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று. ரவியின் வாழ்க்கை இப்படியே தான் நடந்திருக்கும் சிறு மாற்றம் கூட இல்லாமல் என்று படுகிறது. ஏன் இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. ஆனால் ரவியின் மனம் கற்பிக்கும் காரணங்கள் மாறி இருந்திருக்கும். பிரம்மாண்ட பேரண்டம் என்கிறோம் அது மனது உருவாக்கும் பாவனைகளை பார்த்தால் தான் தெளிந்து வருகிறது. இம்மன பிரம்மாண்ட பெருவெளியில் இல்லாத காரணங்களா, மனம் எதையெதையோ எடுத்து கோர்த்து ஜோடித்து வைத்துக் கொள்கிறது. அதன் பின்னால் அறிவு பேப்பர் பேனாவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படிக்கு

பாண்டியன் சதீஷ்குமார்

அன்புள்ள பாண்டியன் சதீஷ்குமார்,

ஒரு நாவல் ஒரு முழுமையான வாழ்க்கைக்களம். அதற்குள் அந்தக் கதாபாத்திரங்கள் ‘உருவாக்கப்பட்டிருப்பதில்லை’ மாறாக அவர்கள் அதில் மெய்யாகவே ‘வாழ்கிறார்கள்’. ஆகவே மெய்யான வாழ்க்கையிலுள்ள எல்லா புதிர்களும், இரட்டைநிலைகளும், சிக்கல்களும் அதிலும் உண்டு. ஒருவரை முற்போக்கானவரா பிற்போக்கானவரா என வாழ்க்கையிலும் குழம்புகிறோம். ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்வினை ஆற்றும்வரை நாம் எப்படிப்பட்டவர்கள் என நாமே அறிவதில்லை.  நாவலில் உருவாகும் வினாக்களுக்கு நாவலே அந்தக் களத்திற்குள் நின்று விளக்கம் அளிக்கவேண்டும்.

எழுத்தாளர்கள் பற்றி பொதுக்கேள்வி அது. எழுத்தாளர்கள் ‘நல்லவர்கள்’ அல்லது ‘சான்றோர்கள்’ அல்ல. அவர்கள் தொண்டையிலுள்ள டான்ஸில் போல. அது மிக எளிதாக நோயுறும். ஆகவே நுரையீரல் செல்லும் வழியிலேயே வைரஸ்கள் அதை தாக்கும். அவ்வாறாக அது நுரையீரலுக்கு வைரஸ் செல்லாமல் காக்கும். எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் ’கூடுதலான நுண்ணுணர்வு’ கொண்ட சராசரி மனிதர்கள். அந்தக் கூடுதல் நுண்ணுணர்வால் அவர்கள் சராசரி மனிதன் அடையும் அனுபவங்களில் இருந்து கூடுதலாக உணர்வுகளையும் எண்ணங்களையும் தரிசனங்களையும் அடைந்து அதை எழுதுகிறார்கள். ஆகவே சராசரி மனிதனின் சிக்கல்களை கூடுதலாகக் கொண்டிருக்கிறார்கள்

ஜெ
முந்தைய கட்டுரைஅனுபவங்களிலுள்ள ஆணை
அடுத்த கட்டுரைவேதா கோபாலன்