அண்ணா ஹசாரே- ஒரு கடிதம்

ஐயங்களும், அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் எழும் இச்சமயத்தில் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.

‘ வரலாற்றின் மயக்கும் வசீகரம் என்னவென்றால் அது பாதி கோணமே முழுமையான கோணம் என்று நம்மை நம்ப வைத்து செயல்படுவதற்கான உணர்வெழுச்சியை அளிக்கிறது என்பதே. முழுமையான பார்வைக்காகக் காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை. இங்கேதான் வரலாற்றின் விடுதலை வாய்ப்புகள் உள்ளன. பாபா சாகேப் அவர்களும் பாபுவும் அத்தகைய படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மையுடன் வரலாற்றில் குதித்தனர். மோதிக்கொண்டனர். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே.. வரலாற்றில் குதித்தபின் ஒருவரின் மீறல்களை இன்னொருவர் சமன்செய்துகொண்டார்கள். அவர்களின் உக்கிரமான மோதல்களுக்குப் பின் இறுதியில் இருவருமே உருமாற்றம் பெற்றவர்களாக எழுந்து வந்தார்கள்… ‘ – ”எரியும் பாதங்கள்
”, டி.ஆர்.நாகராஜ் (மொழிபெயர்ப்பு: ஜெ)

என்னை மிகவும் சிந்திக்க வைத்த பத்தி இது. ஒரு சிந்தனையாளனின் மிகப் பெரிய சோகம் என்னவென்றால் அவன் யோசித்து முடித்து, ஒரு வழிக்கு வருவதற்குள் வரலாறு அவனைத் தாண்டி வேறெங்கோ சென்றிருக்கும் என்பதே. பிறகு மிச்சம் இருப்பது ஒரு வகை ஏக்கமும், ஆற்றாமையும் தான். படைப்பூக்கம் கொண்ட பொறுமையின்மை அடைந்தவர்களுக்கு மகாசமாதிநிலை என்பது வரலாற்றுச்செயல்பாடே என்பது என்னளவில் ஒரு பெரிய தரிசனம். நாம் யோசித்து, விரித்தெடுக்க வேண்டிய விஷயமும் கூட.

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, என்.ஜி.வோ கூலிப்படையோ, காங்கிரஸின் கைப்பாவையோ என்று நாம் எல்லாம் பேசி முடிப்பதற்குள் காலம் அஸ்தமித்து உதிர்ந்திருக்கும். அதன் பிறகு வருவது அடுத்த தலைமுறை. நம்முடைய அதே அவநம்பிக்கையுடனும், கசப்புடனும். இப்படி நடக்க வேண்டும் என்று தான் நாம் ஆசைப்படுகிறோமா?

சந்தேகங்கள் கூடாது என்று சொல்லவில்லை. அதற்காக அண்ணாஹசாரேவைத் தவிர அவர் கூட இருப்பவர்கள் எல்லாம் ஃபிராடுகள் என்று சொல்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை. அர்விந்த் கேஜர்வால் பற்றிய அந்த கேரவன் கட்டுரை சுத்த அயோகியத்தனம் அன்றி வேறல்ல. பாராட்டுவது மாதிரி பாராட்டி விட்டு முதுகுக்குப் பின் குத்துவது போன்ற உத்தி தான் அது. கடைசியில் என்ன சொல்ல வருகிறார்கள் அவர்கள்? அர்விந்த் கேஜர்வால் ஒரு சர்வாதிகாரி. பிடிவாதக்காரர். அண்ணா அவரது கைப்பாவை என்றுதானே? இதை விட ஒரு மடத்தனமான விமர்சனத்தை ஒருவர் மேல் வைக்க முடியுமா என்று எனக்கு புரியவில்லை.

மக்கள் இயக்கம் என்பது ஒரு பிரசார இயக்கமும் (campaign) கூட. பிரசார இயக்கத்தை நடத்தி செல்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. வெளியே விடும் ஒவ்வொரு வார்த்தையின் கவனம் தேவை. கொஞ்சம் இம்மி பிசகினால் கூட காரியம் கெட்டு விடும். ’அன்னா தான் இந்தியா. இந்தியா தான் அன்னா’ என்று கிரண் பேடி உணர்ச்சி வசப்பட்டுச் சொன்ன ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து என்னென்னவெல்லாம் காங்கிரஸ்காரர்களும், மீடியா ஆசாமிகளும் சொன்னார்கள்! இப்படி எதுவும் ஆகாமல் பார்த்துக்கொள்வதைத்தான் கேஜர்வால் தொடர்ந்து செய்து வருகிறார். அதனால் அவரை ஒரு சர்வாதிகாரி, பிடிவாதக்காரர் என்று அந்த கேரவன் நிருபர் சொல்வதெல்லாம் என்ன மாதிரியான ஒரு அறிவுஜீவித் திமிர் என்று புரியவில்லை.

நமது மீடியா ஆட்களுக்கு இந்திய வரலாறும், சமூகவியலும் தான் தெரியாது என்றால் அவர்களுக்கு மேற்கத்திய வரலாறும், சமூகவியலும் கூட எதுவுமே தெரிவதில்லை. நிறுவனங்கள் (institutions) எதற்காக உருவாகின்றன, அதன் தேவைகள் என்ன, அவை எப்படி காலப்போக்கில் ஏன் ஊழல் மலிந்து, உறைந்து போகின்றன, பின்னர் எப்படி எதனால் மாற்றம் அடைகின்றன, என்பது குறித்த ஒரு அடிப்படை வாசிப்பு கூட அவர்களுக்கு இல்லை. இருந்தால் இணை அதிகாரம், இணை அரசியல், சிலவராட்சி (oligarchy) என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்குவதோ அல்லது ஏற்கனவே உறைந்து தேங்கி சூம்பிப் போய் இருக்கும் ஒரு நிறுவனத்தில் மாற்றங்களை உண்டு பன்ணுவதோ தனி நபர் ஒருவரால் மட்டும் சாத்தியமான விஷயம் அல்ல. ஒரு சமூக இயக்கம் (social movement) தேவை. அப்படி ஒரு இயக்கம் இல்லாமல் மக்களின் கூட்டு கவனத்தயோ, ஆதரவையோ, பெற முடியாது. ஏன் என்றால் நிறுவனங்கள் மக்களை ஒரு சட்டத்திற்குள் அடைத்துவிடுகின்றன (framed). அவர்களின் அன்றாட செயல்பாடுகளை, நடைமுறைகளை, சமூக அடையாளத்தை எல்லாம் நிறுவனங்களே பெரும்பாலும் கட்டமைக்கின்றன. ’அது அது அப்படித் தான் இருக்கும்’ என்ற ஒரு மனநிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறன. அந்த மனநிலையை உடைத்து, அந்த சட்டத்தை கலைந்து (deframe) செல்வதற்கு இப்படிப்பட்ட சமூக இயக்கங்கள் தேவை. கருத்தியல் தளத்தில் லட்சியவாதமும், நடைமுறை தளத்தில் செயல் வேகமும், சமரசமும் உள்ள அண்ணா ஹசாரே போன்ற குறியீடுகள் தேவை. செய்திகள் திரிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள கேஜர்வால் போன்ற நபர்கள் தேவை.

இப்படியான ஒரு சமூக இயக்கத்திற்கும், ஸ்டாலினிய இயக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகள் எத்தனையோ ஆய்வுகள் மூலம் பலமாக நிறுவப்பட்டு உள்ளன. சூழலிய இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், consumer watchdog இயக்கங்களில் இருந்து MADD (Mothers against drunken driving) இயக்கங்கள் வரை ’சமூக இயக்கம்’ என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் நம் முன் உள்ளன. இதெல்லாம் மீடியா, மாஸ் கம்யூனிகேசன் படிப்பு படித்து விட்டு வரும் ஒவ்வொரு ஊடக ஆசாமியும் படித்து விட்டு வருவது தான். இருந்தும் ’ஊழலுக்கு எதிராக இந்தியா’ என்ற சமூக இயக்கத்தை ஒரு ஸ்டாலினிஸ்ட் இயக்கம் மாதிரி ஊடகங்கள் கட்டமைப்பது சுத்த அயோக்கியத்தனம் அன்றி வேறல்ல. இந்த பற்றியெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் கூட ராம் குகா போன்றவர்கள் பெரும்பாலும் மௌனம் சாதிப்பது மிகுந்த சங்கடத்தைத் தருகிறது.

கெ.அர்விந்த்

அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்

அண்ணா வெல்வாரா?

அண்ணா ஹசாரேவின் அரசியல்

அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?

அண்ணா எதிர்வினைகள்

அண்ணா ஹசாரே,ஞாநி,சோ

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்