ஞானமெனக் கனிதல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.. ஒரு கேள்வி..  நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க நினைத்து, தயங்கி கேட்காமல் இருக்கும் கேள்வி. கேட்பது சரியா என்று தெரியவில்லை. தவறாக இருந்தால் அல்லது அடிப்படைகள் தெரியாமல் கேட்கிறேன் என்றால் மன்னிக்கவும்..

நீங்கள் சங்கரரின் அத்வைத வழியை பின்பற்றுவதாக பல முறை எழுதியிருக்கிறீர்கள். அதே நேரம் உங்கள் விடுதலை எழுத்தின் வழி என்று குரு நித்யாவின் கட்டளை படி இலக்கிய பாதையில் வந்தீர்கள் என்றும் வாசித்து இருக்கிறேன்.

முக்தி அடைய வழி ஞானம் மட்டுமே, அந்த ஞானம் வேதங்கள் மூலமே அடைய முடியும்,   கர்ம யோகம் என்பது ஞானயோகம் நோக்கி செல்ல நம்மை தயார் படுத்துவது தானே தவிர ஞானத்தை அடைய வழி அல்ல அது என்பது தானே சங்கரரின் போதனை

கர்மம் மூலம் அத்வைத தரிசனம் அடைய வழி உள்ளதா? கேள்வியில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்

வெண்ணி

அன்புள்ள வெண்ணி

சுவாரசியமான கேள்வி. ஏனென்றால் வெறும் தர்க்கத்துக்காக மூளையால் கேட்கப்படாமல் நேர்வாழ்க்கை சார்ந்து கேட்கப்பட்டுள்ளது.

சங்கரர், அல்லது அத்வைதம் சொன்னது இது என ஒருவர் சுருக்கிச் சொன்னால் அது எதுவானாலும் பிழை. சங்கரர் முன்வைத்தது ஒரு போதனையை, அறிவுரையை அல்ல. அத்வைதம் என்பது அன்றாட வாழ்க்கை அல்லது ஆன்மீகம் சார்ந்த நெறிநோக்கு அல்ல. அது ஒரு தரிசனம், அந்த தரிசனத்தின் விரிவான தத்துவ விளக்கம். ஆகவேதான் அதை ஆசிரியரிடமிருந்து பலகோணங்களில் கற்றறியவேண்டும், அக்கல்வியில் இருந்து தானாக உணர்ந்து தெளிந்து அதில் அமையவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதை ஒரு நூலில் இருந்து, அல்லது உரையில் இருந்து ‘அறிந்துகொள்வது’ முற்றிலும் பிழையானதாகவே ஆகும்.

ஆகவே இந்தச் சிறிய குறிப்பில் விவாதிப்பது மேலும் குறுக்குவதாக அமையக்கூடும். இப்படிச் சொல்கிறேன். சங்கரர் ஞானம் என்பது ‘அறிந்துகொள்ளுவதை’ அல்ல. ‘அறிவின் தொகுப்பை’யும் அல்ல. வேதங்களையோ அல்லது வேறேதேனும் அறிவுத்தரப்பையோ அறிந்துகொள்வது விடுதலையை அளிக்காது. முழுக்க அறிந்தாலும்கூட. அறிவுக்கு எல்லையும் எதிர்ப்பும் உண்டு (அறிவின்னு அதிருண்டு எதிருண்டு) என்பது நாராயணகுருவின் சொல்

சங்கரர் சொல்லும் ஞானம் என்பது பிளவுப்பார்வை என்னும் அறியாமை (அவித்யை)யை முழுக்கக் களைந்து இரண்டின்மை (அத்வைதம்) என்னும் ஓருமைப்பார்வையை அடைவது. பிரம்மம் – பிரபஞ்சம், பரமாத்மா – ஜீவாத்மா, முடிவிலி – அன்றாடம், நாம் – பிரபஞ்சம் என நாம் ஏராளமான இருமைகளை உருவாக்கி அதில்தான் வாழ்கிறோம். நம் இவ்வுலக அன்றாடவாழ்க்கை முழுமையாகவே அந்த இருமைகளில்தான். அதை மாயை என உணர்ந்து முற்றிலும் அதை அகற்றி முழுமையான ஒருமையுணர்வை அடைவதே ஞானம்.

அதை  அறிந்துகொள்வது, நம்புவது மிக எளிது. அதை நம் அகம் நம்பி ஏற்பதும் நம் அதுவாகவே ஆவதும் மிகமிக கடினம். நாம் வாழும் இந்த அன்றாட யதார்த்தத்தை முழுக்கக் கடந்து சென்று அடையவேண்டிய பெருநிலை அது. அதற்குச் செய்யப்படும் முயற்சிகளையே ஞானயோகம் என்று வேதாந்தம் சொல்கிறது. ஞானநூல்களை அறிவது அதன் முதல்படி மட்டுமே. அது நம் அறிவை நிறைவு செய்கிறது. அதைக் கடந்து நம் ஆழுள்ளமாகவும் நம் உள்ளுணர்வாகவும் அதை ஆக்க தொடர்ச்சியான ஆசிரியர் வழிகாட்டல் தேவை. தொடர்ச்சியான பயிற்சிகள் தேவை.

வேதஞானம் என சங்கரர் சொல்வது வேதங்களை கற்றறிவதை அல்ல. அப்படி என்றால் வேதம் கற்ற அறிஞர்கள் எல்லாம் வீடுபேறடைந்த ஞானிகளா என்ன? சங்கரர் சுருதிப்பிரமாணம் என வேதங்களை தன் உரைகளில் முதன்மையாக முன்வைத்தாலும் அவர் வேதக்கல்வியை வலியுறுத்தவில்லை. வேதத்தின் சடங்குகள் சார்ந்த கர்மகாண்டத்தை நிராகரித்து ஞானகாண்டத்தை மட்டுமே முன்வைத்தார். அவை வேதாந்த நூல்களில் முழுமையாக உள்ளன என்றார். வேதத்தின் மெய்ஞானம் என்பது ‘பிரம்மமே உண்மை, பிரபஞ்சமும் நம் தன்னிலையாகிய ஆத்மாவும் மாயை’ என்ற தரிசனம்தான் என்று சங்கரர் சொல்கிறார். வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி வேதத்தின் இறுதிதான் என்பது அவர் தரப்பு. அத்வைதம் எனப்படும் அந்த வேதாந்தத்தை தன் உரைகள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் நிறுவுகிறார்.

வேதாந்தத்தின்  தரிசனத்தை கவித்துவமாகவும், தர்க்கபூர்வமாகவும்  அறிந்துகொள்வதே வேதஞானம் என்னும் சொல் வழியாக உணர்த்தப்படுகிறது. ஆனால் அதை நம் அகமாக, நம் ஆழமாக, நம் ஆளுமையாக ஆக்கிக்கொள்வதே தவம். எந்த அறிவும் அப்படித்தான் நாம் ஆக மாறுகிறது. சங்கரர் ஞானயோகம் என்று அதைச் சொன்னார். நாராயண குரு ‘அறிவில் அறிவாய் அமைதல்’ என இதைச் சொல்கிறார். அறிவு, அறிதல், அறிபவன், அறிபடுபொருள் நான்கு ஒன்றேயாகும் நிலை என அதை விளக்கினார்.

சங்கரர் காலகட்டத்தில் சரியாக என்னென்ன பயிற்சிகள் இருந்தன என்று தெரியவில்லை. ஆனால் சங்கர மரபைச் சேர்ந்தவர்கள் அவர் காலகட்டத்திலேயே அதற்கான வெவ்வேறு அக- புற பயிற்சிகளை உருவாக்கிவிட்டனர்.

அறிந்தவற்றை ஆதலாக ஆக்கிக்கொள்ளுதல் என்னுமிடத்தில் வேதாந்தம் யோகப்பயிற்சிகளுடன் இணைகிறது. உள்ளத்தை குவித்தல், ஊழ்கத்தில் அமைதல், அறிந்தவற்றை கடந்து சென்று அப்பாலுள்ளவற்றை அடைதல் போன்றவை யோகம் வழியாக அடையத்தக்கவை என வேதாந்திகளில் ஒருசாரார் எண்ணினர். பல வேதாந்த பள்ளிகளில் யோகம் பயிற்றுவிக்கப்படுகிறது. விவேகானந்தர் ராஜயோகப் பயிற்சிகளை முன்வைத்தார்.

யோகப்பயிற்சிக்கு நேர் மறு எல்லையில் வழிபாடுகள், பக்தி ஆகியவற்றையும் ஞானம்  நோக்கிய அகப்பயிற்சியாக வேதாந்தமரபில் ஒரு சாரார் முன்வைக்கின்றனர். நாராயண குரு ஆறுமதங்களுக்கும் உரிய தோத்திரங்களை எழுதியதும் ஆலயங்களை நிறுவியதும் அதனாலேயே. சங்கரரே ஆறு மதங்களுக்கும் உரிய தோத்திரங்களை எழுதினார் என்று கூறப்படுகிறது.

பயிற்சியின் இன்னொரு வகை என செயல்களத்தைச் சொல்லலாம். சுவாமி விவேகானந்தர் இதை கர்மயோகம் என்ற பெயரில் தீவிரமாக வலியுறுத்தி எழுதியுள்ளார். நாராயண குரு அதை முன்வைத்தார். காந்தியும் வேதாந்தியே. அவர் அதையே அனாசக்தியோகம் என்று சொன்னார்.

செயல்கள் எவையாயினும் யோகம் என செய்யப்படுகையில் அவை மெய்ஞானம் நோக்கிக் கொண்டுசெல்கின்றன. நாம் அறிந்தவை நம் ஆளுமையென ஆவதற்கு செயலே வழி. செயல் வழியாக நாம் நம்மை கண்டடைகிறோம், மேலும் மேலும் தெளிவடைகிறோம். ஓர் ஊருக்கான வழியை வரைபடத்தில் அறிவதற்கும் நேரடியாகச் செல்வதற்குமான வேறுபாடு.

சங்கரர் கர்மகாண்டத்தை எதிர்க்கிறார். அதாவது காமகுரோதமோகங்கள் என்னும் முக்குணங்களின் அடிப்படையில் செய்யப்படும் வேள்விகளை, வழிபாடுகளை பொருளற்றவை என்கிறார். பயன்கருதாது, தன்னறம் எனச் செய்யப்படும் செயலான கர்மயோகத்தை அல்ல. அந்த வேறுபாடு மிக நுட்பமானது. ஆனால் மிக முக்கியமானது.

பேதமின்மை என்னும் மெய்ஞானநிலையே வேதாந்தம் சொல்லும் வீடுபேறு. ஆனால் அதை நோக்கிச் செல்லும் வழிகள் பல. ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய வழிகள் உள்ளன. அவரவர் எடைகளை உதறாமல் அந்த மலையை ஏறமுடியாது.

நித்ய சைதன்ய யதியின் வரலாற்றில் ஓர் இடம் வரும். நித்யா நடராஜகுருவிடம் மாணவராக இருக்கையில் ஒருநாள் ஒரு வேதாந்த இதழ் நடத்தும் திட்டத்துடன் சென்று அவரிடம் பேசுகிறார். நடராஜகுரு சீற்றமடைந்து அந்த திட்டவரைவை கிழித்தெறிகிறார். ‘நான் உனக்கு ஒரு புல்லாங்குழல் தந்தேன். நீ வாள் வேண்டுமென்று கேட்கிறாய்’ என்றார்.

ஆனால் இருநாட்கள் கழித்து நடராஜகுரு சொன்னார். ‘உன் குருதியில் நுரை மிகுதி. ஏனென்றால் வாளேந்தி போரிட்டு நிலம்வென்றவர்கள் உன் முன்னோர். ஆகவே ஒரு முறை இந்தியாவைச் சுற்றிவா. உன் நுரை அடங்கட்டும்’ நித்யா இந்திய முழுக்க பிச்சை எடுத்தபடி தன்னந்தனியனாகச் சுற்றிவர அனுப்பப்பட்டார். இந்து துறவிகள் அனைவர் வாழ்விலும் அப்படி பல கட்டங்கள் உண்டு. ஒன்று பரிவிராஜக வாழ்வு எனப்படும் நாடோடி வாழ்க்கை. இரண்டு சேவை காலகட்டம். அதனுடன் இணைந்ததுதான் ஞானநூல்களை பயில்தல்.

என் செயற்களம் இலக்கியம் – அறிவியக்கம். நான் கற்கும் மெய்ஞானம் அதன் வழியாகவே ‘என்’ ஞானமாக ஆகவேண்டும். அச்செயல்கள் வழியாகவே நான் என்னை அதுவாக ஆக்கிக்கொள்ளவேண்டும். இதை கர்ம-ஞான யோகம் எனலாம்.

ஜெ

பிகு.1:

இந்தவகை விவாதங்களை இப்படி பொதுத்தளத்தில் நிகழ்த்தாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இப்படி நிகழ்ந்தால்தான் இவ்வண்ணம் சில விஷயங்கள் இங்கே உள்ளன என்பது ஆர்வமுள்ளவர்களுக்கு தெரியவரும். தமிழ்ச்சூழலில் தத்துவ-மெய்யியல் விவாதங்கள் மிகமிக அரிதானவை.

ஆனால் இத்தகைய விவாதம் பொதுவெளியில் நிகழ்கையில் நான்கு அபாயங்கள் உள்ளன. ஒன்று, எந்த பின்புலமும் இல்லாமல், மேலோட்டமான வாசிப்பை மட்டுமே நம்பி தன்னம்பிக்கையுடன் பேசவருபவர்கள் உருவாக்கும் முடிவில்லாத குழப்பங்கள். அவர்களின் ஆணவமே பிரச்சினை என்பதனால் அவர்களிடம் விவாதிக்க முடியாது, தெளிவு நோக்கி செல்லவும் முடியாது. இரண்டு, ஆசாரவாதிகள் மற்றும் மூர்க்கமான மதநம்பிக்கையாளர்கள் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் மறுத்து வசைபாடி தங்கள் தரப்பை முன்வைப்பார்கள். மூன்று, அறிவார்ந்த எதையும் அஞ்சி, அத்தாழ்வுணர்ச்சியால் அவற்றை நையாண்டி செய்யும் கும்பல் எல்லா விவாதங்களையும் சல்லிசாக்கிவிடும். நான்கு, எல்லாவற்றையுமே அன்றாட அதிகார- கட்சியரசியலுக்குள் கொண்டுவந்து காழ்ப்பும் எதிர்ப்புமாகவே அணுகும் தரப்பு.

இவை நான்குமே எதிர்நிலைகள். தத்துவக்கல்வியில் எதிர்மனநிலையில் நின்று கற்பது என்பது ஓர் அறிவுத்தற்கொலை. இந்த எதிர்நிலைகளை எதிர்த்தாலே நாம் எதிர்மனநிலைக்குச் செல்கிறோம். இது முழுக்க முழுக்க நேர்நிலையாக அணுகப்படவேண்டிய ஒன்று. ஒரு நல்ல கவிதையை அதற்கான பரவசநிலையில், முழுமைநிலையில் அடைவதைப்போல எனலாம். அதைவிட பலமடங்கு மேலான பேரனுபவம். ஆகவே எல்லைக்குட்பட்டு மட்டுமே இவற்றை முன்வைக்கிறேன், ஒரு தொடக்கமாக.

பிகு 2:

இத்தகைய விவாதங்களை முறையான முழுமையான கல்வி இல்லாமல் அங்கே இங்கே கேட்டவற்றை, அறிந்தவற்றைக்கொண்டு நடத்தும்போது நாம் பிழையான புரிதல்களை அடைகிறோம். அறியாமையை விட பிழையான அறிவு ஆற்றல்மிக்க தடை. உதாரணமாக, வேதாந்தம் என்பது ஒற்றை தரப்பு அல்ல. அதில்  நவவேதாந்தம் போல பல படிநிலைகளும், பல காலகட்டங்களும், பல சிந்தனைப்பள்ளிகளும் உண்டு. நான் நாராயணகுருவின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவன்.

இக்காரணத்தால்தான் முறையான பயிற்சிவகுப்புகளை நடத்தி முழுமையாக அறிமுகம் செய்கிறோம். அத்தகைய வகுப்புகளில் ஐயங்கள், விவாதங்கள் எல்லாம் பல வகுப்புகளுக்குப் பின் மட்டுமே அனுமதிக்கப்படும். பயிலப்பயில எளிய ஐயங்கள் எல்லாம் அகலும். ஒருவர் அவருக்கேயாக கொண்டுள்ள ஐயங்கள் மட்டுமே மிஞ்சும். அவையே அங்கே விவாதிக்கப்படும். நீங்கள் இன்னும் எந்த வகுப்பிலும் கலந்துகொள்ளவில்லை

=====================================================

சிறில் அலெக்ஸ் நடத்தும் பைபிள் வகுப்புகள்

ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

அமலன் ஸ்டேன்லி நடத்தும் பௌத்த மெய்யியல்- தியான வகுப்புகள்

நாள் ஜூலை 5,6  மற்றும் 7  (வெள்ளி, சனி ,ஞாயிறு)

நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய மெய்யியல் வகுப்புகள்

ஜூலை 12 13 மற்றும் 14 

முந்தைய கட்டுரைபெ.நா.அப்புசாமி
அடுத்த கட்டுரைதியான யோக வழிகளும் ஆலயங்களும்