விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
அன்புள்ள ஜெ,
வெ.நி.சூர்யாவுக்கு விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
தற்செயலாக அவருடைய ஒரு கவிதை கண்ணுக்குப் பட்டது. அதற்கு முன் சுந்தர ராமசாமியும், அதற்கு முன் பாரதியும் எழுதிய ஒரு வேண்டுதல் அதில் இருந்ததாகப் படுகிறது. கவிஞர்கள் உலகியலில் வேண்டிக்கொண்டால் எதை கேட்பார்கள்? பணம், புகழ், அதிகாரம், போகம்? ஆனால் அவர்கள் இங்கே வேண்டுமென்று கேட்பன எல்லாமே இங்கே இல்லாமல், அவர்கள் தங்கள் அகத்தே தேடிக்கொண்டிருக்கும் சிலவற்றின் குறியீடுகள்தான். பாரதி கேட்பது தென்னந்தோப்பு அல்ல. நிலவில் ஜொலிக்கும் தென்னந்தோப்புதான்.
சுந்தர ராமசாமி அடுத்த தலைமுறையில் அந்த கற்பனாவாதம் மீது ஒரு மெல்லிய நையாண்டியை கலந்துவிடுகிறார். முகம் பார்த்து தலைசீவ நிலவு. நேர் எதிராக லோஷன் மணக்கும் பாத்ரூம். மனக்குதிரைகள் நிற்க ஒரு லாயம்.
வெ.நி.சூர்யாவின் கவிதை அந்த மாடர்னிச நையாண்டியை கடந்துவிடுகிறது. வெளிச்சத்தில் வழிதவறுபவனின் வேண்டுதல்கள் அவை. மெய்யான ஒரு தவிப்பு கொண்டவை. புதுச்சட்டை போல் அணிய நிலக்காட்சிகளை கோரும்போதே கூடவே கானலையும் கேட்பவை. ஒவ்வொரு முற்றுப்புள்ளிக்கு பிறகும் நீண்ட கோடைமழை வேண்டும் என்னும் ஏக்கம் கொண்டவை.
அந்தக் கவிதையில் வெ.நி.சூர்யா மறுபக்கம் அந்த இறைவனை வரையறை செய்ய முயல்கிறார்
நதியெனப் பாயும் இடையறாத தருணங்களாய் இரு
உன்னில் நீந்துகையில், இறைவா,
உனதாழத்தினுள் இழுத்துக்கொள்.
என்று கோரும்போதிருக்கும் உணர்வு அதன் சிக்கலான ஒரு தருணத்தைக் கண்டடைகிறது.
எமக்குத் தாரும்
உன்னை நம்புவதற்கான காரணங்களை.
உனது அருளேயின்றி மின்னும் ஒரேயொரு கணத்தை.
ரவிச்சந்திரன் குமார்
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும் -அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்.அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும் -என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும் என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
கொஞ்சம் முகம் பார்த்து
தலை சீவ ஒரு சந்திரன்.
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று
அசைபோட ஒரு லாயம்.
என் கையெழுத்துப்
பிரதியில் கண்ணோடமுகங்
கொள்ளும் – ஆனந்தச் சலனங்கள்.
நான் காண – ஒரு பெண்.
சிந்திக்கையில்
கோத ஒரு வெண்தாடி
சாந்த சூரியன்
லேசான குளிர்
அடிமனத்தில் கவிதையின் நீரோடை.
– சுந்தரராமசாமி
எமக்குச் சிந்தை நிறைய ஜொலிக்கும் எண்ணங்கள் வேண்டும்
புதுச்சட்டை போல உடுத்த அன்றாடம் ஒரு நிலக்காட்சி வேண்டும்
கானல் தோற்றங்கள் பல வேண்டும்
ஒவ்வொரு முற்றுப்புள்ளிக்கு பிறகும் நீண்ட கோடைமழை வேண்டும்.
வெளிச்சத்தில் வழிதவற வேண்டியவன்தான் நான்
வெ.நி.சூர்யா