விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா
அன்புள்ள ஜெ
வே.நி.சூர்யாவுக்கு விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அளிக்கப்படும் செய்தி வியப்பளிக்கவில்லை. இந்தத் தளத்தை தொடர்ச்சியாகக் கவனிப்பவர்கள் எவருக்கு விருது செல்லும் என்று எளிதில் ஊகிக்கலாம். அந்தக் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருப்பீர்கள்.
கவிஞர் வே.நி.சூர்யாவை நான் உங்கள் தளம் வழியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிந்துகொண்டேன். அவ்வப்போது இணையத்தில் அவருடைய கவிதைகளை வாசித்தேன். ஓர் இளம்கவிஞராக ஒரு புதிய மொழிக்காகவும் கூறுமுறைக்காகவும் தவமிருக்கும் ஒருவராக அவரை புரிந்துகொண்டிருக்கிறேன். அரிய பல வரிகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது. ‘உள்ளுணர்வுக்கு எட்டிய தொலைவு வரை எவருமில்லை’ என உணரும் தனிமை கொண்ட கவிதைகள்.
அவருடைய மொழியாக்கக் கவிதைகள் மீது எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் ஒரு கவிஞர் தன் மொழியைக் கண்டடைவதற்கான முயற்சிகளில் அதுவும் ஒன்று என நினைக்கிறேன். இன்னொரு மொழியுடன் முட்டி மோதி தன்னை பலவகையில் உருமாற்றிக்கொண்டுதான் கவிஞர்கள் பலசமயம் தங்கள் மொழியை கண்டடைகிறார்கள்
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ,
வே.நி.சூர்யாவுக்கு விருது செய்தி அறிந்தேன். அவருடைய அந்தியில் திகழ்வது ஒரு நல்ல கவிதைத்தொகுப்பு. மிகுந்த தீவிரத்துடன் கவிதையில் இயங்கி வருபவர். இன்றைய சூழலில் கவிதைபோல ஓர் அருவக்கலையில் கண்காணாத இடத்தில் இருந்துகொண்டு முழுமையாக வாழ்க்கையையே அர்ப்பணித்து எழுதிக்கொண்டிருப்பதென்பது ஒரு மகத்தான தவம். இந்த விருது அவருக்கு ஊக்கமூட்டுவதாக அமையட்டும்.
சிவக்குமார் செல்லப்பா