ஜெ,
இந்து இயக்கங்கள்தான் அண்ணா ஹசாரே பின்னால் இருக்கின்றன என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?
சிவமணி,சென்னை
அன்புள்ள சிவமணி,
லோக்பால் மசோதாவுக்கான இந்தப் போராட்டத்தை கூர்ந்து பார்த்தால் அரசியல் கணக்குகள் எளிதில் மாறிக்கொண்டிருப்பதைக் காணலாம். எல்லா அரசியல்கட்சிகளும் இதில் தள்ளாடும் நிலையையே கொண்டிருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே.
அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆரம்பித்தபோது காங்கிரஸ் அஞ்சியது. அந்தபோராட்டம் காங்கிரஸை ஊழல் அரசாக மக்கள் மத்தியில் சித்தரிக்குமென நினைத்தது. அதை தவிர்க்க எளிய வழி என்பது அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவளராக சித்தரிப்பது. அதன் வழியாக இந்த ஒட்டுமொத்தப் போராட்டமே அரசை எதிர்த்து எதிர்க்கட்சியினர் செய்யும் போராட்டம் மட்டுமே என்று காட்டுவது.
அதன் மூலம் எளிதாக அண்ணா ஹசாரேவின் மக்களாதரவை, நம்பகத்தன்மையை குலைக்கமுடியுமென காங்கிரஸ் நினைத்தது. ஏனென்றால் பாரதிய ஜனதாவும் ஊழலில் நனைந்த கட்சியே. லோக்பாலுக்கான கோரிக்கை அரை நூற்றாண்டாக இருக்கிறது. ஒருகாலத்தில் அதற்காக ஜனசங்க நிறுவனர் சியாமபிரசாத் முக்கர்ஜியே பேசியிருக்கிறார். ஆனால் பாரதிய ஜனதாக்கட்சி அதை அவர்களின் ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளவேயில்லை.
இன்று கர்நாடகத்தில் லோக்பால் அளவுக்கு அதிகாரமில்லாத லோக் ஆயுக்தா போன்ற அமைப்பால் அதன் ஊழல்கள் வெளியே இழுத்துப்போடப்பட்டு மிக தர்மசங்கடமான நிலையில் அது உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஊழலைப்பற்றிப்பேசினால் அதை எவரும் பொருட்படுத்தப்போவதில்லை என காங்கிரஸ் அறியும்.
மேலும் அண்ணா ஹசாரேவின் இயக்கத்தை பிளவுபடுத்தவும் அது உதவும். ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையும், இடதுசாரிக்கட்சிகளையும் அவரது இயக்கத்தில் இருந்து வெற்றிகரமாக பிரித்துவிட முடியும். அவர்கள் பாரதியஜனதா மீண்டும் பதவிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே காங்கிரஸ் ஊடகங்களும் ஊழல்முத்திரை கொண்ட திமுக போன்ற கட்சிகளும் அண்ணா ஹசாரேவை பாரதிய ஜனதாவுடன் சம்பந்தப்படுத்தி எல்லா ஊடகங்களையும் கவர்ந்துகொண்டு பிரச்சாரம் செய்தன. ’நடுநிலை’ இதழாளர்கள் அதற்காக உரிய வாடகைக்கு எடுக்கப்பட்டார்கள்.
ஆனால் மெல்ல மெல்ல அது திருப்பியடிக்க ஆரம்பித்தது. பாரதிய ஜனதா என்பது ஒரு ஒற்றையமைப்பு அல்ல. அதற்குள்ளும் ஊழலால் பொறுமையிழந்த ஒரு பெரும் தொண்டர்படை உள்ளது. அவர்கள் பலவருடங்களாகவே தலைமைமேல் சோர்வுற்று இருந்தார்கள். பாரதிய ஜனதா ஊழல் சார்ந்த விஷயங்களில் மென்று முழுங்குவது அவர்களுக்கு தெரியும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட தனிநபரான சுப்ரமணியசாமி செய்ததைக்கூட பாரதிய ஜனதா என்ற பெரிய எதிர்க்கட்சி செய்யவில்லை என அவர்கள் அறிவார்கள்.
ஆகவே தொண்டர்களில் கணிசமானவர்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்பால் ஆதரவு மனநிலை கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களால் அண்ணா ஹசாரேவை நம்ப முடியவில்லை. காரணம் இப்போது அண்ணா ஹசாரேகூட இருக்கும் அர்விந்த் கேஜரிவால், கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் போன்றவர்கள் வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். தொண்டர்களின் மனம் ஊழல் ஒழிப்பை நோக்கிச் செல்வதை கண்ட பாரதிய ஜனதாவின் தலைமை அண்ணா ஹசாரே இயக்கத்தை ஓர் இடதுசாரிக்குழு என்று சித்தரித்து பிரச்சாரம் செய்தது.
ஆக ஒரு விசித்திரமான நிலை. அண்ணா ஒருபக்கம் பாரதிய ஜனதாக்கட்சிக்காரர் என வசைபாடப்பட்டார். மறுபக்கம் அவர் காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு ஒரு நாடகம் நடத்துபவராக காட்டப்பட்டார். ஒரே சமயம் இருபக்கமும் வசை.
அண்ணா ஹசாரேவுக்கே சங்கடமான நிலைதான். அவர் தன் போராட்ட வேகத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமென்றால் பிளவுபடாத மக்களாதரவு தேவை. அவர் எந்தக்கட்சியையும் சாராதவர் என்ற அடையாளமே அவருக்கு மக்கள்கூட்டத்தை திரட்டுகிறது. ஏனென்றால் மக்கள் அந்த அரசியல்வாதிகள்மேல் ஆழமான ஐயம் கொண்டவர்கள். ஆகவே அவர் தன்மேல் இந்துத்துவ முத்திரை குத்த காங்கிரஸ் செய்த முயற்சிகளை தாண்டவேண்டியிருந்தது.
அதற்காக அண்ணா பல சமரசங்களைச் செய்தார். அவர் ஆரம்பத்தில் பாரதஅன்னை படத்தையும் விவேகானந்தர் படத்தையும் வைத்திருந்தார். இந்திய பண்பாட்டுப்பரப்பில் பாரதமாதா என்பது மதம் சார்ந்ததல்ல. இந்திய சுதந்திரப்போரை ஒருங்கிணைத்த குறியீடு அது. சுவாமி விவேகானந்தரை இந்துத்துவத்துடன் அடையாளப்படுத்துவது அயோக்கியத்தனம் அன்றி வேறல்ல. இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் தேசிய முன்னோடி அவர்– அதை அறுதியாக ஆணையிட்டு சொல்லும் குரலை நாம் அம்பேத்காரில் காணலாம்
ஆனால் காங்கிரஸ்-இடதுசாரி ஊடகங்கள் அவ்விரு படங்களையும் வைத்தே அவரை இந்துத்துவர் என்று முத்திரை குத்தின. தன் இயக்கம் பிளவுபடுவதை விரும்பாத அண்ணா அவற்றை நீக்கிக்கொள்ளவேண்டியிருந்தது. இந்த தர்மசங்கடம் காந்திக்கு பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. ஒவ்வொருமுறையும் ஒற்றுமையை முன்வைத்து சமரசங்களை அவர் செய்திருக்கிறார். ஏனென்றால் பிளவுபடுத்தப்பட்ட மக்கள் போராட்டம் எளிதில் பிசுபிசுக்கும். அதை எதிரிகள் நன்கறிவார்கள்
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரம்பத்தில் எல்லா காங்கிரஸ்காரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஜார்ஜ் ஜோசப் போன்ற கிறித்தவர்கள், அப்துல் ரகுமான் சாகிப் போன்ற இஸ்லாமியர். ஒருகட்டத்தில் ஆலயபிரவேசம் அனுமதிக்கப்படாவிட்டால் மதம் மாறுவோம் என ஈழவர் தலைவரான குஞ்சுராமன் அறிவித்தார். உடனே ஈழவர்களை ஒட்டுமொத்தமாக மதம் மாற்ற இஸ்லாமிய குழுக்களும் கிறித்தவக்குழுக்களும் களமிறங்கின.
இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு பழமைவாதிகள் இந்த ஒட்டுமொத்த ஆலயநுழைவுப்போராட்டமே இந்துமதத்தை அழிக்க இஸ்லாமியரும் கிறித்தவரும் நடத்தும் சதியே என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்துக்கள் மத்தியில் மிக விரைவில் அந்த பிரச்சாரம் வலுப்பெற்றது, எந்த சந்தேகமும் சீக்கிரம் பரவும். சதி என்று கூச்சலிட்டாலே மக்கள் திரும்பிப்பார்ப்பார்கள்
ஆகவே காந்தி வைக்கம் போராட்டத்தில் உள்ள மாற்றுமதத்தவர் உடனடியாக வெளியேறவேண்டும் என்று கோரினார். அதை ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடன் அங்கே தற்காலிக முகாமடித்திருந்த ஈவேராவும் சேர்ந்துகொண்டார். காந்திக்கு எதிரான ஒரு குழுவாக அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் காந்திக்கு வேறு வழி இல்லை. போராட்டத்தை அவர் காத்தாகவேண்டும். அதுதான் இங்கேயும் அண்ணா சந்திக்கும் நிலை.
இவ்வாறு பாரதமாதா, விவேகானந்தர் படங்களை அண்ணா ஹசாரே நீக்கியதைச் சுட்டிக்காட்டி அண்ணா காங்கிரஸ் கைக்கூலி என பாரதிய ஜனதாவின் கொள்கை இதழ்கள் பிரச்சாரம் செய்தன. அண்ணா ஹசாரே அரசுக்கு ஒரு வாய்ப்பளித்து தன் போராட்டத்தை ஒத்திவைத்த நிலையில் பாபா ராம்தேவ் களமிறங்கினார். அவருக்கு ஏற்கனவே அரசியல் ஆசைகள் இருந்தன. கட்சி ஆரம்பிக்கப்போவதாகச் சொல்லிவந்தார். இந்த சந்தர்ப்பம் தனக்கு ஒரு தொடக்கமாக இருக்குமென நினைத்தார்
பாபா ராம்தேவ் களமிறங்கியபோது பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மனத்தடையின்றி அதில் ஈடுபட்டனர். அண்ணா ஹசாரேவின் நோக்கத்தையும் பின்னணியையும் பற்றி ஆயிரம் ஐயங்களை எழுப்பிய இந்துத்துவ இதழ்கள் ராம்தேவை அடுத்த விவேகானந்தர் என்றன. அவரை காங்கிரஸ் தலைவர்கள் ரத்தினக்கம்பளம் விரித்து கொண்டுவந்ததைக் கண்டும் அவர்கள் ஐயப்படவில்லை. காரணம் அவர் அணிந்திருந்த காவி.
ராம்தேவை காங்கிரஸ் அஞ்சியது. காரணம் அவரது மதச்சின்னம். அது பழைய ராமஜன்மபூமி விவகாரம்போல வெடிக்கும் என நினைத்தது. ஆனால் சீக்கிரமே அவர் ஒரு பயந்தாங்குளி என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவருக்கு அவரது சீடர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் மட்டுமே பின்புலம், மக்கள் அல்ல என வெளிப்படையாக தெரிந்தது. ஆகவே சாதாரணமாக அவரை அடித்து துரத்தினார்கள்.
மீண்டும் அண்ணா ஹசாரேவின் போராட்டம் ஆரம்பித்த போது எழுந்த மக்கள் ஆதரவு காங்கிரஸ்,பாரதியஜனதா என இரு கட்சிகளையுமே அச்சுறுத்துகிறது. காங்கிரஸின் அச்சம் இந்த மக்களெழுச்சி அரசு மீதான வெறுப்பாக மாறி அடுத்த தேர்தலை பாதிக்கும் என்பது. அரசுகள் எல்லாமே செய்வதைப்போல முன்னர் செய்ததையே திருப்பி செய்துபார்த்தது காங்கிரஸ். அண்ணாவை கைதாக்கி அச்சுறுத்த முயன்றது. அண்ணா ஹசாரே ராம்தேவ் அல்ல என்று நிரூபணமாயிற்று.
மறுபக்கம் பாரதிய ஜனதாக்கட்சி இந்த மக்கள் எழுச்சியை சாதகமான அலையாக மாற்றமுடியுமா என திட்டமிடுகிறது. ராம்தேவிடம் ஏமாந்த அதன் தொண்டர்படையில் கணிசமானவர்கள் ஏற்கனவே அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே பாரதிய ஜனதாவின் தலைமை அண்ணா ஹசாரேவை வேறுவழியில்லாமல் ஆதரிக்கிறது.
ஆனால் அவர்களின் அதிதீவிர மையம் அண்ணா ஹசாரேவை ஒரு இடதுசாரியாகவே பார்க்கிறது. காங்கிரஸ் ஏதோ சதி செய்கிறதென்பதே அதன் எண்ணம். அவர்களில் தீவிரவாதிகள் இதை அமெரிக்க சதியாக நினைக்கிறார்கள். அவர்களின் இதழ்களில் அண்ணா ஹசாரே ஒரு ஏமாற்றுப்பேர்வழியாகவே சித்தரிக்கப்படுகிறார்.
காங்கிரஸை அச்சுறுத்துவது லோக்பால் வழியாக பொதுநல ஊழியர்கள் ஆட்சிக்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் என்ன செய்வது என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்றவற்றை எதிர்கட்சியுடன் பேரம்பேசி மூன்றுவருடம் பொதுக்கணக்கு குழுவுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது, லோக்பால் வந்தால் அது முடியாது. ஆகவேதான் அது லோக்பாலை ஒரு ஒப்புக்குச்சப்பாணி அமைப்பாக ஆக்க முயல்கிறது.
மறுபக்கம் பாரதிய ஜனதாவுக்கும் அதே அச்சம்தான்.அவர்களும் ஆளும்கட்சிதான், பல மாநிலங்களில். நாளை ஒருவேளை மத்தியில். அப்போதும் இதே பொதுநல ஊழியர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது? மிதமான அதிகாரம் கொண்ட கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்பே எதியூரப்பாவை ஓட ஓட துரத்தியிருக்கிறது.
ஆனால் இருதரப்புமே மக்கள் சக்தியை அஞ்சுகின்றன. அண்ணா இந்த அச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அதுவே சரியானது. இப்போராட்டம் பாரதிய ஜனதாவுக்குச் சாதகமாக சென்றுவிடக்கூடாது என அஞ்சி காங்கிரஸ் சமரசத்துக்கு வநதாகவேண்டும். அதுவே வெற்றியாக அமையும். பாரதிய ஜனதாவைப்பொறுத்தவரை அப்படி சீக்கிரமே சமரசமாகி காங்கிரஸ் தப்பிவிடுமா என்ற ஐயம் காரணமாக அது பதறுகிறது.
இடதுசாரிகளைப்பொறுத்தவரை இந்த எழுச்சி அவர்களுக்குச் சாதகமானதல்ல. ஏனென்றால் இதை அவர்கள் நடத்தவில்லை. இதன் விளைவுகளால் பாரதிய ஜனதா லாபமடையும் என்றால் அவர்களுக்கு அது நஷ்டம். ஆகவே அண்ணாவை எதிர்க்கிறார்கள். ஆனால் லோக்பால் வருமென்றால் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள போகிறவர்கள் அவர்களே. குறிப்பாக தொழிற்சங்க அமைப்புகள். ஆகவே அவர்கள் மென்று முழுங்குகிறார்கள்
கட்சி சாராத ஒரு மக்கள்தரப்பு என்பதை சந்திப்பது இந்த எல்லா அரசியல்தரப்புகளுக்கும் புதிரானதாக உள்ளது ஆகவே ஆளுக்கொரு குரலில் குழப்பிக் குழப்பி பேசிக்கொண்டிருக்கின்றனர். நடுவே அண்ணாவின் இயக்கம் எல்லா மக்களியக்கங்களையும்போல ஒருவகையான தன்னிச்சையான பிரவாகமாக, சமரசங்களும் உத்வேகங்களுமாக முன்னகர்கிறது
அண்ணாஹசாரே இத்தகைய போராட்டத்தில் எந்த நிபந்தனையையும் ஆதரவாளர்கள்மேல் போடமுடியாது. ஏனென்றால் இது தன்னிச்சையான கூட்டம். வருபவர்கள் எல்லாரையும் அவர் ஏற்றாகவேண்டும். அவர்களில் இந்துத்துவர் இருந்தால், அவர்களின் கடைசி நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், தடுக்கமுடியாது. அதேசமயம் அவர் தன்மேல் இந்துத்துவ அடையாளம் விழுவதை அனுமதித்தால் அதைவைத்தே காங்கிரஸ் அவதூறு செலுத்தும். பாரதிய ஜனதாவின் ஆதரவை விலக்குகிறார். காங்கிரஸையும் பாரதியஜனதாவையும் சமதூரத்தில் வைத்துக்கொள்ள முயல்கிறார். இது ஒரு கத்திமேல் நடை.
ஜெ
இரு இந்துத்துவக்குரல்கள்
1. விஜயவாணி