இந்த ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணம். ஈரோடு கிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் கசகிஸ்தானுக்கு ஒரு சுற்றுலா. கொஞ்சநாள் முன்னால் கிளம்பலாமென நினைத்திருந்தோம், அப்போது அங்கே பூஜ்யம் பாகைக்கு மிகக்கீழே குளிர். இப்போது ஊட்டி போல் இருக்கும் என்று தோன்றுகிறது.
இன்று, மே 4 மாலையில் பெங்களூரில் இருந்து டெல்லிக்குச் செல்கிறோம். மே 5 விடியற்காலையில் டெல்லியில் இருந்து கசகிஸ்தானின் அல்மாட்டிக்கு பயணம். அங்கிருந்து மே 12 ஆம் தேதி அஸ்தானாவில் இருந்து கிளம்பி அல்மாட்டி வந்து அங்கிருந்து டெல்லி. திரும்பவும் இந்தியா. ஈரோடு கிருஷ்ணன், அரங்கசாமி, ஓசூர் பாலாஜி. திருப்பூர் ஆனந்தகுமார், செல்வேந்திரன், சுந்தர பாண்டியன் மற்றும் நான் என ஒரு கும்பல் செல்கிறது.
இதுவரை நான் பரவலாக அறியப்படாத ஒரு நாட்டுக்குச் சென்றதில்லை. இது அந்தவகையான பயணம். உலக அளவில் பழைய சோவியத் நாடுகளான இப்பகுதிகள் இப்போதுதான் சுற்றுலாப்பயணிகளால் கண்டடையப்பட்டு வருகின்றன. ஐரோப்பியப் பயணம் ஒருவகையானது. மானுடப்பண்பாட்டின் சில உச்சங்களை அங்கே காண்கிறோம். கஸகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைப் போன்றவை, இன்னும் நவீனவாழ்க்கை உருத்திரளாதவை. அங்குள்ளது இன்னொரு உலகம்.