அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
அயோத்திதாசர் வாசிப்பின் படிநிலைகளில் தங்களின் கட்டுரை தொகுதியை வாசித்து அதன் தொடர்ச்சியாக ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘வாழும் பௌத்தம் ‘ நூலை சமீபத்தில் வாசித்து முடித்தேன்.
அவரின் அயோத்திதாசர் பற்றிய ஆய்வுகள் , உரைகள் ஆகியவற்றின் தொகுப்பான இந்நூல். பண்டிதரின் பன்முகத்தன்மையை எந்தவித சார்பும் , நிலைப்பாடுமின்றி நம் முன்வைக்கிறது.
பெயரளவில் மட்டுமே காதில் விழுந்துகொண்டிருந்த பெயர் அயோத்திதாசர் . இன்னும் சொல்லப்போனால் சில சாதிய அமைப்புகளில் வரிசையாக இருக்கும் படங்களில் அவருடையதும் ஒன்று என்று எண்ணும் அளவில் மட்டுமே.
ஆனால் அவர் பிறப்பு, அரசியல் ஆன்மீக செயல்பாடுகள், மரபை அவர் அணுகியவிதம் , காலனிய அரசை அவர் பார்த்த ஆதரித்த விதம், ஆனால் அதன் தாக்கம் தன் சுயத்தேடலில் இடைவராமல் கொண்ட விலக்கம் , இலக்கியத்திற்கு அவரின் தமிழன் இதழ் மற்றும் அவரெழுதிய உரைகள் வழியான கொடைகள் என விரிந்து ஒரு பரந்துபட்ட பார்வையை நம் முன்வைக்கிறார் திரு.ஸ்டாலின்.
தீண்டத்தகாதவர்கள் என இன்று சமூகத்தால் கரிசனத்துக்குள்ளாக்கப்படும் மக்களின் பூர்வநிலை என்ன அவர்கள் எப்படி இந்நிலைக்கு வந்தனர் . இல்லை வரவைக்கப்பட்டனர் எனத் தெளிவாக ஆதாரத்துடன் பேசுகிறது இந்நூல் . அவர்களை எப்படி ‘திரும்ப திரும்ப பொய்கள் சொல்லப்பட்டதாலும் , காலத்தால் பழமையாக்குதலாலும் , புனைதலாலும் , திரிபுபடுத்துதலாலும் , போல செய்ததாலும் ‘ நிலைக்கு வந்தனரோ அதற்கு ஒருபடி மேலாக அவர்கள் பாதிக்கப்பட்டது அவர்களுக்கு ஆபத்துத்துதவிகள் போல வந்த இன்றைய இடைநிலை சாதியினர் எனத் தெளிவாக அறியமுடிகிறது.
அதோடு பகுத்தறிவாதிகள் என சொல்லிக்கொள்ளும் மூடநம்பிக்கைவாதிகள் அவர்களுக்கு இழைத்துவரும் மறைமுகத்துயர்கள் எண்ணிறந்தவை.
பறையர் , கார்த்திகை தீபம் , தீபாவளி , திருக்குறள் , திருவண்ணாமலை போன்ற சொல்லாடல்கள், விழாக்கள், இடங்கள் , என இவையனைத்தும் இனி எனக்குத் தெரியப்போவது வேறுவிதமாக என்றால் அது மிகையில்லை.
தொடக்கத்தில் ஒரு சில கட்டுரைகளில் (அவை உரைகளாய் வெவ்வேறு இடங்களில் பேசப்பட்டதால் ) முதலில் கொடுக்கப்பட்ட செய்தியே மறுபடியும் வருவது சற்று சோர்வை ஏற்படுத்தியதுபோல தோன்றியது. ஆனால் இப்போது தோன்றுகிறது . அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்ததால் தான் என்னின் சிற்றறிவில் அயோத்திதாசர் நிறைவாக சென்று சேர்ந்திருக்கிறார் என.
15.2.2024 அன்று இந்நூலை வாசிக்க எடுத்த நான் இந்த இரண்டு மாதங்களில் உங்களின் நூல்கள் (புறப்பாடு, வாழ்விலே ஒரு முறை , வணிக இலக்கியம், ஜெயமோகன் குறுநாவல்கள் ) மற்றும் கொடைமடம் என இதை கிடப்பில் போட்டு மற்ற நூல்களை வாசித்திருந்தேன் . இந்த நூலின் வாசிப்பையே கைவிடலாமென தோன்றாமல் இல்லை அயோத்திதாசர் பதிப்புப் பணிகள் பற்றிய பக்கங்களை வாசித்துக்கொண்டிருந்தபோது . ஆனால் முயன்று பார்ப்போமென தொடர்ந்து வாசித்து முடித்தேன் . நல்லவேளை பேரிழப்பிலிருந்து காக்கப்பட்டேன் என்றே சொல்லவேண்டும் .
நன்றி
அன்புடன்
கே.எம்.ஆர்.விக்னேஸ்