வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
அன்பு ஜெ,
பெங்களூரு கட்டண உரையில் பங்குகொண்டு தங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. சாரு ஒரு உரையில் ஜெயமோகன், எஸ்.ரா இருவரும் பல்கலைக்கழகங்கள் செய்யவேண்டிய செயல்களை தனி மனிதர்களாக செய்து கொண்டிருக்கின்றனர் என்றார். நம் பயிற்சி வகுப்புகள் தொடங்கியபின் யோக வகுப்பு, ஆலய கலை, முதல் முறையாக நடைபெற்ற சைவ திருமுறை வகுப்பு மற்றும் தங்களின் தத்துவ வகுப்புகளில் பங்கேற்றிருக்கிறேன். தற்போது https://unifiedwisdom. guru/ தளத்தை பார்க்கையில் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள், புதுப்புது அனுபவங்கள். அறிவார்ந்த தத்துவ, இலக்கிய உரையாடல்கள். Unifiedwisdom தளம் வகுப்புகளின் நிரல்கள், அனுபவங்கள், அறிவிப்புகள் என்று ஒட்டுமொத்த சித்திரத்தை அளிக்கிறது. எத்தனை பெரிய அறிவு தளத்தில் ஒரு பங்கு கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியும் பரவசமும் கொள்கிறேன்.
தற்போது வெண்முரசின் வண்ணக்கடல் படித்துக்கொண்டிருக்கிறேன். இளநாகனுடன் நானும் தற்போது கலிங்கபுரியில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் கா லை குருஜி கற்று கொடுத்த ஆசன, மூச்சு பயிற்சிகளை முடித்துவிட்டு ஒரு அத்தியாயத்தை படித்து வருகிறேன். இன்று காலை படித்த அத்தியாயம் https://venmurasu. in/vannakkadal/chapter-49/.
“விஷுவ ராசியில் சூரியன் நுழையும் முதல்நாளை விஷு என்கிறார்கள். விஷுவராசியில் சூரியன் உத்தராயணத்துக்கும் தட்சிணாயணத்துக்கும் சரியான மையத்தில் இருக்கிறான். அந்நாளில் ஐந்துமங்கலங்களுக்கு முன் முதல்கண் விழித்து கையில் மஞ்சள் காப்புகட்டி அர்க்கநோன்பைத் தொடங்குவார்கள். பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் முதல் கிருத்திகை நட்சத்திரம் வரை அனலோனுக்குரிய நாட்கள். அப்போது அர்க்கபுரிக்குச் சென்று அங்குள்ள செங்கதிரோன் ஆலயத்தில் கடல்நீராடி வழிபட்டு மீள்வது நெறி” என்றார் அருணர். “அர்க்கபுரியை வேதரிஷிகளும் வாழ்த்தியிருக்கிறார்கள். கிழக்கே எழும் சூரியனின் முதல் கதிர் பாரதவர்ஷத்தில் படும் இடம் இதுவென சோதிடவேதாங்க ஞானிகள் கண்டடைந்தனர்.”
இந்த பத்தியை படிக்கையில் ஒரு Trance நிலையை அடைந்தேன். 25000 பக்கங்கள் கொண்ட பெரும் காட்டாற்று ஒழுக்கில் எப்படி சரியாக இந்த நாளில் இங்கு வந்து நிற்கிறேன் என்று வியந்து கொண்டேன். இது தற்செயலா அல்லது இயற்கையா என்றறியேன். ஆசிரியர்களை வணங்கும் இந்நன்னாளில் விஷு குறித்த அத்தியாயத்தை வாசித்ததை உங்களி ன் ஆசியாக எண்ணிக்கொள்கிறேன். நன்றி ஆசானே.
அன்புடன்,
மனோஜ், திருவானைக்காவல்
அன்புள்ள மனோஜ்,
அத்தகைய இனிய தற்செயல்கள் அவ்வப்போது எனக்கும் அமைவதுண்டு. அதற்குப் பல விளக்கங்கள். இங்கே நிகழ்வன ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன, இந்த வாழ்க்கையே நன்றாகத் தொகுத்து எழுதப்பட்ட ஒரு பெரிய கதைபோன்றதே என்பார்கள். நான் உணர்வது, நம் ஆழுள்ளம் நம்மையறியாமலேயே இயங்கி இந்த தொடர்புகளை உருவாக்கிக் கொண்டுவிடுகிறது என்பதே. இதற்கிணையான ஒரு அழகிய தற்செயல் இன்றும் எனக்கு நிகழ்ந்தது.
ஜெ