தேனீயை எண்ணிக்கொள்கிறேன். தேன்கூட்டை எடுத்து தேன்புழுவைப் பார்க்கையில் என்ன ஓர் அற்புதமான பிறவி என்னும் வியப்பு ஏற்படும். இனிப்பில் பிறந்து இனிப்பில் திளைத்துத் திளைத்து வளர்ந்து சிறகும் வண்ணமும் அடைந்து வானிலெழுகிறது. பின் வாழ்நாளெல்லாம் தேனைத் தேடி அலைகிறது. இந்த உலகமே தேன் கனியும் வண்ணமலர்களின் பெருவெளியாக மட்டுமே அதற்குத் தெரிகிறது. எப்படி அது தேனை மறக்கமுடியும்? தேன்சுவை அதன் பிறப்பிலேயே கைகூடியதல்லவா?
நான் என் உடல், உள்ளம் முழுக்க இனித்த நாலைந்து நாட்களை நினைவுகூர்கிறேன். 2021 ஏப்ரலில் நான் குமரித்துறைவியை எழுதிய நாட்கள். எழுத்துவதற்கு முன் ஒரு மிதப்பு இருந்துகொண்டே இருந்தது. மிக இனிய ஒரு நினைவு உள்ளிருந்து எழமுயல்வதுபோல, ஆனால் அதை தெளிவாக மீட்டுக்கொள்ளவும் முடியாததுபோல. இசை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த உளநிலையில் இசை கேட்க முடியாது. இசை அந்த மனநிலைக்கு வெகுகீழே நின்றிருக்கும். நான் கேட்டுக்கொண்டிருந்தது பீம்சேன் ஜோஷி. ஆனால் அவருடைய ஆழ்ந்த குரலின் மயக்கத்தைவிட பெரிதாக இருந்தது என் மயக்கம்.
எங்கெங்கோ தொட்டுத்தொட்டு மீண்டுக் கொண்டிருந்தது உள்ளம். அப்போது முன்பு கேட்ட ஒரு செய்தியின் நினைவு எழுந்தது. குமரியன்னை இங்கே ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் ஒளிந்து உறைந்த காலம், அன்னை மீண்டு மதுரைக்குச் சென்ற தருணம். ஒரு கணம்தான். என் கைகால்கள் உதறிக்கொண்டன. என் மூளைக்குள் அதிர்வு எழுந்தது.
தட்டச்சு செய்யமுடியாதபடி விரல்கள் துடித்ததை உணர்கிறேன். எப்படி எழுதுவதென்று யோசிக்கவில்லை. என் அகத்திலிருந்து இந்தக் கதை உருவாகி வந்துகொண்டே இருந்தது. வீட்டில் எவருமில்லை. தன்னந்தனிமை. சமைக்கவோ சாப்பிடவோ இல்லை. ஒருமணிக்கு ஒருமுறை டீ மட்டும் குடித்துக்கொண்டிருந்தேன். எழுதி எழுதி ஒரே மூச்சில் இந்நாவலை முடித்தேன். உண்மையில் இது நாவல் என நான் அறிந்திருக்கவில்லை. சிறுகதை என நினைத்தேன். குறுநாவல் என பின்னர் தோன்றியது. அச்சில் வந்தபின்னரே இத்தனை நீளமானது இது என தெரிந்தது.
நாவல் முடிந்தபின்னரும் என் அகத்தே அந்த மீட்டல் முடியவைல்லை. பல நாட்கள் நீடித்தது. மெல்ல மெல்ல அது அமைந்தடங்கி நான் விடுபட்டபோது ஆழ்ந்த ஏக்கம் எஞ்சியது. ஆழ்நிலைத் தியானம் ஒன்றில் இருந்து விழித்துக் கொண்டதுபோல. நான் இந்தப் புவி முழுக்க மலர்தேடி தேன் தொட்டு எடுத்துச் சேகரிக்கும் சிறு தேனீ. இந்நாவலில் என் பிறவித்தேனில் திளைத்திருந்தேன்.
Apr 22, 2021 ல் இந்நாவல் என் இணையதளத்தில் வெளியாகியது. இது வாசகர்களை ஒரு உன்னதமான பித்துநிலையில் திளைக்கச் செய்யும் என எனக்குத் தெரியும். அத்தகையோரே என் வாசகர்கள். வாசகர்களின் கடிதங்கள் வந்து குவிந்தன. அவை புதியவர்களின் வாசிப்புக்குத் தடையாகவேண்டாம் என எவற்றையும் வெளியிடவில்லை.
அடுத்த ஆண்டு நண்பர்களுடன் ஆரல்வாய்மொழி மீனாட்சியன்னையின் திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அங்குதான் தொடங்கும். அதன்பின்னரே மதுரையில் நிகழும். அவ்வாண்டே மதுரை மீனாட்சி திருமணத்திற்கும் நண்பர்களுடன் சென்றேன். ஓராண்டு முழுக்க நானும் நண்பர்களும் இந்நாவல் உருவாக்கிய இனிமையில் வாழ்ந்தோம்.
இந்நாவல் எழுதப்பட்டு என் இணையதளத்தில் தொடராக வெளிவரும்படி அமைக்கப்பட்டபோது என் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளருமான கே.வி.அரங்கசாமி அப்படியே படித்துவிட்டு என்னை அழைத்தார். கண்ணீர் வழிய விம்மிக்கொண்டிருந்தார். அவரால் கோவையாகப் பேசமுடியவில்லை. இந்நாவலின் முதல் வாசகர் அவரே
அரங்கசாமிதான் இந்நாவலை தொடராக வெளியிடலாகாது, ஒரே நாளில் வெளியிடவேண்டும், ஏனென்றால் இந்த உணர்வுச்சம் நடுவே இடைவெளி விடப்படலாகாது என்று என்னிடம் சொன்னார். அவ்வண்ணமே இது வெளிவந்தது.
இன்று கே.வி.அரங்கசாமி மற்றும் யான் அறக்கட்டளை சார்பாக இந்நூல் விலையில்லா பதிப்பாக வெளிவருகிறது. பரவலான வாசகர்களிடம் சென்றடையவேண்டும் என்பது நோக்கம். இந்த முன்னுரையை நான் எழுதும் இன்று ஆரல்வாய்மொழியில் மீனாட்சி அன்னையின் திருமணம். தற்செயல்தான், ஆனால் தற்செயல்களால் ஆன அருள் ஒன்று உண்டு இங்கே.
யான் அறக்கட்டளைக்கும் இந்நூலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.
ரிக்வேதம் சொல்கிறது. ‘தேவர்களை அவியால் வளரச்செய்யுங்கள். தேவர்கள் உங்களை வளரச் செய்வார்கள்’ எளிய வரி அல்ல அது. நுண்ணுணர்வுடன் ஆன்மிகத்தையும் மறுபக்கம் மானுடப் பண்பாட்டு வரலாற்றையும் அறிபவர்கள் மட்டுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியும். தெய்வங்கள் நம் உருவாக்கமே. நாம் நம் வடிவங்களை, நம் வாழ்க்கையை, நம் உணர்வுகளை அவற்றுக்கு அளிக்கிறோம். ஆனால் மறுபக்கம் நம்மால் அவ்வண்ணம் அறியப்படும் ஒன்று, அவ்வாறு அறியப்படும் தன்மை கொண்ட ஒன்று, நிலைகொள்கிறது. நம்மால் அறியப்படுவதாகவும் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டதாகவும். அது அவ்வாறே நமக்கு வெளிப்பட முடியும். வெளிப்படுவது அது. ஆனால் அது அவ்வண்ணம் வெளிப்பட்டது மட்டும் அல்ல.
ஆகவே நாம் தெய்வங்களுக்கு அனைத்து மங்கலங்களையும் வழிபாடென அளிக்கிறோம். அம்மங்கலங்களென அது தோற்றம் அளிக்கிறது. அம்மங்கலங்களை நமக்கு அது அளிக்கிறது. மங்கலங்களில் உச்சம் மணமங்கலம். அத்தனை மங்கலங்களும் ஒன்றென குவியும் ஒரு நிகழ்வு அது. மாமழை ஒரு மணமங்கலம். வசந்தம் ஒரு மணமங்கலம். ஆன்மா இறையை உணரும் தருணமும் ஒரு மணமங்கலமே. அந்த பெருமங்கலத்தை இறைக்கு அளிக்கிறோம். அந்த மங்கலங்கள் அனைத்தும் நமக்கும் அருளப்படுவதாக.
ஆம், அவ்வாறே ஆகுக!
ஜெயமோகன்
(யான் அறக்கட்டளை சார்பில் குமரித்துறைவி நாவல் 5000 பிரதிகள் இலவச வினியோகம் செய்யப்படுகின்றது. யான் அறக்கட்டளை பதிப்புக்கு எழுதிய முன்னுரை)