அன்புள்ள ஜெ,
தமிழில் எப்போதும் விற்பனையில் முன்னணியில் இருக்கும், ராகுல்ஜியின் இந்த புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். இந்த நூலை வாங்குகையில், நூலடக்கம் பற்றி பெரிதும் ஏதும் அறிந்திருக்கவில்லை. எனக்கு ஆர்வமுள்ள வரலாற்று பின்புலம் கொண்டதென்பதாலும், வெளிவந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து பிரபலமாக உள்ள நூல் என்பதாலும் வாசிக்கத் தொடங்கினேன். தவிர, ஆசிரியர் ராகுல சாங்கிருத்தியாயனின் ஆளுமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் உட்பட 30 மொழிகளில் தேர்ச்சியும், வடமொழி/வேதங்களில் ஆழ்ந்த அறிவும் கொண்டிருந்திருக்கிறார். சுதந்திரத்திற்கு முன்னான காலத்திலேயே, மிக விரிவான பயணங்கள் செய்திருக்கிறார்.
ஆரிய படையெடுப்புக் கோட்பாடு உண்மையென்று மிகப்பரவலாக எல்லாராலும் நம்பப்பட்ட காலத்தில் 1943-44களில் ராகுல்ஜி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். ஏறத்தாழ 10000 வருட மனிதகுல வரலாற்றை, புனைவு கலந்த வரலாற்று நூல் வடிவில், மார்க்சியப் பார்வையுடன் கொடுத்திருக்கிறார். ரஷ்யாவின் வால்கா நதிக்கரையிலிருந்து ஆரியர்கள் நூற்றாண்டுகளாக இடம்பெயர்ந்து கங்கைக் கரையிலமர்ந்து பாரதத்தைக் கட்டமைப்பதாக எழுதிச் செல்கிறார்.
தனித்தனியான 20 கதைகளில் இந்தோ–ஆரிய இனத்தின் வரலாற்றை கி.மு. 6000ம் ஆண்டிலிருந்து கி.பி. 1942 வரை விவரித்துள்ளார். நூலின் தொடக்கத்தில் ஆதியில் இருந்த வால்கா நதிக்கரை மக்களின் தாய்வழிச் சமுதாய அமைப்பானது, சிறிதுசிறிதாக தந்தைவழிச் சமுதாயமாக மாற்றம் கண்டதை விவரிக்கிறார். பழங்கால பொதுவுடைமைச் சமுதாயத்திலிருந்து சொத்துரிமை உருவாகி, பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
பின்னர் கற்காலத்திலிருந்து உலோக காலத்திற்கு வந்து சேர்ந்ததையும், ஆரிய இன மக்களின் போர்க்காலத் தலைவனாக இந்திரன் உருவாகி வருவதையும், அவர்கள் படிப்படியாக இந்திய நிலத்தின் பூர்வகுடிகளாக இருந்த அசுரர்களை வென்று கங்கைக்கரையில் நிலையான அரசுகள் அமைப்பதையும் கூறுகிறார்.
பௌத்த மதத்தின் தோற்றம், பரவல், அதன் தத்துவங்களையும் கதைகளில் குறிப்பிடுகிறார். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களின் வருகை, அவர்களது கொள்ளை நடவடிக்கைகள், முகலாய ஆட்சி முறையையும் விமர்சிக்கிறார். ஆங்கிலேயர்களின் ஆட்சி, ஜமீன்தாரி முறை, சிப்பாய் கலகம் போன்றவற்றையும் கண்டிக்கிறார். பின்னர் இந்திய சுதந்திரப் போராட்டம், நடுநிலைவாதிகளின் நிலைப்பாடுகள் மற்றும் காந்தி முன்னெடுத்துச் செல்லும் சுதந்திர போராட்டத்தைக் கடுமையான விமரிசனத்துடன் கூறுகிறார். இறுதியில், பொதுவுடைமைச் சமுதாயமே மனித நலனுக்கான தீர்வு என்று முடிவு செய்கிறார்.
படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், ராகுல்ஜி மிகுந்த முன்முடிவுடன் இந்த நூலை எழுதிவிட்டதாகவே தோன்றுகிறது. இன்று காலாவதியாகிப் போன ஆரிய இனக் கோட்பாட்டை விதந்தோதும் இந்நூலில், ஆரியர்களைச் சிறந்த பொதுவுடைமைச் சமூகமாகவும், அவர்கள் இந்தியாவின் அசுரர் குடிகளிடம் இருந்தே சர்வாதிகாரம் மற்றும் அடிமை முறைகளைக் கற்றுக்கொண்டதாகவும் ஆசிரியர் காட்டுகிறார். வேதகாலப் பண்பாட்டின் அத்தனை கூறுகளையும், சர்வாதிகார அரசர்களும், புரோகிதம் மூலம் மக்களை ஏமாற்றும் பிராமணர்களும் இணைந்து, மக்களை அடிமை கொள்வதற்காகவே திட்டமிட்டு உருவாக்கியதாய் காட்டுகிறார்.
தங்களது “கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?” என்ற கட்டுரை என் விருப்பத்திற்குரிய ஒன்று. அதில் தெய்வங்கள் உருவாகி வருவதை விவரிக்கும்போது, “தெய்வ உருவகங்கள் எதுவும் ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு சிலரால் உருவாக்கப்படுபவையோ, நிலைநிறுத்தப்படுபவையோ அல்ல. ஏனென்றால் அது சாத்தியம் அல்ல. அவற்றை ஏற்பவர்களும் அறிவும் சிந்தனையும் உடைய மக்களே.தெய்வ உருவங்கள் பயன்பாட்டுக்கு என வடிவமைக்கப்படும் கருவிகள் அல்ல அவை. மாறாக கண் போல கை போல பரிணாமத்தில் படிப்படியாக உருவாகி வருபவை.” என்று நீங்கள் கூறி இருப்பீர்கள். ஆனால் ராகுல்ஜி, இந்திய மரபின் ஆகச்சிறந்த பிரம்மம் என்ற கருதுகோளே கூட, ஆயிரமாண்டு காலம் மக்களை அடிமைப்படுத்துவதற்காகத் தனியொரு அரசன் முயன்று உருவாக்கியதாக இந்த நூலில் கூறுவது மிகவும் நெருடலாக உள்ளது.
நூலின் பிற்பகுதியில், சமகால இந்திய வரலாற்றைச் சொல்லுமிடங்களில், காந்திய வழிமுறைகள் மீதும் கடுமையான விமரிசனத்தை முன்வைக்கிறார். காந்தி பெரும் முதலாளிகளின் நலன் பற்றி மட்டுமே யோசிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். பொதுவுடைமை மட்டுமே உலகத்திற்கான ஒரே தீர்வாக இருக்குமென உறுதியாகக் கூறி முடிக்கிறார்.
இனவாதம் தவறென்ற எண்ணமே எழாத, ரஷ்யாவின் பொதுவுடைமை அரசின் மீதான மாயை விலகாத, சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இந்நூல், இன்று அந்த அத்தனை கோட்பாடுகளும் விழுந்த பின்னரும், பெரும்பாலானோரால் தொடர்ந்து படிக்கப்பட்டு வருவது மிகுந்த வியப்புக்குரியதே.
சாரதி
அன்புள்ள சாரதி,
வால்காவில் இருந்து கங்கை வரை தமிழில் மிக அதிகமாக விற்ற நூல்களில் ஒன்று. தமிழ்ப்புத்தகாலயம் கண.முத்தையா அதை மொழியாக்கம் செய்தார். அது இங்கிருந்த கட்சிசார்ந்த எல்லா மார்க்சியத் தரப்புகளுக்கும் ஒரு பாடல்நூல்போல இருந்தது. கட்சியில் சேரும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் இரு நூல்களில் ஒன்று. (இன்னொன்று மாக்ஸிம் கார்க்கியின் தாய்)
இந்நூலை ஓர் ஆரம்பகட்ட வாசகனும் வாசிக்கலாம். வாசித்ததுமே அவனுக்கு ஒரு பெரிய வரலாற்றுப் புரிதல் உருவாகிவிட்டதுபோன்ற மிதப்பு உருவாகும். நிறைய பேசவும் தன்னம்பிக்கையுடன் வாதிடவும் ஆரம்பிப்பான். அந்த தன்னம்பிக்கையே அவனை இடதுசாரியாக நிலைகொள்ளச் செய்கிறது. இந்நூல் இங்கே திராவிட இயக்கத்திலும் பொதுவாக விரும்பப்பட்டது. காரணம் அதிலிருக்கும் வைதிக எதிர்ப்பு.
வால்காவில் இருந்து கங்கை வரை மூன்று அடிப்படை வரலாற்றுப்பார்வைகள் கொண்ட நூல்
அ. பௌத்தம்
ராகுல்ஜி பௌத்த பிக்குவாக இருந்தவர். ஆகவே இந்து மரபு, இந்திய வரலாறு குறித்த பௌத்தம் சார்ந்த பார்வை அவரிடமுள்ளது. அதில் வேத எதிர்ப்பு, இந்து மரபு எதிர்ப்பு என்பது ஓர் அடிப்படை அம்சம். பௌத்தம் முதன்மை எதிரியாகக் கொண்டிருந்தது இந்து மதத்தில் இருந்த வைதிகத்தரப்பைத்தான். இந்த வைதிக எதிர்ப்புப் பார்வை கடுமையான முன்முடிவுகளாக பௌத்தப் பின்னணி கொண்ட டி.டி.கோஸாம்பி உள்ளிட்ட எல்லா அறிஞர்களிடமும் உண்டு
அ. மார்க்ஸியம்
ராகுல்ஜி பௌத்த சிந்தனைகளை பழைமையானவை என கருதி உதறி மார்க்ஸியராக ஆனவர். மார்க்ஸிய வரலாற்றுப்பார்வை அவரிடமுண்டு. மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படை என்பது மானுட வரலாறென்பதே படிப்படியாக சுரண்டலமைப்புகள் உருவானதன் கதை என்பதுதான். எல்லா சமூக அமைப்புகளும், எல்லா சிந்தனைகளும் மனிதனை மனிதன் சுரண்டி, உபரியைச் சேர்த்து, அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கம் கொண்டவை என மார்க்ஸியம் வாதிடுகிறது. அதாவது மிக எளிய முறையில் சுருக்கினால் மார்க்ஸியம் வரலாறென்பதே ஒரு பெரும் சதிவேலைதான் என வாதிடுகிறது.
ராகுல்ஜி ஒரு செவ்வியல் மார்க்ஸியர். டி.டி.கோஸாம்பி போல. பின்னாளின் ஐரோப்பிய மார்க்ஸியம் முன்வைத்த பண்பாட்டுவாதம் எல்லாம் அவருக்குத் தெரியாது. அவருடைய பார்வையில் பண்பாடு, அரசு என்பதெல்லாம் மேற்கட்டுமானம். அடிக்கட்டுமானம் என்பது உற்பத்தி – வினியோகம் ஆகியவை அடங்கிய பொருளியல்தான். அந்தக் குறுக்கல் வாதம் ராகுல்ஜியின் பார்வையை மிகமிக எல்லைக்குட்பட்டதாக ஆக்குகிறது. மார்க்ஸிய நோக்கிலேயே ராகுல்ஜியின் அணுகுமுறை காலாவதியாகி முக்கால்நூற்றாண்டு கடந்துவிட்டது.
ஆனால் ராகுல்ஜி ஒரு விந்தையான கழைக்கூத்தாட்டத்தை ஆடுகிறார். வரலாற்றிலுள்ள அதிகார அமைப்புகள் எல்லாமே சுரண்டலால் உருவானவை, சுரண்டலால் நிலைகொண்டவை. அப்படியென்றால் இந்தியாவை ஏறத்தாழ முந்நூறாண்டுக்காலம் முழு ஆதிக்கத்துடன் ஆண்ட பௌத்தம் சுரண்டல் அற்றதா? ஆம், வைதிகம் சுரண்டல், அதற்கு எதிரானது பௌத்தம், ஆகவே அது சுரண்டல் அல்ல புரட்சிகரமானது என ராகுல்ஜி வாதிடுகிறார்.
இ. ஐரோப்பிய வரலாற்றுவாதம்
பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் இந்தியா உட்பட கீழைநாடுகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதலானார்கள். அவர்களிடம் ஒரே சமயம் புறவயமான தரவுகளைச் சேர்க்கும் முறைமையும் ஐரோப்பிய மேட்டிமைவாத நோக்கும் இருக்கும். ஐரோப்பா மானுடப் பண்பாட்டின் உச்சம், மானுடச் சிந்தனைகளின் நாற்றங்கால் என்னும் எண்ணம் அவர்களிடம் இருக்கும். மார்க்ஸ் அந்த ஐரோப்பிய மேட்டிமை நோக்கை விரிவாக விளக்கி நிலைநாட்ட முயன்றவர். அவர் கீழைநாடுகளை, குறிப்பாக இந்தியாவை, வளர்ச்சியடையாத பண்பாடு கொண்டவை என்று வரையறை செய்தார்.
’ஆசிய உற்பத்திமுறை’ என அவர் கூறும் ஒரு பொருளியலே இங்கிருந்தது என்பது மார்க்ஸின் கணிப்பு. அதாவது நகரங்களில் சுரண்டலின் விளைவான ஆடம்பர வாழ்க்கை. நகரங்களைச் சுற்றி அரைப்பழங்குடி வாழ்க்கை வாழ்ந்த கிராமமக்கள். இதுதான் இந்தியாவின் பொருளியல்சூழல் என்றார் மார்க்ஸ். அந்நகரங்கள் எல்லாவற்றையும் இறக்குமதி செய்து நுகர்ந்தன, போலியான சில சிந்தனைகளையும் உருவாக்கிக் கொண்டன, ஆனால் மொத்த இந்தியாவும் பழங்குடி வாழ்க்கையிலேயே ஐரோப்பியர் இங்கே வரும் வரை இருந்தது என்கிறார் மார்க்ஸ்.
இந்த ‘ஆசிய உற்பத்தி முறை’ என்னும் கருதுகோள் ஐரோப்பியர் ஆசியாவைப் பற்றி அளித்த பிழையான தரவுகளின் அடிப்படையில் மார்க்ஸ் உருவாக்கிக் கொண்டது என்று மிகமிக விரிவாக பின்னர் நிரூபிக்கப்பட்டது. (மார்க்ஸ் காலத்திலேயே மறுப்புகள் வந்துவிட்டன) ஆனால் மேலைநாட்டு மார்க்ஸியர்களின் ஐரோப்பிய மேட்டிமைவாத மனநிலையும் இங்குள்ள மார்க்ஸியர்களின் ஐரோப்பிய வழிபாட்டு மனநிலையும் அக்கருத்துநிலையையே வெவ்வேறு வகைகளில் தாங்கிக்கொண்டு நிற்கின்றன. ராகுல்ஜியின் நூலில் உள்ளது அந்த ஐரோப்பியப் பார்வைதான்.
ராகுல்ஜி ஐரோப்பியர் இந்தியாவைப் பற்றி முன்வைத்த ஒரு வரலாற்று ‘டெம்ப்ளேட்’ஐ அப்படியே நம்பியவர். ஐரோப்பியரின் பார்வையில் கீழைப்பண்பாடுகள் எல்லாம் வரலாற்றுக்கு முன்பிருந்தே தேங்கிப்போனவை. (ஓரியண்ட்) அவற்றை வெளியே இருந்து வந்த சக்தியே உடைக்க முடியும். அவையே முன்னகர்வை உருவாக்க முடியும். அது ஆதிக்கமாக இருந்தாலும். ஆரியர் அவ்வாறு இங்கே ஒரு உடைவை, முன்னகர்வை உருவாக்கினர். பின்னர் பலர். முகலாயரும், ஆங்கிலேயரும் அவ்வாறு இந்தியாவின் தேக்கத்தை முன்னகர்த்தினர். அவ்வாறு வந்த ஒரு முற்போக்கான ஐரோப்பியக் கருத்தியல் சக்தியே மார்க்ஸியம் என அவர் நம்பினார்.
*
ராகுல்ஜியின் இந்த மூன்று முன்முடிவுகளும் அவருடைய நூல்களை அவர் கொண்ட கருத்துநிலையின் பிரச்சாரமாக ஆக்கிவிடுகின்றன. வரலாற்றுப் புனைவான ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ தத்துவநூலான ‘தர்சன் திக்தர்சன்’ (தனித்தனி தொகுதிகளாக தமிழில் வெளிவந்தது) ஆகிய நூல்களுக்கு வரலாறு, தத்துவம் ஆகிய தளத்தில் எந்த புறவய மதிப்பும் இல்லை. ராகுல்ஜியின் பார்வையை முன்வைப்பவை, அவரை அறிய உதவியானவை என்று மட்டுமே அவை இன்று பயன்பாட்டில் உள்ளன.
’வால்காவில் இருந்து கங்கை வரை’ என்னும் தலைப்பைப் பார்க்கையில் ஒருமுறை சற்று பிரியமான வருத்தத்துடன் புன்னகைத்துக் கொண்டேன். ராகுல்ஜி எத்தனை நம்பிக்கையுடன் அந்தப் பெயரை போட்டிருப்பார். வால்காவுக்கும் கங்கைக்கும் எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை. ஆரியர்கள் அங்கிருந்து வந்தனர் என்று சொன்னவர்கள் சிலர் உண்டு, திலகர் கூட அப்படிச் சொன்னதுண்டு. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ராகுல்ஜியின் கனவுதான் அப்பெயர்.
ராகுல்ஜி வருங்கால உலகின் மையம் ரஷ்யாவும் மாஸ்கோவும்தான் என நம்பப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர் அவர். மெய்யாகவே அன்று அதை ஒரு மதநம்பிக்கை போல அகம் நிறைத்து வாழ்ந்தவர்கள் உண்டு. வால்கா அன்று கங்கை அளவுக்கே இங்கே மார்க்ஸியர் நடுவே புகழ்பெற்றிருந்தது. பல மார்க்ஸியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வால்கா என பெயரிட்டிருந்தனர். (கங்கைக்கு புனிதமில்லை, வால்காவுக்கு உண்டு!) வரலாற்றில் சோவியத் ரஷ்யா என்ற பெருங்கனவு இப்படி இல்லாமலாகும் என்று அன்று ராகுல்ஜியிடம் சொல்லியிருந்தால் அடிக்க வந்திருப்பார். அது பக்தனிடம் தெய்வநிந்தனை செய்வது போல.
ராகுல்ஜி வரலாற்றை அவர் விரும்பியபடி எழுதினார். வரலாறு எவ்வளவு கொடிய சிரிப்புடன் அப்போது அவரை பார்த்துக்கொண்டு அருகே நின்றிருந்திருக்கும்!
ஜெ
பிகு: ராகுல்ஜி என்னதான் சொன்னாலும் நம்மூர் திகவினருக்கு அவர் ‘பார்ப்பான்’ மட்டுமே. அவருடைய வால்காவிலிருந்து கங்கை வரை நூலையே ஒரு ‘பார்ப்பனிய’ நூல் என குற்றம் சாட்டி எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் ஆங்கில வடிவை காணநேர்ந்தது