தீராநதி நேர்காணல்- 2006

எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல்.

தீராநதி:- புதிதாக நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் ”கொற்றவை” காப்பியம் குறித்துச் சொல்ல முடியுமா? அது செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளதா என்ன?

ஜெயமோகன்:- ”கொற்றவை” காப்பியம் அல்ல. புதுக்காப்பியம் அது நான் சூட்டிய அடையாளம் அல்ல. அப்படி அடையாளமிடுவது எனக்கு உவப்பானதுமல்ல. அது என் பதிப்பாளர் ”தமிழினி” வசந்தகுமார் சூட்டிய அடையாளம் .அதை நாவல் எனக்கருதி வாசிக்க ஆரம்பிக்கும் வாசகன். அதன் மொழியை எதிர்கொள்வதில் குழப்பத்தை அடையக்கூடும் என்பதனால், அப்படி ஒரு தனி அடையாளம் தேவைப்படுவதாக அவர் எண்ணுகிறார்.

அது புதுக்காப்பியம் ஆதலினால், கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான இடைவெளியும் உறவும்தான் அதற்கும் காப்பியத்திற்கும் இடையே உள்ளது. ”கொற்றவை” செய்யுள் வடிவில் அமைந்த நூல் அல்ல. செய்யுள் வடிவம், அச்சு ஊடகம் வந்ததுமே காலாவதியாகிவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். செய்யுள் வடிவங்கள், இலக்கியம் அதிகமும் ”கேட்கப்பட்ட” ஒரு காலகட்டத்திற்கு உரியவை. உலகமெங்கும் அப்படித்தான். முன்னரே வகுக்கப்பட்ட தாளத்தில் அமைந்த வரிகள். பாடுவதற்கும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உகந்தவை என்பதனால், அவ்வடிவம் உருவாகி நிலைபெற்றது. இது நம் மரபில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இன்றைய வாசிப்பு செவிநுகர்வு அல்ல. அக வாசிப்பு. கண்ணே இன்றைய வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அச்சுத்தொழில் நுட்பம் வடிவங்களை உருவாக்குகிறது. புதுக்கவிதையின் இன்றைய வடிவம் அச்சுமுறையால் வடிவமைக்கப்பட்டது என்பதைக் காணலாம். பத்தி விடுதல், வரிகளை இடைவெளி விடுதல், சரிந்த எழுத்துக்கள், தடித்த எழுத்துக்கள் என பற்பல வடிவக்கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. நாளை மின் ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுமானால் அதற்கேற்ற வடிவங்கள் உருவாகலாம். இப்போதே சுட்டி கொடுத்தல். படங்களை இணைத்தல் போன்றவை மூலம் செறிபிரதி (Hyper Text) வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

”சிலப்பதிகாரம்” காப்பியம் செய்யுளில் அமைந்தது. செவிக்கு இன்பம் அளித்து கருத்தைக் கவர்வது அது. ஆனால் புதுக்கவிதையைப் போலவே ”கொற்றவை”யும் அச்சு ஊடகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவம். இது செவிநுகர் கனி அல்ல. கண்ணில் புகுந்து கருத்தைத் தீண்டுவது.

தீராநதி:- அப்படியானால் ஏன் அதை நாவல் என்று சொல்லக்கூடாது? ஏன் காப்பியம் எனவேண்டும்?

ஜெயமோகன்:- நாவல் என்ற பொது வடிவத்தில் இதை தாராளமாகப் பொருத்தலாம். நாவல்கள் இன்று எத்தனையோ வடிவங்களில் வருகின்றன. வாழ்க்கை வரலாறு வடிவ நாவல்கள். ஆய்வுக்கட்டுரை வடிவ நாவல்கள். அகராதி வடிவ நாவல்கள்…. ”கொற்றவை”க்கும் அவற்றுக்கும் இடையேயான தூரம்தான். அவை புனைவின் மொழியில் உள்ளன. ”கொற்றவை” புதுக்கவிதையால் உருவாக்கப்பட்ட மொழியில் உள்ளது. அதாவது கவிதைக்குரிய தனிமொழியில் (meta language) உள்ளது.

இவ்வேறுபாட்டை நாம் ஓரளவு வகுத்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பின் புனைவு மொழியானது, ஒன்றை சொல்லும்போது ஒட்டு மொத்தமாக ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது. இதை நாம் பிரதி (text) என்கிறோம். அம்மனப்பதிவின் வழியாக நாம் அதற்கு அடுத்த கட்டங்களை ஊகிக்கிறோம். இவ்வாறு ஊகிக்கும் அர்த்த தளங்களையே நாம் ஆழ்பிரதி (Sub text) என்கிறோம். நாவலின் ஆழ்பிரதி அதன் கூற்றுகளுக்கு அடியில் உள்ளது. ஆனால் கவிதையின் ஆழ்பிரதி அதன் சொற்களுக்கு இடையே மறைந்துள்ளது. சொற்களையெல்லாம் குறியீடுகளாக ஆக்கிவிடுகிறது கவிதை. உருவகங்கள், படிமங்கள் மற்றும் பிற குறிப்புறுத்தல்கள் மூலம் இதைச் செய்கிறது. ஆகவேதான் புனைவின் மொழியைவிடக் கவிதை மொழி செறிவானதாக உள்ளது. இதைக் கவிதையின் தனிமொழி (meta language) என்கிறோம். அதாவது, புனைவுமொழியை அது எதைச்சொல்கிறது என்பதற்கு முதன்மைக்கவனம் கொடுத்து வாசிக்கிறோம். கவிதைமொழியை அது எப்படிச்சொல்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கிறோம்.

”கொற்றவை” கவிதையின் தனிமொழியில் எழுதப்பட்டது. அதை புனைவாக எண்ணி வாசிக்கும்போது அதன் உண்மையான ஆழ்பிரதிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் அதைப் புதுக்காப்பியம் என்று சொல்லவேண்டிய தேவை உருவாகிறது. கவிதை என எண்ணி இதை வாசியுங்கள் என்ற விண்ணப்பம்தான் அந்த அடையாளப்படுத்தல்.

தீராநதி:- இன்றைய நவீன இலக்கியச்சூழலில் ஒரு புதுக்காப்பியம் எழுதும் எண்ணம் ஏற்படக் காரணம் என்ன? இது பின்னால் திரும்பிச் செல்லும் முயற்சியா?

ஜெயமோகன்:- இல்லை. இது முன்னால் செல்லும் முயற்சி. நவீனத்துவம் நமக்கு சில இலக்கிய வடிவங்களை உருவாக்கி அளித்துள்ளது. சிந்தனையாலும் உள்ளுணர்வாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட, அழுத்தமான வரிகளால் ஆன, கச்சிதமான வடிவமே நவீனத்துவம் முன்வைக்கும் இலட்சிய இலக்கியப் படைப்பாகும் அசோகமித்திரனின் ”விடுதலை.” ”இன்னும் சில நாட்கள்” போன்ற குறு நாவல்கள். ஜி நாகராஜனின் நாவலான ”நாளை மற்றும் ஒரு நாளே. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சிலகுறிப்புகள் போன்றவை தமிழில் இதற்குச்சிறந்த உதாரணங்கள்.

நவீனத்துவத்திற்குப் பின்பு அவ்வடிவம் உருவாக்கிய வட்டத்துக்கு வெளியே உள்ள விஷயங்கள் என்னென்ன என்ற தேடல் ஏற்பட்டது. இருவகையில் மீறல்கள் முயற்சி செய்யப்பட்டன. ஒன்று செறிவே இல்லாமல் முடிந்தவரை தட்டையான மொழியில் கதைகளை உருவாக்குவது. வெற்று மொழிபு [Zero point narration] என இது அழைக்கப்படுகிறது. இதழியல் அறிக்கை போலவோ. நாட்குறிப்பு போலவோ எழுதும் முயற்சிகள் உருவாயின. இதில் பலவகை எழுத்துக்களைக் கலந்து பார்ப்பது முயற்சி செய்யப்பட்டது தமிழில் பிரேம் – ரமேஷ் இவ்வகைப் புனைவை முயன்றிருக்கிறார்கள். இன்னொன்று நவீனத்துவத்தில் இருந்த கட்டுப்பாட்டை உதறி கற்பனையில் கட்டற்று சஞ்சரிப்பது. கற்பனை மூலம் வரலாற்றையும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் புராணங்களையும் எல்லாம் மீண்டும் புனைந்து பார்ப்பது இவ்வகையில் பலவிதமான முயற்சிகள் தமிழில் நடந்துள்ளன. கோணங்கி நாட்டார் கதைகளை மறுபுனைவு செய்திருக்கிறார். நான் விஷ்ணுபுரத்தில் புராணமரபை மறுபுனைவு செய்திருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்தில் அதைச் செய்திருக்கிறார். கொற்றவையும் இப்படிப்பட்ட ஒரு முயற்சியே.

தீராநதி:- அதற்குக் காப்பிய வடிவத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?

ஜெயமோகன்:- நான் புதிய வடிவங்களுக்காக முனைந்து தேடுவதும் சோதனை செய்து பார்ப்பதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.என் மனம் இயல்பாகவே மனித வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளைச் சார்ந்து இயங்குவது.அன்றாட வாழ்க்கையைப் பற்றிப்பேசும்போதும் எப்போதைக்கும் உரிய வினாக்களாக அதை மாற்றியபடியே நான் எழுதுகிறேன். ஆகவே முழுமை, அறம், உறவு, மரணம் என சில மையங்களைத் தொட்டு நகர்பவை என் ஆக்கங்கள். அவற்றை நாம் இன்றை மட்டும் கணக்கில் கொண்டு பேசிவிடமுடியாது. அவை நம் இறந்த காலத்தில் இருந்து நமக்கு அளிக்கப்பட்டவை. நம்மால் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுபவை. இவ்வாறு அடிப்படைக் கேள்விகளை முக்காலத்துக்கும் விரித்துக் கொள்ளும்போது தத்தவமும் வரலாறும் உள்ளே வந்துவிடுகிறது. தத்துவமும் வரலாறும் ஊடாடாத பெரும்படைப்பு இருக்க இயலாதென்றே நான் எண்ணுகிறேன்.

நம் மரபில் தத்துவம் வரலாறு உள்மன எழுச்சி ஆகியவை ஒருங்கிணையும் புள்ளி என்பது காப்பியமேயாகும். சங்கக் கவிமரபில் இவை தனித்தனித் துளிகளாக வெளிப்பட்டன. பௌத்தம், சமணம் மூலம் பெரும் தத்துவங்கள் இங்கு வந்தபோது ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கும் முறை உருவாயிற்று. காப்பியங்கள் அவற்றின் விளைவுகள், அவற்றில் தத்துவம், அரசியல், அறிவியல், வரலாறு ஆகியவை வாழ்க்கையுடன் சேர்த்து தொகுத்து ஆராயப்படுகின்றன.

இன்று மீண்டும் அடிப்படை வினாக்களை ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராயும்போது காப்பியம் போன்ற வடிவங்கள் தேவையாகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு மையத்தை ஆழமாக வலியுறுத்துபவை காப்பியங்கள். சிலம்பு,அறம் கற்பு என்ற மையங்களை நிலைநாட்டும் காவியம்.இன்றைய இலக்கியம் எதையும் வலியுறுத்துவதில்லை. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டவற்றைப் பிரித்து ஆராய்கிறது அதற்குரிய வடிவம்தான் புதுக்காப்பியம் என்று சொல்லலாம் அது காப்பியத்தையே பிரித்து ஆராய்ந்து புதுவகையில் அடுக்கிப்பார்க்கும் முயற்சி.

தீராநதி:- இக்காப்பியத்தின் தொடக்கம் எப்படி உருவானது?

ஜெயமோகன்:- நான் என்றுமே பெருங்காவியங்களின் வாசகன். ஏற்கனவே மகாபாரதம் குறித்துப் பல கதைகள் எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைப் படிக்கையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது. கண்ணகியை ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்ததிலள்” என்கிறார். மண்ணில் கால்படாது வாழ்ந்தவள். ஆனால் அவள் மதுரையில் பாண்டியன் அவைக்குச் செல்லும்போது அவளை வாயிற்காவலன் ”கொற்றவை” என்கிறான். இந்த மாற்றம் புகார் மதுரை பயணத்தில் நடந்தது. அது சிலப்பதிகாரத்திலும் ஓரளவு சொல்லப்பட்டுள்ளது. பயணம் தொடங்கும் கண்ணகி ஒரு பேதைப் பெண். முடிக்கும் கண்ணகி அமைதியும் ஆழமும் கொண்டவள். இந்தப் பயணத்தை அவள் ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறாள் என உருவகித்துக் கொண்டு. ஓர் அகவயப் பயணமாக சித்தரித்து நாவலாக எழுதவேண்டுமென எண்ணினேன்.

ஆனால் பல பக்கங்கள் எழுதியபின் தெரிந்தது கண்ணகியை யதார்த்த சித்தரிப்புக்குள் கொண்டுவர இயலாது என. அவள் கருவறைத் தெய்வம் போன்றவள். கடைத்தெருவில் நடமாட முடியாது. ஆகவே ஒரு வகைப் படிம மொழியில் அவள் கதையைச் சொல்ல வேண்டியதாயிற்று. அவ்வடிவிலேயே பலமுறை எழுதியபின் தெரிந்தது. கண்ணகியின் கதையைக் கண்ணகியில் தொடங்க முடியாது என, அவளில் சன்னதம் கொண்ட மூலவல்லமைகளைக் கண்டடைய வேண்டும் என, ஆகவே என் புதுக்காப்பியம் குமரிக்கண்டம் நோக்கிச் சென்றது. நம் மனம் தொட முடியாத ஆழத்திலிருந்து தொடங்கினேன்.

தீராநதி:- மொத்தத் தொகுப்பாக வந்துள்ள உங்கள் சிறுகதைகளை இப்போது சேர்த்து வாசிக்கும் போது, பெரும்பாலானவற்றில், தொடக்கத்தில் ஒரு தர்க்கம் நிறுவப்பட்டு, இறுதியில் அது தகர்க்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் நாவல்களிலும் இதனைப் பார்க்க முடிகிறது. ஒரு படைப்பு சூத்திரமாக உங்களது அனேக படைப்புகளில் இது இருக்கிறது என்ற விமரிசனத்தை ஏற்றுக்கொள்வீர்களா?

ஜெயமோகன்:- இல்லை. இது மேலோட்டமான ஒரு மனப்பதிவு என்று எண்ணுகிறேன். என் ஆக்கங்கள் பொதுவாக உள்ளுணர்வின் நுண்மையான ஒரு தளம் நோக்கி எழ முனைகின்றன.

தீராநதி:- தர்க்கத்தை எவ்வளவு தூரம் முக்கியமானதாக நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- கதைகளின் பலமும் பலவீனமுமாக நான் எண்ணுவது அவற்றின் உணர்ச்சிவேகத்தைத்தான். சிலசமயம் அவை கட்டற்றுப் பெருகிவிடுகின்றன. அதற்கு ஒருவகையான கரைகட்டும் முயற்சியாக தர்க்கத்தை நான் கையாள்கிறேன். அதைப்போலவே நுண்ணுணர்வாலான ஆழ்தளத்துக்குச் செல்லும்போது மனம் படிமங்களைக் கட்டற்றுப் பெருக்கிக் கொள்கிறது. அதையும் தர்க்கம் மூலம் எல்லைக்குள் நிறுத்த முயல்கிறேன். ஆக,  தர்க்கம் என்னைப் பொறுத்தவரை ஒரு கட்டுப்படுத்தும் கூறு மட்டுமே.

நான் என்ன சொல்கிறேன் என்பது ஓரளவு தியானம் பழகியவர்களுக்குப் புரியும். தியான மரபுகள் தொடர்ந்து ஆழ்தலையும் அமைதலையும்தான் வலியுறுத்துகின்றன. தியானம் மூலம் அடையப்படும் அனைத்துமே தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் உள்ளன. அவற்றைப் பகிர்வதுகூட இயல்வதல்ல. ஆனால் நெடுங்காலம் முதல் எல்லா தியான மரபுகளிலும் நுண்ணிய தர்க்கமும் தேவைப்பட்டிருக்கிறது. தியானத்தில் அமர்ந்ததுமே மனம் கற்பனைகளில் திசையிழந்து தெறிக்கிறது. எதிர் எதிரே வைக்கப்பட்ட ஆடிகள் போல பிம்பங்களைப் பெருக்கிக் கொள்கிறது. சிலசமயம் பித்துப் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவேகம் ஏற்படுகிறது. இப்படி ஒரு கொந்தளிப்பு உருவாகும்போது அதை நெறிப்படுத்த தர்க்கம் தேவைப்படுகிறது.

உதாரணமாக ஜெ. கிருஷ்ணமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சொல்வதை ஆழ்ந்து அனுபவபூர்வமாக உள்வாங்காத ஒருவருக்கு, அவர் தர்க்கங்களைக் கட்டமைத்தபடியே செல்வதாகத் தோன்றும். வெற்று தர்க்கமாகக்கூட சிலருக்குப் படலாம். ஆனால் அவர் தொடர்ந்து தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றையே முன்வைக்கிறார். அங்கே செல்லும் பாதையை நமக்கு வகுத்தளிப்பதில்லை. அதை நாமே கண்டடையவேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால் பாதையின் இருபக்கக் கரைகளையும் வகுத்துத் தருகிறார். அதற்குத்தான் தர்க்கத்தைப் பயன்படுத்துகிறார்.

மெய்ஞானத்தின் திண்ணையில் பசித்த காவல்நாய் உள்ளது. நமது போத மனம்தான் அது. அதற்கு சில இறைச்சித்துண்டுகளைப் போட்டுவிட்டு உள்ளே நுழைகிறோம். அந்த இறைச்சித்துண்டுதான் தர்க்கம்.

இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.தர்க்கபூர்வமான மாபெரும் கட்டமைப்பு கொண்டவையே தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாம்ஸ்மன், நிகாஸ் கசன் சகிஸ் போன்ற பேரிலக்கியவாதிகளின் ஆக்கங்கள். பலசமயம் இவர்களின் நாவல்கள் பலநூறு பக்கங்களுக்குத் தூய தர்க்கங்களாகவே இருப்பதைக் காணலாம். குறிப்பாக ”கரமசோவ் சகோதரர்கள்”. அது முற்றிலும் நேரடியான தர்க்கங்களால் ஆனது. கதாபாத்திரங்களே பக்கம் பக்கமாக விவாதிக்கின்றன. கதாபாத்திரங்கள் கருத்துத் தரப்புகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தர்க்கம் மீது ஏறி வேறு ஒன்றை புனைவு  தொடுகிறது.

ஆனால் அடிப்படை வினாக்களைக் கையாளாமல் வெறுமே யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கும் ஆக்கங்களுக்குத் தர்க்கம் தேவையில்லை. காரணம் அவை நுண்ணிய மையம் நோக்கி செல்வதேயில்லை. தமிழில் நாம் எழுதும் படைப்புகளில் மிகப்பெரும்பாலானவை இப்படிப்பட்டவை. இவற்றை வாசித்து நாம் எளியவாசிப்புக்குப் பழகிவிட்டிருக்கிறோம். ஆகவேதான் படைப்பின் தர்க்கம் நம்மில் பலருக்கு சிக்கலாக உள்ளது. உயர்தர்க்கம் செயல்படாத முக்கிய நாவல் ஏதும் இல்லை.

தீராநதி:- உங்கள் படைப்புகளில் தொல்குடி தாய் தெய்வமான நீலியின் படிமமும் தொடர்ந்து வருகிறது. ஏன் அது வருகிறது என்பது குறித்து விளக்க முடியுமா?

ஜெயமோகன்:- உலகம் முழுக்க முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்களில் அப்படி சில படிமங்கள் அல்லது சில தொன்மங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. அவை அப்படைப்பாளியின் அகத்துக்குள் செல்லும் வழிக்கான சாவிகள். தஸ்தயேவ்ஸ்கியின் ஆக்கங்களில் பாவத்திலிருந்தும் இழிவிலிருந்தும் மீட்டுச்செல்லும் தூய இளம்பெண் ஒரு முக்கிய கதாபாத்திரம். அதே பெண்ணை அப்படியே நாம் தல்ஸ்தோய் நாவல்களில் காண்கிறோம். அவளை அதற்குமுன் தாந்தேயின் ”டிவைன் காமெடி” காவியத்தில் ஃபீட்ரிஸ் தேவதையாகக் காண்கிறோம். இவை தெளிவாக வரையறை செய்யக்கூடிய விஷயங்கள் அல்ல. ஆழ்மனம் சார்ந்தவை. கலாச்சாரத்தின் ஆழத்திலிருந்து எழுபவை.

நீலி, என் குலதெய்வம்.நீலகேசி அம்மனின் ஒரு வடிவம்.நாங்கள் தாய்தெய்வ வழிபாடு கொண்டவர்கள். பெண்வழிச் சொத்துரிமை கொண்டவர்களாக ஒரு தலைமுறைக்கு முன்புவரை இருந்தோம். என்னுள் உறையும் பழங்குடிமரபுவரை செல்லும் தொன்மம் இது. அதை எழுதும்போது எனக்கு ஓர் அபூர்வ மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து நான் வெகுதூரம் செல்ல முடிகிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

தீராநதி:- தொடக்கத்தில் நீங்கள் கவிதைகள் எழுதியுள்ளீர்கள். அதன்பிறகு விட்டுவிட்டீர்கள். ஏன்?

ஜெயமோகன்:- எல்லாரையும்போல நானும் மொழியைத் தீட்டிக் கொள்ளவே கவிதை எழுத ஆரம்பித்தேன். என் வடிவம் நாவல் என என் போக்கில் கண்டுபிடித்தேன். வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளிழுத்தபடி. உள்ளுணர்வின் ஆழங்களுக்குள் செல்ல விழைவது என் படைப்பியக்கம். அதற்குரிய வடிவம் நாவலே. அது மட்டுமே இன்று வாழ்க்கையின் முழுமையை அள்ள முனையும் வடிவம். அதற்குள் எல்லா வகையான இலக்கிய வடிவங்களுக்கும் இடமிருக்கிறது. என் நாவல்களில் நான் தூய கவிதையைத் தொட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். ஆகவே தனியாகக் கவிதை எழுதும் எண்ணம் எழவில்லை.

தீராநதி:- உங்கள் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியைத் தொடங்கி, பிறகு அதனை வேண்டாம் என்று நிறுத்தியதாக அறிகிறோம். ஏன் கவிதைகள் தொகுப்பாக வருவதைத் தவிர்க்கிறீர்கள்?

ஜெயமோகன்:- அவை என் ஆரம்பகால முயற்சிகள். இன்று அவற்றுக்கு என் இலக்கிய உலகில் இடமில்லை.

தீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்?

ஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை.

நான் கவிதையை நேற்று இன்று எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. என் நோக்கில் இன்றைய கவிதை கபிலனுக்கும் பரணருக்கும் தொடர்ச்சிதான். நம் மாபெரும் மரபுடன் இணையும் தகுதிகொண்ட கவிதையை நாம் அப்படி எளிதாக எழுதிவிட இயலாது. அது நம் வழியாக நிகழ வேண்டும். நாம் நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நம் புதுக்கவிதையில் பெருமை கொள்ளத்தக்க சாதனையாளர்கள் உள்ளனர். பிரமிள், தேவதேவன் ஆகியோர் அவர்களில் முதன்மையானவர்கள் என்பது என் விமர்சன முடிவு. அதை விரிவாக விவாதித்தும் உள்ளேன். அபி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன் போன்று பலர் முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள், பொதுவாக சுடர்விட்டுத் தங்கள் எரிபொருள் தீர்ந்ததும் அணைவது வழக்கம். அது எங்குமே அப்படித்தான். இன்றைய கவிஞர்களில் பிரேம், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். யூமா வாசுகி போன்றோர் தொடங்கி எரிந்து அணைந்துவிட்டனர். அமலன் ஸ்டேன்லி, பிரான்ஸிஸ் கிருபா, மோகனரங்கன் போன்றோர் அவ்வப்போது ஒளிர்கின்றனர்.

நம் கவிதைக்கு ஓர் அழியாத் தொடர்ச்சி உள்ளது. ஆனால் அது சில காலங்களில் மட்டுமே கொழுந்துவிட்டெரிந்துள்ளது. மற்றகாலங்களில் கைக்குள் அகல்சுடர் போலத்தான் இருக்கிறது. ஒரு சூழலில் நல்ல கவிதை உருவாவது என்பது உண்மையில் கவிஞர் கைகளில் இல்லை. அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான ஆன்மீக எழுச்சியின் ஒரு திவலையே கவிதையாக வெளிப்படுகிறது. கவிதை பெரும்பாலும் தன்னெழுச்சியான நிகழ்வு என்பதனால்தான் இப்படி.

இன்று கவிதையில் அலை என ஏதுமில்லை. ஆனால் உயிருள்ள நீட்சி இருந்துகொண்டிருக்கிறது என்றும் படுகிறது.

தீராநதி:- உங்கள் விமர்சன அளவுகோலின் அடிப்படையாக தொடர்ந்து சுந்தர ராமசாமியை நீங்கள் சொல்லி வந்திருக்கிறீர்கள். அவருடையது ரசனையை அடிப்படையாகக் கொண்ட விமரிசனம் க.நா. சு.வின் தொடர்ச்சி. உங்கள் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை”யும் ரசனை விமரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லலாம். தற்காலத்தில், நவீன விமர்சன முறைகள் பல தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், ரசனை அடிப்படையிலான விமர்சனம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- என்னுடைய ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” நூலின் முதல்பகுதியிலேயே இதற்கு விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பு ரசிப்பதற்காகவே எழுதப்படுகிறது. அதன் முதன்மை நோக்கம் அதுவே. ஆராய்ச்சி அடுத்த படிதான். ரசனைவிமர்சகன் படைப்பின் முன் ஒரு வாசகனாகத் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படைப்பை ரசிக்கிறான். தன் ரசனையை அளவாகக் கொண்டு அதை மதிப்பிடுகிறான். இதுவே இயல்பான முதல்படியாகும்.

ரசனை விமரிசகனின் கருவிகள் இரண்டு. ஒன்று, அவனது நுண்ணுணர்வு (Sensibility). இரண்டு அவனது பொதுப்புத்தி (Commonsense) நுண்ணுணர்வானது பேரிலக்கியங்களை வாசிப்பதன் மூலம் உருவாகக் கூடியது. நான் கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், ராபர்ட் ஃப்ராஸ்டையும் வாசித்ததால் இன்றைய கவிதையை அறிந்து மதிப்பிடுவதற்கான நுண்ணுணர்வை அடைகிறேன். வாழ்க்கையை கவனிப்பதன் வழியாகவும் பொது அறிவைக் கற்பதன் மூலமாகவும் எனக்கு பொதுப்புத்தி வலிமை பெறுகிறது. ஒரு நல்ல வாசகனிடமிருந்து ஓர் இலக்கியப்படைப்பு எதிர்பார்ப்பது இவை இரண்டையும் மட்டுமே.

கோட்பாடுகள், படைப்பை ஆராய்வதற்குரியவை. அங்கே ரசனை இல்லை. பலசமயம் கோட்பாடுகள் நல்ல ரசனைக்குத் தடையாகவே அமைகின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனம் சொல்லாத இடத்துக்குத் தன் கோட்பாட்டுக் கருவிகள் மூலம் செல்பவனே நல்ல ஆய்வாளன். அதாவது ரசனை விமரிசனமே அடிப்படை.உலகமெங்கும் அப்படித்தான் உள்ளது. பல்லாயிரம் படைப்புகள் வருகின்றன. சிலவற்றை முக்கியப்படுத்துவதே ரசனை விமரிசனம்தான். காரணம் அது வாசகனுக்கு மிக அருகே நின்றபடி வாசகன் குரலில் பேசுகிறது.

இப்படி ரசனை விமரிசனத்தின் மூலம் முக்கியமாகும் படைப்புகளையே கோட்பாட்டு ஆய்வுகள் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனத்தின் இடைவெளிகளை நிரப்புவதே பிற விமரிசனங்களின் பணி. உதாரணமாக நான் கம்பராமாயணத்தை என் அனுபவம் மூலம் உள்வாங்கி மதிப்பிடுகிறேன். ஒரு வரலாற்றுக் கோட்பாட்டாளன். குலோத்துங்கன் காலத்து அரசியல் எப்படி கம்பராமாணத்தில் வெளிப்படுகிறது என, தன் வரலாற்று ஆய்வுமுறை மூலம் கண்டறிந்து சொல்லும்போது, என் அறிதலில் உள்ள ஓர் இடைவெளி நிரப்பப்படுகிறது. இப்படி பல ஆய்வுகள் வரலாம். தமிழைப்பொறுத்தவரை ரசனை விமரிசனத்துக்கு அப்பால் செல்லும் கோட்பாட்டு விமரிசனம் அனேகமாக இல்லை. ஒரு வாசகனாகப் பாருங்கள். என் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” அளவுக்கு நம் இலக்கியப் படைப்பாளிகள் மீதான புதிய அவதானிப்புகளை முன்வைத்த கோட்பாட்டு விமரிசன நூல் எது?

தீராநதி:- இலக்கிய முன்னோடிகள் வரிசை புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் எப்படி உருவானது?

ஜெயமோகன்:- ரசனை விமரிசனத்துக்கு நம் சூழலில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கிறது. ஆகவேதான் நம் சூழலில் வாசகர் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் நல்ல படைப்புகளுக்கு எப்படியோ ஓர் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து தீவிர இலக்கிய மரபு அறுபடாமல் இருக்கிறது. கோட்பாடுகள் அரசியல் ஆகிய புறச்சக்திகளால் தூக்கிக் காட்டப்படும் படைப்புகள் உடனேயே சரிக்கப்பட்டு உண்மையான ஆழம் உள்ள படைப்புகள் நீடிக்கின்றன. மார்க்ஸியத் திறனாய்வாளரான கைலாசபதி,செ. கணேசலிங்கனின் ”செவ்வானம்” நாவலைத் தமிழின் முக்கியமான நாவலாகத் தூக்கிப் பிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அ. மார்க்ஸ் போன்றோர் ஒரு கட்டத்தில் கே. டானியலின் நாவல்களை முதல்தரப் படைப்புகளாக முன்வைத்தனர். உடனுக்குடன் ரசனைமரபு அத்தகைய குரல்களை வென்று முன்னகர்ந்தபடியே உள்ளதனால்தான் இப்போது இதை உங்களுக்கு ஒரு வரலாற்றுத் தகவலாகச் சொல்ல வேண்டியுள்ளது.

நீங்கள் குறிப்பிட்டதுபோல முதல் தலைமுறையில் க.நா. சுப்ரமணியமும் இரண்டாவது தலைமுறையில் வெங்கட் சாமிநாதனும், சுந்தர ராமசாமியும் ரசனை மரபின் மையங்களாக இருந்தனர். நான் எழுதவந்தபோது ரசனைமரபின் அடுத்த காலகட்டம் வந்துவிட்டிருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி உருவாக்கிய முடிவுகளே பெரும்பாலும் நீடித்திருந்தன. நான் சுந்தர ராமசாமியிடம் தொடர்ந்து விவாதித்து வந்தேன். அவ்விவாதங்களை நூலாக ஆக்கவேண்டிய அவசியம் இருப்பதாக தமிழினி வசந்தகுமார் சொன்னார். ஆகவே அவை எழுதப்பட்டன.

தீராநதி:- உங்கள் விமர்சனங்களை மொத்தமாகப் பார்க்கும் போது, நீங்கள் சில படைப்பாளிகளைக் கறாராகவும் சிலரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உதாரணமாக மௌனியைக் கறாராகவும் ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள். இந்த முரணுக்கு என்ன காரணம்?

ஜெயமோகன்:- இப்படி ஓர் ஐயம் எழ வாய்ப்பிருப்பது உண்மையே. ஆனால் அதற்குரிய காரணங்கள் வேறு. நான் ஏற்கனவே சொன்னேன். நான் சுந்தர ராமசாமிக்குப் பின் விவாதத் தொடர்ச்சியாக அவற்றை எழுதினேன் என. சுந்தர ராமசாமியின் ரசனையும் மதிப்பீடும் நவீனத்துவம் சார்ந்தது. நவீனத்துவத்தின் அளவுகோலின்படி இலக்கிய ஆக்கம் கச்சிதமாக, உள்ளடங்கிய குரல் கொண்டதாக, மனிதமனத்தின் இருண்ட ஆழங்களை முன்வைப்பதாக, மன எழுச்சிகளை ஐயப்படுவதாக இருக்க வேண்டும். இந்நோக்கு இங்கே நிறுவப்பட்டு அதுவே இயல்பானதாகக் கருதப்பட்டது. அதுதான் கு.ப.ராஜகோபாலன், மௌனி, ஜி. நாகராஜன் போன்றோரை முன்னுக்குத் தள்ளியது. ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ப.சிங்காரம் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளியது.

நான் எழுதவரும்போது நவீனத்துவமும் முடிந்துவிட்டது என்றே உணர்ந்தேன். எனக்குக் கற்பனாவாத எழுத்தும் சரி, இலட்சியவாத எழுத்தும் சரி, நவீனத்துவ எழுத்தும் சரி, ஒரேபோல வரலாற்றுப் பதிவுகள் மட்டுமே.அனைவருக்கும் ஒரே அளவுகோல்தான். ஆகவே என் நோக்கில் நவீனத்துவம் சிலருக்கு அளித்து வந்த சலுகைகள் ரத்தாயின. அப்போது என்ன ஆகிறதென்றால் மௌனிக்கு நவீனத்துவம் அளித்துவந்த முதன்மை இடம் ரத்தாகி, அவர் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். அழகிரிசாமிக்கு நவீனத்துவம் அளித்துவந்த புறக்கணிப்பு இல்லாமலாகி அவர் சற்று முன்னகர்கிறார். இதுதான் உண்மையில் நடக்கிறது. இது பொதுப்பார்வையில் மௌனி கடுமையாகவும் அழகிரிசாமி மென்மையாகவும் நோக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.

பாருங்கள். அழகிரிசாமியின் எல்லாக் குறைகளும் என்னால் சுட்டப்படுகின்றன. அவருக்கு வடிவ உணர்வு இல்லை. அவரது மொழிக்கு செறிவு இல்லை. அவை ஏற்கனவே சொல்லப்பட்டவை. அத்துடன் அவரது விவேகம் மிகுந்த கவித்துவமான அக உலகமும் சுட்டப்படுகிறது. அது நவீனத்துவம் காண மறுத்த ஒன்று. அதேபோல மௌனியின் எல்லா சாதனைகளும் குறிப்பிடப்படுகின்றன. அவரே கவித்துவத்தைப் புனைவுக்குள் கொண்டுவந்த முதல் எழுத்தாளர். மனம் நிகழ்வதை மொழியில் காட்டியவர். அவை நவீனத்துவத்தால் சொல்லப்பட்டவை. அதேசமயம் மௌனியின் குறைகள் விவாதிக்கப்படுகின்றன. அவர் மேலைக் கற்பனாவாதக் கவிமரபைப் பயிற்சியற்ற உரைநடையில் சொல்ல முயன்றவர் என்கிறேன். இவை நவீனத்துவத்தால் சொல்லப்படாதவை. ஆக, நவீனத்துவமரபின் மதிப்பீடுகளையே கண்டுவளர்ந்த இளம் வாசகனுக்கு அழகிரிசாமியின் நிறைகளும் மௌனியின் குறைகளும் சொல்லப்படுகின்றன என்று தோன்றலாம். அது ஒரு தோற்றம் மட்டுமே.

தீராநதி:- ”தமிழில் நாவல்களே இல்லை” என்பதில் தொடங்கி, ”கருணாநிதி இலக்கியவாதி இல்லை” என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா? இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது.

சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், க.நா.சுப்ரமணியம் ஆகியோர் என்னைவிடப் பெரிய விவாதங்களைத் தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளனர். அவ்விவாதங்கள் மூலமே நாம் இன்று நம்பும் பல கருத்துக்கள் உருவாகி வந்தன.

தீராநதி:- ”சொல்புதிது” என்ற சிற்றிதழைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினீர்கள். பத்திரிகை நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், ஒரு படைப்பாளி பத்திரிகை ஆசிரியராக இருப்பது குறித்த உங்கள் எண்ணம் என்ன?

ஜெயமோகன்:- உலகம் முழுக்க எழுத்தாளர்கள் சிறந்த இதழ்களை நடத்தியுள்ளனர். சில சிக்கல்கள் உண்டுதான். முதலில் அந்தப் படைப்பாளியின் நேரம் சிதறி அழிகிறது. இரண்டு, சில சமயம் அப்படைப்பாளியின் படைப்புக் கோணமே அப்பத்திரிக்கையின் கொள்கையாக ஆகி இதழின் விரிவைத் தடுத்துவிடுகிறது. வேறுவகை ஆக்கங்கள் அதில் வரமுடியாமலாகின்றது. ஆனால் பல சாதகக் கூறுகளும் உள்ளன. படைப்பாளி பிறரைவிட நல்ல படைப்பை நுட்பமாக அடையாளம் காணமுடியும். இலக்கியத்தில் ஒரு புதிய முளை தளிர் விடும்போது அதைக் கண்டறிந்து மேலெடுக்க முடியும். இந்த நிறை குறை இரண்டுக்குமே டி.எஸ்.எலியட்டின் ”கிரைடீரியன்”. சி.சு.செல்லப்பாவின் ”எழுத்து” இரண்டும் உதாரணங்களாகும்.

தீராநதி:- உங்கள் திரைக்கதையில், ”கஸ்தூரிமான்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. திரைக்கதை எழுதுவது பற்றிக் கடுமையான விமரிசனத்தை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு என்ன காரணம்?

ஜெயமோகன்:- முதல்விஷயம், ”கஸ்தூரிமான்” – சினிமாவின் திரைக்கதை என்னுடையதல்ல. அது லோகிததாஸ் ஏற்கனவே மலையாளத்தில் எழுதியது. இரண்டாவது விஷயம். திரைக்கதை எழுதுவது பற்றி நான் எங்கும் கடுமையாக விமரித்தது இல்லை. மாறாக மலையாளத்தில் உறூப், பஷீர், தகழி, எம்.டி.வாசுதேவன்நாயர். பி.பத்மராஜன் போல இங்கும் முக்கிய படைப்பாளிகள் சினிமாவில் எழுதவேண்டும் என்றே எழுதிவந்துள்ளேன். அதற்கான சூழல் தமிழில் இல்லை என அறிவேன். அப்போதுகூட ஓர் எழுத்தாளன் வெறும் ஒரு தொழிலாக சினிமாவில் ஈடுபடுவதில் தவறில்லை என்றே எழுதியுள்ளேன். இங்கே எழுத்தைத் தொழிலாகக் கொள்ள இயலாது. வேறு ஒரு துறையில் வாழ்க்கையைப் பணயம் வைத்து எழுதமுடியாமல் அடிமையாவதை விட சினிமா மேல். லோகிததாஸ் என் நண்பர். கஸ்தூரிமானுக்கு எழுதும்படி சொன்னார். எழுதினேன்.

தீராநதி:- உங்கள் அனுபவத்தில், திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு எழுத்தாளருக்கு எந்த அளவுக்கு அதில் இடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- சினிமாவில் மூன்று கலைகள் கலந்துள்ளன. இலக்கியம், நடிப்பு, புகைப்படம்.இசையும் ஓரளவுக்கு உண்டு. இதில் முதல் கலையை இலக்கியவாதி திறம்பட அளிக்க இயலும். இன்றைய தமிழ் சினிமாவில் தமிழக வாழ்க்கை இல்லை. இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைந்தால் ஓரளவு அதை உருவாக்க இயலும். சினிமாவுக்கு இயக்குனரே மையம். மூன்று கலைகளையும் தொகுத்து ஒன்றாக்குபவர் அவர். நமக்கு நல்ல இயக்குனர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தமிழிலக்கியம் மீது அறிமுகமும் மதிப்பும் இல்லை. ஆகவே தமிழ் இலக்கியத்தை உள்ளே கொண்டுவருவதில் நம்பிக்கையும் இல்லை. இங்குள்ள சினிமாவில் இலக்கிய அம்சம் மேலை சினிமாவில் இருந்து எடுக்கப்படுகிறது. பிறகு விவாதித்து வளர்க்கப்படுகிறது. அபூர்வமாக சில இயக்குனர்கள் இலக்கியக்கூறைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

சினிமாவில் எழுத்தாளனின் இடம் இயக்குனரின் விருப்பப்படி இலக்கிய அம்சத்தை அளிப்பதுமட்டுமே. அவன் சினிமாவின் ஆசிரியன் அல்ல. பங்களிப்பாளன்தான். ஒளிப்பதிவாளரின் அதே இடம்தான் அவனுக்கும். இயக்குனர் அவனை சுதந்திரமாக இயங்கவிட்டு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல படங்கள் வரும்.

தீராநதி:- வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதுவதில்லை. எழுதக்கூடாது என்று சமீபகாலம் வரை சிறுபத்திரிகை சார்ந்த எழுத்தாளர்களிடையே ஒரு அணுகுமுறை இருந்தது. இப்போது அனேகமாக எல்லா எழுத்தாளர்களுமே எழுத முன்வந்துள்ளார்கள். இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜெயமோகன்:- வெகுஜனப்பத்திரிகையில் சமீபகாலத்தில் வந்த நல்ல படைப்பு என்ன சொல்லுங்கள்? சென்ற வருடம் வந்த முக்கியமான ஆக்கங்கள்-ஏதோ ஒருவகையில் கவனம் பெற்றவை-”ஆழிசூழ் உலகு” (ஜே.டி.க்ருஸ்), ”மணல்கடிகை” (எம். கோபாலகிருஷ்ணன்.). ”இரண்டாம் சாமங்களின் கதை” (சல்மா) ”ம்” (ஷோபா சக்தி) ”பகடையாட்டம்” (எம்.யுவன்)”கூகை” (சொ.தருமன்) எவற்றுக்கும் பெரிய இதழ்களுடன் தொடர்பில்லை. சென்ற வருடம் எந்த நல்ல கதையும் பெரிய இதழ்களில் வரவில்லை. இன்றும் இங்கே பெரிய இதழ்களில் இலக்கியத்துக்கு இடமில்லை.

என்ன நடக்கிறது? எழுத்தாளர்களில் ஒருசாரார் பெரிய இதழ்களின் சில பக்கங்களைப் பெற்று இலக்கியத்தை அறிமுகம் செய்கிறார்கள். அவ்வளவுதான் நடந்துள்ளது. மேலே சொன்ன நாவல்களைப் போன்றவை எண்பதுகளில் வெளிவரவே இயலாது. வந்தாலும் விற்றுத் தீர ஐந்து வருடம் ஆகும். இன்று பேரிதழ்கள் வழியாக அவை பரவலாக அறிமுகமாகி ஒரே வருடத்தில் விற்றுத் தீர்கின்றன. இன்று, இலக்கியத்துக்கு, சிற்றிதழ்களுக்கு வெளியே ஒருவாசகத்தளம் உருவாகியுள்ளது. அவர்கள் தான் இப்போது நிறைய நூல்களைப் படிக்கிறார்கள். அவர்களால் பதிப்புத்துறையில் மெல்லிய வளர்ச்சி உள்ளது. அவ்வாசகர்களிடம் சென்றுசேர பிரபல இதழ்கள் உதவுகின்றன. அவ்வளவுதான்.

சிற்றிதழ் இயக்கம் பொதுக்கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு இயக்கமாக எண்பதுகள் வரை நடந்தது. அன்றைய எதிர்ப்பு அந்த நோக்கில்தான். பெரும்போக்குகளில் கரையாமல் தங்கள் தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் அது. அன்று அந்த வீம்பு ஓர் ஆயுதமாக இருந்தது. தொண்ணூறுகளில் சிற்றிதழ்களின் போராட்டம் பலன் தந்தது. சிற்றிதழ் எழுத்தாளர்கள் மேலும் விரிந்த வாசகர் வட்டத்தை அடைந்தனர். அவ்வாசகர்களுடன் உரையாடலைத் தொடர்வதே இன்றைய பணி. அதற்குத்தான் இடைநிலை இதழ்கள் முக்கியமாகத் தேவையாகின்றன. ”சுபமங்களா”வில் தொடங்கிய இப்போக்கு இன்று ”உயிர்மை”. ”காலச்சுவடு”. ”புதியபார்வை, ”தீராநதி” என வளர்ச்சி கண்டுள்ளது. அவற்றை நோக்கி மேலும் வாசகர்களை ஈர்க்க பேரிதழ்களின் சில பக்கங்களை பயன்படுத்துகிறோம். பொதுக்கலாச்சாரம் தீவிர இலக்கியத்துக்கு அளித்துவந்த புறக்கணிப்பு இன்று இயலாமல் ஆகிவிட்டது. இன்று தீவிர இலக்கியமும் ஒரு தரப்பாக ஆகியுள்ளது. இதை முக்கியத்தரப்பாக ஆக்குவதே இனியுள்ள சவாலாகும். அதற்கு இணையத்தையும் பயன்படுத்துகிறோம்.

தீராநதி:- வெகுஜனப் பத்திரிகைகளில் தீவிர எழுத்தாளர்கள் எழுத முடிவதற்குக் காரணம், தீவிர எழுத்தாளர்களின் தரம் குறைந்துள்ளதுதான் என்றும் ஒரு விமரிசனம் வைக்கப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஜெயமோகன்:- இப்படிச் சொல்பவர்களின் தரம் பற்றித்தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இவர்களுக்குத் தமிழிலக்கிய வரலாறு தெரியுமா? தமிழின் முக்கியப்படைப்பாளிகளில் எழுபது எண்பதுகளில் எழுதிய சிலர் மட்டுமே, சிற்றிதழ்களில் மட்டும் எழுதியவர்கள். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் காலத்தில் சிற்றிதழ் என்ற கருத்தே இல்லை. அவர்கள் எழுதிய இதழ்கள் ”மணிக்கொடி”. ”கலைமகள்” போன்ற பெரிய இடைநிலை இதழ்களே. லா.ச.ராமாமிர்தம், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன். கு.அழகிரிசாமி. அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளின் சில கதைகள் மட்டுமே சிற்றிதழ்களில் வந்தவை. தமிழின் முதல் சிற்றிதழ் ”எழுத்து”தான். எழுபதுகளில்தான் சிற்றிதழ் ஓர் இயக்கமாக ஆகியது. பெரிய இதழ்களைப் புறக்கணிக்கும் நோக்கு வலுப்பெற்றது. அதன் முக்கிய கோட்பாட்டாளர் சுந்தர ராமசாமிதான். அவரும் எழுபதுகளில்தான் சிற்றிதழ்களுக்கு வந்தார். அதற்கு முன் ”சரஸ்வதி”, ”கல்கி” போன்ற இதழ்களிலேயே எழுதினார். தொண்ணூறுகளில் சுந்தர ராமசாமியும் பேரிதழ்களுக்குச் சென்றுவிட்டார்.

சிற்றிதழ் இயக்கம் தமிழில் நவீனத்துவத்தை உருவாக்கிய ஒரு கலாச்சார நிகழ்வு. தன் இலக்கை எய்தியதும் அது நின்றுவிட்டது. இன்றும் ஒரு புதிய கோட்பாட்டை படைப்பியக்கத்தைக் கொண்டுவர சிற்றிதழ்களையே தொடங்கவேண்டும். ”சொல்புதிது” அப்படிப்பட்ட இதழ்தான். எப்போதும் அறிவியக்கத்தின் ஒருபகுதியாக சிற்றிதழ் இயக்கம் இருக்கும். ஏற்கெனவே சொன்னதுபோல, இன்றும் எந்தத் தீவிர எழுத்தாளரும் பெரிய இதழ்களில் அவற்றின் தேவைக்கு ஏற்பத் தங்கள் படைப்புகளை எழுதவில்லை. அவர்களின் ஆக்கங்கள் இடைநிலை இதழ்களிலோ, நூல்களாகவோதான் வருகின்றன.

தீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட ! நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன்.

ஆனாலும் மதத்துடன், சிந்திப்பவனுக்கு ஓர் உறவு இருந்தபடியேதான் இருக்கும். ஏனெனில் மதம், ஆன்மீகமான தேடல் கொண்டவர்களை நெருக்கமாகப் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் அடையும் தரிசனங்களை அது தத்துவ விடைகளாக மாற்றித் தன்னுடைய அமைப்புக்குள் இழுத்தபடியே இருக்கும். சில நாட்களுக்கு முன் யோகி ராம் சுரத் குமார் ஆசிரமம் சென்றிருந்தேன். அவர் இருக்கையில் அவரைச் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறேன். அவர் தன் போக்கில் தேடி தான் தேர்ந்த பாதையில் தனித்துச்சென்றவர். பிச்சைக்காரன் என தன்னைச் சொல்லிக் கொண்டவர். சுருக்கமான உரையாடலே அவரது வழி; உபதேசம் அல்ல. வாழ்நாள் முழுக்க மதத்துக்கு வெளியேதான் வாழ்ந்தார். கோயில் அருகே வாழ்ந்தும் கோயிலுக்குள் சென்றவரல்ல. இன்று அவரை இந்துச் சிலையாக ஆக்கிவிட்டார்கள். கோயில்கட்டி, சிவலிங்கம் நிறுவி, பூசை செய்து பிரசாதம் தருகிறார்கள். இப்படித்தான் எண்ணற்ற ஞானிகள் மதத்துக்குள் இருக்கிறார்கள். மதம், மெய்ஞானத்தை உறையவைத்து சிலையாக்கி வைத்திருக்கிறது. உண்மையான தேடல்கொண்டவன் அதை மதத்துக்குள் சென்று மீட்டு, தன் அகத்தில் உயிர் கொடுத்து உள்வாங்கிக் கொள்ளவேண்டியுள்ளது. ரமணரை, நாராயணகுருவை, ராமகிருஷ்ண பரமஹம்சரை, சங்கரரை, ராமானுஜரை, சித்தர்களை, நாகார்ஜுனரை, தர்ம கீர்த்தியை, வாத்ஸ்யாயனரை, கபிலரை….. அப்படித்தான் அவன் தனக்கு முன்னால் சென்றவர்களை அறிய முடிகிறது.

இரண்டாவதாக மதத்துக்குள்தான் நம் மரபின் ஞானமும் கலைகளும் சேமிக்கப்பட்டுள்ளன. அவை படிமங்களாக, இலக்கியங்களாக உள்ளன. அவற்றை சிந்திக்கும் பழக்கமுள்ள ஒருவன் புறக்கணித்துவிட இயலாது. ஆண்டாளின் மகத்தான கவிதை அவனுக்குப் பெரும் புதையல். ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அவனுக்கு முக்கியமான இடம். அங்கே சென்று பெண்ணுக்குக் கல்யாணமாகவில்லை என்று வேண்டிக்கொள்பவர்களுக்கும் அவனுக்கும் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டைத் தமிழ்நாட்டில் எளிய மனிதர்களுக்கு சொல்லிப் புரியவைத்துவிடமுடியும். அவர்கள் அதை ஏற்கெனவே அறிவார்கள். பொத்தாம் பொதுவாக யோசிக்கும் அறிவுஜீவிகள் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். பாமரர், மத நம்பிக்கையை ஆன்மீகம் என்கிறார்கள். நம் அறிவுஜீவிகள் ஆன்மீகத்தை மதநம்பிக்கை என்கிறார்கள். இவர்கள் வேறுவகைப் பாமரர்கள்.

தீராநதி:- நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தரப்பு என்ன?

ஜெயமோகன்:- ஏதுமில்லை. ஏற்றுக் கொண்டால் அங்கே நின்றுவிடுகிறேனே. எனக்கு வழிகாட்டிப் பலகைகளும் ஆய்வுக்கருவிகளுமே உள்ளன. நித்யா வழியாக எனக்கு அத்வைதம் அறிமுகமாயிற்று.நாராயணகுருவின் அத்வைதம். அது சங்கர அத்வைதத்தில் இருந்து பலவழிகளில் வேறுபட்டது. ஒரு வளர்ச்சி நிலை. அது புறவுலகை முற்றாக நிராகரிப்பது அல்ல. அத்வைதம் தத்துவ அடிப்படையில் பிற்கால பௌத்தத்தின் நீட்சி. அவ்வாறு பௌத்த ஞானமரபில் ஆர்வம் ஏற்பட்டது. இப்போது நமக்கு கிடைக்கும் பிரபஞ்ச ஞானத்தின் ஆகச்சிறந்த தளங்கள் இங்குதான் உள்ளன என்றுதான் எண்ணுகிறேன்.

தீராநதி:- உங்கள் எழுத்தில் அவற்றை வலியுறுத்துகிறீர்களா?

ஜெயமோகன்:- வலியுறுத்த வேண்டுமென்றால் நான் அவற்றில் தெளிவுடன் இருக்க வேண்டும். தெளிவை அடைந்தால் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன். என் தேடலையும் தத்தளிப்புகளையுமே முன்வைக்கிறேன். அவற்றையே உலகப் பேரிலக்கியங்கள்கூட சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியத்தின் பணி அதுதான். தெளிவு, அந்தக் கொந்தளிப்புள் சாரமாகத் திரண்டு வருவது. ஆனால் அது அந்த ஆசிரியனால் உருவாக்கப்படுவது அல்ல. சமானமான மனம் கொண்ட வாசகன் ஒருவன், தன் கற்பனையை மத்தாக்கிக் கடைந்து அதை அடைகிறான். நமக்கு தஸ்தயேவ்ஸ்கி நாவல்களில் ஞானத்தின் ஒளி கிடைக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க இருளின் கொந்தளிப்புடன் அலைந்தார். தல்ஸ்தோய் எப்போது ஞானத்தைத் தொட்டாரோ அதன் பின் எழுதவில்லை. குட்டிக்கதைகள்தான் எழுதினார்; எழுதியவற்றை நிராகரித்தார். தேடலே இலக்கியமாகிறது. கண்டடைதல் மௌனத்தையே உருவாக்கும்.

நன்றி: தீராநதி 2006

[தீராநதி இதழில் தளவாய்சுந்தரம் எடுத்த பேட்டி. 2006ல் வெளிவந்தது. இப்போது தொகுப்புகள் என்ற தளத்தில் மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தளிக்கும் இணையப்பக்கம் இது]

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-சில கடிதங்கள்
அடுத்த கட்டுரையாகவா வருகை