மின்னல்மலை- கடிதம்

பித்து எனும் அறிதல் நிலை

மேடையில் நிகழும் உள்ளம்

அன்புள்ள ஜெ,

வணக்கம். நீங்கள் நலமாகஇருபெருநிலைகள் என்ற கட்டண உரையின் தலைப்பைப் பார்த்தவுடன, எதைப் பற்றிய உரை என்ற ஆர்வம் எங்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டது. ஆன்மீகமா, தத்துவமா என்று விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களிடமிருந்து மெய்யியல் உரை என்ற செய்தி வந்து சேர்ந்தது.

இந்த உரை முன்னர் நீங்கள் பேசிய பல புள்ளிகளை இணைத்து கண் முன்னே ஒரு பெரும் ஓவியம் போல் எழுந்து நின்றது. நடுகல் என்ற உருவகத்தை வரைந்து, வேங்கையின் தனிமையை  வளர்த்தெடுத்தீர்கள். அந்த ஒரு புள்ளியிலிருந்து விரித்து விரித்து இடியைத் தாங்கி நிற்கும் ஒற்றை பாறையை அறிமுகம் செய்தீர்கள். பாறையின் தனிமை, இடியின் மூலம் இறங்கும் அதிர்வு, மீண்டும் மீண்டும் முட்டும் இடியால் செம்மை செய்யப்பட்ட ஒற்றை பாறை என்ற படிமம் மனதில் பதிந்து விட்டது. உரை முடிந்த பின்னும் ஒரு இடியேனும் தலையில் விழ வேண்டும் என்ற ஆவல் மனதில் நிலைத்து விட்டது. பெரும் தனிமையின் இனிமையை வியக்க ஆரம்பித்த பொழுது அனைத்து உயிரிலும் தன்னை உணரும் மூதன்னையை அறிமுகம் செய்தது  ஒரு இனிய அனுபவம்.

உரையைப் பற்றி யோசிக்க யோசிக்கப் பல கேள்விகளையும், சில பதில்களையும் அடைகிறேன். கட்டண உரைக்குப் பின் நடந்த உரையாடல் போது இருபெரு நிலைகளும் ஒரு மனிதனிடம் இருக்க முடியுமா என்ற கேள்வியும், முடியும் என்ற பதிலும், இருந்தாக வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. இன்னும் சில நாட்கள் சென்ற பின் அறிவுத்தேடலும் அறியும் நிகழ்வும் தனித்த பயணம் என்றும் நிறைவும் அமைதியும் அனைத்திலும் ஒன்றாக உணரும் பொழுது பல மடங்காகும் என்றும் தோன்றுகிறது. ஐந்து கோசங்களை உரையில் அறிமுகம் செய்தீர்கள் அதுவும் இந்த முடிவிற்கே என்னை நகர்த்துகிறது. இருபெரு நிலைகளும் வாலை கவ்விக்கொண்டு இருக்கும் இரு பாம்புகள் என்ற எண்ணமே மனதில் நிற்கிறது

உரை நிகழ்ந்து 10 நாட்கள் கடந்து விட்டது இருப்பினும் சிந்தனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மற்றும் ஒரு இனிய படிமத்தை எங்கள் அனைவருடனும் பகிர்ந்ததற்கு நன்றி.

புவனேஸ்வரி

பெங்களூர்

அன்புள்ள புவனேஸ்வரி,

அந்த உரை நான் ஏற்கனவே எழுதி, ஏப்ரல் இதழ் உயிர்மையில் வெளிவந்துள்ள ஒரு கதையின் நீட்சி. அந்த உரைக்குப்பின் அதே மனநிலை நீடிக்கிறது. ஆனால் எண்ணங்கள் உதிரியாக உள்ளன. வடிவம் கொள்ளவில்லை. அந்நிலையில் எப்போதுமே பயணங்களை விரும்புவேன். உடனடியாக எங்காவது பனிமலைகளை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதே படிமம்தான். மின்னல்தாங்கும் மலைமுடி. ஆனால் வெள்ளிப்பனி சூடி குளிர்ந்து உறைந்திருப்பது…. அதுதான் இப்போது நெஞ்சுக்குள்

என்றாவது ஒருநாள் பனிமலைகள் கண்ணுக்குப் படும்படியான ஓர் இடத்தில் சென்று தங்கவேண்டும் என்றும் கனவு காண்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஎல்லா தத்துவங்களையும் ஒரே சமயம் கற்றல்…
அடுத்த கட்டுரைஉடுமலை நாராயண கவி