மகாதேவன், கடிதங்கள்

டாக்டர் மகாதேவன் தெரிசனங்கோப்பு
டாக்டர் மகாதேவன் தெரிசனங்கோப்பு

வணக்கம்.

என் பெயர் பாலாஜி பாகவதர். கோவிந்தபுரத்தில் வசிக்கிறேன். உபன்யாஸம் செய்பவன்.

ஸ்ரீ மஹாதேவன் என்னிடம் பேரன்பு கொண்டவர். எனது உபன்யாஸங்களைத் தொடர்ந்து கேட்பவர்.எனது சிகிச்சைக்காக மார்ச் 27 முதல் ஏப்ரல் 7வரை அவர் இல்லத்தில் தங்கியிருந்தேன்.அப்போது உங்களைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன்.

ஸ்ரீ மஹாதேவன் மிகவும் மகிழ்ந்து அவசியம் கூட்டிச் செல்கிறேன் என்று தெரிவித்தார். நவம்பர் மாதம் மீண்டும் வருவதாகவும் அப்போது உங்களைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

மிகவும் மோசமான நிலையில் வந்த என்னை குணப்படுத்தி அனுப்பி விட்டு அவர் காலமாகி விட்டார்.அவருடன் வந்து உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறாமல் போய் விட்டது.

காலம் கூட்டி வைக்க வேண்டும்.

நமஸ்காரம்

கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர்

9444350740

அன்புள்ள ஜெ

மருத்துவர் மகாதேவன் அவர்களின் மரணம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அண்மையில் ஒரு புகைப்படத்தில் மிகுந்த எடையுடன் அவரைப் பார்த்தபோதே அச்சமாக இருந்தது. அலோபதியும் ஆயுர்வேதமும் அறிந்த அவருக்கு நாம் சொல்ல ஒன்றுமில்லை. அவர் தன் உடலை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. என்னிடம் எடையை குறைக்கச் சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.

(ஆயுர்வேதம் காபி டீ போன்றவற்றை தவிர்க்கச் சொல்லும். காபிக்குப் பதில் சில பானங்கள் சொன்னார். அதை குடித்து நான் 12 கிலோ எடை குறைந்தேன்) அவர் அதை எதையும் கடைப்பிடிக்கவில்லை. வெறிகொண்ட உழைப்பு. பயணங்கள். அதுதான் அவருடைய வாழ்க்கை. நீங்கள் முன்பு வங்காளநாவலான ஆரோக்யநிகேதனம் பற்றி எழுதியபோது ரிபு என்ற சொல்லை பயன்படுத்தினீர்கள். அதுதான் சரியாகப் பொருந்தி வருகிறது. ஒருவரின் அடிப்படை இயல்பே அவருடைய சாவுக்கும் காரணமாக அமைகிறது.

மிகுந்த சிக்கலுடன், கிலேசத்துடன் இருபதாண்டுகள் அலைந்த என்னை மகாதேவன் குணப்படுத்தினார். 20 சதவீதம்தான் சான்ஸ் இருக்கு என்று சொன்னார். 100 சதவீதம் குணமாகிவிட்டேன். அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றி. மாபெரும் ஆத்மா. இறைவன் நற்கதி அருளட்டும்.

கே

முந்தைய கட்டுரைமல்லற்பேரியாற்றுப் புணை
அடுத்த கட்டுரைமுத்தம்மாள் பழனிசாமி என்கிற ஆளுமை