கமலக்கண்ணனும் வாழைவனநாதரும்- கடலூர் சீனு

இனிய ஜெயம் 

சைவர்களாவது கொஞ்சம் தேவலாம். அங்கங்கே வைணவ பேர் வெக்கிறாங்க, ஆனா இந்த வைணவர்கள் இருக்காங்களேசுத்தம்என்றார் சரவணன். நானும் புதுச்சேரி மனிமாறனும், சரவணனும் அன்று அதிகாலையில் சரவணன் காரில் கிளம்பி திருச்சிராப்பள்ளி சுற்றி உள்ள ஆறு ஏழு இடங்களை பார்க்க வேண்டி, அதன் துவக்கமாக திருவெள்ளரை பகுதியின் முக்கிய மூன்று கோயில்களை காண வந்து, கோயில் நுழையும் முன்னர் பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேக்கரியில் தேநீர் அருந்தி ஆசுவாசம் கண்டு கொண்டிருந்தோம்.

முந்தைய நாள் கனவில் திருவெள்ளரை பெருமாள் கோயில் ராஜ கோபுரம் வந்தது. இருபது வருடம் முன்னர் என் தம்பி இங்கேதான் துறையூர் கல்லூரி ஒன்றில் படித்தான். விடுமுறை தினங்களில் அவன் கல்லூரி நண்பர்களுடன் நானும் இணைய, இந்த பகுதி கோயில்களில் சுற்றி திரிந்திருந்த நாட்களுக்கு பிறகு இப்போது அது கனவில் எழ, உடனடியாக நண்பர்களுடன் கிளம்பி வந்து சேர்ந்தேன்.

பேசிக்கொண்டே பேக்கரி பெயரை கண்ட சரவணன் திடுக்கிட்டு என்னை அழைத்துக் காட்டினார். கண்ட முதல் கணம் திடுக்கிட்டு, மறு கணம் வெடித்து சிரித்து விட்டேன். பேக்கரி பெயர்  ‘அருணாச்சலம் ஐயங்கார் பேக்கரி‘.

பேசியபடி வந்து உடையவர் ஸ்ரீ ராமாநுஜர் சந்நிதி வாயிலில் காரை நிறுத்திவிட்டு இறங்கி திருவெள்ளரை புண்டரீகாக்ஷப் பெருமாள் கோயில் ராஜ கோபுரதை தரிசித்தோம். உயர்ந்த படிகள் மீது எழுந்த, புடைப்பு தூண்கள் உள்ளிட்ட வடிவ அலங்காரங்கள் நிறைந்த பிரும்மாண்ட ஆதிட்டானம். அதன் மேல் எழுந்த இரண்டு நிலைகள், சாலை வழிகள், கர்ண கூடுகள் முற்றுப் பெறாத மிச்ச கோபுரத்தை கற்பனையில் கிளர்த்தி திகைக்க செய்யும் அந்த ஹோய்சாளர் பாணி கோபுரம், பராமரிப்பு பணிகள் காரணமாக முற்றிலும் சாரக் கட்டுகளால் கவசமிடப்பட்டு, கொசுவலையால் போர்த்தப்பட்ட யானை போல நின்றிருந்தது. குறுக்கே கீச்சிட்ட படி பறந்து சென்ற கிளிகள் கோபுர உயரத்தை இன்னும் உயர்த்திக் காட்டின. பேராலயத்தின் இறுதிக் கட்டுமானம் இந்த கோபுரம். வாயிலின் வலதுபுறம் நடனமிடும் பால கிருஷ்ணன் சிற்பம். உள்ளே நுழைந்து அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் நிகழும் பராமரிப்பு பணிகள் வியக்க வைக்கும் பிரம்மாண்டம் கொண்டது.  (அது குறித்து கிருஷ்ணன் சங்கரன் தனது பதிவில் விரிவாக எழுதி இருக்கிறார்

முதல் சுற்று முடித்து, ரசனையே இன்றி கட்டப்பெற்று வெள்ளையடிக்கப்பட்ட  ஒரு நிலை கோபுர வாயில் வழியே  இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தால், நாழி வாசல் வழியே நுழைந்து உத்தராயணம் தட்சணாயானம் என்று பெயரிட்ட வாசல்களை கொண்ட, பாறைகுன்று மேல் அமைந்த கருவறைக்குள் சென்று கமலக் கண்ண பெருமாளை திரிசிக்கலாம். நாழி வாசல் இரு புறமும் சங்க நிதி, பதும நிதி, கற்பகிரக பின் சுவரில் தாமரைக்கண்ண பெருமாளின் சுதை சிற்பம். அருகே சந்திரன். சுற்றி வந்தால் சரஸ்வதி, சாவித்ரி கங்காதரர், பிரம்மன், சிவன், கோவர்த்தனன் சுதை சிற்பங்கள்

கங்காதரரின் வான் நோக்கி உயர்த்திய வலது கையில் கங்கையன்னை அமர்திருந்தாள். விஷ்ணு காலடியில் இருந்து அவரது இடை வரை ஒரு பாம்பு படமெடுத்து நின்றுகொண்டு இருந்தது. கோவர்த்தனனோ வலது கையை கடி ஹஸ்தமாக வைத்து, இடது கை சுட்டு விரலால் மலையை தூக்கி நின்றார்

கர்ப்ப கிரகத்தில் ஆளுயர மூலவர் பெருமாள் செய்து அணிவிக்கப்பட்ட அலங்காரங்கள் பின்னே ஒரு மாதிரி மொழுக்கட்டையாக இருந்தார். புண்டரீக வல்லியும் அவ்வாறே. சேவித்து விட்டு, ஆழ்வார்களின் அழகு மிகு செப்புத் திருமேனிகளை சற்று நேரம் ரசித்து விட்டு வெளியேறினோம்

சங்க நிதி பதும நிதி அருகே வாயிலில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டை நண்பர்களுக்கு காட்டினேன். பாண்டிய மன்னன் ஒருவன், உருத்திரங் கண்ணனாருக்கு சோழன் எடுத்த 16 கால் மண்டபம் ஒன்றை மட்டும் விட்டு விட்டு, சோழவள நாடு மொத்தத்தையும் தட்டி தரை மட்டம் ஆக்கிய பராக்கிராமத்தை கூறும் கல்வெட்டு அது. (தகவல் உபயம் ஆசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியம்). முற்கால பல்லவர் துவங்கி நாயக்கர் காலம் வரை நீளும் கல்வெட்டு வரிசைகளில்  இன்னும் ஒரு கல்வெட்டு இங்கே 1500 இல் ஸ்ரீ ராமானுஜர் பெயரில் ஒரு அன்னதான மண்டபம் இருந்ததை, அதற்கான அன்னதான நிபந்த நிலங்கள் குறித்து பேசுகிறது. அந்த மண்டபம் இப்போது அங்கே இல்லை. என்ன ஆனது என்றும் தெரியவில்லை

ஆய்வாளர் இரா நாகசாமி நூல் ஒன்றில் தஞ்சையில் கிடைத்த ராஜராஜ சோழன் கல்வெட்டு ஒன்றில் தஞ்சை பெரிய கோயிலில் சாக்கியார் கூத்து நடத்த பத்து பறைசேரி உள்ளிட்டு நிலம் வேலி எல்லாம் நிபந்தம் என அளித்த செய்தி வருகிறது. அந்த சாக்கியர் கூத்தை ஆடும் தலைவன் மறைக்காட்டு கணபதி அவரது  திருவெள்ளரை சாக்கை குழு திருவெள்ளரை ஊரை சேர்ந்தது என்பது உபரி தகவல்

திருவெள்ளரை ஊர் சங்க காலம் துவங்கி மழவர் குடியின் நிலமாக, ராஜ ஸ்ரீ விஜயரங்க ஒப்பிலா மழவராய நயினார் சமஸ்தான காலம் வரை இருந்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் இந்த ஊர் ராபர்ட் கிளைவ் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. கிருஷ்ணகிரி பகுதிகள் மேல் மழவர் நாடாகவும், அரியலூர் உள்ளிட்ட இப்பகுதி கீழ் மழவர் நாடாகவும இருந்திருக்கிறது. பல்லவர் காலத்தில் உரிமைகள் பல பெற்ற இவர்கள் வரலாறு நெடுக எல்லா காலத்திலும் தங்களுக்கு மேல் நிற்கும் அரசின் பொருட்டு வரி வசூல் செய்யும், நில நிர்வாகம் செய்யும் அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள். சோழர் காலத்தில் இவர்களுக்கு இணையாக இன்று முத்துராசா என்று அழைக்கப்படும் முத்தரையர்கள் வந்து சேர்த்திருக்கிறார்கள். இந்தராயர்விகுதி கொண்ட மழவர்கள்ஆண்ட பரம்பரையாகியநாங்களே என்று தற்போது வன்னியர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். விரைவில் கிருஷ்ணதேவராயர்வன்னியராக உயரும் வாய்ப்பு இருப்பதாக இதன் வழியே தெரிய வருகிறது

வெளியே வந்து நெடிதுயர்ந்த கோட்டை சுவர் போலும் மதிலை வேடிக்கை பார்த்தபடி வெளி சுற்றில் நடந்து கோயில் பின்புறம் அமைந்த குடைவரைக்கு வந்தோம். இங்குள்ள இந்த பெருமாள் கோயில், அருகே உள்ள ஜம்பு நாதர் கோயில், சற்றே தூரத்தில் உள்ள திருப்பைஞ்ஞீலி கோயில் இந்த மூன்றின் முதல் வடிவமும் பாறையில் குடைந்த கோயிலாக எழுந்தவை. இந்த பாறைகளுக்கு திருவெள்ளரை என்று பெயர் வர காரணம் இவை ஆதிஷேஷன் பின்னி முறுக்கிய வகையில் உடைந்து தெறித்து விழுந்த பனி படர்ந்த கயிலையின் துண்டுகள் என்பதே இங்குள்ள ஐதீகம். (இந்த ஐதீக கதை இக்கோயில் குறித்த மெக்கன்சி ஆவணமான 17 ஆம் நூற்றாண்டு ஓலை சுவடியில் உள்ளது என்று இரா நாகசாமி முன்னுரை அளித்த வேதாசலம் எனும் ஆய்வாளர் நூல் ஒன்றில் உள்ளதுஆதிஷேஷன் ஏன் கையிலையை நெரித்தார் அது என்ன புராணம் என்று தெரியவில்லை.

அமானுஷ்ய தோற்றம் தரும் ப்ரும்மாண்ட ஆலமரம் ஒன்றின் எதிரே அமைந்த, உருவங்கள் ஏதும் இப்போது இல்லாத, எதிர் எதிர் நோக்கும் கருவறைகளை ஆறு தூண்கள் கொண்ட ஒற்றை அர்த்த மண்டபம் இணைக்கும் குடைவரை. மயில்கள் அகவும் ஒலியில் சற்று நேரம் குடைவரைக்குள் நின்றுவிட்டு, மீண்டும் உள்ளே சென்று கோயில் மத்தியில் இயற்கையாய் அமைந்த பாறை ஊற்று குளம் பார்த்துவிட்டு, சக்கரத்தாழ்வார், பெரியாழ்வார் ( இந்த ஸ்தலத்தை பாடிய ஆழ்வார்) மணவாள மாமுனிகள் ஆகியோரை சேவித்து விட்டு, வெளியே வந்து உடையவர் ஸ்ரீ ராமானுஜரை தரிசிசிக்க சென்றோம்

ஸ்ரீரங்கத்துக்கு இணையாக ஸ்ரீ ராமானுஜர் இங்கேயும் வந்து தங்கி தனது பணிகளை செய்திருக்குறார். வைணவ ஆசிரியர்களில் ஒருவரான உய்யக்கொண்டார் இங்கேதான் பிறந்து பணிகள் புரிந்திருக்கிறார். உடையவரை வணங்கும் முன்பாக முதலில் இவரை சேவிக்க சொல்லி, பட்டர் உடையவரின் வலது பக்கம் தீபம் காட்டினார். நவநீத க்ரிஷ்ணன். வணங்கி முடித்து பட்டரிடமே வழி கேட்டு, கம்பன் அரையன் எடுப்பித்த சுவஸ்திக் கிணறு சென்று சேர்ந்தோம். தொல்லியல் துறைகட்டுப்பாட்டில் நன்கு பராமரிக்கப்பட்டு, ஆனால் உள்ளே சென்று பார்க்க வழி இன்றி பூட்டிக் கிடந்தது கிணறு. தமிழ் நிலத்தின் அபூர்வ அழகிய படிக் கிணறுகளில் ஒன்று இது. கினறு நோக்கி படி இறங்கும் வாயில் நெடுக கிருஷ்ணரின் பாகவத கதை சிற்பங்கள், குடக் கூத்தாடும் க்ரிஷ்ணன் சிலைகள் உண்டு என்று குடவாயில் தெரிவித்திருந்தவற்றை காண முடியாமல், கம்பி வேலிக்குள் முகம் புதைத்து கண் எட்டியவரை பார்த்தோம். தமிழ் நிலத்தின் கிருஷ்ணன் ருக்மிணி வழிபாடு சார்ந்த மிகப் பழைய கல்வெட்டு இந்த திருவெள்ளரை கோயிலில்தான் இருப்பதாக குடவாயில் தெரிவிக்கிறார். மொழுக்கட்டையான மூலவர் துவங்கி சுதை சிற்பங்கள் தொடர்ந்து, புடைப்பு சிற்பங்கள், செப்பு படிமங்கள் வரை, கிருஷ்ணனின் வித விதமான சிலைகள் வழியே, கிருஷ்ண வழிபாடு வரலாறு நெடுக மெல்ல மெல்ல வளர்ந்து, கிருஷ்ணன் விஷ்ணுவாக உயர்ந்து வைணவத்தின் பகுதி என்றாவதை, இந்த பண்பாட்டு படிநிலை மலர்ச்சியை இப்படிக் கண் முன்னால் காணும் வகை கொண்ட பேராலயம் தமிழ் நிலத்தில் வேறொன்று இல்லை.

பார்த்து முடித்து அருகே மற்றொரு பாறை மேல் அமைந்த ஐம்புநாதர் குடைவரை கோயில் நோக்கி சென்றோம். பாறையை வளைத்து சிறிய தோரண வளைவு கொண்ட வாயில் வைத்த சுவர் எழுப்பி, குடைவரை மேல் கிரீடம் போல சிறிய விமானம் அமைந்த மிக சிறிய கோயில். திருவானைக்கா கோயிலின் ஐதீகங்களின் தொடர்ச்சி இங்கே வரை நீண்டது. அந்த பெருமாள் கோயிலையும் இந்த சிவன் கோயிலையும் திருச்சி திருவரங்கம், திருவானைக்கா கோயில்களுடன் அதற்கு இணையானவைதான் இவைகளும் என ஒப்பு சொல்லும் ஐதீகங்கள்

உள்ளே நுழைந்து சிறிய குடைவரைக்குள் பதிட்டை செய்யப்பட்டிருந்த ஜம்பு நாதரை வணங்கினோம். அருகே தரை மட்டத்தில் முற்கால சப்த மாதர் தொகுதி அடங்கிய புடைப்பு சிற்ப தொகுதி, நேர் எதிரே சிவனை நோக்கி நிற்கும் அம்மன் கருவறை. கீழே பாறையில் கல்வெட்டுக்கள். இந்த கல்வெட்டுக்கள் ஒன்றில் இங்கே இருக்கும் சமணர் பள்ளிக்கு நிபந்தங்கள் அளித்த குறிப்புகள் வழியே இங்கே 10 ஆம் நூற்றாண்டு வரை சமணப் பள்ளி ஒன்று இயங்கிய செய்தி கிடைக்கிறது. வழக்கம் போல அந்த சமண பள்ளியை மட்டும் காணவில்லை. கோயில் பார்த்துவிட்டு வெளியேறி அடுத்த கோயிலான சமய குறவர் மூவர் கொண்டும்  பாடப்பெற்ற திருப்பைஞ்ஞீலி நோக்கி நகர்ந்தோம்.

மார்ச்மாத மதிய வெயிலில் நிலம் முழுக்க ஒரு மாதிரி காய்ந்து போய் கிடந்தது, ஆங்காங்கே தூர தூரமாக வீடுகள், ஆங்காங்கே மோட்டார் பாசனம் அமைத்து நிகழும் விவசாய சதுரங்களை விட்டு விட்டால், மீதம் சாம்பல் பூத்த தேக்குகள், அதன் காலடியில் குவிந்த மண் வண்ண சருகுகள் என மத்திய இந்தியாவின் தண்டகாரண்ய நிலத்தில் நுழைந்த உணர்வு. வேடிக்கை பார்த்தபடியே திருப்பைஞ்ஞீலி வாழை வன நாதர் கோயிலை வந்தடைந்தோம். ஞீலி என்றால் வாழை மரமாம். எனக்கு வாழைப்பழமே வராத நாவு இதில் ஞீலி எங்கே எழ? எப்படி சொல்லிப் பார்த்தாலும் நீலி என்றே வந்தது

கோபுரம் அற்ற, ஆதிட்டானம் மட்டுமே அமைந்த ஆலய வாயில் முன் வாகனங்களின் நெரிசல். பார்க்கும் போதே ஆயாசம் எழுந்தது. இதை நான் எதிர்பார்க்க வில்லை. இது மற்றும் ஒரு பரிகார ஸ்தலம். தமிழ் நிலத்தில் பரிகாரங்கள் வழங்கும் ஜோதிடர்களையும், பரிகாரம் தேடி அலையும் பாவிகளையும் மட்டும் தூக்கி செல்லும் கொரானா அலை என ஒன்று வந்தால் நன்றாக இருக்கும் என்று கூட்டத்தை கண்ட அக்கணம் தோன்றியது. கூட்டத்தால் ஆர்வம் வடிந்த மனதுடன் சுற்றி வந்தேன். பொதுவாக கருவறைக்கு பின்னே லிங்கோத்பவர் இருப்பார். இங்கே உமையொருபாகன் இருந்தார்வெள்ளை துண்டு ஒன்றை நீளமாக தொங்க விட்டு, அதன் அகல முனை இரண்டையும் அர்தனாரி சிலையின் கழுத்துக்கு பின்னே முடிச்சிட்டு இருந்தார்கள். பார்பர் ஷாப் இல் போர்த்துவர்களே அதே முறை. கடும் கோபம் ஏறி துகிலை உரித்து எறிந்தேன். அழகிய தனித்துவம் கொண்ட அர்தனாரி. இடது புறம் பெண் அன்றி இவர் முழுமையாகவே ஆண். இடது புறம் செழித்த முலை மட்டும் வளர்ந்திருக்கும் விடை மேல் சாய்ந்த சிவன். பார்த்து விட்டு சுற்றி வந்தோம். அடுத்த கோஷ்டத்தில் பிட்சாடனர் அதே பார்ப்பர் ஷாப் கஸ்டமர் கோலத்தில். மணி மாறன்சீனு உங்க ஸ்டைலில் படி அதையும் கழற்றி வீசுங்கஎன்றார். பறித்து வீசினேன். இவரும் அழகிய பிச்சாடனர். கழுத்தில் கல் மாலையும், இடையில் பாம்பும் சுற்றி, இடது கையில் கொப்பரை ஏந்தி, கால்களில் உயர்ந்த ரட்சை அனிந்த அழகிய கரிய நக்ன மேனியன். கோயில் உள்ளே சுற்றி முடித்து பரிகாரம் வேண்டி அமர்ந்து கிடந்த பாவிகள் கூட்டத்தை ஊடுருவி, (திருமண தடை விலக்கும் பரிகார ஸ்தலமாம் இது, இப்படியே பிள்ளை பிறக்காவிட்டால் பரிகாரம், புருஷன் அல்லது பொஞ்சாதி ஓடிவிட்டால் பரிகாரம் என்று இங்கே திருச்சி கும்பகோணம் எல்லைக்குள்ளேயே ஒரு தீவிர இலக்கிய கருப்பொருள் சார்ந்து ஒரு சுற்று வர முடியும்) வெளியே வந்து கோயில் வெளி  சுற்றில் சப்த கன்னியர் சந்நிதி கண்டோம். அவற்றில் மூன்று சிலைகள் மிக பழங்கால சிலைகள். அருகே பாறைவெட்டு சிவன் சந்நிதி ஒன்று உண்டு. அங்கே திருக் கடையூரில் கொன்ற எமனை இங்கே சிவன் உயிர்பித்ததாக ஐதீகம். கூட்டம் அம்மியது.

கருவறைக்குள் இருந்து எதையோ விற்கும் குரலில், சிவன், பார்வதி நடுல மார்க்கண்டேயர். சிவன் காலடில குழந்தை ரூபமா எமன் இருக்கார் என்று ஐயர் சொல்லிக்கொண்டிருக்க சென்று எட்டிப் பார்த்தேன். அங்கே இருப்பவர் அற்புதமான அழகு கொண்ட சோமஸ்கந்தர். பல்லவர் கலை. சிவனின் வலது புறம் கிட்டத்தட்ட சிவனுக்கு முதுகு காட்டி, இடது காலை குத்து காலிட்டு, வலது காலை தொங்க விட்டு மிக மிக சகஜமாக உமை அமர்ந்திருக்கிறார். இடது கையை ஊன்றி நன்கு முகம் திருப்பி சிவனை பார்க்கிறாள். உமை விடுத்து கொழு கொழு குமரக் குழந்தை சிவம் நோக்கி எட்டு எடுத்து நிற்கிறது. ஜடா மகுடம் கொண்ட சிவன் முற்றிலும் மாலைகள் ஆடைகளுக்கு உள்ளே பொதிந்து நின்றார். வலது கை பார்வதி நோக்கி நன்கு சரிந்த அபய ஹஸ்தம் காட்ட, இடத்து கை கடி ஹஸ்த முத்திரையில் இடது தொடையில் அமைய, மடித்த வலது கால், தொங்க விட்ட இடது காலால் மிதித்த முயலகன். பல்லவர் கலையின் தனிதன்மைகளில் ஒன்று என, தமிழ் நிலம் அன்றி வேறு எங்கும் காண இயலாது எனும் படிக்கு அமைந்த இந்த சோமஸ்கந்தர் சிலையின் புராணம் என்பது வேறு

சிவன் தனது அக்கினியின் ஆறு அம்சங்களை கங்கையில் விட, அது ஆறு குழந்தைகளாகி கார்த்திகை பெண்கள் வசம் சேர்கிறார்கள். கார்த்திகை பெண்கள் அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி வசம் சேர்க்க, பார்வதி அறு குழந்தைகளையும் ஒரே சமயம் அள்ளி அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி குமரக் கடவுள் உதிக்கிறார். சைவத்தின் மிக அழகிய புராண சித்தரிப்புகளில் ஒன்று இந்த சோமஸ்கந்தர் படிமை.

இங்கே குழந்தை முருகன் அவருக்கு உரிய எல்லா சிற்பவியல் அணிகளுடன் இருக்க அவர் எப்படி மார்க்கண்டேயன் ஆனார்? குழந்தை எமன் எனும் கதைக்கு புராண வேர் என்பதே கிடையாது. யமனுக்கு சிற்பவியல் படியிலான ஆயுதம் உண்டு. சிவனுக்கு சூலம் போல. எனில் குழந்தை எமன் என்றால் சிற்பவியல் படி அதன் அடையாளம் என்ன? எமன் பிறக்கிறார் எனில் அவரை ஏன் சிவன் காலடியில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறார்படையெடுப்பு காலம் முடிந்து மீண்டும் வழிபாடுகள் துவங்கும் 17 ஆம் நூற்றாண்டில் சிற்பவியல் அறியாது வாய்க்கு வந்ததை எல்லாம் தல புராணம் என்று எழுதி புழங்க விட்டதன் அடயாளம்தான் இங்கே இப்போது வரை இவ்விதம் தொடர்வது. இப்படித்தான் திருமெய்யத்தில் ஒருவர் மன்மதன் சிலையை காட்டிராமபிரான் பாருங்கோ ராமன் சீதாப் பிராட்டியோட புதுக்கோட்டை வந்தப்போஎன்று துவங்கி ஐதீகம் என்று எதையோ உளறிக்கொண்டு இருந்தார். முதலில் கலை மேன்மைகள் அருகே அவை குறித்த அறிவு கிஞ்சித்தும் இன்றி காலமெல்லாம் நின்றிருக்கும் இத்தகு மழு மட்டைகளுக்கு சரியான அறிவு புகட்டுவதில்தான் ஆலயக்கலை சார்ந்த சமூக அறிவு மறுமலர்ச்சியின் பெரும்பகுதி அடங்கி இருக்கிறது.

கோயில் விட்டு வெளியேறுகையில் வாசலில் புத்தக கடை ஒன்றை கண்டேன். எப்போதும் போல உள்ளே நோட்டம் விட்டேன். எழுதியவர் பெயர் போடாது தமிழ்நாட்டுக் கோயிற் கட்டக்கலை எனும் தலைப்பிலான நூல் ஒன்று கண்ணில் பட்டது. இராகவன் எனும் பெயர் நினைவில் எழ கடைக்காரரை நூலை எடுத்து காட்ட சொன்னேன். சாத்தான் குளம் ராகவன் எழுதிய 

தமிழ்நாட்டுக் கோயிற் கட்டக்கலை நூலை விஷ்ணுபுரம் வாசித்த காலத்தில், கடலூரில் பாண்டுரங்கன் என்ற காங்கிரஸ் சுதந்திர தியாகி தாத்தா வசம் பெற்று வாசித்திருக்கிறேன். 70 களில் வெளியான பொது வாசகர்களுக்காக நல்ல நூல்

இந்த நூல் இரண்டு தளங்களில் முக்கியமானது. முதல் தளம் இந்த நூல் பண்டைய உலக 

நாகரீகங்கள் கொண்ட வழிபாடுகள் கட்டிட கலைகள், அதன் பகுதியாக இந்திய நிலம் கொண்ட பண்டைய வழிபாட்டு முறைகள் கட்டிட அமைப்புகள், இவற்றின் பொது சித்திரம் ஒன்றை அளித்து அதன் பகுதியாக தமிழ் நிலத்தின் கோயிற் கலையை பொருத்திக் காட்டுவது.

இரண்டாவது தளம் இதன் விரிப்பு முறைமை. உதாரணமாக தமிழ் நிலத்தில் கோயில் வகைகளில் ஞாழற் கோயில் குறித்து பேசுகையில், அப்பர் போன்றோர் குறிப்பிட்ட அப்படி ஒரு கோயில் இலக்கியத்தில் மட்டுமே வாழ்ந்து யதார்த்தத்தில் இல்லாத வகைமையை தக்க சான்றுகள் வழியே விளக்குவது. அதே போல ஒவ்வொரு கோயில் வகையையும் அதன் சிற்ப நூல், பிற கலைச் சான்றுகள் இலக்கிய சான்றுகள் வழியே விளக்குவது

ஒரே பலவீனம் படங்கள் ஏதும் இல்லாத நூல் அது. நூலை வாங்கி உள்ளே எழுதியவர் பெயர் கண்டேன். இந்து சமய அறநிலையத் துறை இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கும் அந்த நூல் சாத்தான்குளம் அ.இராகவன் அவர்கள் எழுதிய நூல்தான். ராகவன் எழுதிய தமிழ்நாட்டு விளக்குகள், தமிழர் அணிகலன்கள், தமிழர் போர்க்கருவிகள், தமிழ் நாட்டு கப்பல் கலை, தமிழ்ப் பண்பாட்டில் தாமரை போன்ற நூல்கள் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி யில் வாசிக்க கிடைக்கிறது. இந்த நூல் வாசிக்க கிடைத்ததில்லை. மறு பதிப்பாக கண்டது இனிய அனுபவமாகவே இருந்தது. உடனடியாக வாங்கி விட்டேன். ராகவன் அவர்கள் இந்தப் பணிக்குள் நுழைந்த விதம் சுவாரஸ்யமானது. 1900 இல் பிறந்த ராகவன் தீவிர தி க வாதி. குடியரசு இதழின் சர்வமும் அவரே. இப்படி இருந்த ராகவன் இலங்கை பயணம் ஒன்றில் இயற்கை எய்த சில மாதங்கள் இருந்த நிலையில் வாழ்ந்த ஆனந்த குமார சுவாமி அவர்களை, அவரது இறுதி காலத்தில் சந்திக்கிறார். ஆனந்த குமார சுவாமி அவர்களின் வார்த்தைகள் ராகவனை முற்றிலும் மாற்றி அமைக்க, மேலும் பல அறிஞர்கள் தொடர்பு வழியே தமிழ் நிலத்தின் கலை வெளியை எழுதும் பணிக்கு வந்து சேர்கிறார்.  80 வயதில் இயற்கை எய்திய இராகவன் தனது 75 ஆவது வயதில் எழுதியதே இந்த தமிழ்நாட்டுக் கோயிற் கட்டக்கலை நூல்.

மதியம் உண்டு களித்து அடுத்த இலக்காக புதுச்சேரி தாமரை கண்ணன் குறித்து தந்திருந்த முசிறி ஸ்ரீனிவாசநல்லூர் குரங்கநாதர் ஆலயம் சென்றோம். எழுப்பியவர் பெயர் தெரியாத தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த முற்கால சோழர் கோயில். மையச் சாலை அருகிலேயே கம்பி வேலி பாதுகாப்புக்குள் நின்றிருந்தது. சிறிய அர்த்த மண்டபம் சென்று இணையும் 20 × 20 சதுர ஆதிட்டானம் மேல் எழுந்த சிற்பங்கள் அற்ற சாலை வரிசைகள் கொண்ட பிரமிட் வடிவ நாகரா பாணி விமானம். பின்னப்பட்ட ஒரே ஒரு அழகிய தட்சிணா மூர்த்தி சிலை மட்டும் இருந்தது. அருகே பின்னப்பட்ட இரண்டு மிக மிக அழகிய சாமரம் வீசும் பெண்கள். அதில் மூர்த்திக்கு வலது புறம் நின்றவள்  முன்பு மயங்கி கிறங்கி நின்று விட்டேன். பிறை நெற்றி, எழுதிய விழிகள், கொழுங்கன்னம், சாறு பொருந்திய சுளை போலும் கீழுதடு, சங்கு கழுத்து, மூங்கிலன்ன தோள்கள், வேழத் துதிக்கையின் வழிவு கொண்ட கடி ஹஸ்தம் கொண்ட வலது கை, உடுக்கை இடையும், வளை ஒல்கலும், செழித்த அடி வயிறும்கல்லில் எழுந்த கண்கள் உணரும் மென்மை கொண்ட தனங்களும், மாலை வெயிலில் உண்மை சருமமே போல மென்மை கொண்டு ஒளிரும் கல் வண்ணமும்அட அடஅக்கணம் தோளில் கை போட்டு இழுத்து அணைத்து முத்திச் சீராட்ட ஒரு பெண் குட்டி அருகில் இல்லாமல் போனதே என்றொரு மெல்லிய ஏக்கம் உள்ளேஎழுந்தது.

எதிர் வீட்டில் இருந்து ஒரு இளம் பெண் வந்து கதவு திறந்து விட உள்ளே போனோம். உள்ளே ஒன்றும் இல்லை. சிறிய கருவறைக்குள் எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட  தலை போன ஒரு உமையொருபாகனும் உருவமே தெரியாது மொழுங்கிய வேறொருவரும் மூலையில் கிடந்தார்கள். இரண்டடி உயரத்தில் நின்றிருந்தவர் சூரிய நராயணர் என்று அந்த பெண் சொன்னார். அதற்கான எந்த அறிகுறியும் அந்த சிலையில் இல்லை. கருவறைக்குள் உள்ளே சென்று அண்ணாந்து பார்த்தால் ஒரு அற்புதம் உண்டு. ஆம் தஞ்சை பெரிய கோயில் விமானம் எவ்விதம் கட்டபட்டதோ அதன் முந்தைய மூத்த வடிவம் இது. அந்த பேராலய விமானம் எப்படி எழுப்பப்பட்டிருக்கும் என்பதை இந்த துல்லியமான மினியேச்சர் வழியே அறியலாம்

பார்த்து முடித்து கிளம்பி எங்கள் ஐந்தாவது இலக்கான குளித்தலை குண்டாங்கல் சமண தடம் சென்றோம். அதுவும் சாலை ஓரமே காண கிடைத்தது. வழுக்கு பாறை ஒன்றின் மேலே, மகாபலிபுரம் வெண்ணெய் உருண்டை பாறை போல நின்றிருந்த பாறையில் புடைப்பு சிற்பமாக தேவர்கள் பூமாரி பொழிய, சேடிகள் இரு புறமும் சாமரம் வீச, முக்குடையின் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் மகாவீரர். அங்கிருந்து அருகே கண்ட குன்றின் உச்சியில் தெரிந்த கோயில் எங்கள் ஆறாவது இலக்காக மாறியது.

அந்த கோயில் பெயர் ரத்னகிரீஸ்வரர்.சாமி பார்க்க வேண்டும் எனில் 6 மணிக்குள் மேலே போய் விட வேண்டும் அத்துடன் கோயில் மூடப்படும் என்று கீழே சொன்னார்கள். மணி 5. தம்மாத்தூண்டு மலைதானே ஏறி விடலாம் என்று முடிவு செய்தோம். சரவணன் இடது காலில் ஒரு அடி. கால் நன்றாகவே வீங்கி இருந்தது. இருந்தாலும் பரவா இல்லை ஏறுவோம் என்றார். ஏறும்போதுதான் உண்மை நிலவரம் விளங்கியது. அறுபது பாகையில் நட்டுக்குத்தாக அமைந்த படிகள் வந்தன வந்தன வந்தன வந்துகொண்டே இருந்தன. 1000 படிகள் முடிகையில் ஆவி பிரிவதற்கு சற்று முன்னால் ரத்ன கிரீஸ்வரர் காட்சி தந்தார். ஆகம விதிகளுக்கு உட்படாத, சும்மா கட்ட பட்ட ஆனால் அழகிய கோயில். அத்தனை உயரத்தில் இருந்து பார்க்க கீழே பூமியில் நிகழும் எதுவும் ஒரு பொருட்டே அல்ல என்று தோன்றியது. நான் தேடிச் சென்று பற்றிக் கொண்ட என் ஆசிரியர்களின் கரங்கள், என்னை தேடி வந்து அள்ளிக் கொண்ட நட்பின் கரங்கள் இவை அன்றி கீழே விட்டு வந்த என் வாழ்வில் நான் அடைந்த எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. எனவே எதுவும் இக்கணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று தோன்றியது. உண்மையும் அதுதான். அந்தி அணைவதை பார்த்திருந்துவிட்டு கீழே வந்தோம்

சரவணனின் வலது கால் இப்போது இடது காலை சமன் செய்திருந்தது. மலை ஏறும் முன்பு இருந்த மணிமாறன், மலை இறங்கிய பின், ம ணி மா றன் என்றிருந்தார். றன் தடதடத்துக் கொண்டிருந்தது. மணிதான் காரோட்டினார். மலையை கிரிவலம் வந்து சாலையை தொடும் முன்பாகவே சரவணன் தூக்கத்தில் விழுந்து குறட்டைகளை வெளியேற்றிக் கொண்டிருந்தார். சாலையில் எறிய பிறகே கவனித்தேன், ஓட்டுனர் மணிமாறன் சட்டி சுட்டதடா பாடலில் சிவாஜி வாக்கிங் ஸ்டிக் ஐ பயன்படுத்துவாரே அப்படி பயன்படுத்திகொண்டிருந்தார் காரின் கியரை. கார் தான் ஒரு கார் என்பதை மறந்து ஊஞ்சல் போலும் முன்னாலும் பின்னாலும் வீசி வீசி விளையாடியபடியே சென்றது

தேசிய நெடுஞ்சாலை வந்த போது, மொபைல் அழைக்க எழுந்த சரவணன் ( சார் இன்சூரன்ஸ் போடுறீங்களாநிலவரம் கண்டு கலவரம் ஆனார்.

சரவணன் : ஓரம் கட்டுங்க மணி நான் ஓட்டுறேன்.

மணி: இருங்க இருங்க

சரவணன்: என்ன தேடுறீங்க பிரேக்கையா?…

மணி: இல்ல இல்லஅதை அமுக்க தேவையான காலை

ஒருவழியாக கார் நின்று சாரதிகள் இடம் மாற, சரவணன் ஓட்டுநர் சீட்டில் ஆரோகணித்தார். எனக்கும் சற்று ஆசுவாசமாகவே இருந்தது. தாவி தாவி விரையும் கங்காரு  போல சரவணனால் காரை ஓட்ட முடியும் என்று அன்று கண்டு கொண்டேன். இப்படியாக எங்கள் ஏழாவது இலக்கான பெரம்பலூர் வாலிகண்டபுறம் (தமிழ் நிலத்தின் மிக அழகிய முருகன் சிலைகளில் ஒன்று இங்கே உள்ள சிலை) வந்து சேர்ந்து கோயில்  பார்த்துவிட்டு இரவு உணவு முடித்து இரவு 11.30 மணிக்கு இல்லம் மீண்டோம்.

வாசல் திறந்த பெரியம்மா கையில் இந்தாங்க இது திருவெள்ளரை துளசி, இது 

திருப்பைஞ்ஞீலி விபூதி குங்குமம் என்று தந்தேன்.

பெரியம்மா முகத்தில் கலவரம். “தம்பி திருப்பைஞ்ஞீலி யமன் பிறவி எடுத்த ஸ்தலம் அங்கிருந்து எதையும் கொண்டுட்டு வர கூடாது, எமன் பின்னாலேயே வந்துடுவான் அப்டிங்கறது ஐதீகம்என்றார் கலவரம் குறையாத முகத்துடன்.

” “போகும்போது திருப்பைஞ்ஞீலி போறேன் அப்டின்னு உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே போனேன். நீங்க இதை என்கிட்ட சொல்லிருக்கணும் இல்லையாஎன்றேன் நானும் அதே கலவர முகத்துடன்.

தம்பி நீ இந்தியா பூரா ஏதேதோ கோயில் போவ. இந்த கோயில் போனேன் அப்டின்னு போட்டோ மட்டும்தான் காட்டுவ. வேற எதுவும் கொண்டு வரமாட்ட, முதல் முறையா இப்படி கொண்டு வந்திருக்க, அதுவும் எதை கொண்டு வர கூடாதோ அதை. நீ இப்டி செய்வன்னு எனக்கு எப்படி தெரியும்என்றார்கள் பீதி விலகா முகத்துடன்.

நான் கடுமையாக  “அதெல்லாம் தெரியாது, தப்பு உங்க மேலதான் ஏதாவது பண்ணுங்கஎன்று விட்டு சென்று படுத்து உறங்கிவிட்டேன்.

அதிகாலையில் புரண்டு படுக்கையில் ஒர விழியால் கண்டேன், பெரியம்மா குலதெய்வ படத்துக்கு விளக்கு ஏற்றி மனம் உருக ஏதோ பதிகம் ஒன்றை மொபைலில் பார்த்து மூணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அநேகமாக எம பயம் நீக்க வல்ல பதிகமாக இருக்கும்.

மனிதன் இந்த வாழ்வை நகர்த்த என்ன என்ன பாடெல்லாம் பட வேண்டி இருக்கிறது. புன்னகையுடன் மீண்டும் உறக்கத்தில் விழுந்தேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதுறவின் நிலைகள்
அடுத்த கட்டுரைமருத்துவப் பயிற்சி, கடிதம்