பிரயாகை, நிலைபேறும் பறந்தலைதலும் – கலைச்செல்வி

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

விண்ணில் நிலைபேறு கொள்கிறான். அவன் அழியாதவன். பெருவெளி நிலை மாறினும் மாறாதவன். அவன் நட்சத்திரமென அமைந்த பின் யுகங்கள் கடந்துப்போகின்றன. ஒருநாள் அவன் பரம்பொருளிடம், நிலைபெயராமை என்பது நிகழாமை. நிகழாமை என்பது இன்மை. எந்தையே.. என் இருப்பை உணர வையுங்கள்என்கிறான். பிரம்மம் அவ்வாறே ஆகுக என்று வரமளிக்கிறது. இனி ஒவ்வொரு கணமும் உன் நிலைபெயராமையை நீயே உணர்வாய். அதையே இருப்பென அறிவாய். அதன்பொருட்டு விண்ணிலிருந்து இக்கணம் முடிவிலா நிலையின்மை ஒன்று பிறக்கும். அது கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் துள்ளலையும் அலைகளையும் ஒளிர்தலையும் தன்னியல்பாக கொண்டிருக்கும், என்கிறது. துருவன் விண்ணில் ஒளிர்கிறான். விண்ணக கங்கை பூமியிறங்குகிறாள். 

கங்கையும் பிரம்மத்தை அணுகுகிறாள். எந்தையேநான் நதி, என்னால் ஒரு கணமும் ஒரு நிலையிலும் அமையவியலாது. நான் வடிவும் வழியுமற்றவள். என்னுள் வருபவற்றை பேதமின்றி அள்ளிக் கொடுப்பவள். என் பாதையையும் பயணத்தையும் திசையையும் வகுத்துக் கொள்ளவியலாது. இழந்துக் கொண்டே செல்லும் நான் எங்ஙனம் மீள்வது? பரம்பொருள் பதிலென துருவனைச் சுட்டுகிறது. எப்போதும் உன்னை நோக்குபவன் அவன். நீ அவனை நோக்கி் கொண்டிரு. நிலை கொள்ளாமையான நீ உன் நிலைபேறென அவனைக் கொள் என்கிறது. மேருவுக்கு மேலே மண்ணும் பிணைந்துக் கொள்ளும் விஷ்ணுபதம் என்னும் விண்பிலத்தில் துருவனும் கங்கையும் உடன் பிறப்புகளாக இணைகின்றனர். அவளில் ஒரு துளி முடிவிலா செயலுாக்கம் கொண்டு மண்ணிலொரு மகளாக பிறக்கவிருந்தது. 

அக்னிவேசரின் சீடரான துரோணரின் குருகுலத்தில் படைக்கல பயிற்சி நிறைவுறும் நாள் அது. ஞானம் என்பது நிலைபெறுநிலை. மாணவர்களான அஸ்தினபுரி இளவரசர்களிடம் குரு கோரும் காணிக்கையானது பொன்னல்ல, பொருளல்லமனதில் அனலென கனன்றுக் கொண்டிருக்கும் வன்மத்திற்கான ஆகுதி. பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து காலடியில் கிடத்தினால்தான் அனல் கொண்ட மனம் புனல் கொள்ளும். தொன்மையான பதினாறு ஜனபதங்களுள் ஒன்றான உத்தரபாஞ்சாலமும் தட்சிணபாஞ்சாலமும் ஒருங்கிணைந்த பாஞ்சாலநாடு அஸ்தினபுரியின் நட்பு நாடு என்ற போதிலும் அஸ்தினபுரி இளவரசர்களுக்கு துருபதனின் இழிவு என்பது காணிக்கைப் பொருள் மட்டுமே. அர்ஜுனனின் வில் மீதும் சொல் மீதும் முழு நம்பிக்கை கொண்டிருந்த அந்த குரு தன் காணிக்கையை பெறுவதற்காக படகேறி வந்து கங்கையின் கரையோரம் காத்து நிற்கிறார். 

படைகள் காம்பில்யத்துக்குள் நுழைகிறது. இரண்டு தலைமுறைகளாக வீரியமற்ற வாரிசுகளால் தடுமாறிக் கொண்டிருந்த அஸ்தினபுரி இன்று நுாற்றைந்து ஆரோக்கியமான இளவரசர்களை பெற்றிருந்தது. இது அவர்கள் காண போகும் முதற் போர்களம். விண்ணிலிருந்து மின்னும் துருவமீனை அச்சாகக் கொண்டு சுழலும் இப்புவியில் எது நிலைபெயராததோ எது எப்போதும் எச்சூழலுக்கும் சரியென்று நிலைகொள்ளுமோ அதுவே அறம் என்று தந்தையின் வழியே கற்றுக் கொண்ட தர்மநோக்கு யுதிஷ்ட்ரனை தவிக்க வைக்கிறது. அன்பு என்பது மாயை. அன்பு கொண்டவன் ஒருபோதும் மெய்மையைத் தீண்டமுடியாது. அன்பைக் கடந்தவன் யோகி எனில், அன்பற்றவன் ஞானி என்ற கொள்கை பீமனுக்கு. அவன் ஞானியாகிறான். அர்ஜுனன் அம்புகளாலும் இலக்குகளாலும் ஆனவன். அச்சமற்றவன். இளையவர்கள் சிறியவர்கள்.

  

முதலில் கௌரவர்கள் களமிறங்குகின்றனர். கர்ணன் தனக்கு நிகரானவன் என்று அர்ஜுனனும் கர்ணனின் வில் என்றோ ஒருநாள் பாண்டவர்களுக்கு எதிராக திரும்ப போகிறது என்பதை தருமனும் உணர்வது இப்போர்க்களத்தில்தான். துச்சாதனன் தேர்தட்டில் சரிய துரியோதனனின் ரதசக்கரம் உடைய துருபதன் துரியனை நெருங்க கர்ணன் அதனை தடுக்க, பாண்டவர்கள் களமிறங்குகின்றனர். போர் என்பது களத்தில் நிகழ்வதல்ல. அது மனதில் பயின்றதை களத்தில் மெய்படுத்துவது. அர்ஜுனனின் கண்களும் கைகளும் பரபரப்புடன் இயங்க அகமோ அச்சமற்றும் அலையடிக்கும் கடலின் அடியாழம் போன்றும் அசைவற்றிருந்தது, வெற்றியை எட்டிய பிறகும். வெற்றி அதற்குமப்பால் இருந்திருக்க வேண்டும். அது பாரதவர்ஷத்தின் முதன்மை வில்லாளன் என்பதை விட துரோணரின் முதல் மாணவன் என்பதை விட குருவின் ஆக்ஞை என்பதை விட அஸ்வத்தாமனை வெல்லும் இலக்கு. புறத்தில் குருவாகவும் அகத்தில் தந்தையாகவும் வடித்துக் கொண்ட துரோணரிடம் மகனாக நெருங்குமிலக்கு. ரதத்தில் கட்டப்பட்ட பாஞ்சால மன்னனை துரோணரிடம் இழுத்து வருகிறான் அர்ஜுனன். துரோணர் துருபதனின் தலை தன் பாதமருகே வருமாறு நின்றுக் கொள்கிறார். அகமும் முகமும் புன்னகையால் விரிந்திருந்தன. நாடிழந்து தன் முன் உடலாலும் உள்ளத்தாலும் தொய்ந்துக் கிடந்த மன்னனிடம், அக்னிவேசரின் குருகுலத்தில் தனக்கு செய்துக் கொடுத்த சத்தியம், மகனின் பால்தேவைக்காக பசுமாடுகள் கோரி காம்பில்யம் போய் நின்ற தனது தரித்திரியம், துருபதனின் எக்காளமான நிராகரிப்பு, தான் விடுத்த சவால் என சொற்கள்சொற்கள்சொற்கள்வன்மம் வார்த்தைகளை கோர்த்தெடுக்கின்றன. அர்ஜுனன் உணர்ந்து கொண்டான். அவன் துரோணருக்கு கருவி மட்டுமே. அதை கடந்து அவன் வேறேதுமில்லை. வில்லாளியே அம்பாகிய அவலம். சமநிலை குலைந்திருந்தான். அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது. அல்லது வெறுமைக் கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறது. அவன் விலகிக் கொள்கிறான்.

அஸ்தினபுரியின் மணிமுடி, திருதராஷ்டிரர் விழியிழந்தவர் என்பதால் பாண்டுவுக்கு வழங்கப்பட, அவரோ கானேறி அங்கேயே உயிர்துறந்தும் விடுகிறார். அவரின் இறப்புக்கு பிறகு விதுரரின் ஞானத்தையும் பீஷ்மபிதாமகரின் அருளையும் மணிமுடியாகவும் செங்கோலாகவும் கொண்டு திருதராஷ்டிரர் அரச பொறுப்பிலிருக்க, இளவரசர்கள் முடிசூடிக் கொள்ளும் வயதடைகிறார்கள். மணிமுடியின் உரிமை பாண்டுவிடமிருந்து விலகினால் அது மீண்டும் சென்று சேர்வது குலத்திடமேயொழிய திருதராஷ்டிரிடம் அல்ல. குலம் அவ்வுரிமையை தருமனுக்கோ துரியனுக்கோ அளிக்கலாம் என்று முறைமையிருக்க, அதன்மீது பதினெட்டு ஆண்டுகள் கழித்து மணிமுடியை துரியோதனுக்கு அளிக்க வேண்டும் என்று பீஷ்மரின் சொல் ஒன்று குறுக்கே கிடக்கிறது.

 

இளவரசருக்கான அரியணை முழுநிலவு நாளின் அறிவிப்புக்காக காத்திருந்தது. குந்தியும் காத்திருந்தார், தருணத்துக்காக. தான் மோத வேண்டியது சகுனியுடன் என்பதை தெரிந்து அரசாடும் சூட்சமம் அறிந்தவர் அவர். அந்நேரம் அவரது தந்தையார் குந்திபோஜர் இறுதிப்படுக்கையில் இருப்பதால் மார்த்திகாவதிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு வருகிறது. இலக்குக்கு முன் எவரும், எதுவும் பொருட்டல்ல. அரசமுறைப்படியும் குடிச்சபை முறைப்படியும் தான் அஸ்தினபுரியின் மணிமுடிக்கு உரிமையானவன் என்றாலும் பீஷ்மரின் சொல் துரியனையே சுட்டுவதால் அது அவனுக்கே உரிமையானது, அன்னையே எதிர்த்தாலும் என்கிறது தருமனின் அறம். ஆனால்  குந்தியின் அறம் வேறானது. மன்னனாதவற்கென்றே மகனை பெற்றவர் அவர். அதற்கெனவே நீதி நெறி நுால்களை கற்றவர் அவர். சந்திரதேவநீதியின்படி தருமனுக்கே அரியணை என்பது அவர் வாதம். விழியிழந்தவர் என்பதால் ஆதிதெய்வீக முறைப்படி பதவியேற்கவியலாது போன திருதராஷ்டிரரின் மணிமுடியே பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. உரிய வயது வந்து விட்ட நிலையில் அது முறைபடி துரியனுக்கே சென்று சேர வேண்டுமென்கிறார் சகுனி. 

அவை கூடுகிறது. பிதாமகரின் சொல்லை மீறி மணிமுடியை நான் ஏற்றாக வேண்டுமென எவரேனும் சொன்னால் தர்ப்பைமேல் வடக்கிருந்து உயிர்விடுவேன். அறம் மீது ஆணை. எந்தை மேல் ஆணைசிறிதும் சஞ்சலமின்றி தருமனிடமிருந்து வெளிப்பட்டன சொற்கள். மணிமுடிக்கு உரிமையில்லாத ஒருவரால் எங்ஙனம் மணிமுடிக்கான வாக்குறுதியை அளிக்க முடியும் என்று அர்ஜுனன் எண்ணினாலும் இளையவர்கள் தமையன் சொல் மீறுவதில்லை. கட்டளை வரின் கதாயுதத்தை உயர்த்துவதும் மீத நேரங்களில் பேருணவு கொள்வதுமான எந்த அறச்சிக்கல்களுக்குள்ளும் செல்ல விரும்பாதவன் பீமன். 

குந்தி தளரவில்லை. தளர்ந்தால் அவர் குந்தியும் இல்லை. ”பிதாமகரேதாங்கள் காந்தார இளவரசருக்கு அளித்த அந்தச் சொல்லை மாமன்னர் பாண்டு அறிவாரா?” அவையின் அகம் ஒன்று குவிந்திருந்தது. “நான் அவரிடம் எதுவும் கூறவில்லைபீஷ்மரின் குரல் மெலிந்திருந்தது. “மாமன்னர் பாண்டு காலக்கெடுவுனான மணிமுடியே தனக்கு அளிக்கப்பட்டது என்பதை அறியாதவராக தனக்கு பின் தன் மைந்தன் அரியணை ஏறுவான் என்றும் நம்பியவராக இவ்வுலகை நீத்திருக்கிறார் எனில் இறந்தவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது. அவ்வாறாயின், மாமன்னரின் ஆன்மா ஃபுவர்லோகத்தில் நிறைவின்மையை அடையும் என்று நுால்கள் கூறுகின்றனவே?” அவை வாயடைத்திருந்தது. திருதராஷ்டிரருக்கு இல்லாதது விழிகள் மட்டுமே. அவர் கொண்டிருப்பது பேரூரூபெருங்கோபம்பெருங்கருணைபெருந்தன்மைதருமன் இளவரசனாக அறிவிக்கப்பட துரியோதனன் உட்பட கௌரவர்கள் அகம் முகம் கோணாது உடன்படுகின்றனர். 

காம்பில்யத்தில் துருபதன் தனக்கு நேர்ந்து விட்ட இழிவுக்கு பிறகு உயிருடன் மடிந்துக் கொண்டிருந்தார். அந்த இழிவைக் கடந்து ஏதொன்றும் அவர் அறிவுக்குள் நுழைவதில்லை. எந்த மருத்துவத்தாலும் குணமாக்கவியலாது கண்ணெதிரே மட்கிக் கொண்டிருந்த அவரை ரிஷ்யசிருங்கத்தின் அடிவாரத்திலிருந்து கணாதரின் குருகுலத்துக்கு வருகை தந்த துர்வாச முனிவரிடம் அழைத்துச் செல்ல  ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு உத்தரபாஞ்சாலத்தை கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். துரோணர் பாஞ்சாலநாட்டின் பாதியை பறித்து தன் மைந்தன் அஸ்வத்தாமனுக்கு அளித்திருந்தமையால் உத்தரபாஞ்சாலம் இப்போது அஸ்வத்தாமனிடம் இருந்தது. துருபதனுக்கு மன்னனாக வரவேற்பு மரியாதை அளிக்க வந்த அஸ்வத்தாமன் தன்னுணர்வற்று தோற்றபொலிவிழந்து செய்வதை உணராது பண்டம் போல மாறியிருந்த பாஞ்சால மன்னன் துருபதனைக் கண்டதும் சமன் குலைந்து விடுகிறான். தான் இனி ஒரு நாளும் நிம்மதியாக உண்ணுவதோ உறங்குவதோ முடியாது என்று அகமழிந்துப் போகிறான். 

அகங்காரத்தை அகற்றுவது மட்டுமே துருபதனை மீட்டெடுக்கும் ஒரே மருந்து என்கிறார் துர்வாசர். அளகநந்தாவும் பாகீரதியும் ஒன்று கலக்கும் தேவப்பிரயாகைக்கு சென்று சமஸ்தாபராத பூசை செய்ய வேண்டுமெனவும் பூசைக்கு பின் கொந்தளிக்கும் பாகீரதிக்குள் மூழ்கி கடந்து அளகநந்தாவின் அமைதிக்குள் நுழைந்து உடுத்திய உடையையும் பொங்கும் மனதையும் களைந்து சடங்கு முழுமை செய்ய வேண்டுமெனவும் பரிந்துரைக்கிறார். துருபதனின் அடிப்பட்ட அகம் மேலெழுந்து விடுகிறது. கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் பாகீரதியே அவரது அகம். அதுவே அவரது வஞ்சம். பாகீரதியை கடப்பதோ வஞ்சத்தை கரைப்பதோ அவரால் இயலாது. கொந்தளிப்பை பௌதீக வடிவாக்கும் எண்ணம் கொள்கிறார். அதர்வ வேத யாக ரிஷியை கண்டறிந்து யாகத்தின் வழியே சம்ஹார தேவியையே மகளாக, திரௌபதியாக, பாஞ்சாலியாக பெறுகிறார். துருபதனுக்கு இப்போது தமோ குணம் பொருந்திய சிகண்டியோடு இளைய அரசி பிருஷதி மூலம் கிருஷ்ணை என்ற சத்வ குணம் பொருந்திய மகளும் திருஷ்டத்யும்னன் என்ற ரஜோ குணம் பொருந்திய மகனும் கிடைக்கின்றனர். 

துரியனுக்கு இளவரசு பட்டம் கைநழுவுகிறது. அது சகுனியின் பதினெட்டு கால தவம். அனைத்தும் வீணாகி விட்டது. ஆனால் அதற்காக கையளித்த வாக்கு கைமீறியதன் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் பீஷ்மரை சகுனியால் நோகடிக்க இயலாது. அவர் சகுனிக்கு தந்தையை போன்றவர். மைத்துனரோ அன்பெனும் குன்று. துரியனுக்கும் அவன் இளவல்களுக்கும் மாதுலர் சொல்லே மந்திரம். எது எப்படியாயினும் அவரால் இனி அங்கிருக்கவியலாது. காந்தாரம் கிளம்பி விடுகிறார். துரியன் கதாயுதப்பயிற்சிக்காக பலராமரை நாடி சூரசேன நாட்டின் மதுவனத்திற்கு செல்கிறான். இளவரசராக முடிசூடிக் கொள்ளும் முன் தருமன் தன் தம்பியருடன் நால்வகை மக்களையும் ஐவகை நிலங்களையும் கண்டு தெளிந்து திரும்பி வர வேண்டும் என்பது பீஷ்மரின் ஆணை. அவரும் வழமைபோல காடேறுகிறார். கர்ணன் வில்வித்தை கற்பதற்காக பரசுராமரை தேடி வேசரநாட்டுக்கோ அல்லது தெற்கே எங்கோ செல்கிறான்.

காந்தாரத்துக்கு திரும்பும் சகுனியின் புறமும் அகமும் பாலையென ஆகியிருந்தது. அதோடு ஓநாய் ஒன்றின் இறுதிநேர பசிக்கு கால்சதையை இழக்க நேர்ந்த அவலம், வலி நிறைந்த வைத்தியம், தவிர்க்க முடியாத நிரந்தர ஊனம் என சகுனியின் சூழ்நிலைகள் மாறுகின்றன. காலத்தின் கைகளுக்குள் சூழல்களை ஒப்படைப்பதை விட அதை உருவாக்குவதே உன்னதம். தீமையென உருக் கொள்ளும் அவர் கணிகர் என்ற அமைச்சரையும் உடனழைத்துக் கொண்டு அஸ்தினபுரி திரும்புகிறார். அவரின் ஒரே இலக்கு பாண்டவரை பழித்தீர்த்து துரியனை அரியணையில் அமர்த்துவது. களம் சகுனிக்கும் குந்திக்குமானது. அதில் பீஷ்மர். திருதர், விதுரர் எவரும் பொருட்டல்ல. மூச்சின் இறுதி நுனி வரை குருதியின் சிறுதுளியையும் விடாது பருகும் ஓநாயின் சூழ்ச்சி அவருடையது. குள்ளநரியின் தந்திரம் குந்திக்கானது. 

பாண்டவர்கள் சௌவீரநாட்டின் யவன அரசர்களை வென்று மணிமுடியோடு அஸ்தினபுரிக்கு திரும்பும் சேதி வருகிறது. பாண்டவர்களின் வீரத்தை ஆட்சியின் பலத்தோடு இணைத்து அரசியல் களத்தில் ஏறிக் கொண்டிருக்கும் அஸ்தினபுரியின் தகுதியை எண்ணி விதுரரும் மற்றவர்களும் பூரிக்கின்றனர். வெற்றியை ஏந்தி வரும் இளவரசர்களை வரவேற்க மன்னன் என்ற நிலையையும் மீறி திருதராட்டினர் வாயிலுக்கே வந்து விட, விதுரன் மற்றும் முக்கியஸ்தர்கள் பூரிப்பும் பெருமையுமாக காத்திருக்க, சகுனியும் அங்கிருக்க, வழக்கமற்ற ஒன்றாக குந்தி மைந்தர்களை வரவேற்க மண்டபம் வந்து சேருகிறார். கோட்டை மேல் கொடிகளேற, பெருமுரசம் அதிர, தாளமிசைக்க, மங்கல வாழ்த்தொலிகள் விண்முட்ட, ரதத்தில் பெருமிதமாக வந்திறங்கிய இளவரசர்கள் தாங்கள் வென்றெடுத்த சௌவீரனின் மணிமுடியை தாயாருக்கு அணிவித்து படை செல்வங்களை அவரிடம் பணிக்கின்றனர். அஸ்தினபுரியில் தனியொரு ஆட்சி நடப்பதுபோல குந்தி அவ்வெற்றியை கொடையளித்துக் கொண்டாடுகிறார். ஆட்சியின் அடித்தளத்தில் வெளிப்படையாக விழுந்த முதல் விரிசல் இது. உறையில் வாளிருக்க அதனுள் செருகப்படும் மற்றொரு வாள். இதனை நியாயப்படுத்த தருமனுக்கொரு நியாயமிருந்தது. கையளவு நிலமே கொண்ட மார்த்திகாவதியின் யாதவப்பெண்ணான குந்தி அஸ்தினபுரி என்ற பெருங்களிற்றின் மீது ஏறியமரும்போது கொள்ளும் அகங்காரத்தையும் சிறுமதியையும் சாந்தப்படுத்த இச்செயலை தான் எடுத்துக் கொண்ட உரிமை என்பதாக தருமன் விதுரருக்கும் தனக்கும் விளக்கமளித்துக் கொள்கிறான். எப்படியிருப்பினும், காட்டுப்புலிக்கு மானுட குருதியை இனங்காட்டி விட்டாயிற்று. 

மதுராவின் மணிமுடி யாதவமுறைப்படி கம்சனை தன் கைகளால் கொன்ற கிருஷ்ணனுக்கு உரித்தாகிறது. அவனோ அதனை தந்தை வசுதேவருக்கு அளித்து விட்டு வேதாந்த ஞானம் கற்க குருகுலம் தேடி இமயச்சாரலுக்கு செல்கிறான். பலராமன் மதுவனத்துக்கு திரும்பி சென்று அங்கு யாதவக்குடிகளின் தலைவராகிறார். கம்சனின் மனைவிகளும் ஜராசந்தரின் மகள்களுமான ஆஸ்தியும் பிராப்தியும் வசுதேவரின் ஆட்சியில் தேவகியின் அதிகாரத்தில் உரிய அங்கீகாரமின்றி மீண்டும் மகதத்துக்கே திரும்புகின்றனர்.  ஜராசந்தன் தன் படைத்தலைவனாகிய ஏகலவ்யனை ஏவி விடுகிறார். மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தைகளைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்து அங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைக்கிறான். அசுர அரசிகள் மகதத்தை அடைந்தபோது மறுபக்கம் ஏகலவ்யனின் பெரும்படை நான்குபக்கமும் சூழ்ந்து கொண்டு மதுராவை தாக்கத் தொடங்குகிறது. ஏழே நாட்கள். மதுரா அவன் கைவசம். தான் வெற்றிக் கொண்ட மதுராவை  சூறையாடி அதன் இரு துறைமுகங்களையும் அழிக்கிறான் ஏகலவ்யன். வசுதேவர் தன் மனைவியருடன் யமுனை வழியாக தப்பியோடி மதுவனத்தை சென்றடைகிறார். மக்கள் குற்றுயிராக மதுவனம் வருகின்றனர். அங்கும் தொடர்கிறது அழிவு. யாதவக்குடியே அழிந்துக் கொண்டிருந்தது. எந்த சமாதானமும் ஏகலவ்யனிடம் எடுபடவில்லை. கிருஷ்ணன் திரும்புகிறான். மக்கள் பெருவோலத்தோடு அவனிடம் ஓடுகின்றனர். அவன் அவர்களிடம் அணுகமுடியாத இடத்துக்குச் செல்வதே நாம் செய்யக்கூடுவது. முடிந்தவரை இந்நிலத்தை விட்டு விலகி எவரும் அணுகமுடியாத நிலம் ஒன்றை கண்டடைவோம். யாதவர்களாகிய நமக்கு புல்லிருக்கும் நிலமெல்லாம் உணவிருக்கும்என்று ஆற்றுப்படுத்தி அழைத்துச் செல்கிறான். 

பலராமரிடம்  கதாயுத்தம் பயில சென்ற துரியோதனன் மதுராபுரியின் அழிவை கண்டு மனம்பொறுக்காது, அஸ்தினபுரியின் படையுடன் வந்து ஏகலவ்யனை வென்று மதுராபுரியை மீட்டு தருவதாக குருநாதருக்கு நம்பிக்கை வாக்களிக்க அது முறையான துாதாக அஸ்தினபுரிக்கு துரியோதனன் மூலமே வந்து சேர்கிறது. ஆனால் அரசியல் காரணங்களால் துரியோதனனின் வாக்குறுதி அரசபையால் நிராகரிக்கப்படுகிறது வேறு வழியின்றி அவன் பட்டத்து இளவரசரான தருமனை அணுகி, தனக்கு சிறு படையையோ அல்லது குறைந்தபட்சம் நுாறு வில்லாளிகளையோ அனுப்ப உத்தரவிடுமாறு கோருகிறான். கிட்டத்தட்ட இறைஞ்சுகிறான். தருமனின் வாயிலிருந்து விழுந்த சொற்கள் சாதாரணமானவை என்றாலும் வீரியமான பொருள் கொண்டவை. அகமழிவை ஏற்படுத்துபவை. அதாவது துரியனின் வாக்குறுதி அஸ்தினபுரியின் வாக்குறுதி அல்ல. அதை யாதவர்களும் அறிவார்கள். ஆகவே படையுதவி புரியாததை அவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்கிறான். அதன் பொருள்தான் என்ன? தந்தையார் பேரரசரென வீற்றிருக்க அங்கு மைந்தனின் சொல் வாக்காகாது. ஷத்திரியரான அவனால் முடியாதென்பதை யாதவர்கள் முடிவு செய்துக் கொள்வார்களாம். அதாவது அவன் பொருட்படுத்தத்தக்கவன் அல்ல என்பதே அதன் கருத்து. அஸ்தினபுரியில் அவன் யார்? அவனுடைய இடம்தான் என்ன? அவமதிப்பை தாளவியலாத துரியன் நிலைக்குலைந்து போகிறான். மனதளவில் விரிசல் பெரிதாகிறது. 

முழுமுதல் விடையை நோக்கி செல்லும் விடாய் கொண்ட அர்ஜுனனின் மனத்திலிருந்து அவன் பெருமதிப்புக் கொண்டிருந்தவர்களான அன்னை, ஆசிரியர், அண்ணன் என ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தனர். தந்தை அவனுக்கு வாய்க்கவில்லை. தாய் எதையும் அளிக்கவில்லை. ஆசிரியரால் அவனது வினாக்களுக்கு அருகில் கூட வரவியலாது. இனி தெய்வம்தான் அவனுக்கு குருவாக வந்தாக வேண்டும்.  

வசுதேவரின் மைந்தன் கிருஷ்ணன் தன் அத்தையைக் காண அஸ்தினபுரிக்கு வந்திருந்தான். இருபத்துமூன்று வயதுக்குள் அவன் ஏழு குருகுலங்களில் மெய்ஞானங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருந்தான். ஆனால் அதை விட சூழ்ச்சிகளை அறிந்தவனாக இருந்தான். பெண்களால் விரும்பப்படுபவனும் பெண்களை விரும்புபவனுமான அவன் மிக துல்லியமானவன். மதுராவை மீட்பதற்கான அனைத்து திட்டங்களை வகுத்து வைத்து விட்டு படையுதவியளிக்கும் அஸ்தினபுரியின் ஆணையை பெற்று விடும் நம்பிக்கையை எடுத்துக் கொண்டு அங்கு வந்திருந்தான். அழகாக குழலிசைப்பான் என்றனர். ஆனால் அதை விட அழகாக அரசியல்மொழி பேசினான். அத்தையான பிருதையை யாதவக்குலத்தின் சக்ரவர்த்தினியாக்கியாக்கினான். விதுரரை சொல்லால் வீழ்த்தும் கலையை கற்றிருந்தான். அர்ஜுனனை விழி விரியச் செய்திருந்தான். இலக்கின் முன் எவர் வரினும் வெட்டி வீழ்த்தும் தயார் நிலையிலுள்ள கூர்வாள் போன்றிருந்தான். ஆணை வெளியாகிறது, அனைவரும் திகைக்கின்றனர். நேற்று அரசன் அளித்த ஆணைக்கு நேர்மாறான ஆணை. துரியனுக்கு மறுத்த அதே படையுதவி இன்று குந்தியின் ஆணையின் மூலம் யாதவனுக்கு அளிக்கப்படுகிறது. அரசியின் ஆணை என்றால் அது அஸ்தினபுரியின் கடமையே என்று வழக்கம்போல திருதர் பெருந்தன்மைக் கொள்ள படை கிளம்புகிறது. 

மதுராவை அர்ஜுனன் வென்று விட்டான் என்ற சேதி வந்தபோது இது யாருடைய போர்? யாருக்காக இது நிகழ்ந்தது? யாதவர் நலன்களுக்காக அஸ்தினபுரியின் அனைத்து நலன்களையும் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது யார்? நான் என் குருநாதரிடம் அளித்த வஞ்சினத்தைக்கூட விட்டுவிட்டேன். அது அளித்த இழிவை என் நெஞ்சில்பட்ட விழுப்புண்ணாக ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் என் மதிப்புக்காக அஸ்தினபுரிக்கு தீங்கு விளையலாகாது என்று எண்ணினேன். அந்த எண்ணம் ஏன் அவர்களுக்கு எழவில்லை? துரியோதனனின் அகம் குமுறிக் கொண்டிருந்தது. பேரரசரின் மகனும், பலமும் வீரமும் தொண்ணுாற்றொம்பது இளவல்களும், கர்ணன் என்ற நண்பனும் சூழ்ச்சிக்கார மாதுலரும் பெற்றிருந்த அவனை எங்கிருந்தோ வந்தவன் எண்ணவோ யோசிக்கவோ கூட நேரமளிக்காத தனது செயல்களின் விரைவால் ஏகலவ்யனை ஏமாற்றும் பொருட்டு படைகளின் போலிப்புறப்பாட்டுக்கு தன்னை தலைமையேற்க வைத்து அர்ஜுனனோடும் சொற்பப்படைகளோடும் நழுவுகிறான். கிருஷ்ணனின் துரோகம் தெரியவந்தபோது அவ்விடத்திலேயே எரிந்து அழிய வேண்டுமென தோன்றியது துரியனுக்கு. விரிசல் இன்னும் விரிகிறது. 

அது போரல்ல. போர் சூழ்ச்சி. ஒன்றுக்குள் ஒன்று பொருந்தியிருக்கும் அவனது சக்கராயுதத்தை போல அவனுடைய அடுக்கடுக்கான நுணுக்கமான தெளிவான திட்டங்கள் வெற்றிக்கான பாதையை தெளிவாக்கி வைத்திருந்தன. அர்ஜுனனுடனும் அஸ்தினபுரி படையுடனும் ஓரிரவில் கங்கையைக் கடந்து அடுத்த பகலில் சப்தவனம் வந்து இரண்டாம் இரவில் யமுனையில் நுழைந்து நின்று நிதானிக்கும் முன்பே ஹிரண்யர்களைக் கொன்று மதுராவை மீட்ட கிருஷ்ணன், அர்ஜுனனை தன்னுள் நிரந்தரமாக சிறை வைத்துக் கொள்கிறான். ஒருங்கமையாத தவிப்புடனிருக்கும் அர்ஜுனனின் அகம் போரிலும், இளையயாதவரின் அருகிலும் அமைதிக் கொள்வது அவனே எதிர்பாராதது. அறிமுகமாகிய அந்த சிறுநாட்களுக்குள் அவன் நூறுமுகங்கள் கொண்டு பெருகியிருந்தான். பார்த்தனின் அத்தனை திசைகளையும் சூழ்ந்திருந்தான்.  மின்னிமின்னிச் சென்ற ஒளியில் தெரியும் மாமன் மகனின் கரிய முகம் கருவறைக்குள் அமர்ந்த தொன்மையான கருங்கல்சிலை போல் தோன்றியது அவனுக்கு.

அப்படியாகதான் இருந்தது துரியோதனனின் மனநிலையும். அவன் அரசனென வளர்க்கப்பட்டவன். ஆணையிட்டே வாழ்ந்தவன். அவனால் தந்தையை தவிர வேறெவரையும் அரசராக ஏற்க முடியாது. அவனாணைகள் ஏற்கப்படாத இடத்தில் வாழவும் முடியாது. பேரரசர் மகனின் நிலை அறியாதவரல்ல என்றாலும் அவரால் நெறிகளை மீறவியலாது. அந்த தந்தையால் மகன் ஆள்வதற்கென்று  ஒரு சிறு துண்டு நிலம் கூட வழங்க முடியாது. நிலைமை இவ்வாறிருக்க, கூர்ஜரத்திலிருந்து வெற்றியடைந்து திரும்பும் பாண்டவர்களுக்கு திருதரிடமிருந்து வரவேற்பு கிடைக்க பெறாமையை குந்தி மைந்தர்களின் மனதில் வஞ்சமாக புகுத்துகிறார். குந்திக்கு தெரியும், தனது எதிரிகள் தன்னை விட பலம் பொருந்தியவர்களென. அவர்களிடத்தில் காந்தாரத்தின் பெரும் செல்வமும் ஷத்திரிய படைபலமும் உள்ளது. தங்களுக்கோ மதுராவும் மார்த்திகாவதியும் தவிர துணைநாடுகள் இல்லை. வீரம் பொருந்திய மகன்கள் உண்டெனினும், குலத்தாலும் குடிகளாலும் அவர்கள் யாதவ குருதிக் கொண்டவர்கள் என்ற எண்ணம் குடிகளுக்கு மேலொங்க வாய்ப்புண்டு. மோதுவதற்கு இன்னும் கூடுதல் பலம் தேவை. மைந்தர்களின் மனம் பேதமுற வேண்டும். பேதமுற்ற மனதில்தான் வஞ்சனை நிரம்பும். பாண்டவர்களின் செயல்களை திரித்துக் காட்டி மக்களிடைய எதிர்ப்பை கிளப்பி விட்டு அதனுாடே தன் மைந்தர்களுக்கு பாதி ராஜ்ஜியத்தை பெற்றளிக்க பேரரசர் நிகழ்த்தும் பெரும் தந்திரம் இது என்று மந்திரம் ஓதுகிறார் மகன்களிடம்.

சகுனிக்கும் இது வாய்ப்புதான். அவரின் அடுத்த நகர்வு காய்களை நகர்த்துதல் அல்ல. ஒரேடியாக ஆட்டத்தைக் கலைத்தல். வாரணவதத்தில் உருவாக்கும் தேஜோமயம் என்ற பெயரிடப்பட்ட அரக்காலான மாளிகைக்கு பாண்டவர்களை வரவழைத்து ஐவரோடு குந்தியையும் அக்னிக்கு ஆகுதியாக்க திட்டம் தீட்டப்படுகிறது. அவர்கள் தாங்கள் செய்யவிருக்கும் கொலைகளுக்கான நியாயத்தை நெறிநுால்களின் வழியே கண்டடைகின்றனர். அதற்கான கழுவாய்க்கும் இடமுண்டு என்பதால் அங்கு குற்றவுணர்வுகள் மெல்ல ஆழம் தள்ளப்படுகின்றன. 

மகாபாரதம் என்ற இப்புராணத்தின் அடித்தளமே குந்தி, சகுனி இருவரின் இலாபநட்ட கணக்குகளே. சத்தியவதியும் வஞ்சம் நிரம்பியவர் எனினும் அவரிடம் வலுவான மகன்கள் இல்லை. மலைமுடிகள் போன்று தனிமைக் கொண்டவரான கங்கையின் மைந்தனைக் கொண்டு ஒப்பேற்றிக் கொண்டிருந்தார். அஸ்தினபுரிக்கு வாக்கப்பட்ட மூன்று தலைமுறைப் பெண்களான கங்கை, அம்பிகை, அம்பாலிகை, பெருஞ்செல்வத்தை கொண்டு வந்த காந்தாரியும் அவளுடைய பத்து இளையவர்களுமென எவருக்குமே தோன்றாத அல்லது செயல்படுத்த திராணியற்ற தன்மையனைத்தையும் கடந்தவர் குந்தி. அவர் சத்தியவதியை போல நிறைவேறாத கனவுகளுடன் கானகம் செல்லப் போவதில்லை.      

கிருஷ்ணன் பாரதவர்ஷத்தின் பெருந்துறைமுகமான கூர்ஜரத்தின் தேவபாலபுரிக்கு நிகரான துறைமுகத்தை உருவாக்க எண்ணுகிறான். தேவபாலபுரி காந்தாரம், மாத்ரம், பால்ஹிகம் போன்ற நாடுகளின் கடல்முகம். அத்துறைமுகம் தன் வணிகம் மொத்தத்துக்கும் சிந்து நதியையே நம்பிக் கொண்டிருந்தது. புவியியல் அமைப்பின்படி சிந்துவுக்கும் பாரதவர்ஷத்தின் விரிந்த மையநிலத்துக்குமான பாதை பெரும்பாலைநிலத்தால் தடுக்கப்பட்டிருந்தது. மாளவமும் விதர்பமும் விந்தியமலைக்கு அப்பால் உருவாகி வந்துள்ள நாடுகளும் மகாநதி வழியாக மட்டுமே கடலுக்குச் சென்றாக வேண்டும். வழியில் காடுகளையும் நான்கு நாடுகளையும் கடக்க வேண்டும். அதற்கு கப்பம் கட்ட வேண்டும். இந்நிலையில் யாதவன் தென்கூர்ஜரத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் பெருந்துறைமுகமானது யவனர்கள், சோனர்கள், பீதர்களுக்கு வணிகம் செய்ய பெருவாய்ப்பு. அவன் திட்டமிட்டிருக்கும் நகரான துவாரகையின் மிக பிரம்மாண்டமான நுழைவாயில் வணிகர்களுக்கு அளிக்கும் உத்தரவாதம். தங்கள் கண்ணெதிரே உருவாகும் துவாரகை என்ற பெருநகரத்தை கண்ணுறும் யாதவ மக்கள் இதுநாள்வரை மேய்ச்சல் நிலம் கால்நடைகள் என்று கொண்டிருந்த மனநிலையை கடந்து  அரண்மனை, அதிகாரம், ஆட்சி என்ற சிந்தனைக்குள் ஆழ முடியும். இது கிருஷ்ணனின் பன்முனை செயல்பாடுகளுள் ஒன்று. கிருஷ்ணனின் களம் பாரதவர்ஷம், அஸ்தினபுரி அதற்கு படைக்கலம், இடையிலிருப்பவர்களெல்லாம் அவனுக்கு பகடைக்காய்கள் என்று அவனது திட்டத்தை குந்தியும் கூட செல்லமாகப் புரிந்துக் கொண்டிருந்தார். 

பிரயாகையில் கிருஷ்ணன் தன் அத்தையும் யாதவ பேரரசியுமான குந்தியை சந்தித்து படையுதவி கேட்க வருமிடத்தில் அறிமுகமாகிறான். ஒருவேளை கலப்பற்ற மகாபாரதத்திலும் இங்குதான் அவன் அறிமுகம் நிகழ்ந்திருக்க வேண்டும். உயரமான கருமையான அந்த இருபத்துமூன்று வயதேயான இளைஞன் வெண்முரசுக்குள் நுழைந்ததிலிருந்து நம்மால் அவனை பின்தொடராமல் இருக்கவே முடியாது. விலகினால் ஒட்டிக் கொள்ளவும் தொட்டால் நகரவும் தொடர்ந்தால் மறையவும் மறைந்தால் தோன்றவும் முடியும் அவனால். கர்ணனை விட சிறிய உடல்வாகு என்றாலும் அவனை விட அழகான தோற்றம் கொண்டவன். இயல்பான கலகலப்பான எளிய உரையாடலுடன் வேதாந்த மெய்ஞானமும் பேச முடியும் அவனால். இரண்டே நாட்களில் அத்தையிடம் அரசியல் நைச்சியம். அத்தை மகன்களிடம் இயல்பான இணக்கம், விதுரனிடம் எச்சரிக்கை மொழி என அஸ்தினபுரியின் சூழலையே சூக்குமாக தன் கட்டுக்குள் வந்தவன் அவன். நீண்டு நிலம் கலந்து ஒளி விடும் மான் போன்ற அவனது விழிகள் நொடிக்குநொடி உணர்ச்சிகளை மாற்றினாலும் ஏதோ கனவில் நெடுந்தொலைவுக்கப்பால் மிதப்பன போலவும் தோன்றும்.   

செயல் விரைவு. துல்லிய கணிப்பு, இலக்கொன்றே குறிக்கோள். தொலைநோக்கு சிந்தனை என எல்லாவகையிலும் அவன் தனித்துவமானவன். தன்னுள் முற்றிலும் நிறைந்து ததும்பிக் கொண்டேயிருக்கும் அவனால் தான் இருக்குமிடத்தையும் இல்லாதிருக்கும் இடத்தையும் கூட முழுமையாக நிறைத்து விட முடியும். அவன் அறியாதவர் எவருமில்லை. பாரதவர்ஷத்தில் அவனை அறியாதவர் யாருமிலர். அவனறியாத எதுவும் யாரிடமுமில்லை. அவன் சொற்களும் செயல்களும் காண்போருக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமானதாகவும் இருந்தன. ஆனால் ஒவ்வொன்றாக நிறைவேறுவதை கண்டதும் மக்கள் அவனை விண்ணளக்கும் பெருமாளின் வடிவென எண்ணிக் கொள்ள தளைப்படுகின்றனர். வரலாற்றுக் காலமும் புராணமும் இப்படியாக இணைந்துக் கொள்கிறது. வெண்முரசு, கிருஷ்ணன் என்னும் மாயத்தை வரலாற்று பண்பாட்டு தத்துவ விரிவுகளைக் கொண்டு நம் முன் காட்சிப்படுத்துகிறது. அவன் வேதகாலத்து இந்திரனைப் போன்றவன். இருவருமே தன் குடிகளை காக்கும் அரசர்கள், குடிகளிடம் குறும்பர்கள். தீராத காதல் வேட்கைக் கொண்ட ஆண்மகன்கள். 

தன் மைந்தர்களோடு வாரணவதம் செல்லும் குந்தி, சகுனியின் தலைமையில் நடந்த சதி வேலையை விதுரரின் விடுகதை மொழி மூலம் அறிந்துக் கொள்கிறார். கொல்ல முடிவெடுத்து விட்ட பிறகு வழிமுறைகள் மாறுமேயொழிய பழித்திட்டம் மாறப் போவதில்லை. மீளதிரும்புதலோ இங்கிருத்தலோ ஆபத்தானது. மேலும் யாதவக் கூச்சலின் மேலோங்கலும் ஷத்திரிய வெறுப்பும் நிறைந்துள்ள இத்தருணத்தில் இளவரசு பட்டம் கொள்வதை விட துரியனை பீடத்தில் அமர்த்தி கர்ணனின் வில்லின் வழியே அவன் கொள்ளும் ஆணவத்தால் உருவாகும் எதிரிகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதே சரியானது. அதுவரை இறந்தவர்களாக இருப்பதே நல்லது என்று கணிக்கிறார். பாண்டவர்கள் தாங்கள் இறந்தது போன்ற தடயங்களை உருவாக்கி விட்டு அவர்கள் சுரங்கத்தின் வழியே தப்பித்து இடும்பவனம் அடைகின்றனர். அங்கு வனத்தலைவனான இடும்பனின் தங்கை இடும்பிக்கு பீமன் மேல் காதல் உண்டாக, இரு மனங்களும் திருமணத்தில் இணைந்து கடோத்கஜன் பிறக்கிறான். பெருவீரன் அவன். தந்தைக்காக எதையும் செய்ய விழைபவன்.   

அஸ்தினபுரியிலோ பேரரசர் தம் இளவலின் மைந்தர்களை இழந்து விட்ட துயரிலிருந்து மீளாதவராக அல்லது மீள விரும்பாதவராக இருக்கிறார். பாண்டவர்கள் இறக்கவில்லை என்பது அங்கு ரகசியமே இல்லாததுபோல விதுரர், அவர் வழியே பீஷ்மர் அனைத்தையும் ஊகித்தறியும் சகுனி போன்றோருக்கு தெரிந்திருந்தது. துரோணரின் குருகுலத்தில் அடுத்தக்கட்ட வீரர்கள் தயாராகின்றனர். சிந்துநாட்டின் அரசன் விருதஷத்ரரின் மகனான ஜயத்ரதன், விருஷ்ணி குலத்தவனும் கிருஷ்ணனுக்கு மைந்தன் முறை கொண்டவனுமான தேவாலன், சேதிநாட்டு தமகோஷனின் மைந்தனான சிசுபாலன் இவர்களோடு துருபதனின் மகனும் பாஞ்சாலத்தின் இளவரசனுமான திருஷ்டத்யும்னன் போன்ற அடுத்தக்கட்ட வில்லாளர்கள் தயாராகின்றனர். விதுரர் தன் மீது கிருஷ்ணன் தொடுத்த அச்சுறுத்தல் சொற்களை மறக்கவியலாது மருகுகிறார். ஆனால் அவர் மனைவி சுருதைக்கு ஹிரண்யபதத்து அசுரர்களால் விரட்டப்பட்டு நாடிலியாக தப்பியோடிய தன் தந்தைக்கு உதவ மறுத்த கணவன் மீது கோபமும் நாட்டை மீட்டளித்தவன் என்ற வகையில் கிருஷ்ணன் மீது பரிவும் உண்டாகிறது. மேலும் உறவுமுறைப்படி அவளுக்கு மகன் முறையில் இருப்பவன் அவன். விதுரரின் மகன்கள் கூட துவாரகையின் கட்டுமானத்தில் கை கொள்கின்றனர்.

குந்தியும் மகன்களும் சாலிஹோத்ர குருகுலத்திற்கு செல்கின்றனர். தருமன் அங்கு வைசேஷிக மெய்யியலையும் நியாய சாஸ்திரத்தையும் பயில, பீமன் இடும்பியுடன் மண வாழ்க்கையில் ஆழ்ந்திருக்க, அர்ஜுனன் தேகமுத்ரா தரங்கிணியை கற்க, இளையவர்கள் சோதிட, மருத்துவ நுால்களும் குதிரைகளுமாக அமைந்து விட, குந்தியோ அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாராகிறாள். நாடாள வேண்டிய இளம் அரசர்களான அவர்கள் கானகத்தில் மந்திரங்களை மனனம் செய்துக் கொண்டிருக்க முடியாது. அவர் தன் மகன்களுக்காக சுயம்வர அறிவிப்புக்கான செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தார். மனஉறவின் வழியே அஸ்தினபுரியை வென்றெடுக்க வேண்டும். வாய்ப்பாக வருகிறது திரௌபதியின் சுயம்வரம்.

ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பாரதத்தை வெண்முரசு மீண்டும் எழுதிச் செல்கிறது.  எனினும் ஆசிரியர் மூலக்கதையை வைத்துக் கொண்டு அதனை விரித்தெழுதிக் கொண்டே செல்கிறார். இயல்புகள், நடப்புகள், மனவோட்டங்கள், உளமாற்றங்கள் என வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களுக்குள் ஆசிரியரின் கவித்துவம் நிரம்பி வழிகிறது. திரௌபதியின் சுயம்வரம், அதில் கலந்துக் கொள்ளும் மன்னர்களின் மனவோட்டம், கர்ணன் தோற்குமிடம், அர்ஜுனன் வெல்லும் நிகழ்வு, யாதவனின் உளஅசைவு போன்றவற்றை பெரும்பாலும் அகவோட்டங்களாகவே அமைத்திருப்பது நன்று. கங்கையை வில்லம்புகளால் அணைக்கட்டும் ஏழு வயது தேவவரதன்தான் பின்னாளில் தன் கர்மேந்திரங்களை மனக்கட்டுமானத்தால் அணைக்கட்டும் பீஷ்மர். அதிலும் அம்பையுடனான அவரது உரையாடல்கள், வெளியே வரத்துடிக்கும் காதலை உட்செலுத்திக் கொள்ளும் மனவலிமை, கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் துள்ளலையும் அலைகளையும் ஒளிர்தலையும் தன்னியல்பாக கொண்டிருக்கும் கங்கையின் மைந்தனுக்கு சாத்தியமானது அவர் தன் தந்தையின் மீது கொண்ட பேரன்பு. அப்படியான அன்புக்கு ஏங்கும் அர்ஜுனனின் அகம் இறுதியில் எல்லாமுமாக அவன் காணும் கிருஷ்ணனை சென்றடைகிறது.  

நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே ஒரு கட்டுரையாக்கலாம். அதன் மொழியும் துல்லியமும் தொழில்நுணுக்கமும் விரிவான விவரிப்பும் தேடல் கொண்டவர்களுக்கு பெருந்தீனி. கௌரவர்கள் நியாயமற்றவர்கள், பாண்டவர்கள் ஐவரும் கருத்தொருமைக் கொண்டவர்கள் போன்ற பொதுபுத்தியின் மயக்கங்கள் விலக, அவரவர் செயல்களுக்கான நியாயத்தை வெண்முரசு அளிக்கிறது. சொல்லப்போனால், யாரும் நல்லவர்களும் அல்ல. கெட்டவர்களும் அல்ல. உதாரணமாக, துரியோதனன் பிறப்பால் வில்லன் அல்ல. சூழ்நிலைகளே அவனை குலைக்கிறது. பாண்டவர்களின் இறப்பு செய்திக்குப் பிறகு கதாயுதப்பயிற்சியில் கூட அவன் நாட்டமிழந்தவனாக இருக்கிறான். முடிசூடியவன் இறந்து விட்டதாக கருதப்பட்டு ஆண்டுகள் பல கடந்தாலும் துரியனுக்கு முடிசூடுதல் நடைபெறவில்லை. கலிங்கம், மாளவம், வங்கம், கோசலம் போன்ற ஷத்திரிய நாடுகள் முடிசூடலுக்கு பிறகு துரியோதனனுக்கு பெண் தருவதாக கூற ஆண்டுகள் பல கடந்தும் மணமின்றியும் முடியின்றியும் தந்தைக்கு தனயனென இருந்த அவனை பரசுராமரிடமிருந்து வில் வித்தை பயின்று திரும்பிய கர்ணனே எழுப்பி அமர வைக்கிறான். நண்பன் முடிசூடாமைக்கு பிதாமகரின் இசைவின்மை, ஷத்திரியர்கள் தவிர மீத குலக்குடிகளின் ஆதரவின்மை, துரியன் அரியணையேறினால் யாதவனை பகைத்துக் கொள்ள நேரிடும் போன்று பலவாறாக சொல்லப்படுபவையெல்லாம் வெற்று காரணங்களே தவிர நிஜம் அதுவல்ல, பாண்டவர்கள் எங்கோ உயிருடன் இருக்க வேண்டும் என்பதே உண்மை என்று கர்ணன் தான் ஊகித்ததை நண்பனுக்கும் உணர்த்துகிறான். ஆனால் துரியனுக்கோ அதிகாரம் கைக்கு கிட்டுவதை விட பாண்டவர்கள் இறக்கவில்லை என்ற செய்தியே  அகநிறைவளிக்கும் ஒன்றாக இருந்தது. தான் செய்து விட்ட குற்றத்துக்காக தந்தை கதாயுதத்தால் தன் தலையை பிளந்தாலும் மகிழ்வுடன் ஏற்பேன் என்கிறான். 

சகுனியின் மறைமுக நடவடிக்கைகளின் வழியே துரியனுக்கு முடிசூடல் ஏற்பாடாகும் நிலையில் பராசுராமரின் வழியே அசுரனான பகனின் இறப்பை அம்பலப்படுத்தி, அவனை பீமனை தவிர வேறு யாராலும் கொலை செய்திருக்க முடியாது என்று திருதராஷ்டிரரை உணர வைத்து, பாண்டவர்கள் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த, இறுதியில் பேரரசர் முடிசூடலை நிறுத்தி விடுகிறார். இதன் பின்புலத்தில் யாதவனின் மர்மபுன்னகை இருந்திருக்க வேண்டும். திருதராஷ்டிரர் தன் மகனுக்கு மனம் என்ற ஒன்று இருந்திருக்குமா என்பதையே உணராதவர் போலும். பூமியிலுள்ள எதையும் தன்னால் ஊதித்தள்ள முடியும் என்று பதிலளித்த வாயுவின் முன்பு யக்ஷம் புல் துணுக்கை வைக்க, காற்றால் அதனை தீண்ட இயலாததை போல பேரரசரின் பெருங்கருணை அவருடைய மகனை தீண்டவேயில்லை. 

கர்ணனும் துரியனும் சுயம்வரத்தில் கலந்துக் கொள்ள காம்பில்யம் செல்கின்றனர். கர்ணன் சுயம்வரத்தில் வென்று திரௌபதியை துரியனுக்கு மனைவியாக்குவதாக தீர்மானம். ஆனால் அங்கு எதிர்பாராதவிதமாக திரௌபதியை துர்க்கை ஆலயத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, அங்கு கர்ணனும் திரௌபதியும் கண்ணோடு கண் நோக்கும் கந்தர்வ கணத்தை கண்டுக்கொள்கிறான் துரியோதனன். அவனுமே அவள் மீது காதல் கொண்டாலும் அவளை அஸ்தினபுரியின் மருமகளாக கொள்வதன் இலாபநோக்கை உணர்ந்திருந்தாலும் கர்ணனின் பொருட்டு அதனை இழக்கவும் மனதார எண்ணுகிறான். அஸ்தினபுரியின் இளவரசனுக்கு நாடாள வாய்ப்பில்லை. ஆனால் அவன் பெருந்தன்மையால் கர்ணன் அங்க தேசத்து மன்னாகிறான். கர்ணனும் சளைத்தவனல்ல. தான் வில்வித்தை கற்றுக் கொண்ட பரசுராமரிடம் நண்பனின் பொருட்டு அவர் கேட்கும் காணிக்கை அளிக்க மறுத்து குருசாபம் பெற்றுக் கொள்கிறான். அஸ்தினபுரியில்  துரோணரால் அவமதிக்கப்பட்டு சூதனாய் குறுகியவன், பரசுராமரின் முன் ஷத்திரியனாக மறுகி நின்றான். அவரால் அவனை கொல்ல முடியாது. ஆனால் கொல்வதற்கு நிகரான காணிக்கையை கேட்க முடியும், துரோணர் ஏகலவ்யனிடம் கோரியது போல. ஷத்திரியனுக்காக அவனுடைய வில் ஒருபோதும் எழக்கூடாது என்கிறார். காணிக்கை எவையெனினும் கண்களை மூடிக்கொண்டு நிறைவேற்றிய அர்ஜுனனை போலன்று அவன். அவனுடைய வில்லும் சொல்லும் தார்த்தனுக்கானது. ஏற்கனவே அளித்து விட்ட ஒன்றை மீண்டும் அளிக்க முடியாது என்கிறான். கல்விக்குக் காணிக்கையில்லை என்றால் அவ்வித்தை பயன் தராது.  உன் இறுதி சமர்களத்தில் உன் ஷாத்ரம் உன்னை கைவிடுவதாக!” என்ற குருவின் அவச்சொல்லை ஏற்றுக் கொண்டு திரும்புகிறா கர்ணன். தனி மனிதர்கள் இருவர் இணைந்து கூட்டு மனங்களாகின்றனர். 

மகாபாரதம் வரலாறா அல்லது புனைவா என்றறியவியலாத வகையில் அதில் உண்மைத்தன்மைகள் கலந்துள்ளன. அதனடிப்படையில் ஆசிரியரால் புவியியல் குறிப்புகளை தெளிவாக முன்வைக்க முடிகிறது.  கங்கோத்ரியில் உற்பத்தியாகும் கங்கை ஹுக்ளியில் கலக்கும் வரையிலான தொலைவில் ஏகப்பட்ட துணையாறுகளை தன்னுள் அழைத்துக் கொள்வதுபோல வெண்முரசின் நெடும் பயணத்தில் பற்பல நுால்கள் சங்கமிக்கின்றன. கற்ற நுால்கள், அதன் வழியே நெறிகள், ஞான விளக்கங்கள் இவற்றோடு இயங்கும் வெண்முரசு ஆசிரியரின் மனம் முடிந்தவரை காலக்கணக்கையும் வரலாற்றையும் நேர் செய்துக் கொண்டே வருகிறது. 

வெண்முரசின் பெரும்பயணத்தில் உவமைகள் ஒரு சுவாரஸ்யம். உதாரணமாக கிருஷ்ணனை பற்றி கூறுமிடமொன்றில், பீதர்களின் களிப்பெட்டிகளைப்போல அவன் ஒருவனுக்குள்ளிருந்து ஒருவனாக வந்துகொண்டே இருக்கிறான் என்று வரும். இடும்பியின் வெட்கத்தை மாமியாரான குந்தி, கரும்பாறை மேல் மாலை வெயில் படுவது போலிருக்கிறது இவள் வெட்கம், என்பார். மலைமுடிகள் போன்று தனிமையானவர் என்று பீஷ்மரை கூறுமிடத்தில் அவரை இதைவிட வேறொரு வார்த்தைகளால் விளக்க முடியாது என்று தோன்றும். திரௌபதி ஐவரை மணப்பது மூடிய கைகளுக்குள்ளிருந்து கசியும் ஒளி போல காட்டப்பட்டுள்ளது திறமையான அணுகுமுறை. வார்த்தை விவரிப்புகளுக்குள்ளிருக்கும் உள்ளர்த்தங்களுக்கு சில தருணங்களில் ஷண்முகவேல் அவர்களின் ஓவியம் சூக்குமமாகவும் சில நேரங்களில் ஸ்துாலமாகவும் அர்த்தமளிக்கிறது.

பிரயாகையில் பிரிவுக்கான மூலம் துலங்கி வருகிறது. மூத்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இளைஞர்கள் முன் அணிக்கு வருகின்றனர். திரௌபதி ஐவரையும் மணக்கிறாள். துரியோதனன் தனக்கு விதிக்கப்பட்டது நிறைவற்ற வாழ்வே என்ற முடிவோடு அதனை எதிர்கொள்ள தயாராகிறான். அவனுக்காகவே வாழும் கர்ணன், புயலென புகும் யாதவன், அவனிடம் அகநிறைவுக் கொள்ளும் அர்ஜுனன், கடோத்கஜனிடம் திறக்கும் பீமனின் அகம், அஸ்தினபுரியை பாதியாகவாவது ஆள வேண்டும் என்ற தருமனின் எண்ணம், சகுனிக்கும் குந்திக்குமான களமாடல் என பிரயாகை பிரவாகத்தின் முன்னிணைப்பு. 

***

முந்தைய கட்டுரைமலேசிய யோகமுகாம்
அடுத்த கட்டுரைமூளையின் தளைகள்