நவீன மருத்துவம், கடிதம்

நவீன மருத்துவம் பற்றி அறிவிப்பு வந்தவுடன், பக்கத்திலேயே நவீன புகைப்பட கலை பற்றிய  அறிவிப்பு வரவும் அதற்கு வரலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எப்படியோ இதற்கு வரலாம் என்று முடிவெடுத்து வந்து விட்டேன்.

முதலில் இந்த வகுப்பு ஒரு சம்பிரதாய நோய் மட்டும் அதற்குண்டான தடுக்கும் வழிமுறைகள் கொண்டதாக இருக்கும் என்று நினைத்தேன். போலி மருத்துவம் நிறைந்த நம் சமூகத்தில் அனைவரும் ஒரு குட்டி மருத்துவராக இருக்கும் பட்சத்தில் பொதுவாக அனைவரும் தங்கள் பயன்தரு குட்டிக்கருத்துகளை கொட்டி வகுப்பை திசை திருப்பவவார்களோ என்று கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. ஆனால் முதல் அமர்வில் இருந்து கடைசி அமர்வு வரைக்கும் ஆசிரியரின் ஆளுமை வெளிப்பட்டது. குறிப்பாக யாரின் மனதையும் புண்படுத்தாதவகையில் மிக மிக அற்புதமாக தான் முடிவு செய்த அனைத்து விஷயங்களையும் மிக நேர்த்தியாக அதே நேரத்தில் மிக மிக கலகலப்பாக கொண்டு சென்றார்.

வகுப்பு முழுமைக்கும் ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அது அறிவியல் மன நிலை தாண்டி ஒரு வார்த்தை ஆசிரியர் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் அந்த முள் அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே நின்று உரையாடியது.

வகுப்பு மருத்துவ வரலாறு பற்றிய ஒரு பெரும் புரிதலை அளித்து ஒரு பொது வாசகனை எப்படி படிப்படியாக உயிரியல் பற்றி அறிய வைக்க முடியும் என்பதை ஒரு ராஜேஷ்குமார் நாவல் வாசிக்கும் அனுபவத்தை ஒத்த சரியான இடைவேளையில் ஒரு திருப்பம் என்று நண்பர்களை சீட்டின் நுனியில் வைத்து கவனிக்க வைத்தது என்றால் மிகையல்ல. குறிப்பாக அந்த உள் கடல் ஒப்புமையும் அதை ஒட்டி அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று கூறியது தாங்கள் சென்ற வகுப்பில் குறிப்பிட்டது மிகையல்ல என்று உணர வைத்தது.

ஆசிரியர் நவீன அறிவியலின் மிகப்பெரும் காதலர், எப்படியும் குறைந்த பட்சம் 10 முக்கியமான ஆளுமைகளை குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பை என்ற சமரசமும் இன்றி எடுத்து சொன்னார். மிக மிக எளிமையாக வேதியல் கருத்துகளையும், உயிரியல் கருத்துகளையும் அதன் உண்மை தன்மைக்கு மிக அருகில் கூறினார். எளிமை படுத்தலில் உள்ள மிகப்பெரும் அபாயங்களை கடைசிவரை தவிர்த்து பேசினார். அவரே சொன்னது போல அவரிடம் இருந்து ஒரு வார்த்தை வாங்க பலரும் முயன்று தோற்றோம்.

இந்த வகுப்பு என் வரையில் மிகப்பெரும் திறப்பு, மிக மிக விட்டேத்தியாக இருக்கும் என் மனம் இதற்கு பின் இந்த வாழ்வும், அதை அனுபவிக்க நமக்கு கிடைத்த இந்த அற்புதமான உடலும் ஒரு பரிசு என்றே நினைக்க தோன்றுகிறது. என்னை சார்ந்தவர்களையும் முன்னைவிட பெரும் அன்புடன் சந்திக்க வழி செய்தது. என் தனிப்பட்ட சில முடிவுகளை மீண்டும் ஒரு முறை மறு ஆய்வு செய்ய வைத்தது.

பெரும்பாலும் உயிரியல் சார்ந்த வகுப்பாக இருந்தாலும், கேள்வி பதில் முறையில் வகுப்பை கொண்டு சென்றது, நண்பர்களின் ஒவ்வொரு சரியான பதில்களுக்கு கையிலேயே இனிப்பை கொடுத்து ஊக்கப்படுத்தியது ஒரு அருமையான உத்தி. பல நண்பர்கள் பல நேரம் சரியான பதிலை சொல்லி மருத்துவரை திக்கு முக்காட வைத்தநர். பெரும் மகிழ்வில் பெரும் பரவசத்துடன் ஆசிரியர் பலப்பல செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டது நெகிழ்வாக இருந்தது.

பொதுவாக நண்பர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆசிரியர் விடை அளித்தார்.

அனைவரும் கடைசி நாளில் ஒரு முதல் உதவி அல்லது சம்பிரதாயமான மாத்திரைகள் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தனர் ஆனால் அது கண்டிப்பாக அவரின் இந்த வகுப்புக்கு ஆன விஷயம் இல்லை என்று சரியாக வரையறுத்து, தற்காலத்தின் பெரும் நோய்களை மட்டும் சொல்லி அதை எப்படி வெற்றியுடன் எதிர்கொள்வது என்ற சொன்னது பெரும்பாலும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. அவற்றில் இருக்கும் போலி மருத்துவம் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி அடித்து தரைமட்டம் ஆக்கினார் என்றால் மிகையல்ல. சில போலி பொது புரிதல்களை கேள்விகள் மூலம் எதிர்கொண்டார். குறிப்பாக ஒரு மருந்து எப்படி பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது மற்றும் இப்படியான நவீன அறிவியலின் துணைகொண்டு பலக்கட்ட ஆய்வுக்குபின் வரும் மருந்துகளும் சிறு தயக்கமும் இன்றி எப்படி நீக்கப்படும் என்று விளக்கினார்.

கடைசியாக மிக மிக படித்தவர் என்றவர்கள் எப்படி மருத்துவரை நம்பாமல் உயிரை இழக்கின்றனர் என்றும், படிக்காதவர் என்றாலும் ஒரு மருத்துவரை எப்படி நம்பி உயிர் பிழைத்தார் என்றும், எப்படி ஒரு நம்பிக்கை எனும் வஸ்து பல அதிசயங்கள் புரியும் என்பதை விளக்கினார்.

பாடம் எடுத்து முடித்தவுடன் மிக மிக உணர்வுபூர்வமாக எங்களுடன் உரையாடி விடைகொடுத்தார்.

அடுத்த மிக மிக முக்கியமான விஷயம் பங்கேற்ற நண்பர்களில் 75 சதவிகிதம் நான் முதல்முறை பார்க்கிறேன். இப்படி அனைத்து வகுப்புகளில் சந்திப்பது ஒரு கட்டத்தில் நமக்கு அனைத்து ஊர்களிலும் ஒரு நன்பராவது கிடைத்து விடுவார்கள் என்று உள்ளது. அனைவரும் மிக மிக கறாரான புரிதல்களுடனும், ஏதேனும் ஒரு செயலில் தங்களை இணைத்துகொண்டிருப்பதாக தெரிந்தது.

மிக மிக முக்கியமான நிகழ்வு அருண்மொழி மற்றும் பெருவாரியான குக்கூ நண்பர்கள் பங்கேற்றது.

நான் அருண்மொழி மேடம் என்று சத்தமாக அழைத்து அவர்களை திகைக்க வைத்து பின்னர் அவர்களுடன் ஒரு மணி நேரம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டேன் ஆனாலும் தனியாக பேச வாய்ப்பு அமையவில்லை.

என் வரையில் இது மிக மிக முக்கியமான வகுப்பு அடுத்த வகுப்புக்கு எப்படியும் என் குடும்பத்துடன் வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் பார்க்கலாம்.

இந்த வகுப்பு அனைவருக்குமானது. இதை ஏற்பாடு செய்த உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

திருமலை

முந்தைய கட்டுரைதமிழகத்தில் இரும்பு
அடுத்த கட்டுரைதமிழ், ஆங்கிலம் – கடிதம்