நான் நித்யாவின் கால்களை நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். நான் பார்க்க ஆரம்பிக்கையில் முதுமையால் அவர் மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தார். ஊட்டியில் குளிராகையால் பெரும்பாலும் காலுறைகள் அணிந்து, செருப்பு போட்டுத்தான் வெளியே செல்வார். குருகுலத்திற்குள்ளும் காலுறை அணிந்திருப்பார்.
ஆனால் இரவில் சற்றுநேரம் வெறும் கால்களுடன் கட்டிலில் அமர்ந்திருப்பார். கீழே நெருப்பு போட்டு கால்களைச் சூடுபடுத்துவார்கள். அப்போதும் அவருடைய சொல் கேட்க மாணவர்கள் அந்தச் சிறிய இடத்திற்குள் நெரிசலிட்டு அமர்ந்திருப்பார்கள். மென்மையான கால்கள். ஒரே ஒருமுறை அக்கால்களை தொட்டு பணிவிடை செய்ய எனக்கு வாய்த்தது
நித்யாவின் கைகளை எப்போதும் பார்க்கலாம். கால்களுக்கு நேர் மாறாக அவை மிகச் சுறுசுறுப்பானவை. நான் விழித்தெழுவதற்கு நீண்டநேரம் முன்னரே அவர் எழுந்து குளித்து உடைமாற்றி கணிப்பொறிமுன் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பார். இளமையிலேயே நன்றாக தட்டச்சு கற்றவர். 1940 களில் தட்டச்சு கற்றுக்கொள்வதென்பது ஒரு பெரிய தகுதி. ஆகவே விரல்கள் மிக வேகமாக விசைப்பலகையில் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய தட்டச்சு ஓசை மழைபெய்வதுபோலிருக்கும் என்பார்கள்.
அந்த விரல்கள் ஓவியம் வரைவதை அருகே நின்று பார்த்திருக்கிறேன். அவை யோசிக்கும், தயங்கும், முடிவெடுக்கும், வண்ணங்களைத் தீற்றும், அடுத்த வண்ணத்தீற்றலுக்காக காத்திருக்கும். சிறு கூழாங்கற்களைப் பொறுக்கி வந்து ஜாடி ஒன்றில் போட்டு வைத்திருப்பார். அவற்றை அவ்வப்போது எடுத்து ஆராய்ந்து இன்னொரு ஜாடிக்குள் போடுவார். அப்போது அவை ஐந்து வயது பையனின் விரல்கள். நான் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டால் நிமிர்ந்து புன்னகைத்து “கற்கள்… ஒன்று போல் ஒன்றில்லை. இயற்கையின் படைப்பூக்கத்திற்கு எல்லையே இல்லை” என்பார்
அவர் கடிதங்கள் எழுதாத நாளே இல்லை. தினமும் ஐம்பது கடிதங்கள் வரை எழுதுவார். உலகுடன் தொடர்புகொண்டபடியே இருந்தார். மிகசாமானியர்களில் இருந்து உலகின் முதன்மைச் சிந்தனையாளர்கள் வரை. நான் பார்க்க ஆரம்பித்தபோது நீலநிற கடிதஉறைகளில் அவரே எழுதுவார். பின்னர் சொல்லி எழுதவைத்து தன் மையால் நித்யா என்று கையெழுத்திடுவார். அவருடைய இறுதிக்காலத்தில் கணிப்பொறி வந்துவிட்டது. மின்னஞ்சல்களும் அனுப்பத் தொடங்கிவிட்டிருந்தார். அவருடைய அமெரிக்க மாணவர்கள் எப்போதும் அவரை தொழில்நுட்பத்தின் நுனியிலேயே அமரச்செய்திருந்தார்கள்
நித்யா கடிதங்களில் கையெழுத்திடும்போது நான் அப்பால் நின்றிருப்பேன். அவர் கையெழுத்திடும்போது அந்த கடிதத்தை ஒருமுறை வேகமாகப் படிப்பார். அந்த கடிதம் பெறுபவருக்கான புன்னகை அவர் முகத்தில் மலரும். கையெழுத்து தாளில் ஒரு முத்தம்போல பதிவதாக நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு நாளும் அந்த மலையுச்சி குருகுலத்தில் இருந்தபடி அவர் பலநூறு பேருக்கு உளம்கனிந்து முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார். இந்த உலகையே முத்தமிட்டு முத்தமிட்டு சென்றன அவர் கால்கள். உலகை கொண்டாடி கொண்டாடி மகிழ்ந்து மறைந்தார். ஒரு குயில் போல, இனிய குரலால் இப்புடவியை வாழ்த்தி வாழ்த்தி அகன்று சென்றார்.