தமிழ், ஆங்கிலம் – கடிதம்

தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-2

தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?

அன்புள்ள ஜெ.,

கடந்த இரண்டு மாதங்களாக யாமறிந்த மொழிகளிலே (தமிழ், ஆங்கிலம்) ஆங்கிலமே கூரிய மொழி  என்று ஒவ்வொருநாளும் உணர்ந்துகொண்டிருக்கிறேன். Norman Lewis எழுதிய Word power made easy என்ற புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக பல பதிப்புகள் கண்ட, பொறியியல் பட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் மாணவர்களின் பெருவிருப்பப் புத்தகம். இதைப்படித்தால்தான் GRE, Toffel போன்ற தேர்வுகளை எளிதாக வெற்றிகொள்ள முடியும் என்பதனால். அதோடு முடிந்தது. புத்தகம் எங்கோ இந்தியாவில் வீட்டுமூலையில் பழுப்பேறிக்கிடக்கும். அவர்கள் அமெரிக்காவில் சாதாரண வார்த்தைக்கு google பண்ணிக்கொண்டிருப்பார்கள்.

ஒரு மொழியின் வேர்ச்சொற்கள் (Etymological root) வேறு பல மொழிகளிலிருந்து கிடைக்கப்பெறும்போது அது கூரியமொழியாவதற்கே வாய்ப்பு மிகுதி. ஆங்கிலத்தின் வேர்ச்சொற்கள் பெரும்பாலும் லத்தீன் மற்றும் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டவை. பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி வேர்ச்சொற்களும் உண்டு. ஒரு சொல் அதன் வேர்ச்சொல்லிலிருந்து எப்படிக் கிளைத்தெழுகிறது என்பதை விதையிலிருந்து செடிமுளைப்பதைப்போலப் பார்க்க முடிகிறது இந்த நூலில். கொற்றவையின் ஆரம்ப அத்தியாயங்களில் நீங்கள் செய்ததைப்போல. உதாரணத்திற்கு வாயாடி என்ற தமிழ்ச்சொல். Loquacious ஆங்கிலத்தில். Verbose, Voluble, Garrulous எல்லோருமே வாயாடிகள்தான். ஆனாலும் வித்தியாசம் உண்டு. Verbose (வேர்ச்சொல் Verbum, லத்தீன்)  வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டே இருப்பார் கேட்பவர் குழப்பமான மோனநிலையில் ஆழும்வரை. மிளகு கஷாயம் செய்வதை விளக்கும் பத்துநிமிட காணொளியில் ஒன்பதாவது நிமிடம்வரைஇப்பப்பாதீங்கன்னா மிளகுன்றது ….’ என்று வரும் வெறும் பேச்சுதான் Verbose. Voluble ம்(வேர்ச்சொல் Volvo, to roll, லத்தீன்) மடைதிறந்த வெள்ளமாக அதே கொட்டல்தான். ஆனாலும் விஷயம் உண்டு. விஷயஞானம் உள்ளவர்கள்தான் Voluble ஆகப் பேச முடியும். சிலஸ்டாக் மார்க்கெட்விற்பன்னர்கள் போல, வேளுக்குடி கிருஷ்ணன் போல. Garrulous – வயதான, வாய் என்பது பேசுவதற்கே என்று உணர்ந்தவர்கள். ஒரேசளப்புளதான். எதையும் வகைவைக்க வேண்டியதில்லை.

ஒருசில வேர்ச்சொற்களின் பின்னணியில் வரலாறும் உண்டு. உதாரணமாக, மிகக் குறைவாகப் பேசினாலும் விஷயகனத்தோடு பேசுபவருக்கு Laconic என்று பெயர். அந்தக்காலத்து Spartan அரசில் இருந்த Laconia என்னும் நகரக்குடிகள் கடும்போர்களையும், துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்து இறுகிய மனம் கொண்டவர்களாய் இருந்தார்கள். இயல்பாகவே மிகக்குறைவாய்ப் பேசுபவர்கள். நகரத்தை சுற்றிவளைத்துவிட்டஃபிலிப் ஆஃப் மாசெடோனியாஅந்நாட்டு அரசருக்கு ஒரு ஓலை அனுப்புகிறார் ‘If we capture your city, we will burn it down to the ground’ (உங்கள் நகரத்தைப் பிடித்தால் தீக்கிரையாக்குவோம்) பதில் ஓலை வருகிறது மன்னரிடமிருந்து ‘If'( முடிந்தால்). அவர்கள்தான் Laconic. இதில் ஆங்கிலத்தில் இருக்கும் சுவை தமிழில் இல்லையென்பதை கவனிக்கவும். உணவுஆர்டர்செய்யும்போதுஇங்க சாப்பிடுறீங்களா? எடுத்துட்டுப்போறீங்களா?’ என்று ஊழியர் கேட்டால்ரெண்டும்தான்என்பார் Laconic (அதை நமுட்டுச் சிரிப்போடு சொன்னாலும் இங்குள்ளவர்களுக்குப் புரியாது என்பது வேறுவிஷயம்)

Ameliorate, Alleviate, Assuage – இவையெல்லாமே தீவிரத்தைக் குறைப்பதற்கான சொற்கள். ஆனாலும் வெவ்வேறு அர்த்தங்கள். முதலாவது சூழ்நிலையின் தீவிரத்தைக் குறைப்பது, இரண்டாவது உடல் துன்பத்தைக் குறைப்பது, மூன்றாவது கசப்பான நினைவுகளின் கடுமையை மட்டுப்படுத்துவது.  சிலசொற்களுக்கான உதாரணங்கள் புன்னகை பூக்கவைப்பவை. ஒரேநேரத்தில் தோன்றும் எதிரெதிர் எண்ணங்களைக் குறிக்க Ambivalence என்ற சொல் ஆங்கிலத்தில். உங்கள் புத்தம்புதிய காரை எடுத்துக்கொண்டு மலையுச்சியை நோக்கிய பயணத்தில் உங்கள் மாமியாரைக் காணும்போது ஏற்படக்கூடிய எண்ணங்கள் என்கிறார் ஆசிரியர்.

வேர்ச்சொற்களின் மூலமாக மொழியை அணுகுவதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி. வெறும் தேர்வுக்காகப் படிக்காமல் வேர்ச்சொற்களை ஆழ்ந்து அனுபவித்துப் படித்தால் ஒருவர் போகும் தூரம் வேறு. எழுநூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம். ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னும் பயிற்சிகள் உண்டு. இலக்கணத்தில், உச்சரிப்பில் நாம் எங்கெல்லாம் தவறு செய்கிறோம் என்று அறிந்து பயிற்சிகளை அமைத்திருக்கிறார்கள். பென்சிலால் செய்தால் சிலவருடங்கள் கழித்து அழித்துவிட்டுக்கூட திரும்ப செய்துபார்க்க முடியும். கற்றல்நிலையில் நாம் எங்கிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாம். நான் பத்துவருடங்கள் கழித்துச் செய்கிறேன். மோசமில்லை. ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிக்கொள்ளலாம்.

பிரமிளின் தொகுப்பு நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலொன்றில் மௌனிக்கும் அவருக்குமான உரையாடல். ‘தமிழ் என்னுடைய கருத்துக்களைச் சொல்வதற்கான மொழி இல்லைஎன்கிறார் மௌனி. ‘ஏன்  ஆங்கிலத்தில் எழுதவேண்டியதுதானேஎன்று பிரமிள் கேட்க மௌனியின் பதில்அதில் என்னத்ரில்இருக்கிறது‘. உங்களால் ஆனதுவெண்முரசுநாவல் தொகுப்பின் மூலம் ஒரு நூறு சொற்களாவது தமிழுக்கு அளித்து மொழியின் எல்லையை விஸ்தீரணப்படுத்தியிருக்கிறீர்கள். தமிழின் இனிமை, சுவை வேறுஆங்கிலத்தைவிடக் கூர்மையானது தமிழ்தான் என்று மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று நமக்குமட்டுமாவது சொல்லிக்கொள்ள இந்த ஒரு நூல் போதும்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன் 

முந்தைய கட்டுரைநவீன மருத்துவம், கடிதம்
அடுத்த கட்டுரைபள்ளியில்…கடிதம்