நாத்திக பக்தி

இசையில் பக்தி அவசியமா, நாத்திகர்கள் பக்திப்பாட்டு பாடமுடியுமா என்றெல்லாம் ஒரே அக்கப்போராகக் கிடக்கிறது. உண்மையில் பக்திக்குள்ளேயே கடுமையான நாத்திகம் உண்டு. அதற்குச் சரியான உதாரணம் இந்தப்பாடல்.

அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர் பாடிய இந்தப் பாடலை மதுரை சோமுதான் பிரபலமாக்கினார். இப்போது அருணா சாய்ராம் தொடர்ந்து பாடுகிறார்.

இது பக்திப்பாடலா? இதிலுள்ள உருக்கம் நாத்திகம்தானே? நான் ‘சீரியஸாகவே’ யோசிக்கிறேன். என்ன கவி பாடினாலும் நீயெல்லாம் அருளப்போவதில்லை. உன் மாமி, மாமா, மச்சான், அண்ணன், தம்பி ,அப்பன், ஆத்தா ஒருத்தரும் ஒரு மண்ணும் செய்யப்போவதில்லை. ஆனால் எனக்கு வேறு வழியில்லை, கும்பிட்டு வைக்கிறேன். கடவுளருள் என ஒன்று கிடையாது என உருக்கமாக, கண்ணீர் மல்கச் சொல்லும் பாடல்தானே இது?

சரி, ஐயருக்கு என்னதான் வேண்டும்? பாட்டிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார். முருகனிடம் அல்ல, முகேஷ் அம்பானியிடம் கேட்கவேண்டியவை அவை. போஜராஜனை போல அட்சரத்துக்கு ஒரு பொன் என அள்ளிக்கொடுக்க எவராவது ஒருத்தர். அவர் எங்கே என்று தெரியவில்லை. காலம் கலிகாலம். ஆகவே உன்னிடமே கேட்டு வைக்கிறேன்.

சோமு உருகியுருகியுருகியுருகிப் பாடுகிறார். பக்தியுருக்கத்தின் அதியுச்சம். குரல் கம்மி பாடமுடியாமலும் ஆகிறது. ஆனால் அதே உருக்க முனகல் நடுவே பக்கவாத்தியத்துக்கு சபாஷும் போடுகிறார். பக்தி தேவையா என்றால் தேவை, ஆனால் சபாஷ் போட மறக்கவும் கூடாது. அந்த அளவுக்கு நாத்திகம் இருந்தால் பக்தி சோபிக்கும். செம்பு இருந்தால்தானே தங்கத்துக்கு பலம்?

முந்தைய கட்டுரைYes, Joy!
அடுத்த கட்டுரைபின்னைப்பின்நவீனத்துவம், கடிதம்