வாசிப்புப் பயிற்சியில் இடம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு

நான் சேஷாந்த், அமிர்தா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்று வருகிறேன் . எனது பள்ளி நண்பன் சபரீஷ் குமார் மூலம் நான் உங்கள் எழுத்துக்கு அறிமுகம் ஆனேன் . உங்கள் எழுத்து என்னை வியக்க வைத்துள்ளது , ஆழ்ந்த தத்துவங்களை எளிமையான நடையில் தங்கள் இணைய தளத்தில் படிக்க முடிந்தது .

தங்களின் வாசிப்பு புரிந்துகொள்ளல் பயிற்சி முகாமில் பங்கேற்க எனக்கு அதீத விருப்பம் உள்ளது . ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எனது கல்லூரி ரெண்டு வாரமாக மூடப்பட்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திறக்க இருந்தது , 29 ஆம் தேதியில் இருந்து பரீட்சை ஆரம்பமாக இருந்தது . இதன் காரணமாக என்னால் முகாமிற்கு பதிவு செய்ய இயலவில்லை . தற்போது கல்லூரி திறக்கப்படும் தேதியானது தள்ளி வைக்கப்பட்டு  மே  8 ஆம் தேதி திறக்க உள்ளது  . எனக்கு கிடைத்த இந்த நல்வாய்பை பயன்படுத்தி  தங்கள் வகுப்பில் இருந்து கற்றுக்கொள்ள ஆர்வம் ஆக உள்ளது  . முகாமிற்கான விண்ணப்பம் பதிவு முடிந்தது என்றும் , தங்களுக்கு  மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை இட்டால் வாய்ப்புள்ளதாகவும் சபரீஷ் கூறினான்

தங்கள் முகாமில் நான் கலந்து கொள்ள ஒரு இடம் கிடைக்குமா ஐயா ? எனது படிப்பும், எனது இலக்கியம் வாசிப்பும் மேன்மை அடைய மிகவும் பயன் உள்ளதாக இந்த முகாம் அமையும் . தங்கள் ஆசிர்வாதங்களுக்காக காற்றுளேன் ஐயா

நன்றி

இப்படிக்கு

ரெ.சேஷாந்த்

அன்புள்ள சேஷாந்த்

உங்கள் பிரச்சினை புரிகிறது. இது உயர்கல்வி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் நிகழ்வு. உங்களுக்கு பெரும் உதவியானது. மாணவர்களையே உத்தேசித்தோம். ஆனால் அறிவிப்பைக் கண்டதும் ஏற்கனவே இவ்வகுப்புகளின் தரத்தை அறிந்த பிறர் உடனடியாக பதிவுசெய்தார்கள். மாணவர்கள் வழக்கம்போல தயங்கி, யோசித்து, இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இடங்கள் இல்லை.

எங்களுக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. பணம் கட்டியவர்களை மட்டுமே பதிவு செய்து கொண்டவர்களாக நாங்கள் கணக்கிட முடியும். உணவு ஏற்பாடுகள் தொடங்கி அனைத்தையும் அதனடிப்படையிலேயே நாங்கள் முடிவுசெய்ய முடியும்.  பணம் கட்டியவர்களே முன்னுரிமையும் பெறவேண்டும் இல்லையா?

எங்கள் இடங்கள் வரையறை செய்யப்பட்டவை. இவை சிறிய அளவிலான நிகழ்வுகள் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.  இடங்கள் நிரம்பிவிட்டால் ஓரிருவரை சேர்க்கமுடியும். அதற்குமேல் என்றால் எந்த ஏற்பாடும் செய்ய முடியாது.

இந்நிகழ்வுக்கு இடங்கள் நிரம்பி, மேற்கொண்டும் பலரை சேர்த்து நெரிசலாகும் அளவுக்கு கொண்டுவந்து விட்டோம். இனி ஏதும் செய்ய இயலாது

இந்நிகழ்வை மீண்டும் எப்போதாவது நடத்தலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு சிறுமியின் கடிதம்
அடுத்த கட்டுரைநுழைதல்- ஒரு பதிவு