எம்.பக்தவத்சலம், மனித உரிமை – கடிதம்

 

மனித உரிமை – ஓர் வரலாற்றாவணம்

ஜெ,

நீதிபதி சந்துருவின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலில் இருந்து ஒரு தகவலைச் சொல்லியிருந்தீர்கள். அது காங்கிரஸ் தலைவர் மு.பக்தவத்ஸலம் பற்றியது. எமர்ஜென்ஸி காலக் கொடுமைகளில் அவருக்கு பங்குண்டு என்பதும், சட்டவிரோத  அதிகார மையமாக அவர் செயல்பட்டார் என்பதும், அதற்காக அவர் விசாரணைக்கு ஆளானார் என்பதும் எனக்கும் திகைப்பூட்டும் புதிய செய்தி. அவர் மேல் குற்றவிசாரணையே நடக்கவில்லை, அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்தபோது அவர் மீதான வழக்கு ரத்துசெய்யப்பட்டது.

1947 முதல் 1967 வரை இருபதாண்டுகள் தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்தவர் பக்தவத்ஸலம். காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், தமிழ்நாடு சட்டமன்ற அவைத் தலைவராகவும் பணியாற்றியவர் பக்தவத்ஸலம். முதல்வராக இருந்தபோது பொதுவினியோகத்துறையை ரத்துசெய்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வன்முறை வழியாக ஒடுக்கினார். பக்தவத்ஸலம் அதிகாரம் இல்லாமலிருந்ததே இல்லை.  அவரது பேத்தி ஜெயந்தி நடராஜன் இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல்வாதியாகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

என் கேள்வி இதுவே. பக்தவத்ஸலத்தின் செயல்பாட்டை வெறுமே அவருடன் நிறுத்திக்கொள்ள முடியுமா? அது காங்கிரஸின் மனநிலை தானே? காங்கிரஸை நாம் காமராஜருடன் மட்டும் பொருத்திக்கொள்கிறோம். பக்தவத்ஸலமும் அதன் முகம் அல்லவா?

ஶ்ரீரங்கராஜன்

அன்புள்ள ஶ்ரீரங்கராஜன்

ஜெயகாந்தன் பற்றி ஒரு வேடிக்கைக் கதை உண்டு. 1967ல் காங்கிரஸுக்காக ஜெயகாந்தன் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தோற்றது. தோற்றபின் பக்தவத்சலம் ஒரு நூல் எழுதினா. தலைப்பு  ‘காங்கிரஸ் தோற்றது ஏன்?’. அதன் அட்டையைப் பார்த்துவிட்டு ஜெயகாந்தன் சொன்னார். “கேளிவியும் பதிலும்”

பக்தவத்சலம் பெருநிலக்கிழார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவெங்கும் நிலக்கிழார்கள் காங்கிரசுக்குள் நுழைந்து கட்சியை ஆக்ரமித்தனர். (பக்தவத்சலம் முன்னரே வந்தவர்) இந்தியாவில் அதிகார மாற்றம் நிகழ்ந்தபின் நிலவுடைமை முறை ஒழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தமையால் நிலக்கிழார்கள் கட்சியை கைப்பற்றி அதனூடாக அதிகாரத்தை கைப்பற்றினர்.

காங்கிரஸுக்கும் அவர்கள் தேவைப்பட்டார்கள். இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தேவையான நாலில்மூன்று பெரும்பான்மையை அடைய காங்கிரஸ் அவர்களை பயன்படுத்திக்கொண்டது. ‘வாய்ப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு’ என்று அக்கொள்கைக்குப் பெயர். எவர் வெல்லக்கூடுமோ அவர்களையே காங்கிரஸ் வேட்பாளர்களாக்குவது. 1947 வரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் சட்டென்று காங்கிரஸ் தலைவர்களானார்கள். சுதந்திரத்திற்காகச் சிறை சென்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். நாகர்கோயிலில் டாக்டர் மத்தியாஸ் உள்ளே வந்தார். அத்தனை தியாகிகளும் வெளியே சென்றனர். பலர் இடதுசாரிகள் ஆயினர்.

பக்தவத்ஸலம் காங்கிரஸின் நிலப்பிரபுத்துவ முகம். அதிகாரம், அதையொட்டிய வன்முறையின் அடையாளம். நெருக்கடிநிலை காலகட்டத்தில் காங்கிரஸின் நிலக்கிழார்களுக்கு இடதுசாரிகள் மீது உச்சகட்ட அச்சம் இருந்தது. அவர்களை ஒடுக்க அத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இன்று பக்தவத்சலம் பற்றி படிக்கையில் நல்லவேளை திமுக வென்றது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது . அதை ஏன் அன்று இரண்டாவது சுதந்திரப்போர் என நினைத்தார்கள் என்றும் புரிகிறது. அரசியல் என்பது எப்போதுமே ஒற்றைப்படையானது அல்ல. எவர் அளிக்கும் ஒற்றைப்படைச் சித்திரமும் பொய்யே

ஜெ

நீதிபதி சந்துரு – கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முகில் நகரம் – சூதும் சூழ்ச்சியும்
அடுத்த கட்டுரைபொலிக! – கடிதம்