சினிமாவம்பும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஒட்டி உங்கள் மேல் இணையத்தில் தமிழிலும் மலையாளத்திலும் வசைகள் பொழியப்பட்டபோது உங்கள் ஏராளமான வாசகர்கள் மௌனமாக இருந்தனர். ஏனென்றால் இந்தக் கூச்சல்களுக்கெல்லாம் அர்த்தமில்லை என எங்களுக்குத் தெரியும். இதைப்போல பல வம்புகள் வந்து சென்றுவிட்டன என்றும் தெரியும்.

ஆனால் பலர் இதை கொண்டாடிக்கொண்டிருந்தனர். ‘கிழி கிழின்னு கிழிச்சுட்டான்’ என்றார்கள். ‘ஆசான் அடிவாங்கிட்டிருக்கார்’ என்று கிளுகிளுப்படைந்தார்கள். என்னிடம் தினம் ஒருவர் சொல்லிக்கொண்டே இருப்பார். “ஒருத்தன் உங்காளை அடி நொறுக்கிட்டான் பாத்தீங்களா?” என்பார்கள். “பாவம்யா உங்காள், இப்டி அடிக்கானுங்க?” என்று துக்கம் விசாரிப்பார்கள்.

உங்களுக்கு கேரளத்தில் இருந்த ஆதரவு இல்லாமலாகியது, அது நல்ல விஷயம் என ஒரு சிலர் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். அங்கே உண்ணி என்ற ஒரு எழுத்தாளர் எழுதியதை மொழியாக்கம் செய்து கொடுத்து “அவ்ளவுதான் கேரளத்திலே சேட்டனுங்க ஆப்பு வச்சிட்டானுக” என்றார்கள்.

இப்போது ஆடுஜீவிதம் பற்றி நீங்கள் எழுதியதும் “அடி பலமோ?” என்று கேட்கிறார்கள். “சேட்டன்களை சமாதானம் பண்றாரா உங்காளு? அவனுக அடிச்சு தூக்கி போட்டுட்டானுகளே” என்று ஒரு நண்பர் ஹைதராபாதில் இருந்து ஃபோன் பண்ணி கேட்டார்.

இவர்களெல்லாம் எந்த உலகில் வாழ்கிறார்கள், என்னதான் அறிந்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது சுந்தர ராமசாமி யும் அழகிரிசாமியும் இந்த கும்பலுக்கு யாரென்றே தெரியாமல் வாழ்ந்து எழுதி மறைந்ததுகூட நல்லதுதான் என நினைக்கிறேன்

மணிகண்டன் முத்துக்குமார்

பிகு: கே.பாக்யராஜ் உங்களைப் பற்றி கடுமையாகக் கண்டித்திருந்தது மட்டும் கொஞ்சம் வருத்தம் தந்தது.

அன்புள்ள மணிகண்டன்,

இதெல்லாம் சுந்தர ராமசாமி, அவருக்கு முன் க.நா.சு காலம் முதலே நடந்ததுதான். அன்று இவையெல்லாம் இப்படி பதிவாகவில்லை. அவ்வளவுதான் வேறுபாடு.

பெஞ்சமின் டிஸ்ரேலி சொன்னார். அரசியல்வாதிக்கும் தலைவனுக்குமான வேறுபாடு ஒன்றே. தலைவன் மக்களுக்குப் பிடிக்காததையும் சொல்வான். அதையே கேளிக்கையாளன், எழுத்தாளன் ஆகிய இருவரையும் வேறுபடுத்தவும் சொல்லலாம். மக்களால் விரும்பப்படாத ஒன்றைச் சொல்ல எழுத்தாளன் தயங்கலாகாது. புகழை இழக்க அவன் அஞ்சக்கூடாது. அந்த துணிவு அவனுக்கான தனிப்புகழையே ஈட்டித்தரும். எனக்கு எப்போதுமே அப்படித்தான் நிகழ்ந்துள்ளது.

இப்படி நான்கு பேர் என்னை வசைபாடும்போதெல்லாம் இந்தக் கூட்டம் “அடி பலம் போல” என்று மகிழ்வதை நான் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் பார்த்தேன். என்னதான் நினைக்கிறார்கள்? இவர்கள் இவர்களின் அற்ப உலகில் எதையாவது எழுதி, வசைபாடி கெக்கலித்தால் எனக்கு என்ன ஆகப்போகிறது? அதைப்பார்த்து ஒரு பத்து புதிய வாசகர்கள் வந்து சேர்வது தவிர என்ன நிகழப்போகிறது? இது தன் வீட்டுக்குள் இருந்துகொண்டு மேலதிகாரியை கெட்டவார்த்தை சொல்லி வசைபாடும் கையாலாகாத குமாஸ்தா மனநிலை. அதன் வழியாக ஒருவகை  அற்பக் கிளுகிளுப்பு. அதற்குமேல் ஒன்றுமில்லை.

ஆடுஜீவிதம் நான் வழக்கமாக எழுதும் சினிமாக்குறிப்புதான். மலையாள சினிமாவின் சாதனைப் படங்களைப் பற்றி 20 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இந்த தளத்திலேயே பல கட்டுரைகளைக் காணலாம். அக்கட்டுரைகளின் தொடர்ச்சி அது. நான் சொல்ல வருவதென்ன என்பதை திட்டவட்டமாக ஒப்பிட்டுக் காட்ட ஆடுஜீவிதம் ஒரு பெரிய வாய்ப்பு. மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் போலிப்படத்தை கொண்டாடியவர்களால் ஏன் ஆடுஜீவிதம் போன்ற கலையமைதி கொண்ட படத்தை அணுக இயலவில்லை என்று சுட்டிக்காட்ட, நம் கலைரசனையில் நாம் எங்கே இருக்கிறோம் என்று முகத்தில் அறைந்து சொல்ல ஒரு தருணம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன்.

அந்த ஒப்பீட்டுக்குப் பின் ‘மலையாளப் படத்தை கண்டு பொறாமைப்படுகிறான்’ என்பது போன்ற அபத்தக்கூச்சல்கள் ஓய்ந்தன. நான் சொல்வதென்ன என்பது மலையாளிகளிலும் தமிழரிலும் சற்று குழம்பிப் போனவர்களுக்குப் புரிந்தது. கேரளத்திலும் இங்கும் ஆடுஜீவிதம் பற்றிய என் கருத்து பரவலாக பேசப்பட்டது அதனால்தான். ஆடுஜீவிதத்தை புரிந்துகொள்ளவேகூட மஞ்ஞும்மல் பாய்ஸ் போன்ற போலிப்படங்களுடன் அதை ஒப்பிட்டுக் காட்டுவது இன்றைய சூழலில் அவசியமானது.

மற்றபடி எவரையும் எப்போதும் தாஜா செய்யவேண்டிய தேவை எனக்கில்லை. அப்படி உணர்ந்திருந்தால் அந்தக் கருத்தையே சொல்லியிருக்க மாட்டேன். என் வழி எனக்கு அக்கணத்தில் தோன்றுவதுதான். அது சமநிலையற்றதாகக்கூட இருக்கலாம். ஆனால் இலக்கியவாதி அப்படி உணர்ச்சிகளை, உள்ளுணர்வை மட்டுமே நம்பவேண்டும். தந்திரமான, திட்டமிட்ட கருத்துக்களைச் சொல்லக்கூடாது. அவன் கிறுக்கனாக, மடையனாகக்கூட இருக்கலாம். சூழ்ச்சிக்காரனாக இருக்கலாகாது.

மலையாளத்தில் ஒருபக்கம் குடிப்பொறுக்கிகள் இருந்தால் மறுபக்கம் ஆழ்ந்த வாசிப்பும், அரசியலுணர்வும் கொண்ட வாசகர்களின் திரள் உண்டு. அவர்கள் நான் சொன்னதென்ன என்று புரிந்துகொள்வார்கள். அவர்களே என் வாசகர்கள், நான் எழுதுவது அவர்களுக்காக மட்டுமே. குடிப்பொறுக்கிகளிடம் ‘காட்டுக்குள் குடிக்காதீர்கள்’ என்ற ஒற்றை வரியைக் கொண்டுசென்று சேர்க்க இந்தச் சினிமா வம்பு உதவியது, அவ்வளவுதான். மற்றபடி இந்த தருணத்தில் அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் என்னுடனேயே நிலைகொண்டார்கள்.

நீங்களே பார்க்கலாம். இந்த விவாதம் வந்ததும் கேரளத்தின் இரண்டு முக்கியமான இலக்கிய இதழ்கள் என் விரிவான பேட்டியை வெளியிட்டன. மாத்யமம் இதழ் இரண்டு இதழ்களிலாக ஒரு நீண்ட பேட்டியை வெளியிட்டது. (இஸ்லாமியப் பின்னணி கொண்ட இதழ் அது). கேரளத்தின் முதன்மை  அறிவியக்க இதழான மாத்ருபூமி மிக நீண்ட பேட்டியை வெளியிட்டது. அப்பேட்டிகள் மஞ்ஞும்மல் பாய்ஸ் பற்றியோ சினிமா பற்றியோ அல்ல. என் இலக்கியக் கொள்கைகள், என் இலக்கியச் செயல்பாடுகள், என் அரசியல், என்னுடைய ஆன்மிகப்பயணம் பற்றியவை. இந்த விவாதம் வழியாக என்னைக் கேள்விப்படுபவர்களுக்கு மிக விரிவாக என்னை மீண்டும் அறிமுகம் செய்யும் நோக்கம் கொண்டவை. அதுதான் அங்கே நிகழ்ந்தது.

அந்த விவாதத்தின்போது என்னிடம் தமிழிலுள்ள இணைய இதழ்கள் பேட்டிக்குமேல் பேட்டியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். நான் எவருக்கும் பேட்டி அளிக்கவில்லை. ஏனென்றால் நான் பேசுவது சினிமா பற்றி அல்ல என அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் ஒரு சினிமா வம்பை செய்தியாக போட விரும்பினார்கள். மாத்ருபூமி பேட்டி வழியாக என் நூல்களை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை மேலும் கூடியிருக்கிறது. அதுதான் விளைவு.

ஜெ

பிகு : கே.பாக்யராஜ் கடுமையாக ஏதும் சொல்லவில்லை. அவர் வகிக்கும் பதவிக்கு அவர் அதைச் சொல்லியாகவேண்டும். அவர்மேல் எனக்கு ஏற்கனவே இருந்த மதிப்பை அச்செயல் கூட்டியது. நேரில் சந்திக்கையில் அதைத்தான் சொல்லவிருக்கிறேன்.

முந்தைய கட்டுரைதமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-2
அடுத்த கட்டுரைஇரு பலியாடுகளின் கதை – கடிதங்கள்