அசோகமித்திரனின் ஒற்றன் நாவலில் ஒரு வரி உண்டு, ‘நமது புகைப்படம் அழகாகத் தெரியவேண்டும் என்றால் நமக்குக் கொஞ்சம் வயதாகவேண்டியிருக்கிறது’ பெண்களுக்கு அது ரொம்பப் பொருந்தும். புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டாலும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. குறைபாடு நோக்கியே அவர்களின் கண் செல்லும். முதல் அபிப்பிராயம் ‘குண்டா தெரியுறேன்’ என்று. ஏனென்றால் அவர்களின் உள்ளத்தில் அவர்கள் குண்டு அல்ல. அதன்பின் பல கருத்துக்கள். புடவை நன்றாக இல்லை, கை சரியாக வைக்கவில்லை. முழிக்கிறேன்…
ஆனால் பத்தாண்டுகள் கழித்தால் “அப்பல்லாம் எப்டி இருந்தேன் இல்ல?” என கருத்து உருவாகிறது. கடந்தகால ஏக்கம் வந்தமைகிறது. பெண்கள் ஆண்களை விட தங்கள் உடலுக்குள் நீண்டதொலைவு செல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் உடலில் இருந்து வேறு உடல்கள் உருவாகின்றன. அவர்களின் புரோட்டீனையும் கால்ஷியத்தையும் உண்டு வளர்கின்றன. ஆகவே அவர்கள் இழப்பவை மிக அதிகம். பெண்கள் தங்கள் உடல்களை இழந்தபடியே இருக்கிறார்கள்.
1998 ல் இந்தியா டுடே இதழுக்காக என்னைச் சில புகைப்படங்கள் எடுப்பதற்காக சினேகிதன் என்னும் புகைப்பட நிபுணர் பத்மநாபபுரம் இல்லத்துக்கு வந்தார். அவரிடம் அருண்மொழியைச் சில படங்கள் எடுத்துத் தரும்படி கோரினேன். அன்று அருண்மொழி மெலிந்து, விரிந்த கண்களுடன் தேவதை போலிருந்தாள். அவர் மிக உற்சாகமாக படங்களை எடுத்தார். அச்சிட்டு அனுப்பித் தந்தார்.
எனக்கு அப்படங்கள் மிகவும் பிடித்திருந்தன. திரும்பத் திரும்ப நான் பார்க்கும் படங்கள் அவை. ஆனால் அவை அருண்மொழிக்குப் பிடிக்கவில்லை. “கிராமத்துக்காரி மாதிரி இருக்கேன்” என ஒரு கருத்து. புடவை கண்டாங்கி போல் இருக்கிறது என இன்னொரு கருத்து. அந்தப் படங்களை தூக்கி ‘அந்தாலே’ போட்டதுதான் திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் அவ்வப்போது அவை நல்ல படங்கள் என்றாலும் ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல’ என ஓர் உதட்டுச்சுழிப்பு
இப்போது அந்த படங்களை மீண்டும் எடுத்துப் பார்க்கிறேன். அவற்றில் இருக்கும் அருண்மொழியின் முகத்தில் அந்த காலகட்டத்தில் இருந்த கள்ளமின்மையும், கனவுச்சாயலும் இருக்கிறது. அப்போதே அவைதான் எனக்கு அவளிடம் பிடித்தவை. இன்று அவள் வெவ்வேறு முகங்கள் வழியாக வந்துவிட்டிருக்கிறாள்ள் . அவ்வகையில் அவள் ஓர் அதிருஷ்டசாலி. அவள் முகத்தின் அழகு மறையவில்லை. வெவ்வேறு வகையில் மாறிக்கொண்டிருந்தாலும் அழகென அவளில் இருந்தது அவ்வாறே நீடிக்கிறது.
நம் முகம் நம்மை அறியாமலேயே நாம் வாழும் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. அக்காலகட்டத்தை உணரும் நம் உள்ளத்தின் வெளிப்பாடாக ஆகிவிட்டிருக்கிறது. பத்மநாபபுரம் அழகான காலகட்டம். சைதன்யாவுக்கு இரண்டு வயது. அஜிக்கு ஐந்து. அவர்களின் குழந்தைப்பருவத்தை கொண்டாடுவதற்கு உரிய இடவசதி கொண்ட இல்லம். அருகே அலுவலகம். நான் என் தீவிர இலக்கிய ஆக்க மனநிலையில் இருந்தேன். அருண்மொழி மேல் பெரும் பித்தும் கொண்டிருந்தேன். அவை அந்த முகத்தில் தெரிகின்றன.
அருண்மொழி எதை தன் நல்ல படம் என்று சொல்கிறாள் என கவனித்திருக்கிறேன். நன்றாகச் சிவப்பாகத் தெரியவேண்டும். நன்றாக ஆடை அணிந்து நேர்த்தியாக ஒளியில் நின்றிருக்கவேண்டும். அவள் விரும்புவது அவளுடைய பொம்மையைத்தான் என்று தோன்றுகிறது.
இன்று இந்தப்படங்களைப் பார்த்தால் என்ன சொல்வாள். அவள் வாழ்ந்து கடந்து வந்த ஒரு காலகட்டத்தை உணரக்கூடுமா?