காதுகுத்து

ஐரோப்பிய அருங்காட்சியகங்களைக் காண்கையில் ஒன்றை நினைத்துக்கொள்வேன். அங்கே மிகப்பெரிய பிரபுக்கள், அரசர்களின் குடும்ப ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் இல்லங்களில், குழந்தைகளுடன், ஏவலர்களுடன், அலங்காரப்பொருட்களுடன் அமர்ந்திருப்பார்கள். ஒரு பிரபுவின் நாய் கூட தனியாக வரையப்பட்டுள்ளது.

ஆனால் அன்றைய சாமானியர்கள் அப்படியே மறைந்துபோனார்கள். காட்டில் பலகோடி இலைகளும் மலர்களும் உதிர்ந்தழிவதுபோல. அவர்கள் வந்தமைக்கும் சென்றமைக்கும் சுவடில்லை. அல்லது அவர்கள் வந்துசெல்ல அவர்கள் வழியாக வேறொன்று நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் இன்று எந்தச் சாமானியருக்கும் சில புகைப்படங்கள் கைவசமுள்ளன. பிறருக்கு அவை எப்படியோ அவனுக்கு அவை அரியவை. நான் செல்லும் வீடுகளிலெல்லாம் அங்குள்ள புகைப்படங்களைத்தான் கவனிப்பேன். அவற்றில் காலம் உறைந்து நின்றிருக்கும். ஒரு கற்பனையுள்ள எழுத்தாளன் புகைப்படங்கள் வழியாக இன்னொரு காலத்திற்கு மிக எளிதில் சென்றுவிடமுடியும்.

அண்மையில் அஜிதனின் திருமண அழைப்புக்காக உறவினர் இல்லங்களுக்குச் சென்றிருந்தேன். பழங்கால வீடுகளில் சற்றே சாய்வாக சட்டமிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த கறுப்புவெள்ளைப் புகைப்படங்களில் இன்றில்லாமலாகிவிட்ட, ஆனால் என் நினைவிலுள்ள, மாமாக்களையும் பாட்டிகளையும் கண்டேன். பழங்கால வரைகோட்டு மீசைகள், உளிபோன்ற கிருதாக்கள், ஆட்டுக்காது காலர்கொண்ட சட்டைகள், கோணல் வகுப்பெடுத்து சீவி பக்கவாட்டில் மலர்சூடப்பட்ட பெண்களின் தலைகள், கொண்டைகள், மீன்வால் போல வளைத்து மையிடப்பட்ட கண்கள்…

வண்ணப்படம் வந்தது ஒரு கொண்டாட்டம் உருவானது. புகைப்படக்கலை எளிதானது. ஆனால் அது எதிர்மறை விளைவை உருவாக்கியது. ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டன. அவை எளிதில் வண்ணம் மங்கி அழிபவை. அத்துடன் கவனமில்லாமல் புகைப்படம் எடுப்பதும் அதிகரித்தது. படங்கள் பேணப்படவுமில்லை. இன்று கறுப்புவெள்ளை காலகட்டப் படங்கள் கிடைப்பதுபோல வண்ணப்புகைப்படங்கள் அழகாகக் கிடைப்பதில்லை

அருண்மொழியின் சேமிப்பில் இருந்து படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அஜிதனின் காதுகுத்துவிழா. அவனுக்கு ஒருவயதிருந்தபோது. பயல் பெரிதாக எந்த கலாட்டாவும் செய்யவில்லை. அவனுக்கு உடனடியாக அந்தச் சடங்குகளை முடித்துவிட்டுச் செய்யவேண்டிய வேலைகள் பல இருந்தன. அவன் தாய்மாமன் பாண்டியனின் மடியில் வைத்து ஒரு நறுக். குத்தியது ஆசாரி. ஆனால் அவன் அதை பாண்டியன் செய்ததாக எண்ணிக்கொண்டான். ‘பாண்டீன் மாமாவுக்கு காது குத்தணும்’ என சொல்லிக்கொண்டிருந்தான். பழிக்குப்பழி!

காது குத்திய சூட்டோடு எடுக்கப்பட்ட கண்ணீர்மல்கிய புகைப்படங்களைப் பார்க்கிறேன். நல்ல மேமாதம். அப்போதுதான் அருண்மொழியின் பெற்றோர் எல்லா விழாக்களையும் வைப்பார்கள். அவர்களுக்கு அப்போது விடுமுறை. பயல் கண்டபடி வெயிலில் அலைந்து கொஞ்சம் வண்ணம் கம்மிப்போயிருக்கிறான். அவனுக்கு மேற்கொண்டு காதுகுத்தக் காத்திருக்கும் உலகை ஐயத்துடன் பார்க்கிறான்.

முந்தைய கட்டுரைசிருஷ்டிகீதம்
அடுத்த கட்டுரைஇன்று சென்னையில்…