அன்புள்ள ஜெ,
இந்த வருட வாசிப்பின் இனிய தொடக்கமாக அமைந்தது ஜெயன் கோபாலகிருஷ்ணனின் ‘நின்றெரியும் சுடர்’. பகல் நேர ரயில் பயணத்தில், அதன் அத்தனை இரைச்சல்களையும் மீறி, கவனத்தை தக்கவைத்த படைப்பு.
முதல் கதையான ‘அப்பாவின் குரல்’ உங்கள் தளத்தில் ‘புதியவர்களின் கதைகள்’ வரிசையில் 2013-இல் வெளிவந்தது. மொத்தம் ஒன்பது கதைகள். ஒவ்வொன்றும் வேறு வேறு கதைகளன் கொண்டவை.
‘சிலை’, ‘கம்பாட்டம்’, ‘தடை’ ஆகியவை உச்ச தருணங்களை முன்வைப்பவை. ‘அப்பாவின் குரல்’, நின்றெரியும் சுடர்’, ‘மருந்து’ ஆகியவை கணவன் – மனைவி உறவுச்சிக்கல் போல தோற்றமளிப்பவை. ‘இழப்பு’, ‘பெயர்’ இரண்டும் நாம் நேரடியாக காணும் கதைமாந்தரால் ஆனவை. ‘இரண்டு லட்ச ரூபாயை சரியாகப் பிரிப்பதெப்படி’ இவை அனைத்திலிருந்தும் மாறுபட்டு ஒரு சிறு இனிமையை மீட்டெடுப்பது.
கதைகள் கூறப்படுவது ஆண்களின் வார்த்தைகளிலாக என்றாலும் பெரும்பாலும் அவை சிறந்த பெண்ணீய பார்வைகளை முன்வைக்கின்றன.
இவரது படைப்புகளில் மற்றுமொரு சிறப்பு வட்டார வழக்கு. நாஞ்சில்நாட்டு தமிழ் வாசகர்களுக்கு புதிதில்லை என்றாலும் இக்கதைகளின் உரையாடல்கள் கண்ணால் வாசிப்பதாக இல்லாமல் காதால் கேட்பதாக தோன்றுகின்றன.
ஜெயன் கோபாலகிருஷ்ணனுக்கும், வெளியிட்ட யாவரும் பதிப்பகத்திற்கும் பாராட்டுகள்.
சுதா ஶ்ரீநிவாஸன்