சில வரிகள்

என் பழைய இணைய கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தபோது இந்த குறிப்புகளைக் கண்டடைந்தேன். ஏதோ நூலில் இருந்து எடுத்து எழுதியிருக்கிறேன். எந்த நூல் என குறிப்பில் இல்லை. அல்லது நானே எழுதினேனா என்றும் குழப்பமாக இருக்கிறது. 

*

மனம் திருந்திய மைந்தனைப் பார்த்து தேவதைகள் அடைந்த சந்தோஷத்தை அவனுடைய அப்பா அவனுக்காக கொன்று சமைத்த அந்த கொழுத்த கன்றும் அடைந்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது

*

கொஞ்சம் தப்பு இருந்துவிட்டுப் போகட்டும் என்னும் எண்ணத்தால் டன் கணக்கில் விளக்கங்களை தவிர்க்கமுடியும்

*

சின்னவயதுக்காரர்கள் நடக்ககாது போகும் கனவுகளையும் வயதானவர்கள் நடக்காதுபோன நினைவுகளைகளையும் கொண்டிருக்கிறார்கள். நடுவயதுக்காரர்களுக்குத்தான் உண்மைநிலவரம் தெரியும். ஆகவே அவர்கள் பொறுமையாக இருக்கவேண்டும். இருப்பதில்லை.

*

அவர் மரணத்தால் பிரம்மாண்டமாக ஆகிவிடும் வகையான மனிதர்

*

எலிப்பொறியில் இரையை வைத்தபிறகு அறையை எலியின் பொறுப்புக்கே விட்டுவிடவேண்டும்.

*

முன்னோடியாக இருக்காதே .தொடக்ககால கிறிஸ்தவ ஊழியர்கள் சிங்கத்தின் கூண்டுக்குபோனார்கள். பின்னர் வந்தவர்கள் போப் ஆனார்கள்.

*

ஏசுவாவது போதனைகள் செய்தார். சிலுவை அதையும் செய்யவில்லை. ஆனால் அதையும்தான் ஆணியால் அறைந்தார்கள். ஆகவே அதுவும் தெய்வமாகியது

*

எனக்கு அமெரிக்கர்களைப் பிடிக்கும், ஆனால் அவர்கள் பிரெஞ்சுமொழி பேச முயற்சி செய்யும்போது அல்ல. அவர்கள் ஆங்கிலமும் பேசுவதில்லை என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்!

*

எனக்கு கிடைத்த தனிமையில் கண்ணாடித் தொட்டிக்குள் தங்கமீன் போல உணர்ந்தேன்.

*

நேர்மையான மனிதர்கள் எல்லாம் இன்று தங்கள் வருமானத்தை மீறி செலவுசெய்கிறார்கள். நேர்மையற்றவர்கள் பிறர் வருமானத்தை மீறியும் செலவுசெய்கிறார்கள். ஒருசில திறமையானவர்கள் இரண்டையும் செய்கிறார்கள்

*

உண்மையான சோஷலிஸ்டுகள் உருவாகி வருபவர்கள் அல்ல, அவர்கள் பிறக்கவுமில்லை.

*

வறுமையால் உடைந்த குடும்பங்களைவிட இணைந்திருக்கும் குடும்பங்களே மிகுதி

*

நல்ல விஷயங்களைச் சொல்வது நல்லது. நமக்கு எதிரிகள் அமைவதில்லை. ஏனென்றால் நம்மை எவரும் நினைவில் வைத்திருக்கமாட்டார்கள்.

*

ஊழல் இல்லாத நிர்வாகம் பெரும்பாலும் நிர்வாகம் இல்லாத ஊழலை நோக்கிச் செல்கிறது.

*

நம் சாவின்போது எவ்வளவுபேர் வருந்துவார்கள் என்பதே வாழ்க்கையின் அளவுகோல், கடன் வாங்குங்கள்

*

இந்திரனுக்குக் கிடைத்ததுபோல எந்தப் பெண்ணாவது சாபம் பெற்றிருக்கிறாளா?

*

முதுமையில் உலகை துறக்கவேண்டியதில்லை, உலகம் உங்களை துறந்துவிடும்

*

நாம் சராசரியாக ஒரு பாடலின்போது எத்தனை முறை வெளியே சென்று வருகிறோம்?

*

நினைவுச்சின்னங்கள் அமைப்பதில்தான் எவ்வளவு பதற்றம்!

 

முந்தைய கட்டுரைகுடுகுடுப்பை நாயக்கர் 
அடுத்த கட்டுரைசெயலின்மையில் இருந்து ஏன் விடுபடவேண்டும்?