கண்ணதாசனின் ’அர்த்தமுள்ள இந்து மதம்’ தமிழில் மிக அதிகமாக விற்ற நூல்களில் ஒன்று. அதன் எளிமை முதன்மையான காரணம், கண்ணதாசனின் பெரும்புகழ் இன்னொரு காரணம். அதைவிட முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
இன்றைய மனிதனுக்கு ஓர் அடிப்படைச் சிக்கல் உள்ளது. இன்றைய கல்விமுறை தர்க்கபூர்வமானது. ஆராய்ந்து அறிவதை முன்வைப்பது. ஆகவே ஒவ்வொருவரும் அப்படி இருக்க நினைக்கிறார்கள். ஆனால் தன் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதாக இருப்பதையும் கூடவே காண்கிறார்கள். அவற்றுடன் தொடர்பு கொண்ட சடங்குகள், ஆசாரங்களை கைவிடவும் அவர்களால் முடிவதில்லை.
அந்தவகையான தத்தளிப்புகளில் இருப்பவர்களுக்கு கண்ணதாசனின் நூல் மிக உதவியானது. அது இந்துமதத்தின் ஆசாரங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாவற்றுக்கும் நடைமுறை சார்ந்த ஒரு தர்க்கபூர்வமான விளக்கத்தை அளிக்கிறது.
அந்நூல் வெளிவந்த பிறகு ஆன்மிகமான விஷயங்களுக்கு அறிவியல் விளக்கம் அளிப்பது ஒரு பெரிய அலையாகவே நடைபெறத் தொடங்கியது. அதில் அபத்தநிலைக்கே சென்றுவிட்டோம். விபூதி போடுவது நெற்றியில் நீரை உறிஞ்சி சளிபிடிக்காமல் தடுக்கும் என ஒரு பேச்சாளர் பேசியதைக் கேட்டேன். அதைவிட விக்ஸ் பூசுவது நல்லதுதானே?
மதச்சடங்குகள், மதக்குறியீடுகளுக்கு நடைமுறை சார்ந்த அர்த்தம் தேடுவது பிழை. அறிவியலில் விளக்கம் தேடுவதென்றால் என்ன அர்த்தம்? அறிவியலில் இருக்கும் நம்பிக்கை ஆன்மிகத்தில் இல்லை என்றுதானே?
எல்லா மதங்களிலும் குறியீடுகளும், ஆசாரங்களும், நம்பிக்கைகளும் உண்டு. மதம் செயல்படுவதே அவற்றின் வழியாகத்தான். ஆனால் இயற்கைமதங்களின் சிறப்பு என்னவென்றால் அவை மிகத்தொன்மையான காலத்துடன் நம்மை ஆன்மிகமாக இணைக்கின்றன என்பதுதான். ஐம்பதாயிரம் அல்லது லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் ஆன்மிகமும் நம் ஆன்மிகமும் ஒன்றாக இணைகின்றது.
அவ்வாறு நம்மை இணைக்கும் ஒன்று சாதாரணமானது அல்ல. அழிவற்ற ஒரு பிரபஞ்ச உண்மையானது மொழியே உருவாகாத தொல்மனிதன் முதல் இன்று வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்றால் அதுதானே தெய்வத்தின் தோற்றம்? அப்படி இருந்தால்தானே அதற்கு மாறாத மதிப்பு உள்ளது?
அந்த மெய்ஞானத்தை இன்றைக்கு நமக்கு கிடைக்கும் எளிமையான பள்ளிக் கல்வி அல்லது அறிவியல்கல்வியை வைத்துப் புரிந்துகொள்ள முடியுமா? அதற்கு முயன்றால் நாம் அந்த மெய்ஞானத்தை சிறுமைப்படுத்தி விடுவோம்.
சிவலிங்கத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் Y வடிவமான ஒரு கோட்டு வரைவு இருக்கும். அது ஆண்குறி என்பதற்கான அடையாளம். அகழ்வாய்வில் கிடைக்கும் பழைய சிவலிங்கங்கள் எல்லாமே நேரடியாகவே ஆண்குறி வடிவில், முனையில் மொட்டுடன் இருக்கும். அதைத்தான் பிற்காலத்தில் இப்படி ஆக்கியிருக்கிறார்கள்.
அதைப்பார்த்ததுமே ஒருவருக்கு அருவருப்பு உருவாகிறது என்று கொள்வோம். சீச்சீ ஆண்குறியை வழிபடுவதா என்று அவன் நினைக்கிறான் என்று கொள்வோம். அவன் மனநிலை என்ன? அவன் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் இங்கே அறிமுகம் செய்த விக்டோரியா கால ஒழுக்கமுறையை (Victorian Morality) யை நம்புகிறான், அவ்வளவுதான்.
விக்டோரியா கால ஒழுக்கமுறையில் பெண்கள் பொது இடத்தில் மொத்த தோளையும், முக்கால்வாசி மார்பகங்களையும் திறந்துபோடலாம். ஆனால் சிற்பங்களில் மார்பகங்களே இருக்கக்கூடாது. ஆண்கள் ஆண்குறியின் அளவு புடைப்பாகத் தெரியும்படி இறுக்கமான கால்சட்டைகள் அணிவது ‘பேஷன்’ ஆனால் அதை படத்தில் வரைவது அசிங்கம்.
அந்த பிரிட்டிஷார்தான் நம் தெய்வச்சிற்பங்களை ஆபாசமானவை என்றனர். அந்த மனநிலையைத்தான் சிவலிங்கத்தைக் கண்டு அருவருப்படையும் அறிவிலியும் கொண்டிருக்கிறான். அவன் இந்துமத நம்பிக்கை கொண்டவன் என்றால் சிவலிங்கத்திற்கு வேறேதும் அர்த்தம் அளிக்க முயல்கிறான். சிலர் சாதாரணமான அறிவியல் அர்த்தங்களை கற்பிதம் செய்கிறார்கள்.
நான் அமெரிக்காவில் ஒருமுறை அதிதிறன் நுண்ணோக்கி வழியாக நுண்ணுயிரி ஒன்றை பார்த்தேன். அது இன்னொன்றுடன் இணைசேர துடித்துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று எனக்கு அந்த துடிப்பு பிரபஞ்சத்தின் துடிப்பு என்று தோன்றி மெய் சிலிர்த்துவிட்டது.
இங்கே ஒவ்வொரு உயிரும் மேலும் மேலும் பெருகும் பொருட்டு துடிக்கிறது. மனிதனில் உள்ள காமம் என்பது அந்த துடிப்புதான். அதன் பிரம்மாண்டம் நமக்கு தெரியும். அந்த துடிப்பு எங்கும் உள்ளது. உயிர்களில் மட்டுமல்ல பொருட்களிலும் உள்ளது. ஒவ்வொரு பொருளும் இன்னொன்றாக ஆகிக்கொண்டே இருக்கிறது. சூரியன் கோள்களாகின்றது. நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன. எலக்ட்ரான்கள் போன்ற நுண்ணிய துகள்களும் பெருகுவதற்கு துடித்தபடியே உள்ளன.
பிரபஞ்சம் முழுக்க இருக்கும் இந்த துடிப்பை என்றோ எப்படியோ ஒரு தொல்மூதாதை உணர்ந்தான். அவன் ஓர் அரைக்குரங்காகக்கூட இருக்கலாம். அதை விளக்க அவன் ஆண்குறியை அடையாளமாக ஆக்கினான்.
அந்த தரிசனம் அதன்பின் பெருகிப்பெருகி வந்தது. அதில் மாபெரும் ஞானிகள் இணைந்தனர். கவிஞர்கள் இணைந்தனர். அது மிகமிக விரிவான தத்துவவிளக்கம் பெற்றது. சிற்பவடிவம் ஆகி நம் முன் அமர்ந்திருக்கிறது.
இன்று அதை ஒரு தத்துவஞானி இப்படி விளக்கக்கூடும். இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே சக்தி (energy) தான். அந்த சக்தி செயலூக்கம் கொள்ளும்போது பொருள் ஆகிறது. நட்சத்திரங்களும் கோள்களும் ஆகி பிரபஞ்சம் ஆகிறது. அப்படி அந்த சக்தியை செயல்படச் செய்யும் துடிப்புதான் சிவம். அதுதான் இங்கெல்லாம் உள்ள எல்லாவற்றுக்கும் மூலகாரணம்.
அந்த காரணத்தைத்தான் ஆதிமனிதன் அவன் அறிந்த ஒரு குறியீடாக உருவகம் செய்துள்ளான். அதை தியானிப்பது வழியாக அந்த மாபெரும் தரிசனத்தை நாம் அடைய முடியும். இயற்கை மதங்களின் ஆற்றல் அதுதான்.
ஆன்மிகதரிசனம் என்பது மிக நுட்பமான ஒன்று. மனிதனின் அறியாத ஆழத்தில் நிகழ்வது. தியானம் வழியாக மட்டுமே செல்லத்தக்க ஆழம் அது. அங்கே நிகழ்வதை நாம் உருவகங்கள் வழியாகவே சொல்லமுடியும். அந்த உருவகங்கள் மிகமிகத் தொன்மையானவையாகவே இருக்கும். ஏனென்றால் எப்போது மனிதனுக்கு மனம் உருவாகியதோ அப்போதே அவையும் உருவாகியிருக்கும்
இயற்கை மதங்களின் பிரச்சினை என்பது என்ன? அவை மிகத்தொன்மையான ஆன்மிகஞானத்தின் உருவகங்களை அவை நமக்கு கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் தொன்மையான காலகட்டத்தின் சாதாரணமான நம்பிக்கைகளையும் வாழ்க்கைமுறைகளையும்கூட அப்படியே நம்மிடம் கொண்டு வந்து விடுகின்றன.
ஒட்டுமொத்தமாக நாம் ஆதிமனிதனின் நம்பிக்கைகளையும் ஆசாரங்களையும் தூக்கி வீசிவிட்டால் பண்பாடே இல்லாமலாகிவிடும். ஆன்மிகமே மொண்ணையாகிவிடும். வெறும் வாழ்க்கைச்சடங்குகளை நவீனப்படுத்தவேண்டும். ஆன்மிகமானவற்றை உள்வாங்கவேண்டும்.
அவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? அதற்கு மூன்று விதிகள்தான் உள்ளன.
அ. ஆன்மிகமான விஷயங்களை தர்க்கபுத்தியால் புரிந்துகொள்ள முயலாமல் இருப்பது. அவற்றுக்கு நடைமுறைவாழ்க்கை சார்ந்தோ அறிவியல் சார்ந்தோ விளக்கம் கொடுக்க முயலாமல் இருப்பது.
ஆ. அவற்றை வழிபடலாம். அல்லது தியானிக்கலாம். அவற்றால் ஏதேனும் வகையில் ஆன்மிகமான உணர்வோ அறிதலோ ஏற்பட்டால் தொடரலாம். இல்லையென்றால் அது எனக்குரியது அல்ல என்று விட்டுவிடலாம்.
இ. அவை சகமனிதனுக்கு எவ்வகையிலேனும் தீங்கு விளைவிப்பவை அல்லது அவமதிப்பவை அல்லது இன்னொருவரின் உரிமையை பறிப்பவை என்றால் அவற்றை தவிர்க்கவேண்டும். நம் பார்வையை குறுக்கி, காழ்ப்புகளையும் கசப்புகளையும் அளிக்கும் எல்லாவற்றையும் விலக்கவேண்டும்.
பொதுவாக, இவற்றில் ஞானியரும் அறிஞர்களும் அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்தொடர்வதே சிறந்தது.