இந்துவாக தன்னை உணர்பவர் சந்திக்கும் ஒரு சிக்கல் உண்டு. எந்த ஊடகத்திலானாலும் இந்து மதம் அழியவேண்டும் என எவரேனும் ஒருவர் ஆவேசமாகச் சொல்லிக்கொண்டிருப்பார். தெருவில் ஓர் அரட்டையில்கூட எவராவது அதைச் சொல்வார்.
வேறெந்த மதத்தைப் பற்றியும் எவரும் அப்படிச் சொல்வதில்லை. அந்த மதத்தை நம்புபவர்கள் உண்டு. நம்பாதவர்கள் உண்டு. அதன் சில நம்பிக்கைகளை சிலர் விமர்சிப்பதும் உண்டு. ஆனால் அழியவேண்டும் என்று எவரும் வெறிகொண்டு பொதுவெளியில் பேசுவதில்லை.
கேட்டால் அதற்கு பல காரணங்கள் சொல்வார்கள். அந்தக் காரணங்களெல்லாம் உண்மையானவை என்றே வைத்துக்கொள்வோம். மற்ற மதங்கள் எல்லாமே தேவையானவை, இந்து மதம் மட்டுமே அழியவேண்டியது என்கிறார்களா என்ன?
இந்து மதம் அழிந்தால்தான் என்ன? இந்துவாக அல்லாமல் ஒரு உலகக்குடிமகனாக நின்று இதைக் கேட்டுக்கொள்கிறேன்.
உலகில் இருந்த தொன்மையான மதங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. ஐரோப்பாவில் இருந்த கிரேக்கமதமோ, பாகன் மதங்கள் என்று சொல்லப்பட்ட மதங்களோ இல்லை. மாயன் மதம் இல்லை. எகிப்திய மதம் இல்லை. திபெத்தின் பான் மதமும் ஜப்பானின் ஷிண்டோ மதமும் பெயரளவுக்கு இருக்கின்றன. யூதமதம் ஒரு சிறு குழுவாக நீடிக்கிறது.
சென்ற இரண்டாயிரம் ஆண்டு உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஒன்றைப் பார்க்கலாம். இயற்கை மதங்கள் எல்லாமே தீவிரமாக தாக்கி அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பணம், அதிகாரம், பிரச்சார வல்லமை எல்லாமே அதற்கு பயன்படுத்தப்பட்டபடியே இருக்கின்றன. உலகில் இன்று எஞ்சியிருக்கும் குறிப்பிடத்தக்க இயற்கை மதம் இந்துமதம் மட்டுமே.
இயற்கை மதங்களுக்கு உறுதியான ஒற்றை நிர்வாக அமைப்பு இருக்காது. இயற்கை மதங்கள் அதிகாரத்தை நேரடியாகக் கையாள்வதில்லை. ஆகவே அவை தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துவரும் அந்த அழிப்பு முயற்சியையே நாம் இன்றும் காண்கிறோம்.
இந்து மரபு அழிந்தால் உலகப் பண்பாட்டுக்கு என்ன இழப்பு வரும்? இப்படி அதை விளக்குகிறேன். இயற்கை மதங்களுக்குத் தான் வரலாற்றுக்கும் முற்பட்ட மிகமிகத் தொன்மையான பழங்குடிப் பண்பாட்டுடன் நேரடியாகத் தொடர்பு உள்ளது. அந்த தொடர்பு அறுந்துவிடும் என்பதுதான் முதன்மையான இழப்பு.
ஓர் உதாரணம் சொல்கிறேன். மறைந்த குடித்தலைவர்களுக்கு மிகப்பெரிய ஒற்றைக்கற்களை நாட்டுவது மிகப்பழங்கால வழக்கம். அவற்றை பெருங்கல் (menhir) என்கிறார்கள். அந்தக் காலகட்டம் பெருங்கற்கால நாகரீகம் எனப்படுகிறது. அது இன்றைக்கு முப்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தொன்மையானது.
யோசித்துப் பாருங்கள், மனிதநாகரீகத்தின் ஒட்டுமொத்த வரலாறே அதிகம்போனால் பத்தாயிரம் ஆண்டுகள்தான். பெருங்கற்காலம் என்பது மொழியே சரியாக உருவாகியிருக்காத காலகட்டம். அன்றைய வாழ்க்கை என்ன என்றே நமக்கு தெரியாது. அந்தப் பெருங்கற்கள் மேற்கே இங்கிலாந்து முதல் கிழக்கே நியூசிலாந்து வரை உலகமெங்கும் உள்ளன. இந்தியா முழுக்க உள்ளன.
தமிழகத்தில் குமரிக்கல் பாளையம் (ஈரோடு அருகே) என்னுமிடத்தில்தான் இந்தியாவிலேயே பெரிய பெருங்கற்களில் ஒன்று உள்ளது. அது இன்றைக்கும் வழிபடப்படுகிறது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த கல்லால் ஆன புதிர்வளையங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளன. அவை வழிபடப்படுகின்றன. என் குலதெய்வமாகிய மேலாங்கோடு யட்சி ஆலய வளைப்பிலேயே (குமாரகோயில் அருகே) பெருங்கற்கள் நின்றிருக்கின்றன.
நமக்கு அந்தக் கற்களை நாட்டியவர்கள் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஓர் ஆன்மிகமான தொடர்ச்சி உள்ளது. நாம் நம்மை அறியாமலேயே அவர்களுடன் நம்மை இணைத்துக்கொள்கிறோம். அப்போது மானுடப்பண்பாடு ஒற்றைப்பெருக்காக ஆகிறது. அந்த தொடர்ச்சிதான் இயற்கை மதங்களின் தனித்தன்மை.
நாம் இன்று வழிபடும் தெய்வங்களும், அவற்றின் உருவங்களுமெல்லாம் இப்படி நினைப்புக்கெட்டாத காலம் முதல் உருவாகி வந்தவை. ஜோசப் கேம்பல் என்னும் அறிஞர் உலகம் முழுக்க உள்ள தெய்வ உருவங்களை தொகுத்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை விரிவாக ஆராய்ந்துள்ளார். நம் தெய்வ உருவங்களின் தோற்றத்தைப் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளரான ஆனந்த குமாரசாமி ஏராளமான நூல்களாக எழுதியிருக்கிறார்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். கற்காலத்தை சேர்ந்த பழங்குடிகளின் வழிபாட்டுச் சின்னங்களில் இரண்டு மான்களை வேட்டையாடி கையிலேந்தி நின்றிருக்கும் ஒரு வேடனின் உருவம் காணப்படுகிறது. Master of Animals என அதை ஆய்வாளர் சொல்கிறார்கள். எல்லா தொல்குடிப் பண்பாடுகளிலும் அந்த வடிவம் ஏதோ ஒருவகையில் உள்ளது. மெசபடோமியா, எகிப்து பண்பாடுகளில் உள்ளது.
அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பசித்தால் உணவுடன் தோன்றும் தந்தை அல்லது தெய்வம் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். அவ்வடிவங்கள் இந்தியாவிலுள்ள கற்காலச் சின்னங்களில் உள்ளன. மகாராஷ்டிரத்தில் ரத்னகிரி அருகே உள்ள குடாப்பி என்னும் ஊரில் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கற்காலத்தில் வரையப்பட்ட பாறைச்செதுக்கு ஓவியங்கள் உள்ளன.
அன்று உலோகம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே மென்மையான பாறையில் கடினமான கல்லால் அடித்து அடித்து பள்ளமாக ஆக்கி அவற்றைச் செதுக்கியிருக்கிறார்கள். 2002ல் சதீஷ் லலித் என்பவர் அவற்றை கண்டுபிடித்து பதிவுசெய்தார். 2019ல் நான் நண்பர்களுடன் சென்று அவற்றைப் பார்த்தேன். அந்த பாறைச்செதுக்கு ஓவியங்களில் மானை பிடித்திருக்கும் வேட்டைக்காரன் போன்ற வடிவம் உள்ளது.
நமக்கு கிடைக்கும் மிகத்தொன்மையான சிவலிங்கம் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகே உள்ள குடிமல்லம் என்னும் இடத்தில் உள்ளது. அந்த சிவலிங்கத்தின் மேலேயே ஒரு வேட்டைக்காரனின் சிற்பம் புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. அவன் ஒரு மானை வேட்டையாடி அதை தலைகீழாக தூக்கிக்கொண்டிருக்கிறான்.
அந்த வேட்டைக்காரன் உருவம் சிவன் உருவமாக பின்னர் மாறியதை நாம் பழைய சிற்பங்களில் காணலாம். அந்த மான் சிவன் அருகே துள்ளி நின்றிருப்பதாக காலப்போக்கில் மாறியது. சிவன் வேடன் என்றே வழிபடப்படுகிறார். சிவனின் வடிவங்களில் அவர் வேடனாக வரும் பிட்சாடனர், கிராத மூர்த்தி போன்ற உருவங்கள் முக்கியமானவை.
எண்ணிப்பாருங்கள், எவ்வளவு தொன்மை! எங்கிருந்து இந்த தெய்வ வடிவம் வந்துள்ளது! மிகமிகமிகப் பழங்காலத்தில், பேச மொழியே இல்லாத மக்களுக்கு, உலகம் முழுக்க இந்த தோற்றம் வந்து சேர்ந்திருக்கிறது. ஓர் ஆன்மிகவாதி அந்த தோற்றம் மானுட இனத்துக்கே ஏதோ சக்தியால் அருளப்பட்டுள்ளது என்றுதான் நினைப்பான்.
ஏதோ ஒரு சிற்பி கற்பனையில் உருவாக்கியவை அல்ல இந்த வடிவங்கள். மனித உள்ளத்தில் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தவை. மனித பண்பாடு உருவானபோதே அவையும் உருவாகி விட்டன. மனித பண்பாடு வேறு அவை வேறு அல்ல. இயற்கைமதங்கள் அழிந்தால் இந்தத் தொடர்ச்சி அழியும். அது ஒட்டுமொத்த மானுட இனத்துக்கே பேரிழப்பு.
அந்தத் தொடர்ச்சி அறிவார்ந்தது அல்ல. உணர்வுரீதியானது. அந்த தொடர்ச்சியை நாம் படித்து, ஆராய்ந்து அறியமுடியாது. வழிவழியாக நமக்குள் வரவேண்டும். அதுதான் ஆன்மிகத்தொடர்ச்சி எனப்படுகிறது. இப்போது எகிப்திய மதம் இல்லை. அதன் சிற்பங்களும் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. ஏராளமான ஆய்வுகளும் நடைபெறுகின்றன. ஆனால் அந்த மதத்தின் உணர்வுகள் இன்றில்லை. அதன் ஆன்மிகம் இன்றில்லை.
இந்து மரபின் ஆன்மிகம் இன்றும் தொடர்கிறது. குடிமல்லம் சிவனை நாம் இன்றும் வழிபடுகிறோம். பித்தன், சுடலைப்பொடிபூசியவன் என்று இன்றும் சிவனைச் சொல்கிறோம். இந்த தொடர்ச்சியால்தான் இந்துமரபு என்பது மாபெரும் பண்பாட்டுக் களஞ்சியம் என்று சொல்லப்படுகிறது. மனிதகுலத்துக்கே அது பெரும் செல்வம்.
மனித ஞானம், மனிதனின் ஆன்மிகம் ஆகியவை அறுபடாமல் நீண்டுவரும் ஒற்றைப் பெருக்கு என இன்றைய அறிஞர்கள் சொல்கிறார்கள். அதைக் கொஞ்சமேனும் உணர்ந்த ஒருவர் என்ன சொல்வார்? ‘எத்தனையோ மதங்கள் அறியாமையால் அழிந்துவிட்டன, இந்துமதமாவது வாழவேண்டும்’ என்றே சொல்வார்.