இசையறிவு

 

இசையின் ஆசாரவாதம்

டி.எம்.கிருஷ்ணா, இசை விவாதம்

அன்புள்ள ஜெ

இசை பற்றிய உங்களுடைய கட்டுரைகளை அல்லது கடிதங்களை வாசித்து கொண்டிருந்தேன். நிறையவே எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக 2008-14 வாக்கில் தமிழிசை பற்றி பல கருத்துவிவாதங்கள் நடந்துள்ளன. அண்மையிலும் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் இங்கே இசைக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினைதான் என்ன?

ஆர்.சுரேஷ்

 

அன்புள்ள சுரேஷ்

அண்மையில் மேஜைமேல் அஜி விட்டுச்சென்ற நூலை புரட்டிப்பார்த்தேன். The Oxford Companion to Music என்ற மாபெரும் நூல். அவனுக்கு திருமணப் பரிசாகவந்தது (போகன் சங்கர் கொடுத்தது என ஞாபகம்)

அதை ஓரிரு மணிநேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். என் இசையறிவென்பது குறைவு. மேலையிசையில் அறிமுகமே இல்லை. ஆகவே அதை ஒரு புனைவுபோலத்தான் வாசித்தேன்.

அது ஒரு கலைக்களஞ்சியம். எந்தக் கலைக்களஞ்சியமும் ஒரு துறையில் நிகழ்ந்த அறிவியக்கத்தின் பதிவு. எவ்வளவு பிரம்மாண்டமான அறிவியக்கமாக மேலையிசை இருக்கிறது. ஒரு கவின்கலை இப்படி ஓர் அறிவியக்கமாக எப்படி ஆகியது?

ஏனென்றால் அதை வரலாற்றுடன் இணைத்துப் பார்த்தனர். தத்துவத்துடன் இணைத்தனர். பிற கலைகளுடன் உரையாடச்செய்தனர். அதன் தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக வரையறை செய்தனர். அனைத்துக்கும் மேலாக உலகிலுள்ள பிற இசைமரபுகளுடன் இணைத்துக்கொண்டும் இருந்தனர். அப்படி ஒரு முந்நூறாண்டு அறிவுச்செயல்பாடு அதில் நிகழ்ந்திருக்கிறது.

அந்த அறிவுச்செயல்பாடு பெரும்பாலும் இல்லை என்பதே இந்திய இசையின், குறிப்பாக கர்நாடக சங்கீதத்தின் சிக்க்கல். இங்கே இசை என்பது பெரும்பாலும் ஒருவரிடமிருந்து கற்றுக்கொண்டு அதே போல திரும்பப் பாடுவது. பாட்டு படித்த கொஞ்சபேர் கேட்பது அவ்வளவுதான். அதை வரலாற்றுணர்வுடன் அணுகுவதில்லை. அதன் மேல் தத்துவப்பார்வை இல்லை. ஒருவகையான தேங்கிப்போன ஆசாரவாதம். அதை தூய்மைவாதமாக பாவலா செய்துகொள்வது, அவ்வளவுதான்.

கர்நாடக இசை பற்றி எழுதப்பட்ட சில வரலாறுகளை படித்திருக்கிறேன். மூளைசிறுத்தவர்களால் மட்டுமே எழுதத்தக்கவையாக அவை இருந்தன. அறிவுத்தேக்கம் எந்தக் கலையிலும் மெல்ல மெல்ல படைப்பூக்க வரட்சியாக ஆகிவிடும்

மேலையிசையில் நிகழ்ந்த அந்த மகத்தான அறிவுச்செயல்பாடே ழீன் கிறிஸ்டோப் போன்ற ஒரு செவ்வியல் படைப்பு இசை சார்ந்து உருவாகக் காரணம். இந்தியச் சூழலில் இசை சார்ந்த ஒரு நாவல் இன்னும் எழுதப்படவில்லை. இங்கே எழுதப்பட்ட எல்லா நாவல்களும் இசையை ஒருவகை தனிப்பட்ட நெகிழ்வனுபவமாக மட்டுமே எடுத்துக்கொண்டு எழுதப்பட்டவை. தமிழைப் பொறுத்தவரை இசை என்பது ஒருவகை வெங்காயம், தொட்டதுமே கண்ணீர் கொட்டும் என்றவகையிலேயே எழுதப்பட்டுள்ளது.

 

ஜெ

முந்தைய கட்டுரைஅமிர்த கங்கை
அடுத்த கட்டுரைகுருகுலக்கல்வியின் அவசியமென்ன?