அளிப்பதே கொள்வது

மூளையை சாட்டையாலடியுங்கள்!

அன்புள்ள ஜெ

நேரடியாகவே இதைக் கேட்கிறேன். ஒருவர் கற்கவேண்டும் என விரும்புகிறார். அதற்காக மனம், நேரம் அளிக்க விரும்புகிறார். ஆனால் அவர் ஏன் அதை கஷ்டமாக ஆக்கிக் கொள்ளவேண்டும்? ஏன் கடுமையான முறையில் பயிலவேண்டும்? வசதியாக அதை அமைத்துக் கொண்டால் மேலும் நிறைய கற்கலாமே? ப்ழைய காலத்தில் சங்கீதம் கற்க ஆசிரியரின் துணியெல்லாம் தோய்த்து கொடுத்தார்கள். இன்றைக்கு ஸூமிலேயே கற்க முடிகிறது. இதுதான் வசதி. என்னுடைய ஒரு சந்தேகம்தான் இது.

கிருஷ்ணராஜ்

கிளம்புக!
மூளையின் தளைகள்

அன்புள்ள கிருஷ்ணராஜ்,

இன்றைய சூழலில் எழும் வழக்கமான கேள்விதான் இது. ஏனென்றால் நவீனக் கல்விமுறை இந்த மனநிலையை உருவாக்குகிறது. இந்தக் கல்வியின் குறைபாடுகள், எல்லைகளை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

சௌகரியமான கல்வியை அளிக்கும் நம் நவீனக் கல்விமுறையில் குரு இல்லை. பயிற்றுநர்களே உள்ளனர். பள்ளியிலும் கல்லூரியிலும் உள்ள ஊழிய ஓர் ஆளுமை அல்ல, ஒரு பதவி மட்டுமே. அந்த முறை  ‘தகவல்களை தெரிந்துகொள்ளும்’ கல்விக்கே பொருந்தும். சிந்தனை சார்ந்த கல்விக்கு பொருந்தாது.  எளிய அடிப்படை நிலைக் கல்விக்குரிய மனநிலை இது என்றும் சொல்லலாம்.

அமெரிக்கப் பற்கலைகளில் சட்டம், பொருளியல், இலக்கியம், சமூகவியல் போன்ற கல்வி எப்படி நிகழ்கிறதென கவனித்துள்ளேன். அதிலுள்ள கடுமையான பயிற்றுமுறைகள் இங்கே அறிமுகமாகக்கூட இல்லை. சட்டம் படிக்கும் என் நண்பரின் மகள் ஆப்ரிக்காவில் ஓராண்டு தங்கி பணியாற்றவேண்டியிருந்தது. இலக்கியம் பயிலும் என் நண்பரின் மகன் இப்போது நிகராகுவாவில் ஓராண்டு தங்கியிருக்கிறார்.

அவர்கள் நேரில் ஆய்வு செய்யவேண்டும். அந்த ஆய்வுகளை நூலாகவே எழுதவேண்டும். அவ்வாறு நண்பர் சிவா சக்திவேலின் மகள் முதுகலைப் படிப்பின் பொருட்டு ஈராண்டுகள் ஆப்ரிக்காவில் வாழ்ந்து, ஆய்வுசெய்து எழுதி கல்லூரி வெளியிட்ட நூல் ஒன்றை பார்த்தேன். மெய்யாகவே ஒரு நல்ல புத்தகம் அது.

இங்கும்கூட ஆய்வுமாணவர்களில் எவருக்கு மெய்யான ஆசிரியர் அமைந்து, அவருடன் உடனுறைந்து பயில்கிறார்களோ அவர்களே அறிஞர்கள் ஆகிறார்கள். வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் போன்றவர்களின் இல்லங்களில் மாணவர்கள் நிறைந்திருப்பதை கண்டதுண்டு. ஓய்வுபெற்று இருபதாண்டுகள் கழித்து 80 வயதான தன் ஆசிரியர் ஜேசுதாசனுக்கு 60 வயதான வேதசகாயகுமார் பணிவிடைகள் செய்வதையும் கண்டதுண்டு. சூமில் மட்டுமே கற்கலாம் என்பது மெய்யான கல்வியை அறியாதவர்களின் ஒரு மாயை, வேறொன்றுமில்லை.

தீவிரமான கல்வி என்பது என்ன தெரிந்துகொள்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நீங்கள் அதைக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் அதன்பொருட்டு உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியையாவது அளித்தாகவேண்டும்.

ஓர் ஆசிரியர் என்ன கற்பிக்கிறார் என்பதைக் கொண்டு நீங்கள் என்ன கற்கிறீர்கள் என்பது வரையறுக்கப்படுவதில்லை. கல்விக்கு நீங்கள் எவ்வளவு அளிக்கிறீர்கள் என்பதைக் கொண்டே நீங்கள் என்ன கற்கிறீர்கள் என்பது முடிவாகிறது. நீங்கள் எதை அளிக்கிறீர்களோ அதற்கு சமானமானது மட்டுமே உங்களுக்குள் நுழையும். பெருந்தியாகங்களை அளிப்பவர்கள் அடைவனவும் அதேபோலப் பெரியவை.

ஆகவே கஷ்டப்படாமல் கற்பவர்கள் எதையுமே அடைவதில்லை. அவர்கள் ‘தெரிந்துகொள்கிறார்கள்’. தெரிந்துகொள்ளப்படுபவை உடனடியாக மறக்கவும் படும். அந்த வகையான கல்வி என்பது மாபெரும் நேரவிரயம், வாழ்க்கைவிரயம்.

நீங்கள் ஒரு காலிப்பாத்திரம், ஆசிரியர் அதில் கல்வியை கொட்டி நிரப்புகிறார் என உருவகிக்க வேண்டாம். ஆசிரியர்  ஒரு பயணத்தில் இருக்கிறார். நீங்கள் அவருடன் செல்கிறீர்கள். ஆசிரியரின் பயணம் அவருடைய கல்விதான், நீங்கள் செல்வதே உங்கள் கல்வி. ஆசிரியரை அணுகியறிதல், அவருடன் செல்லுதல் வழியாக நீங்கள் செல்லக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவையே கல்வி எனப்படும்.

நான் அறிவேன், சொகுசாகக் கற்க விழைபவர்கள் உண்டு என. அவர்கள் நிறைய தெரிந்துகொண்டதாகவும் நினைக்கிறார்கள். அவர்களை நான் கவர முயலவில்லை. அவர்களுக்கு இந்த கல்விமுறை சரிவராது என்று மட்டுமே சொல்கிறேன். அவர்களின் வழிமுறை வேறு. இது இன்னொரு வகை கல்விமுறை. இதை உணர்ந்து, இதில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் உரியது.

ஜெ

முந்தைய கட்டுரைபெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி
அடுத்த கட்டுரைThe Young Advaida