நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த, குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ”ஹாய்!”என்றாள்.
”என்னைத்தெரியுமா?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு.
”சொல்லுங்க” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர், ”இவருதான் எழுத்தாளர் ஜெயமோகன். சொல்வேனில்ல?”என்றார்.அவள் கண்களை விரித்து ”அப்டியா? ஸாரி, நான் கதைகள் படிக்கிறதில்லை” என்றாள்
”என்ன படிப்பே?”என்றேன்.
”எனக்கு சூழலியல் தான் பிடிச்ச விஷயம். அதிலேதான் மேலே படிக்கணும்னு இருக்கேன். பறவைகளிலே தனி ஈடுபாடு உண்டு…”
சூழலியல் என்ற சொல்லை அவளிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. ”தமிழ்லே யாரோட எழுத்து படிப்பே?”
”தமிழ்லே தியடோர் பாஸ்கரன் மட்டும்தானே தொடர்ந்து எழுதறார்?”
சரிதான், அவரிடமிருந்து கிடைத்த சொல். ஒரு மொழியில் உண்மையான சிந்தனைகள் உருவாகவேண்டுமென்றால் அதற்கான கலைச்சொற்கள் உருவாக வேண்டுமென்று நம்புகிறவர் அவர். ”தியடோர் பாஸ்கரன் ரொம்ப கஷ்டப்பட்டு கலைச்சொற்களை உண்டு பண்ற மாதிரி இருக்கில்ல?”என்றேன், வேண்டுமென்றே
”அவர் எங்கியோ சொல்லியிருக்கார், ஒரு கலைச்சொல்லுங்கிறது ஒரு சமூகம் ஒருவிஷயத்தைப்பத்தி அடைஞ்ச ஞானத்தை சுருக்கி திரட்டி வச்சிருக்கிற புள்ளின்னு. ஒரு விதை மாதிரி அது. அதை நட்டு தண்ணி ஊத்தினா முளைச்சிரும். சூழலியல்ங்கிறது எக்காலஜிங்கிற சொல்லுக்கு தமிழாக்கம். ஆனா அதுக்கு தமிழிலே வேற ஆழமான பொருளும் இருக்கு. சூழ்ந்திருக்கிற எல்லாத்தப்பத்தியும் அறியற துறைன்னு சொல்லலாம்.”
”மரம் செடி கொடீன்னு பேச ஆரம்பிச்சா அறுத்துத் தள்ளிருவா” என்றார் நண்பர்.
”எனக்கும் சூழலியலிலே ஆர்வம் உண்டு” என்றேன்
”நிஜம்மாவா?”
”ரொம்ப இல்லை, கொஞ்சமா” என்றேன். ”என்னைப்பொறுத்தவரை இயற்கைங்கிறது மனசோட வெளித்தோற்றம். அப்டித்தான் சங்ககாலம் முதல் சொல்லியிருக்காங்க…”
”அது அத்வைதமில்ல?”
”விஞ்ஞானவாத புத்தம், அத்வைதம் எல்லாம் அதித்தன் சொல்றது. எல்லாமே பழைய தமிழ் ஞானத்தோட வளர்ச்சிப்படிகள்தான்…”
”நீங்க பேசிட்டிருங்க, ஒரு நிமிஷம்”என்று நண்பர் எழுந்துசென்றார்.
நான் எட்டிப்பார்த்தேன். ”என்ன?” என்றாள் அவள்.
”நீ யார் கூட வந்தே?”
”தனியாத்தான்…ஏன்?” என்றதுமே புரிந்துகொண்டு ”பைக்கைச் சொல்றீங்களா? அதான் எனக்கு வசதி…” என்றாள்.
”மொரட்டு வண்டிமாதிரி சத்தம் கேட்டது”
”ஆமா, அதுக்கென்ன? நானே தனியா வயநாட்டுக்கும் டாப்ஸ்லிப்புக்குமெல்லாம் போறேனே அப்றமென்ன?”
”சுதந்திரமான பொண்ணா உணருறதுக்கு அது உதவியா இருக்கோ?”
”ஆமான்னு வைச்சுக்கிடுங்க..”
”இந்த டிரெஸ்…”
”அதுவும்தான். ஜீன்ஸ்தான் எனக்குப்பிடிச்ச டிரெஸ். எப்டிவேணுமானாலும் இருக்கலாம். ஆனா மேலே முரட்டுத்தனமா ஒண்ணும் போட்டுக்க மாட்டேன்… ஐ லைக் மை பூப்ஸ். பெண்ணுக்கு மார்புகள்தான் அதனி அழகு இல்லியா? மார்புகளோட வடிவம் தனியா தெரியணும்னு தோணும்…”
என் வளர்ப்பில் அப்படிப்பட்ட பேச்சுக்கு இடமில்லை. ஆனால் அவள் கண்களில் முகத்தில் எந்தவிதமான தயக்கமும் கூச்சமும் இல்லை. நான் அருகே இருந்த புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். பறவைகள். ”க.ரத்னம் தமிழ்நாட்டுப் பறவைகளைப்பத்தி எழுதின புஸ்தகத்தைப் படிச்சிருக்கியா?”
”நல்ல புத்தகம். ஆனா அதுமாதிரி நிறைய வேணும். இயற்கையைப்பத்தி ஒரு மொழியில என்ன இருக்குங்கிறது ரொம்ப முக்கியம். நம்ம பறவைகளைப்பத்தி வெளிநாட்டுக்காரங்க முழுமையா எழுதிர முடியாது… பறவைங்கிறது ஒரு பண்பாட்டுப்பொருளும்கூட, இல்லியா? ”
”அப்ப உன்னோட எதிர்காலம் இதிலேதான்…”
”கண்டிப்பா. நான் பிளஸ்டூ முடிக்கிறதுக்குள்ள அப்பாகிட்டே சொல்லிட்டேன். ஐ ஹேவ் மை ஓன் டிரீம்ஸ்”
நான் உள்ளுக்குள் புன்னகைசெய்தபடி ”கல்யாணம் குடும்பம் எல்லாத்தைப்பத்தியும்…?” என்றேன்
”ஆமா. வை நாட்? எனக்கு ஒரு துறையில ஆர்வம் இருக்குன்னா தோட ஒத்துப்போற ஆள்தானே வேணும்?” அவள் கண்களையே பார்த்தேன்.துல்லியமான கரிய பளிங்குகள்.
”சரிதான்..”என்றேன் ‘அப்டி யாராவது கண்ணுக்கு படறானா?”
”சேச்சே. இப்ப அப்டில்லாம் இல்லை. இப்ப எல்லாரும் ஜஸ்ட் ·ப்ரண்ட்ஸ் மட்டும்தான்… அதெல்லாம் அப்றம். உங்க கதைகளிலே சூழலியல் வருமா?”
”மனசோட வடிவமா வரும். அதாவது எதெல்லாம் அந்த கதைச் சந்தர்ப்பத்திலே உள்ள மனஓட்டத்தைக் காட்டுதோ அதுமட்டும் வரும்..”
”எனக்கு நேர்மாறா இயற்கைதான் மனசுன்னு தோணுது…”என்றாள் அவள் .”இதுவரை மனித இனம் தன்னைப்பத்தியே நினைச்சிட்டிருந்தது. இப்பதான் தன்னை இயற்கையோட ஒரு துளியா பார்க்க ஆரம்பிச்சிருக்கு. சூழலியல்தான் இனிவரக்கூடிய எல்லா அறிவியலுக்கும் தாய். இனிமே நோபல்பரிசுகள் எல்லாமே சூழலியல் அறிஞர்களுக்குத்தான்…”
நான் சற்று முன்னகர்ந்து புன்னகையுடன் ” என்ன, நோபல் பரிசு வாங்குற உத்தேசம் இருக்கா?”என்றேன்.
அவள் வெட்கச்சிரிப்புடன் மேலுதட்டை இழுத்துக் கடித்தபடி உடலை நெளித்து பார்வையை சன்னல் நோக்கித்திருப்பிக் கொண்டாள். முகமும் கழுத்தும்கூட சிவந்து கன்றியவை போலிருந்தன.
நண்பர் வந்து அமர்ந்து ”ஸாரி”என்றார்
”உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா… நான் சொன்னேன்ல வெக்கப்படுறப்பதான் பெண் அழகா இருக்கா”
”வெக்கமா, இவளா?”
”ஆனா எப்ப எப்டி வெக்கபடணும்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு” என்றேன். அவள் திரும்பிப் பார்த்து சிரித்தபடி புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்ல முற்பட நான் ”சிடி”என்றேன். சிரித்தபடி வந்து எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் பேரழகி.
[ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்] [மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Jun 28, 2004]