மூளையை சாட்டையாலடியுங்கள்!

அன்புள்ள ஜெ,

அண்மையில் உங்கள் உரையில் ’நமக்கு கடுமையாக உள்ள, நாம் மிக முயன்று செய்கிற ஒரு பணியை நாளில் ஒரு மணிநேரமாவது செய்யவேண்டும்’ என்னும் கருத்தை முன்வைத்திருந்தீர்கள். பிடித்த வேலையைச் செய்வதுதானே வழக்கமாக அனைவரும் சொல்லும் வழி? நீங்கள் சொல்வது சற்று விந்தையாக உள்ளது. அதன் தேவை என்ன? என் குழப்பத்தையே இதன் வழியாகக் கேட்க விரும்புகிறேன்.

(நான் என் பிரச்சினைகளை முன்னரே உங்களுக்கு எழுதியிருக்கிறேன். நான் ஆன்லைன் வகுப்பு பற்றி கேட்டபோது நீங்கள் கடுமையாக பதில் சொன்னீர்கள்.)

எம்

அன்புள்ள எம்,

நான் கடுமைகொள்ளும் சில இடங்கள் உண்டு. சிலர் தங்களுக்கு வசதியான ஒரு நிலைபாட்டை, ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு அதை ஒரு திரைபோல போட்டுக்கொண்டுவிடுவார்கள். ஒரு கேடயமாக அதை பயன்படுத்துவார்கள். அவர்களிடம் சொல்லப்படும் எந்த புதிய கருத்தையும் அதைக்கொண்டு தடுத்துவிடுவார்கள். ஆனால் அதை ‘கருத்துவிவாதம்’ என்று பாவனை செய்வார்கள்.

அவர்களிடம் விவாதிப்பதில் பொருளே இல்லை. ஏனென்றால் விவாதிப்பதென்பதே அவர்களின் அந்த திரையை அவர்கள் மேலும் தர்க்கபூர்வமாக ஆக்கிக்கொள்வதாக முடியும். அந்த திரையை கொஞ்சம் மூர்க்கமாகக் கிழித்து அவர்கள் இருக்கும் நிலையை அவர்களுக்குக் காட்ட முயல்கிறேன். அவர்கள் அதை புண்படுத்தலாக எடுத்துக்கொண்டார்கள் என்றால் எனக்கொன்றுமில்லை. அவர்கள் தங்களை கொஞ்சம் பார்க்கமுடிந்தால் அவர்களுக்கு நல்லது. புண்பட்டார்கள் என்றால் அவர்கள் விலகிச்செல்வார்கள். அதுவும் நன்று, அவர்களிடம் மேற்கொண்டு நான் எதையும் சொல்லவோ செய்யவோ முடியாது.

அண்மையில் என் நண்பர் ஒருவருக்கு பக்கவாதம் வந்தது. அவர் இதழாளர், இலக்கியச் சிந்தனையாளர். சிகிழ்ச்சை முடிந்ததும் அவருக்கு கடுமையான மறதிச்சிக்கல் வந்தது. அவர் இந்தியாவில் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டபின் அமெரிக்கா சென்று மருத்துவம் தொடர்ந்தார். அங்கே மருத்துவர்கள் அவர் தன் மூளைக்குக் கடுமையான வேலையை அளிக்கவேண்டும் என்றார்கள். அவர் கணிப்பொறி நிரல் எழுத கற்றுக்கொண்டார். கற்பித்த பயிற்றுநரிடம் அவர் சொன்னார், ’நான் வேலைசெய்வதற்காக இதை கற்கவில்லை. எனக்கு கணக்கே பிடிக்காது. என் மூளையை உசுப்புவதற்காக இதைச் செய்கிறேன்’. அத்துடன் மலையாள அகராதியிலுள்ள சொற்களைப் பற்றிய ஒப்பீட்டாய்வையும் செய்தார். கூடவே தனக்கு உகந்த இலக்கியவாசிப்பு, இசைகேட்டல். மிக விரைவிலேயே பழைய கூர்மைக்கு மீண்டுவிட்டார்.

நாம் ஒவ்வொருவரும் ‘வசதியான’ வாழ்க்கையை நோக்கி நம்மை செலுத்திக்கொண்டிருக்கிறோம். நாற்பது வயதுவரை அதன்பொருட்டான போராட்டம் பலருக்கு உள்ளது. (சிலருக்கு அதுவும் இல்லை. பெண்கள் பலருக்கு அப்போராட்டமே வாழ்வில் நிகழ்வதில்லை). ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் பொருந்தி விடுகிறோம். எல்லாம் நமக்குரியவகையில் அமைந்துவிடுகிறது. அதன்பின் சவால்கள், போராட்டங்கள் இருப்பதில்லை. கவலைகள், பதற்றங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. அவற்றில் பல நம் கற்பனைகள்.

இன்று நாம் அடைந்துவரும் பொருளியல் வளர்ச்சியால் நடுத்தர வர்க்கத்தினர் பலரின் வாழ்க்கை இந்த நிலைக்கு எளிதில் வந்துவிடுகிறது. உடலும் உள்ளமும் எந்த பெரிய செயலையும் செய்யாமல் இருக்கும் வாழ்க்கை அமைகிறது. அந்த ஓய்வுநிலை போல ஒருவரை நோயுறச் செய்வது பிறிதொன்றில்லை. ஓர் இயந்திரத்தை ஓடாமல் ஆண்டுக்கணக்கில் வைத்திருப்பது போன்றது இது.

அண்மைக்காலமாக மருத்துவர்கள் உடல்சார்ந்த செயலின்மையை கடுமையாக கண்டித்து உடற்பயிற்சிகளை வலியுறுத்துகிறார்கள். விளைவாக ஆங்காங்கே சிலர் காலைவேளையில் நடைபயணம் செய்வதை, உடற்பயிற்சி செய்வதை காணமுடிகிறது. ஆனால் மருத்துவ நண்பர்கள் சொல்வதைக்கொண்டு பார்த்தால் ஆலோசனை பெறுபவர்களில் 10 சதவீதம் பேர் கூட தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதில்லை. கொஞ்சநாள் செய்துவிட்டு நிறுத்திவிடுவார்கள்.

காரணம், அந்த உடல்செயலின்மை என்பது ஓர் உடல்சார் நிலை அல்ல. அது உள்ளம்சார்ந்த நிலை. உள்ளத்தில் ஊக்கமில்லாமல் ஒருவர் உடலை ஊக்கமாக வைத்துக் கொள்ளமுடியாது. உள்ளத்தை ஊக்கமாக வைத்துக்கொண்டால் இயல்பாக உடலும் ஊக்கம் அடைந்துவிடும். உள்ளத்தை ஊக்கமாக வைத்துக்கொள்ள அதற்குரிய பயிற்சி அவசியம். அதையே நான் சொன்னேன்.

சென்ற சிலகாலம் முன்புவரை மருத்துவர்கள்  ‘டென்ஷன் ஆகாதீங்க, அமைதியா இருங்க, எதிலயும் அதிகம் தலையிடாதீங்க’ என்றெல்லாம் அறிவுரை சொன்னார்கள். ‘மன அமைதி’க்காக அதைச் சொன்னார்கள். அவர்கள் படித்த பாடத்தின்படி மன அமைதி உடல்நலத்திற்கு அவசியமானது. ஆனால் அவர்கள் சொல்லும்படிச் செய்தால் மனம் சோம்பலையே அடையும். சோம்பலான மனமே சோர்வு அடையும். சோர்விலிருந்து அமைதியின்மை உருவாகும். ‘ஓய்வு’ பெற்ற பிறகுதான் பலர் கொந்தளிப்பானவர்களாக ஆகி தங்களையும் வருத்தி பிறரையும் வருத்துகிறார்கள்.

இன்று, எதிலும் பெரிதாக ஈடுபடாமல், மிகக்குறைவான மனச்செயல்பாடு, மூளைச்செயல்பாடு, உடற்செயல்பாடுகளுடன் வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை என பலர் எண்ணுகிறார்கள். மிகச்சரியான ஒரு அன்றாடநெறியை கடைப்பிடித்தாலே போதும் என கருதுகிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் உடல்நிலை பற்றிச் சொல்லும்போது ‘ரொட்டீன்’ பற்றிச் சொல்வதைக் காணலாம். வேளாவேளைக்கு தூக்கம், சாப்பாடு  என ஆரம்பித்து விளக்குவார்கள். அது ஒரு சோம்பலான வாழ்க்கையின் சித்திரம், உண்மையில் நோயின் விளைநிலம் அதுவே.

அந்த மனநிலை நமது பழைய நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து வந்த ஒன்று. ஏழைகள் உடலாலும் உள்ளத்தாலும் கடுமையாக உழைக்கவேண்டும். செல்வந்தர்கள் எதையும் செய்யாமல் இன்பங்களை துய்த்தபடி சோம்பி வாழவேண்டும் என அன்று நம்பப்பட்டது. ஆகவே சோம்பல் என்பது உயர்குடி வாழ்வு என நினைத்தனர். இன்று நடுத்தரவர்க்கத்தவர் அந்த வாழ்க்கையை வாழமுடிகிறது. ஆகவே அவர்கள் உயர்குடிபோல கற்பனைசெய்துகொண்டு சோம்பி வாழ்கிறார்கள்.

உடற்பயிற்சி செய்பவர்கள் ஏன் தொடர்வதில்லை என்று நான் என் மருத்துவ நண்பரிடம் கேட்டேன். “அவர்களுக்கு ஏதேனும் சிறு உடல் உபாதைகள் இருக்கும். அந்த நோயை சுட்டிக்காட்டி உடற்பயிற்சியை தவிர்ப்பார்கள். அந்த நோய் உடற்பயிற்சி இல்லாமையால் வந்ததாக இருக்கும். அது ஒரு விஷச்சூழல். பெரும்பாலானவர்கள் அதற்குள்தான் இருக்கிறார்கள்” என்றார்.

“அதை அவர்களிடம் சொல்லி விளங்கச் செய்ய முடியாதா?” என்று நான் கேட்டேன்

“மிகமிக கடினம். ஏனென்றால் அவர்களுக்கு தேவை உளப்பயிற்சி. உடலையும் உள்ளத்தையும் நலுங்காமல் வைத்திருப்பதற்கான எல்லா சாக்குபோக்குகளையும் அவர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அதை உடைப்பது கடினம். அது மருத்துவரின் வேலை அல்ல” என்றார். “எந்த உடல்நிலைக்குறைவு இருந்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சிகள் உண்டு. அதைச்செய்தால் அந்த உடல்நிலைக்குறைவும் சீராகிவிடும். முதுகுவலி, மூட்டுவலி உட்பட அனைத்துக்கும் உடற்பயிற்சியே தீர்வு. ஆனால் செய்ய மாட்டார்கள். அந்த நோய்க்கு மருத்துவம் செய்யத்தான் முயல்வார்கள்” என்றார்

சோம்பலான வாழ்க்கைமுறை கொண்டவர்களின் உள்ளம் ஒரு பெரிய வெற்றிடத்தில் உள்ளது. அந்த வெற்றிடத்தை அவர்கள் நோய் பற்றிய கவலைகளால் நிரப்பிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் நோயைப்பற்றிப் பேச விரும்புகிறார்கள். நோயில் திளைக்கிறார்கள். அவர்களின் அகப்பொழுதை முழுக்க நோய் பற்றிய சிந்தனைகளே நடத்துகின்றன. அவர்கள் மருத்துவம் பற்றிப் பேசுவதே நோய் பற்றிப் பேசுவதற்காகத்தான்.

இத்தனை நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உள்ளம் கொண்டிருக்கும் சோம்பல்தான். அதை நீக்கும்பொருட்டே உள்ளத்துக்கான பயிற்சி என்னும் வகையில் கடுமையான மூளையுழைப்பை ஒரு நெறியாகச் சொல்கிறேன். அது நான் சொல்வது அல்ல. உலகமெங்கும் இன்று பரிந்துரைக்கப்படும் ஒரு வழிமுறைதான். நவீன காலகட்டத்தில் சண்டிமாடு போல நடுத்தெருவில் படுத்துவிட்டிருக்கிறது நம் மூளை. அதைச் சாட்டையாலடித்து எழுப்புவது பற்றியே பேசுகிறேன்.

( 2)

நாம் விரும்பும் ஓர் அன்றாடம் உண்டு. மனதுக்குப் பிடித்த இடம். மகிழ்விக்கும் உணவு. நல்ல இசை. ஓய்வாகச் செய்யப்படும் இனிய  செயல்பாடுகள். சிறுகுழந்தைகள் மூன்றுவேளையும் சாக்லேட் மட்டுமே தின்று வாழவேண்டும் என கனவுகாண்பதைப் போலத்தான் இதுவும். இப்படி ஒரு வாழ்க்கை சிலநாட்கள் இளைப்பாறுதலுக்கு உதவும். இப்படி ஒருவர் வாழ்ந்தால் ஓரிரு ஆண்டுகளில் நோயாளி ஆகிவிடுவார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நலிவடையத் தொடங்கியபோது ஏராளமான ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் சில ஆண்டுகளுக்குள் நோயுற்றனர். குறிப்பாகப் பெண்கள். அதைப்பற்றி தொழிற்சங்கம் சார்ந்த ஆய்வுகள் கேரளச்சூழலில் நிகழ்ந்தன. அதன் கண்டடைதல்களை விருப்ப ஓய்வு பெற விரும்புபவர்களிடம்  ஆலோசனையாகவே சொல்ல ஆரம்பித்தனர். ’ஓய்வெடுக்காதீர்கள், சுறுசுறுப்பாக இருங்கள், எதையாவது செய்யுங்கள்’ என்று. ஓய்வுபெற்றபின் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்காக கேரளத்தில் என் நண்பர்கள் ஓர் அமைப்பை உருவாக்கினர். நான் அதை தொடங்கி வைத்தேன்.

என்ன நிகழ்கிறது என்று சொல்கிறேன். நாம் இளமையில் இருந்தே தேவையின் பொருட்டு மட்டுமே உடலுக்கும் உள்ளத்துக்கும் வேலைகொடுக்க பழகியவர்கள். அவசியமெனில் கொஞ்சம் நடப்போம். ஒரு ஈருருளை வண்டி இருந்தால் நடக்க மாட்டோம். நாம் படிப்பது வேலைக்காக. வேறு எதற்காகவும் எதையும் தெரிந்துகொள்வதில்லை. வேலை கிடைத்தபின்  எதையும் அறிந்துகொள்வதே இல்லை. ஆகவே உடலுக்கும் உள்ளத்துக்கும் அன்றாடம் சார்ந்த தேவை இல்லாமலாகும்போது எதையுமே செய்வதில்லை. உடலை அசையாமல் வைத்துக்கொள்கிறோம். மூளையையும் அப்படியே வைத்துக் கொள்கிறோம்.

நம்முடைய இன்றைய இல்லங்கள் மேல்நாட்டுப் பாணியில் அமைந்தவை. மேல்நாட்டு வீடுகள் குளிர்நிலங்களுக்குரியவை. அங்கே ஆண்டில் பாதிநாள் வீடுகளுக்குள் வாழவேண்டும். ஆகவே ஏராளமான அறைகளும் பலவகை இருத்தல், படுத்தல் வசதிகளும் கொண்ட இல்லங்களை அமைத்துக்கொண்டார்கள். அதே வசதிகள் இங்கே இன்று நம்மிடமுள்ளன. ஆகவே நாம் வீடுகளுக்குள்ளாகவே வாழ ஆரம்பித்துவிட்டோம். பல வாரகாலம் நம் வீடுகளிலேயே வாழமுடியும். பலர் வெளியே செல்வதையே விரும்புவதில்லை. தூசி, புகை, ஓசை என குறைசொல்வார்கள். ஆனால் மேலைநாட்டில் வீடுகளில் உடற்பயிற்சிக்கூடமும் இருக்கும். நம்மிடம் அது இல்லை. நம் உடல்கள் சொகுசுக்குப் பழகிவிட்டன.

மனிதனின் உள்ளம் கேளிக்கையை நாடுவது. அதன்பொருட்டு அவன் பணம் செலவிடத் தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டுமுதல்தான். கேளிக்கை ஒரு பெருவணிகமாக ஆகியது அதன்பிறகுதான். எந்த வணிகமும் நுகர்வோரை அடிமைப்படுத்த முயலும். இன்று முதன்மையாக அடிமைப்படுத்தியிருப்பது கேளிக்கை வணிகம். சினிமா, டிவி, இப்போது இணையம். இவை நம் நேரத்தை நாமறியாமலேயே செலவிடும்படி வடிவமைக்கப்பட்டவை. நாம் இவற்றைக் கூர்ந்து கவனிக்கலாகாது, கவனித்தால் நாம் களைப்படைவோம், இவற்றைவிட்டு வெளியே செல்வோம். ஆகவே மூளையை களைப்படையச் செய்யாமல் உள்ளேயே நம்மை வைத்திருக்கும்படி இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேளிக்கை வணிகம் போட்டிபோட்டு வளருந்தோறும் நாம் ஒன்றுமே செய்யாமல் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தால் போதுமானது என்னும் அளவில் இன்றைய ஊடகங்கள் வளர்கின்றன. செய்திவிவாதங்கள் கூட மேலோட்டமாக, நினைவில் நிற்காதவையாக உள்ளன. கட்டுரைகள் ஐநூறு வார்த்தைகளுக்குள் உள்ளன. காணொளிகள் ஒரு மணிநேரம், நாற்பது நிமிடம், இருபது நிமிடம், ஐந்து நிமிடம் எனச் சுருங்கி இன்று முப்பது நொடிகள் ஓடுவனவாக ஆகிவிட்டன. எளிய அரட்டைகளையே கேளிக்கை நிகழ்வுகளாக ஆக்கியிருக்கிறார்கள்.

இவையும் ஒருவகை பஞ்சுமெத்தைகள்தான் – மூளைக்கானவை. மூளை சோம்பலில் அழுந்தி அதில் சொக்கிக் கிடக்கிறது. அங்கே இங்கே என எதையாவது பார்த்துக்கொண்டே இருப்போம். என்ன பார்த்தோம் என்பதே நினைவிருக்காது. ஒரு நாள் எப்படி ஓடிற்று என்றே தெரியாது. மகிழ்ச்சியான ஓய்வான வாழ்க்கை என நினைக்கிறோம். ஆனால் உண்மையில் சோம்பலில் உடல் நோய்கொள்ள தொடங்கியிருக்கிறது. ஆனால் அது அப்போது தெரிவதில்லை. ஆச்சரியம் என்னவென்றால் நோய் தெரியும்போது அதற்கும் அந்த வாழ்க்கை முறைக்கும் தொடர்பிருப்பதாகவே தோன்றாது.

உதாரணமாக, முதுகுவலி மூட்டுவலி கழுத்து இறுக்கம், தோள்வலி போன்ற பலவகையான வலிகள். செரிமானமின்மை,  அமிலம் போன்ற வயிற்று உபாதைகள்.  தலைச்சுற்றல் போன்ற சிக்கல்கள். இவை எல்லாமே இந்த வாழ்க்கைமுறையால் உருவாகின்றவைதான். சீரற்ற தூக்கம் முதலில் உருவாகும் சிக்கல். மொத்தமாக நீண்டநேரம் படுக்கையில் இருத்தல், ஆனால் ஆழ்ந்த தூக்கமில்லாமை. விளைவாக தசைகள் போதிய ஓய்வை அடைவதில்லை. செரிமான உறுப்புகள் சீராக இயங்குவதில்லை.

மூளையை வேலைசெய்ய வைக்காமல் இருப்பதனால் தூக்கச்சிக்கல் உருவாகிறது. ஆனால் இச்சிக்கலால் மூளையை வேலைசெய்ய வைக்க முடியாமலும் ஆகிறது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் வழக்கம் இல்லாமலாகிறது. நூறு வார்த்தைக்கு அப்பால் படிக்க முடிவதில்லை. அதுவும் ஏற்கனவே தெரிந்தவற்றை மட்டுமே படிக்க முடியும், புதியவற்றை படித்தால் புரியாது. பத்துப்பதினைந்து நிமிடம் எதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிவதில்லை .

(இந்நிலையை ஆய்வுசெய்துதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 15 நிமிட இடைவெளிகள் விட்டனர். இன்று அதுவே நீண்டநேரம் ஆகிவிட்டது என ஆய்வுகள் காட்டுகின்றன. 2 நிமிடமே சராசரி கவனப்பொழுது என ஓர் ஊடக நிபுணர் என்னிடம் சொன்னார். ஓடிடி படங்களைப் பார்ப்பவர்கள் சராசரியாக ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை நிறுத்திவிட்டு வேறேதோ செய்கிறார்கள்,ஆகவே திரைக்கதை ஏழுநிமிடங்களுக்குள் டிவிஸ்ட் எடுக்கவேண்டும் என்றார்)

சமூகவலைத்தளங்கள் இந்த நிலைக்காகவே உருவாக்கப்பட்டவை. அவற்றிலுள்ளது நிகழ்காலம் மட்டுமே. அங்கே சென்று அன்றன்றைய வாழ்க்கையைப் படங்களாக பதிவிடலாம். அன்றைய அரசியல், சினிமா வம்புகளில் ஈடுபடலாம். எவர் மீதேனும் கசப்பை ஏதேனும் ஒரு காரணம் சொல்லி கக்கிவிட்டு வரலாம். சந்தையில் அலைவதைப்போலத்தான் அதுவும். எங்குமிருப்போம், எதிலும் இருக்கவும் மாட்டோம்.

இந்தவகை சோம்பலால் நினைவுத்திறன் திகைப்பூட்டும்படி இல்லாமலாகிவிடுகிறது. ஓரிரு நாட்களுக்கு அப்பால் எதையும் நினைவுகூர முடிவதில்லை. ஒரு திரைப்படம் பார்த்து ஒரு மாதம் கழித்து அதே படத்தைப் பார்த்தால் கதை நினைவுக்கு வருவதில்லை. பலர் சிறிய காணொளிகளை பலமுறை திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள். அன்றாடப் பேச்சிலேயே சிறுசிறு செய்திகள் நினைவில் எழுவதில்லை. ஆகவே பேச்சே பொத்தாம்பொதுவாக, சுற்றிச்சுற்றி வரும்.

நினைவில்லை என்று சொல்வதிலுள்ள அசட்டுத்தனமே பெரும்பாலானவர்களுக்கு உறுத்துவதில்லை. அதையே ஒரு தகுதியாக ”நான் எதையும் ஞாபகம் வச்சுக்கிடுறதில்லை சார்” என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ”நம்ம மனசிலே எதுவும் தங்குறதில்லை” என்பது வெள்ளையுள்ளத்தின் சான்றாக கொள்ளப்படுகிறது.

சோம்பலால் உடலுக்கு நோய் உருவானதுமே நோயே சோம்பலுக்கான காரணமாக இவர்களால் சொல்லப்படுகிறது. அதன்பின் நோய், நோய்க்கான மருத்துவம், சகநோயர்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவார்கள்.

இந்தச் சுழலில் இருந்து தப்பிக்க அந்த சோம்பல்நோயாளி அவரே நினைத்தால்தான் உண்டு. என்னிடம் மருத்துவ நண்பர் சொன்னார். “என் நோயாளிகளிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். மூளைக்கும் கடும் பணி அளியுங்கள். மேலோட்டமான சொகுசான உடல்சார் வாழ்க்கை, உள்ளம் சார்ந்த வாழ்க்கை இரண்டும்தான் நோய்க்குக் காரணம் என்று சொல்வேன். உடனே  ‘ஆனா டாக்டர்…’ என ஒருவர் ஆரம்பித்தால் அவ்வளவுதான், அவர் மீளப்போவதில்லை. அவர் சாக்குபோக்குகள் உருவாக்க ஆரம்பிக்கிறார். சொன்னதுமே ஓர் அதிர்வுடன் அதை உணரும் சிலர் உண்டு, அவர்கள் தப்பிக்க முடியும்.”

ஆகவேதான் மூளையுழைப்பை முன்வைக்கிறேன். ஏனென்றால் அதுதான் தொடக்கம். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரமாவது கடுமையான மூளைசார்ந்த உழைப்பைச் செலுத்தவேண்டும். அது உடலுக்கு எடைதூக்குவது, ஓடுவது போன்ற பயிற்சியை அளிப்பதற்குச் சமானமானது. அந்தப் பயிற்சி பொதுவாக நம் கவனக்குவிப்பை கூட்டும். நம் மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் ரசாயனங்களை ஊறச்செய்யும். அதன்பின் பிற உள்ளம் சார்ந்த பணிகளையும் வேகத்துடன் முடிப்போம். உசுப்பப்பட்டு ஊக்கம் அடைந்த மூளையை சோம்பியிருக்கச் செய்ய முடியாது. உடலின் அதே விதிதான். ஒருநாளில் ஐந்து கிலோமீட்டர் ஓடுபவர் நாள்முழுக்க சுறுசுறுப்பாகவே இருப்பார்.

இதை நான் எனக்காக நெடுங்காலமாகப் பயின்று வருகிறேன். புனைவு எழுதுவது எனக்கு உற்சாகமானது. ஆனால் மூளையைப் பிழியும் வேலையை ஒவ்வொருநாளும் குறைந்தது இரண்டு மணிநேரம் செய்கிறேன். இன்று என்ன செய்தேன் என்று சொல்கிறேன். நான்கு வெவ்வேறு நூல்களை வாசித்து திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பற்றி ஒரு மிகவிரிவான தமிழ் விக்கி பதிவையும், அதன் இரண்டு துணைப்பதிவுகளையும் போட்டேன். The Norton anthology of theory and criticism நூலில் நான்கு பதிவுகளை படித்து, புரிவதற்காகக் குறிப்புகள் எடுத்தேன். இலக்கியப்பணிகள் இதில் வராது.

நான் நண்பர்கள் உதவியுடன் உரிய ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் ஒருங்கிணைக்கும் பயிற்சிகள் எல்லாம் இதன் பொருட்டே. ஆர்வம் கொண்டோர் தீவிரமாக தங்களை எதிலாவது ஈடுபடுத்திக்கொள்ளவே கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவம் ஆகியவை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் உருவாகும் அக, புற சிக்கல்களைக் களையவே யோகம், தியானம் போன்ற பயிற்சிகள்.

என் தளத்தைப் பார்க்கையில் இருபதாண்டுகளாக இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என தெரிகிறது. நூறு வார்த்தைகளுக்குமேல் படிக்காதவர்கள் பெருகிவிட்ட சூழலில் இருபத்தைந்தாயிரம் பக்கங்கள் கொண்ட நூலை எழுதுவதும் அதனால்தான். ஏன் இணைய வகுப்புகளை எதிர்க்கிறேன் என்றால் இதனால்தான். ’ஆன்லைன் வகுப்பு’ என்பது சோம்பலை நியாயப்படுத்தும் ஒரு சுய ஏமாற்று மட்டுமே. தங்கள் செயலின்மையின் அடிமைத்தனத்தை உதறி வெளியே வருபவர்களுக்கே உதவ விரும்புகிறேன்.

நான் சோம்பல் கொண்டவர்களை நோக்கிப் பேசவில்லை, அதை உடைத்து வெளிவருபவர்களை நோக்கியே பேசுகிறேன். இன்றைய பொதுச்சூழலுக்கு நேர் எதிர்த்திசையில் செல்கிறேன்.  இது ஒரு சமகாலப்பணி என நினைக்கிறேன்

ஜெ

தயக்கமெனும் நோய்
செயலின்மையின் இனிய மது 
அரதி
முந்தைய கட்டுரைகிரிவலம்
அடுத்த கட்டுரையானம், ஒரு விவாதம்