டி.எம்.கிருஷ்ணா, இசை விவாதம்
அன்புள்ள ஜெ,
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டு மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி பட்டம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டி சில பிராமண இசைக்கலைஞர்கள் [துஷ்யந்த் ஶ்ரீதர், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள், திருச்சூர் சகோதரர்கள் உள்ளிட்டோர்] மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசை விழாவை புறக்கணிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய அறிக்கை அவர்களுடைய அடையாளத்தையும் நிலைப்பாட்டையும் சேர்த்தே முன்வைக்கிறது என்பதால்தான் ‘பிராமண இசைக்கலைஞர்கள்’ என்ற பதத்தை பிரயோகிக்கிறேன்.
தமிழ் இலக்கியவாதிக்கு இந்த வம்பு எதற்கு என்று ஒருவர் கேட்கலாம். கர்ணாடக இசை உலகின் சர்ச்சைகள் தேநீர்க்கோப்பை புயலென உயர்சாதி வட்டத்தின் ஒரு சிறு பூசலாகவே உள்ளது. அந்தப் பூசல்களில் எந்த அறிவுபின்புலமும் அரசியல் பயிற்சியும் செயல்படுவதில்லை. ஆகவே அதற்குள் சிந்தனையாளன் புகுந்து தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டுமா? அங்கே அவனுக்கு என்ன வேலை?
எதிர்வினையாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறேன். மரபிசை ஒரு கலாச்சார பொக்கிஷம், மானுட சம்பத்து. அது எந்த சாதியோ வட்டமோ கொள்கையோ கையிலெடுப்பது ஆகாது. இந்தப் பூசல் அந்த பிரக்ஞையே இல்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறதே என்பது தான் அவலம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சிந்தனையாளனாக சில கருத்துக்களை விவாதமெழுப்புவது அவசியம் என்று எண்ணுகிறேன்.
தமிழ் மரபில் முத்தமிழ் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இயலுடன் இசையும் நாடகமும் இணைந்தே காலத்தில் வருகிறது. சங்கத்தமிழ் மூன்றும் தா என்று தான் அவ்வையார் கேட்கிறார். நாயகர் காலத்தில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழகத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியப் பிறகும் தமிழ்நாட்டில் இயலோடு இசையும் நாடகமும் பெரும்பாலும் இணைந்தே செயல்பட்டன. செய்யுள் அறிந்தவனுக்கு தாளஞானமும் இருக்கும் என்று என் தமிழ்ய்யா சொல்வார். நாட்டியசாஸ்திரம் படித்த நடனமங்கைக்கு காவியலங்காரமும் தெரிந்திருக்கும். முக்கலைகளும் ஒன்றின் மேல் மற்றொன்று செல்வாக்கு செலுத்தின.
ஆனால் நவீன காலகட்டத்தில் இந்த தொடர்ச்சி அறுபட்டது. தமிழின் இயல், உலக இயலின் செல்வாக்கை பெற்று புதிய சிந்தனைகளின் புதுப்புனல் கலந்து தன்னை புதுப்பித்துக்கொண்டது. தமிழில் செவ்விலக்கியம் மறுகண்டுபிடிப்பும், காலப்போக்கில் மறுவரையரையும் செய்யப்பட்டது. இயலுக்குள் சிந்தனைத்தொடர்ச்சி அறுபடவில்லை. ஆனால் செவ்வியல் இசை, நாடகத்துடனான அதன் உறவு துண்டிக்கப்பட்டது.
நம்முடைய செவ்வியல் இசையும் நாடகமும் நவீன காலகட்டத்துக்கு வந்த போது அதன் புதுப்பித்தல் நிகழ்ந்தது சினிமாவில் தான். ஆனால் தமிழில் கடந்த நூராண்டுகால சினிமா என்பது மிகப்பெரும்பாலும் ஜனரஞ்சகத்தன்மையோடு தான் வெளிப்பட்டிருக்கிறது. சினிமாவில் இசை பரப்பிசையாகவும் நாடகம் மக்கள் நாடகமாகவும் வெளிப்பட்டது. அதில் படைப்பூக்கத்துடன் பல பாய்ச்சல்கள் நிகழ்ந்தன. பார்க்கப்போனால் சென்ற நூறு வருடங்களில் இசை-நாட்டியம்-நாடகத்தில் உண்மையான படைப்பூக்கம் நிகழ்ந்தது ஜனரஞ்சக தளத்தில் வைத்து தான் என்று நினைக்கிறேன். நவீன இலக்கியத்தோடு ஓரளவு தொடர்புடைய் இசையும் நாடகமும் என்றால் அது சினிமா இசையும், சினிமா நாடகமும் தான்.
செவ்வியல் இசையும் சரி, செவ்வியல் நாட்டியமும் சரி, நவீன காலகட்டத்தில் தேங்கிப்போனது. பல காரணங்கள்.
முதலில் இயலைப்போல் இசை, நாட்டியம் உலகளாவிய கலைப்போக்குகளின் செல்வாக்கை உள்ளிழுத்துக்கொள்ளவில்லை. அந்த சிந்தனைகளுடன் தீவிரமாக மோதவில்லை. அதன் அனைத்துச் சாத்தியங்களையும் பரிசீலித்துத் தன்னை மறுகண்டடைவு செய்யவில்லை. பரதநாட்டியத்தின் மறு உருவாக்கம் ஒரு சிறந்த உதாரணம். ருக்மிணி தேவி மேல் அன்னா பாவ்லோவாவின் செல்வாக்கு இருந்தது. ஆனால் ருக்மிணி தேவி அவரிடமிருந்து ஒரு குறிப்பிட்டவகையான செவ்வியல்பின் ரசனையை மட்டுமே பெற்றுக்கொண்டார். அதிலிருந்து அவர் உருவாக்கியது வடிவவியல் அம்சமும் கணக்குசரிகளும் மேலோங்கிய ஒரு நாட்டிய வடிவம். அது அவருடைய ஆளுமைவார்ப்பின் எல்லைவரம்பு என்பது என் அபிபிராயம். அந்த வடிவசரியைத்தான் அவர் அழகு என்றார். லூயி சல்லிவனின் கட்டடங்களை காணும் போது உருவாகும் உணர்வே ருக்மிணி தேவி பாணி நாட்டியம் உருவாக்குகிறது. அப்பழுக்கற்ற வரிகளும் கச்சிதமான அசைவுகளும் கொண்டது. ஆனால் உயிரம்சம் குறைவு. திறன்குறைந்த படைப்பூக்கமற்ற நாட்டியக்காரர் ஆடினால் மிகவும் இயந்திரத்தனமாக வெளிப்படக்கூடியது. கலாக்ஷேத்ரா பாணி உருவாக்கிய பரதநாட்டியம் ஒரு விதத்தில் ஒரு நவீனத்துவ வெளிப்பாடு என்று சொல்லலாம். இன்னொரு வகையில் தத்துவத்தில் தியோசோஃபியின் இடம் தான் நாட்டியத்தில் கலாக்ஷேத்ராவின் இடம் என்றும் சொல்லலாம். உயர்வான சொற்களால் மட்டும் கட்டப்பட்ட, உப்புசப்பில்லாத, உயிர்ப்பில்லாத வெளிப்பாடு. அதுவே செவ்வியல் என்ற மயக்கம். ஆனால் இந்த அளவுக்கான படைப்பூக்கம் கூட அந்த காலகட்டத்தின் கர்னாடக இசையின் மறுமலர்ச்சியில் நிகழவில்லை. அவை எந்த வெளிச் சிந்தனைகளின் செல்வாக்கையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
(வங்காளத்தில் ரபீந்திரநாத் தாகூர் உருவாக்கிய ரபீந்திரசங்கீத் என்ற இசை வடிவம் மேலும் கலாக்ஷேத்ரா பாணியை பற்றிச் சொன்ன அதே விமர்சனத்தை வைக்கலாம். அதன் முன்னொடி வடிவங்களான பௌல், லாலொன் கீத், சியாம சங்கீத், வைஷ்ணவ் கீர்த்தன் போன்ற வடிவங்களின் உயிர்ப்பின் பெரும்பகுதி இன்று கேட்கையில் ரபீந்திரசங்கீத்தில் இல்லாமல் தான் இருக்கிறது. ஒப்புநோக்க நடனமேதை உதய் சங்கரின் படைப்பூக்கம் தீப்பொறியின் எழுச்சியுடன் வெளிப்பட்டது. அவரும் அன்னா பாவ்லோவாவால் வழிநடத்தப்பட்டவர். ஆனால் அவர் ஒரு தனி மேதை. அவர் படைப்பூக்கத்தின் தொடர்ச்சியென்று யாரும் இல்லை).
மேலும் மேலைக் கலைகளைப்போல் இந்திய நிகழ்த்துக் கலைகள் சிந்தனையுடன் தொடர்புடையதாக இல்லை. வரலாற்றில் ஒரு கட்டத்துக்குப்பின் மேலை இசை இசைத்தர்க்கத்தால் ஒரு புதிய சிந்தனைவழியை கேட்பவர் மனதில் உணர்ச்சிகரமாக உணர்த்தும் சூட்சுமத்தை கண்டுபிடித்தது. பதினேழாம் நூற்றாண்டின் இத்தாலிய இசைகோர்ப்பாளர் மார்செல்லோ, விவிலியத்தின் எட்டாம் சங்கீதத்தை ஒட்டி இசையமைத்தப் பாடலையும் (எல்லையில்லா வானம் அறிவிக்கிறது, பெருங்கடவுளின் மகிமையை), பத்தொன்பதாம் நூற்றாண்டில் பீத்தோவன் தனது ஒன்பதாம் சிம்ஃபனிக்குள் கோர்த்த ‘மகிழ்ச்சி வாழ்த்துப்’ பாடலையும் ஒப்பிட்டால் இதை புரிந்துகொள்ளலாம்.
மகிழ்ச்சியே, தீ குடித்த போதையுடன் உன் மேன்மையான சந்நிதானத்தில் நுழைகிறோம். மரபு உறுதியாக பிரித்துவைத்ததைக்கூட உன் மாயம் மீண்டும் இணைக்கிறது. உன் ஆதூரமான சிறகின் அரவணைப்பில் மக்கள் அனைவரும் சகோதரர்களாகிறோம் என்ற அந்த பாடல்வரிகளில் வெளிப்பௌம் தீவிரமான, மிகைஉணர்ச்சி கொண்ட அழகியலும் சரி, அதன் மக்கள்சார்புடைய கருத்தாடலும் சரி, அது வெளிவந்த காலத்தில் கலக அலைகளை உண்டாக்கியது. சிம்ஃபனியில் மனிதக்குரல் நுழைவது என்பதே அப்போது மிகப்பெரிய புரட்சி. மார்செல்லோவின் பாட்டைப்போன்ற தோத்திரப்பாடல்களைத்தான் மனிதக்குரல்கள் இணைந்து ‘கோரஸ்ஸாக’ தேவாலயத்தில் பாடிக்கொண்டிருந்தன. அது கடவுளின் மகிமையை நோக்கி எழுந்த மனிதக்குரல்களின் பாடல். கடவுளின் எல்லையில்லா வானத்துக்கடியில் மனிதர்கள் ஒன்றாவதை உணர்த்துவது. பீத்தோவனின் ‘மகிழ்ச்சி வாழ்த்துப் பாடல்’ அதை திருப்பிப்போட்டது. அதே உச்சம்நோக்கி வெடித்துத்திறக்கும் இசையுணர்வை எடுத்துக்கொண்டு அதை பாரெங்கும் மகிழ்ச்சியில் இணையும் மனித உள்ளங்களின் பரவசத்தை பாடப் பயன்படுத்தியது. மனிதர்கள் அனைவரும் தாங்கள் மனிதர்கள் என்பதால் உணரும் மகிழ்ச்சியின் சிறகணைப்புக்குள் ஒன்றாக ஆவதை உணர்த்தியது. ஒரே உணர்வு தான். அது வானத்தைப்பார்க்கும் போது தெய்வீகமென்று கூர்கொள்கிறது. ஆனால் சக மனிதனை தன் மகிழ்வில் அடையாளம் காண்கையில் பறந்து விரியவும் செய்கிறது. அவ்வுணர்வுக்கு இந்தச் சாத்தியம் இருப்பதை இசை தான் நிகழ்த்திக்காட்டுகிறது.
இது மேற்கத்திய இசையின் தனிப்பெரும் சாதனை. இந்திய செவ்வியல் இசையில் அந்த வகை நகர்வுகள் நவீனகாலத்தில் கூட நிகழவில்லை. ஏன் என்று நாம் நம்மை ஆராய வேண்டும். இந்தக் கட்டுரை அந்த உசாவலை நோக்கிய ஒரு தொடக்கம் தான். தமிழில் நவீன இலக்கியம் அறிமுகமானபோது, இலக்கியம் வரலாற்றுத்தன்மையும் யதார்த்தவாதமும் கருத்தியல் செல்வாக்கும் கொண்டு புதிய பாதைகளை கண்டடைந்தது. ஆனால் இசையில் அடு நடக்கவில்லை. ஆகவே இசையுடனான இலக்கியத்தின் தொடர்பு அறுபட்டது.
இவற்றுக்கெல்லாம் ஆதாரமான மூலக்காரணம், நம்முடைய இசையில் உள்ள தூய்மைவாத நோக்கு என்று சொல்வேன். தூய்மைவாதத்தை தன்னளவில் ஒரு குறை என்று சொல்லமாட்டேன். எல்லா செவ்வியல் கலைகளிலும் ஒரு தூய்மையிழை உண்டு. ஆனால் தூய்மைவாதம் என்பது மரபுவாதமாகவும் ஆசாரவாதமாகவும் வெளிப்படுமாயின் அது கலையென்றே ஆகாத நின்ற நிலைக்கு வரும். தேக்கம் காணும். அதில் பல்வேறு கழிசடைகள் ஊறுவதற்கான வழிவகுக்கும். இன்று கர்ணாடக சங்கீதத்தை பீடிக்கும் நோய் இதுவே என அச்சமுறுகுறேன்.
ஆசாரவாதம் என்று இங்கே சொல்ல வருவது சாதிய ஆசாரவாதம் என்ற அர்த்தத்தில் மட்டும் அல்ல. அது ஒரு காரணம். ஆனால் அந்த மனநிலை ஒட்டுமொத்தமாக சிந்தனையில் ஒரு ஆசாரவாதத்தை உருவாக்க வழிவகுக்கிறது. அது மேலும் கொடியது, நச்சுத்தன்மை கொண்டது.
ஏனென்றால் ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் கலையில் மட்டும் தான் அராஜகம் அனுமதிக்கப்படுகிறது. ஒரு சமூகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதால் தான் கலையில் அராஜகம் அனுமதிக்கப்படுகிறது, அது அவசியமும் கூட. புதிய சிந்தனைகள் பழையனவற்றை அறைக்கூவ அதுவே களமாக அமைகிறது. நிலத்தை உழுதுபோடுவது போன்றது அது. அங்கே உருவாகும் கலகமாற்றங்களே சமூகத்தில் விளைச்சலாக அறுவடையாகிறது. அங்கே ஆசாரவாதம் உட்புகுவதென்பது மண்ணில் விஷம் வைத்து மலடாக்குவது போன்றது தான். அதனால் தான் இன்று கர்ணாடக சங்கீத உலகில் கவலைக்குறியதென்று நான் காண்பது பிராமண சாதியின் ஆசாரவாதத்தை மட்டும் அல்ல. முதன்மையாக ஒட்டுமொத்தமாக புதிய சிந்தனைகளுக்கு எதிரான போக்காக வெளிப்படும் சிந்தனை ஆசாரவாதத்தைத்தான்.
டி.எம்.கிருஷ்ணா கடந்த பத்தாண்டுகளாக செய்துவரும் சங்கீதக் கலகங்கள் எவ்விதமான புதிய சிந்தனை சார்ந்தவையும் அல்ல. அரசியல்ரீதியாகவும் சரி, சங்கீதரீதியாகவும் சரி. பிராமண சங்கீத ஸ்தாபனம் ‘பெரியவா’ புகழ் பாடுகிறதா, நான் ‘பெரியார்’ புகழ் பாடுகிறேன் பார் என்ற நிலைப்பாட்டில் என்ன அறிவுமுதிர்ச்சி இருக்கிறது? இங்கே வரலாறு நெடுக வளர்ந்து பலபக்கத்தன்மையும் உட்சிக்கலும் கொண்டு விரிந்து பரந்திருக்கும் கலாச்சார வெளியை, அனைவருக்கும் பங்குடைய முத்தமிழின் விளையை, எளிமையான ‘பெரியவா x பெரியார்’ மோதலென்று குறுக்குவது எவ்வளவு பெரிய கீழ்த்தனமானது? இதில் வெளிப்படும் அறிவின்மை எவ்வளவு அருவருப்பனது? எத்தனை சீர்கேடான தேங்கலான நிலையில் கர்னாடக சங்கீதத்தின் மொத்த சொல்லாடலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது? பத்து வருடத்தில் தன் புரிதலை மேம்படுத்த ஒரு புத்தகத்தைப் படிக்காத, தன் நிலைப்பாட்டுடன் மோதும் ஒரு சிந்தனையாளருடனும் உரையாடல் மேற்கொள்ளாத, தேய்ந்துபோன கருத்துகளையே திரும்பத்திரும்ப கிளிப்பிள்ளைபோல் ஒப்பித்துக்கொண்டு உரியவர்களின் புகழ் சொல் கேட்டு புளங்காகிதம் காணும் கிருஷ்ணாவும் எல்லா வகையிலேயும் ஒரு பழமைவாத ஆசாரவாத அம்பிமாமாதான். ஆசாரசரிகளை அப்பழுக்கில்லாமல் உச்சரிக்கும் பெரியாரிஸ்ட் மாமாக்களின் ஃபெமினிஸ்ட் மாமிக்களின் வரிசையில் மற்றொருவர். தான் ஒரு இசைக்கலைஞர் என்ற பிரக்ஞையே இல்லாமல் நாலாந்தர ஊடகவியலாளரைப்போல் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்.
இவருக்கு எதிர்நிலை எடுக்கும் பிராமண இசைக்கலைஞர்களின் அறிவின்மையும் சாதிப்பற்றும் மேலும் கசப்பானது. குறிப்பாக ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் எழுதிய அறிக்கையை வாசித்து அருவருத்துப்போனேன். இன்று பிராமண இசைக்கலைஞர்களில் ஒரு சாரார் மேற்கொள்ளும் ஒரு கருத்தாடல் உள்ளது. அது கர்னாடக சங்கீதம் – இந்து ஆன்மீகம் – இந்து அடையாளம் – இந்துத்துவ அடையாளம் – மோதிஜீ ஆதரவு என்ற கட்டமைப்பு. மரபிசையை இந்த எளிய அரசியல் சிந்தனைச்சங்கிலியின் பிரச்சார வாகனமாக கையாள்கிறார்கள். இந்த நிலைப்பாட்டை ஏதோ அறிவு முதிர்ச்சி என்றும் அரசியல் முதிர்ச்சி என்றும், கலையின் பழமை பொக்கிஷத்தை பாதுகாப்பதாகவும், ஆன்மீகமான மேநிலையில் இருப்பதாகவும் எல்லாம் தருக்கி மயங்குகிறார்கள்.
இவர்களிடம் இருப்பது தங்கள் மரபாசிரியர்களிடம் பெற்றுக்கொண்ட சில எளிமையான நிலைப்பாடுகள் மட்டும். கலை சார்ந்து, சமூகம் சார்ந்து, ஆன்மீகம் சார்ந்து. அதை இவர்களும் எந்த நேரத்திலும் கேள்விக்குட்படுத்தவில்லை. படிக்கவில்லை, உரையாடவில்லை, தங்களைப்போலல்லாத மக்களுடன் புழங்கவில்லை. கிருஷ்ணாவின் கருத்துகளின் உளுத்துப்போனத்தன்மையை கூர்மையாக சுட்டிக்காட்டிப் புறம்தள்ளி, அதன் இடத்தில் இசையைப்பற்றி உண்மையிலேயே ஒரு புதிய கருத்தை, செயல்முறையை நிறுவும் கற்பனையும் நிமிர்வும் இவர்களிடம் இல்லை. ஆகவே இவர்களும் கிருஷ்ணா அளவுக்கே பாமரத்தன்மை கொண்டவர்களே.
‘பிராமணப்பெண்களை வேசிகள் என்று சாடிய பெரியாரை ஆதரிக்கும் கிருஷ்ணாவை நாங்கள் பகிஷ்கரிக்கிறோம்’ என்று ரஞ்சனி-காயத்ரி எழுதுகிறார்கள். அவர்களுடைய அரசியலறிவையும் வரலாற்றறிவையும் மெச்ச வேண்டும். இங்கே ஒன்று சொல்ல வேண்டும். ஈ.வே.ரா. பெரியார் பிராமணப்பெண்களை வேசிகள் என்று சாடினார் என்பது உண்மை. ஆனால் அவர் பிராமணப்பெண்களை மட்டும் சாடவில்லை. அந்த சொல்லாடல் அவருடைய rhetoric-ன் பகுதியாகவே இருந்தது. “உங்கள் இல்லத்துப் பெண்கள் சோரம் போய்விடுவார்கள்” என்ற கருத்தை எத்தனை இடங்களில் எத்தனை சந்தர்ப்பங்களில் எவரெவரையெல்லாம் நோக்கி அவர் சொல்கிறார் என்று அவர் நூல்களை வாசித்தவர்களுக்குத் தெரியும். அ அதை தனித்து எதிர்க்கலாம். ஆனால் வரலாறு அறிந்தவர் வரலாற்றின் விசை அதன் உருவாக்கத்தில் எப்படி செயல்பட்டது என்று புரிந்துகொள்வார். அதுவே மேலும் ஆழமான புரிதலுக்கும் எதிர்ப்புக்கும் வழிவகுக்கும்.
1900-ங்களின் தொடக்கத்தில் எல்லா சமூக ஆண்களும் கல்வி கற்று நகரங்களுக்குக் குடிபெயர்ந்த காலத்தில் இந்த பயம் அனைத்து சாதிகளிலும் இருந்திருக்கிறது. அனைவருக்கும் மேலாக இசைவேளாளர் என்று இன்று அழைக்கப்படும் சமூகப் பிரிவினருக்குள் இந்த பயம் இருந்திருக்கிறது. ஏனென்றால் எந்த வசைச்சொல்லால் பெண்கள் ஏசப்பட்டார்களோ அதன் திரிபடையாத வடிவமே காலம்காலமாக அந்தக் குலப் பெண்களின் பெயரும் அடையாளமுமாக இருந்தது. அவர்கள் பாரம்பரிய பெண் கலைஞர்கள். ரஞ்சனியும் காயத்ரியும் இன்று எந்த கலையை அனுஷ்டிக்கிறார்களோ, எந்த இசையை பாடுவதால் ஆன்மீகநிறைவு அடைவதாக உணர்கிறார்களோ, அதே மரபில் வல்லுனர்களாக இருந்தவர்கள். அந்தக் கலையில் மேம்பட்டோருக்கு கோயில் சடங்கு சார்ந்து இடமும் வாழ்வியல்முறையும் இருந்தது. ஆங்கிலேயர் வரவும் மன்னராட்சியின் மறைவும் நவீனமயமாதலும் அந்த வாழ்வியல்முறையை மெல்ல மெல்ல சிதைத்தது. 1930-களில் தேவதாசி ஒழிப்பு சட்டம் அமலானபோது முடிவுக்கு வந்தது. இது பதிவான வரலாறு.
ஆனால் பதிவாகாத வரலாறு என்பது அந்த பெண்மய சமூகம் ஆண்மய சமூகமானபோது அந்தப் பெண்களும் அவர்களுடைய மகள்களும் பேத்திகளும் என்னானார்கள் என்பது. அடுத்தத்தலைமுறை ஆண்கள் கலையை பேணிக்கொண்டார்கள். நாதஸ்வரம் தவில் வித்வான்களாக நட்டுவனார்களாக வெளிப்பட்டார்கள். ஆனால் அடுத்தத் தலைமுறை பெண்கள் கலைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. மதுரையில் ரஞ்சனி-காயத்ரி மெச்சும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அம்மா வழி சொந்தம் ஒருவரை தனிப்பட்டமுறையில் நான் அறிவேன். அருமையான வீணை விதூஷி. அவர் கணவர் இறப்பது வரை அவரை பாடவோ வாசிக்கவோ அனுமதிக்கவில்லை. பெரிய மௌனம் சூழ அவர்கள் வாழ நேர்ந்தது. ஏன்? “உங்கள் இல்லத்துப் பெண்கள் சோரம் போய்விடுவார்கள்” என்ற திராவிடவாத மனநிலை. கலைகளை தனக்கான பாதையாக கொண்ட பெண்களின் ஒழுக்கம் இன்றும் பேசுப்பொருளாக இருக்கிறது.
தற்காலத்து இசைக்கலைஞர் இதையல்லவா கேட்கவேண்டும்? இந்த வரலாற்றையல்லவா திறந்து தன்னையும் மற்றவரையும் மேலும் ஆழமாக அணுக்கமாக புரிந்துகொள்ள வேண்டும்? இதை எதிர்கொள்வதில், முடிந்தால் வரலாற்றின் தவறுகளை சரிசெய்ய முயற்சிப்பதில் தான் கலைஞரின் அறமும் ஆன்மீகமும் இருக்கிறது. மாறாக பஜனை ஆன்மீகத்தின் போதையில் மெய்மறந்து வசதியான அரசியலை பேசிக்கொண்டு எங்களை தவறாக பேசிவிட்டான் தடியன் என்று பொருமுவதெல்லாம் என்ன குறுகல்மனம், முதிர்ச்சியின்மை! இதையே சற்று மாற்றி கிருஷ்ணாவுக்கும் சொல்லலாம். இன்று இந்தியா முழுக்க இலக்கியத் திருவிழாக்களில் விருந்தினராக வலம் வரும் பெருமாள் முருகனின் போலிக் கீர்த்தனைகளுக்கு மெட்டுப் போட்டுப் பாடுவது தான் அதிகார அரசுக்கு எதிராக கிருஷ்ணாவுக்கு சாத்தியமான உச்சபட்ச கலகச் செயல்பாடா?
இதைத்தான் சிந்தனையின் ஆசாரவாதம் என்று சொல்கிறேன். சிந்தனையின் ஆசாரவாதம் என்பது புதியவற்றுடன், ‘மற்றதுடன்’, உரையாடாது. சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காது. தன்னை மாற்றியமைக்க வழிவகுக்காது. தன் முன்முடிவுகளை பரிசீலிக்காது. தன் மார்பை கிழித்துப் பார்க்காது.
ஏனென்றால் ஆசாரவாதம் தன்னை மற்றமைகளின் முன் திறந்து வைக்கக் கூசும். பல பிராமண இசைக் கலைஞர்களிடம் இசையில் உள்ள ஆசாரவாதத்தை பற்றிப் பேசினால் “நாங்கள் யாருக்கும் சொல்லித்தர மாட்டோம் என்று சொல்லவில்லையே” என்பார்கள். ஆனால் அதுவல்ல விஷயம். சொல்லித்தருவதை வேலி போட்டு பாதுகாப்பது உன் இடம் அல்ல. ஆனால் நீ உன் வாசல்களை திறந்து வைத்திருக்கிறாயா? மற்ற தரப்புகளுடன் உரையாடலுக்கு தயாராக இருக்கிறாயா? அதன் வழியாக வளர சித்தமாக இருக்கிறாயா? என்பதில் தான் ஒருவர் ஆசாரவாதியா இல்லையா என்று இருக்கிறது.
ருக்மிணி தேவியின் நாட்டியத்துக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். ருக்மிணி தேவி ஜார்ஜ் அருண்டேல் என்ற தியோசொஃபிகல் அமைப்பைச்சேர்ந்தவரை, தன்னை விட இருபத்தாறு வயது மூத்தவரை சமூகத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து மணம்புரிந்துகொண்டவர். அன்னா பாவ்லொவாவின் மாணவி. ஆனால் அது வாழ்க்கையில். சிந்தனையில் கடைசி வரையிலும் ஆசாரவாதியாகவே இருந்தார்.
நீங்கள் கர்னாடக இசை உலகின் பூசல்களில் அதிகம் ஆர்வம் கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத காரணம், சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த இலக்கியம் மனிதனை மாற்றியமைக்குமா என்ற பதிவு. என்னிடம் பலர் – ஆம், பெரும்பாலும் இசையறிவு கொண்ட பிராமணர்களும் ஆன்மீக சன்மார்கத்தில் ஐக்கியமாகிவிட்ட வேளாளர்களும் – அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்றுள்ளது. மனிதனின் உணர்ச்சிகளைத்தூண்டி, வெற்று ஆணவங்களைக் கிளரி, ‘மொத்தத்தில் வைத்துப் பார்த்தால்’ மதிப்பில்லாத கருத்துகளுக்காக உயிர்கொடுத்து பூசலிட்டு இலக்கியத்திலும் அறிவியக்கத்திலும் ஈடுபடுவதால் என்ன பயன்? அந்த கருத்துகள் ஒரு மனிதனை முக்தி அடையச்செய்யுமா? ஆன்மீகமாக விடுவிக்குமா? குறைந்த பட்சம் ஆன்மீகத்துக்கு சாதகமான மனநிலையில் வைத்திருக்குமா? இவ்வாறு கேட்கிறார்கள். இலக்கியம் வெறும் கேளிக்கை அதனால் மனிதனுக்கு என்ன பயன் என்ற கேள்வியின் மேட்டுக்குடி வடிவமல்லவா இது என்று நினைத்துக்கொண்டேன்.
இன்று சொல்வேன். இலக்கியம் எனக்கு வேறெதை எளித்ததோ இல்லையோ சிந்தனையின் ஆசாரவாதத்திலிருந்து விடுவித்திருக்கிறது. இவ்வாறு அசட்டுத்தனமாக, போலிப்புனிதத்துடன் கேள்விகேட்காமல் வைத்திருக்கிறது. புனிதமாகவும் உன்னதமாகவும் ஆசாரசீலராகவும் இருந்து என்ன பயன், மனதில் அறிவின்மையும் துவேஷமும் வெற்றாணவமும் தான் குடியேறப்போகிறதென்றால்? அது தான் ஆன்மீகமான உன்னத நிலையா?
மீண்டும் இயலோடு இசையும் நாடகமும் உரையாடும் நாள் விரைவில் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
அன்புடன்
சாரங்கன்