பெங்களூரில் உரையும் உரையாடலும்

பெங்களூர் கட்டண உரைக்காக 29 மாலை ரயிலில் பெங்களூர் சென்றேன். முந்தையநாள் மாலைதான் சென்னையில் இருந்து கிளம்பி 29 காலைதான் நாகர்கோயில் வந்திருந்தேன். ஒரு பகல் இங்கே. நல்ல வெயில் எரியும் நாள். ஆனால் மொட்டைமாடி வாசலை திறந்துபோட்டு என் சாய்வுநாற்காலியில் அமர்ந்தால் கண்கள் சொக்கி ஒரு தெய்வநிலை கைகூடும்.

அத்துடன் முந்தைய நாள் ரயிலில் தூக்கம் சரியாக இல்லை. தூங்கவில்லை என்றில்லை. அவ்வப்போது விழிப்பு. அருகே ஒரு பெரிய பிராமணக் குடும்பம். ஏதோ கல்யாணத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார்கள். ஆகவே ஒரே உற்சாகப் பேச்சு. இப்போதுகூட இப்படி ஓர் அப்பட்டமான அய்யர்பாஷைதான் பேசிக்கொள்கிறார்களா என ஆச்சரியமாக இருந்தது. சினிமாவில் காமெடிக்காகத்தான் இப்படியெல்லாம் பேசுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு மாமா (அதாவது என்னைவிட இளையவர்) ஏகப்பட்ட மணிமாலைகள், ருத்ராட்ச படிகமாலைகள் அணிந்து ’சல் சல் சல் என்னும் ஒலியிலே’ என  வந்தார். அவர் மனைவி அவரை ”கண்ணா” என்று அழைத்தார். காபி வாங்கிவரச் சொன்னார். அந்தம்மாள் ஏதோ கணிப்பொறி ஊழியை. அரட்டை நடுவே உரையாடல்.அவர் வேலையை விட்டுவிட்டு ஆன்மிகமாக இறங்கிவிட்டாராம். பல்வேறு கோயில்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஒரு விந்தையான கலவையை இப்போது காண்கிறேன். அந்தக்கால பிராமணர்களுக்குப் பொதுவாக யோகம், குண்டலினி போன்றவற்றில் ஈடுபாடு இருக்காது. அவர்களின் வழிபாட்டு மரபு முற்றிலும் வேறு. இவற்றை தாந்த்ரீகம் என அடையாளப்படுத்தி முற்றாகவே ஒதுக்கிவிடுவார்கள். இவற்றில் ஈடுபடுவது பாவம் என்னும் எண்ணமும் இருந்தது. காஞ்சி மடாதிபதி போன்றவர்களின் நிலைபாடும் அதுவே. பிராமணர்களுடையது பூஜை, ஜபம், ஆசாரங்கள் சார்ந்த ஒரு மரபு. காயத்ரி மந்திரம் சொல்வது, சந்தியாவந்தனம் செய்வது, கோயில் வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பார்கள்.

அவர்களில் இரண்டு வகை உண்டு. உருக்கமான பக்தி, பக்தியை இசையுடன் இணைத்துக்கொள்ளுதல் ஆகியவை ஒரு சாராருக்கு. சடங்குகள், ஆசாரங்கள், வேள்விகள் போன்றவை இன்னொரு சாராருக்கு. பொதுவாக ஆலய வழிபாடு சார்ந்த ஒரு புல்லரிப்புப் பேச்சு அவர்களிடமுண்டு. மெய்யாகவே அந்த உணர்வுநிலைகளில் இருப்பவர்கள் பலர், அந்த உணர்வுநிலைகளை அடைந்தால்தான் மதிப்பு என்பதனால் அதை நடிப்பவர்கள் இன்னும் பலர். பக்தி முறைக்குள் பலவகையான கொண்டாட்டங்கள். ராமர் பட்டாபிஷேகம், ராதா கல்யாணம் போன்று.

மிகக்குறைவான அளவில் பிராமணர்கள் இன்னொரு வழிபாட்டு முறைக்குள் சென்றனர். ராகவேந்திரர், ஷிர்டி சாய்பாபா, சத்ய சாய்பாபா போன்ற சிறிய ‘கல்ட்’ வழிபாடுகள் அவை. ஆனால் அவையும்கூட உருக்கமான பக்தி, பஜனை ஆகியவை சார்ந்தவைதான்.

ஆனால் தமிழகத்தில் அண்மையில் வேதாத்ரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ. ரவிசங்கர் போன்றவர்களின் செல்வாக்கால் யோகமுறை, தாந்த்ரீக குறியீடுகள் ஆகியவை பொதுச்சொல்லாடலில் ஒருபகுதியாக ஆகிவிட்டிருக்கின்றன.  அவற்றின் அர்த்தங்களெல்லாம் பொதுப்புழக்கத்தில் மழுங்கி “நேத்து காலம்பற டிபன் சாப்பிட்ட பிறவு அப்டியே ஒரு அஞ்சு நிமிசம் துரியாதீதத்திலே இருந்தப்ப ஒண்ணு யோசிச்சேன், இந்த வாட்டி வெயில் கண்டிப்பா ஜாஸ்திதான், என்னன்னு சொல்றீங்க?” என்ற வகையான பேச்சுக்கள் காதில் விழுகின்றன. நாமும் “ஆமாமா, நான்கூட அதுக்காகத்தான் குண்டலினிய கொஞ்சம் ஜாஸ்தியா ஏத்தி வச்சிருக்கிறது….எதுக்கும் இருக்கட்டுமேன்னுதான். காலம் கெட்டுக்கிடக்கு பாருங்க” என்று பேசவேண்டியிருக்கிறது.

இது பிராமணர்களுக்குள்ளும் பரவி, அவர்களின் ஃபாவபக்தியில் யோகமும் தாந்த்ரீகமும் நெடுக்காக ஊடுருவி விபரீத விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி பற்றி ஏகப்பட்ட மாயமந்திரக் கதைகள் அண்மையில் உற்பத்தியாகியுள்ளன. அவர் வெள்ளெலும்பை பெண்ணாக்கியது, திராட்சைரசத்தை மதுவாக்கியது… (அதெல்லாம் முன்பும் சிலர் செய்திருக்கலாம். அதற்கு அவர் என்ன செய்வார்?) அந்த மாயமந்திரக் கதைகளுடன் இப்போது குண்டலினியியல் கலந்துவிட்டிருக்கிறது.

மேற்படி ஜல்ஜல் மாமா ஒரே vibration mode ல் இருந்தார். வெவ்வேறு அறியப்படாத சிறு கோயில்கள், சந்துபொந்துகளில் இருக்கும் சிறிய பழைய இல்லங்கள் ஆகியவற்றிலுள்ள அதிர்வுகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். காஞ்சீபுரம் பக்கம் ஒரு சிறு ஊரில் ஒரு பழைய வீடு. அது பூமியின் காந்த மையங்களில் ஒன்று. அங்கே சென்றால் குண்டலினி சுழல்வதை உணர முடியும். கடும் வைப்ரேஷன். அங்கே காஞ்சி பெரியவர் வந்து தங்கி “சார்ஜ் ஏத்திண்டு” செல்வார். அப்படி பல ஊர்கள்.

மாமா ஓர் மானுட அதிர்வுமானி. ராமேஸ்வரத்தில் கடலருகே அதிர்வு கம்மி, திருப்புல்லாணியில் மீடியம், உத்தரகோச மங்கையில்தான் எகிறியடிக்கும் என்றார். எதிர்காலத்தில் டெஸ்லா கார்கள் இங்கே வரும்போது இந்த மையங்களில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள வசதி செய்யலாமே என்னும் எண்ணம் ஓடியது. ஜல்ஜல்மாமா வெவ்வேறு இடங்களில் மானாவாரியாக ஏற்றிக்கொண்ட சார்ஜ் காரணமாக அவருடைய காந்தப்புலம் வலுவடைந்திருக்குமோ? ஓர் இரும்பு துண்டால் அவரை தொட்டுப்பார்க்கலாமென ஆர்வம் வந்தது.

நன்றாகத் தூங்கி சத்தம் கேட்டு விழித்தால் மாமா சொல்லிக்கொண்டிருந்தார். “ஜோலார்ப்பேட்டை பக்கத்திலே ஒரு சின்ன கிராமம். அங்கே ஒரு கோயில் இருக்கு. அர்த்தகண்டேஸ்வரர்னு…சின்ன லிங்கம். ஆனா பவர் ஜாஸ்தி. ஊருக்குள்ளே நுழையறச்சேயே ஒரு வைப் கிடைக்கும் பாருங்கோ…” மறுபடி கொஞ்சம் கண்ணயர்ந்தால் மீண்டும் அவர் குரல் “மகாப்பெரியவாளோட குண்டலினி இருக்கே…அதுல எப்டீன்னா”. இப்படி அவர் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றிக்கொள்வதைக் கண்டால் அவருடைய பேட்டரி பழையது, வேகமாக சார்ஜ் இழக்கிறது என்று தெரிந்தது.

மதுரைகடந்து அவர்கள் இறங்கியபின் அப்பாடா என நான் தூங்குவதற்குள் ரயில் நாகர்கோயில் வந்துவிட்டது. வீடு வந்து தூங்கலாமென்றால் வந்ததுமே காபி குடிக்கும் சபலம். அதன்பின் ஏது தூக்கம்? என் உரையை வேறு தயாரிக்கவேண்டும். அதை கேள்விகள், தலைப்புகள் என ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்தேன். அதற்குள் மாலையில் பெங்களூர் ரயில்.

பெங்களூரில் மேஜர் கோகுல் இல்லத்தில் தங்க ஏற்பாடு. வாசகர் புவனேஸ்வரி வந்து அழைத்துச்சென்றார். பெங்களூர் நண்பர்கள் சதீஷ், ராஜசேகர்  போன்றவர்கள் பெங்களூர் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர்கள். மாதமொருமுறை கப்பன் பார்க்கில் சந்தித்து இலக்கிய விவாதம் செய்கிறார்கள். நான் சென்றதுமே காலையுணவாக முட்டை சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கி மதியம் இரண்டு மணிக்குத்தான் விழித்தேன். அதற்குள் ஈரோடு கிருஷ்ணன் நண்பர்களுடன் வந்துவிட்டிருந்தார். என்னை எழுப்ப அவர் துடிதுடித்ததாகவும் மேஜரால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

அதன்பின் இன்னொரு முறை உரையை சீரான கட்டங்களாக குறிப்பு எழுதிக்கொண்டேன். ஐந்தரை மணிக்கு அரங்குக்குச் சென்றேன். ஐந்தரை மணிக்கே வரவேண்டும் என அறிவிப்பு. ஆறுமணிக்கு நிகழ்வு. இம்முறை தேர்வுகள் முடிந்த நீண்ட வார இறுதி ஆகையாலும், குடிநீர் சிக்கலாலும் பலர் ஊருக்குச் சென்றுவிட்டமையால் உரைக்கு பெங்களூர் முன்பதிவு மந்தமாக இருந்தது.ஆனால் நிகழ்வு தொடங்கும்போது வழக்கமான திரள் வந்து அரங்கு நிறைந்துவிட்டது. ஹைதராபாத், தென்காசி என நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.

என் உரையில் தொடக்கத்தில் உரை மேலெழவேண்டும் என்பதற்காக எப்போதுமே ஒரு படிமத்தை எடுத்துக் கொள்வேன். அது என் கற்பனையைத் தூண்டி என்னை மேலே பேசவைக்கும். அந்த உரையிலும் அப்படியே. யானையை தொடர்ந்து காட்டுக்குள் செல்வதுபோல உள்ளே சென்றுவிட்டேன். இரண்டு மணிநேர உரை.

உரைக்குப் பின் உணவு ஏற்பாடாகியிருந்தது. அந்த மண்டபத்திலேயே முப்பதுபேருக்கு இரவு தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 12 மணி வரை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கேயே தூங்கினேன்.

உரை நன்றாக இருந்ததாக பலர் சொன்னார்கள். “சும்மா ஒரு ஆர்வத்துக்காகத்தான் சார் வந்தேன்…ஒரு ஸ்பீச்சை நான் இப்டி கவனிப்பேன்னு எனக்கே தெரியாது” என்று பலர் சொன்னார்கள். என் உரைகளை யூடியூபில் கேட்கும்போதுகூட அப்படி கவனித்ததில்லை என்றனர்.

யூடியூப் உட்பட மின்னூடகங்கள் நேர்ச்சந்திப்பு மற்றும் நேரடிக் கல்விக்கு மாற்றே அல்ல. அவை ஒரு வசதி, ஆனால் அவை ஓர் உரையை நேரில் கேட்பதற்கோ, ஒரு வகுப்பில் நேரில் அமர்வதற்கோ எந்த வகையிலும் ஈடானவை அல்ல. அந்த நம்பிக்கையால் நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளலாகாது. இதை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன்.

கண்முன் நின்றிருக்கும் ஒரு மனிதரில் நாம் காண்பது ஒரு காட்சிப் பிம்பத்தை அல்ல. ஓர் உயிரை, ஓர் உள்ளத்தை, ஓர் ஆத்மாவை. ஆகவே நாம் காண்பதை விட மிகுதியாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். நம் கவனம் அவரில் ஒருங்குகூடுகிறது. நம்மைச் சுற்றி நம் உணர்வுநிலை கொண்ட பலர் அமர்ந்திருக்கையில் கூட்டாக ஓர் உணர்வுநிலை உருவாகிறது.

அத்துடன் ஒன்று உண்டு, அதை தர்க்கபூர்வமாக நான் விளக்க முடியாது. ஆனால் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்குச் செல்லும் ஒரு நுண்தொடர்பு உண்டு. ஆன்மிகசாதகர், கற்றோர், கலைஞர் ஆகிய மூவரிடமிருந்து செல்லும் நுண்தொடர்பு வரலாறு தொடங்கிய காலம் முதல் இங்கே நிகழ்ந்து வருகிறது. அது ‘அதிர்வு’ எல்லாம் இல்லை. உளம்சார்ந்தது. ஒரு மனிதன் அவன் சொல்வதன், சிந்திப்பதன், வாழ்வதன் குறியீடாகிவிடுகிறான். அவன் அளிக்கும் தொடர்பு அது. அதுதான் ஆசிரிய- மாணவர் உறவின் அடிப்படை. அதற்காகவே குருகுலங்கள் உருவாக்கப்பட்டன. அருகமர்தல் என உபநிடதம் சொல்வது அதையே.

ஆகவே நேராக நாம் சென்று கேட்கும் ஓர்  உரையில், ஒரு வகுப்பில் உருவாகும் ஒரு தீவிரநிலை வேறெந்த வடிவிலும் எவ்வகையிலும் நிகழ்வதில்லை. உணர்வுத்தீவிரம், அதைக்கடந்த அறிவார்ந்த கூர்மை, அதற்கும் அப்பாலுள்ள ஒரு ஆன்மிக நிலை.

மறுநாள் கோகுல் இல்லத்தின் மாடியில் இருந்த நீண்ட கூடத்தில் உரையாடல். ஐம்பதுபேர் வந்திருந்தனர். இலக்கியம், தத்துவம் என கேள்விகள். வேடிககையும் விஷயமுமாக பதில்கள் என பத்து மணிமுதல் நான்கு மணிவரை தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தோம். இந்த உரையாடல்களின் சிறப்பே இவை உளப்பதிவாக மட்டுமே எஞ்சவேண்டும் என்பதுதான்.

எனக்கு ஐந்தேகாலுக்கு ரயில். நான்கு மணிக்குக் கிளம்பினேன். நண்பர்கள் பத்துபேர் ரயில்நிலையம் வந்து வழியனுப்பினர். ரயிலில் என் முன் ஓர் அண்ணனும் தங்கையும். தங்கைக்கு மூன்று வயது. அண்ணனுக்கு ஐந்து. “அண்ணே அண்ணே” என அவள் அழைத்துக் கொண்டே இருந்தாள். “இரு பாப்பா நான் உனக்கு பெட்டு போட்டு தாறேன்” என அண்ணன் சொன்னார். “மேலே ஏறுறது எப்டீன்னு அண்ணன் சொல்லுதேன், பாத்துக்கோ”. அண்ணனுக்கு பூமிமேல் தெரியாத விஷயமே இல்லை. “ரயில் ஓடுறப்ப மரங்கள்லாம் ஓடுது பாத்தியா…ரயில் நின்னுட்டா அதுங்களும் நின்னுடும். பாத்துக்கிட்டே இரு…காட்டுதேன்”

இரவு படுத்துக்கொள்ளும்போது “பாப்பா இங்க படு பாப்பா” என அண்ணன் கெஞ்ச தங்கை “போடா!” என அதட்டினாள். அண்ணன் கெஞ்ச பாப்பா மிஞ்ச அவர்களின் அம்மா ஏற்கனவே அரைத்தூக்கத்தில் மயங்கியிருந்தாள். “பாப்பா அம்மா கிட்ட படுத்துக்கட்டுமே” என்று நான் சொன்னேன். “பாப்பா பக்கத்திலே இல்லேன்னா எனக்கு பயமாட்டு இருக்குமே” என்று அண்ணன் பரிதாபமாகச் சொன்னான். சரிதான், எதிர்கால எழுத்தாளன்!

பிகு: விழாவில் அமைந்த கட்டணத்தொகையில் செலவு போக எஞ்சியதில் ரூ 25000 எனக்கு மதிப்பூதியமாக அளிக்கப்பட்டது. அது சிறுநீரக அறுவைசிகிச்சை செய்யவிருக்கும் கால்பந்துப் பயிற்சியாளரும், பொதுநல ஊழியருமான இராசகோபால் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

ஓர் அவசர வேண்டுகோள்

(புகைப்படங்கள் ஸ்ருதி டிவி)

முந்தைய கட்டுரைதிருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
அடுத்த கட்டுரைசர்ச்சைகளும் அறிவியக்கமும்- கடிதம்