முதற்புளிப்பு

செம்பருவம்

பச்சைமாங்காய் மேல் ஏன் அந்த பிரியம் என்று தெரியவில்லை. என் சிறு வயதில் ஒட்டுமாங்காய் எங்களூரில் கிடையாது. நான் கல்லூரியில் படிக்கும்போது நாகர்கோயிலில் என் பேராசிரியர் ராஜன் நாயரின் இல்லத்தில்தான் முதன்முதலாக ஒட்டுமாமரத்தைப் பார்த்தேன். அத்தனை பெரிய காய்கள் குலைகுலையாக காய்த்து கிளைதாழச்செய்திருந்தன.

ராஜன் நாயர் “இவற்றின் பழங்கள் நன்றாக இருக்காது. பச்சையாகத் தின்னலாம், சுவையானவை” என்றார். அவர் மனைவி நறுக்கி உப்பு மிளகாய் போட்டுக்கொண்டுவந்து அளித்த மாங்காய் துண்டங்கள் நான் என்றுமே அறிந்திராத சுவை கொண்டிருந்தன.

எனக்கு மாங்காய்களைப் பிடிக்கிறதா, அல்லது அவற்றின் மணத்தையா? அதை எங்களூரில் சுனைமணம் என்போம். மாங்காயின் காம்பு உடைந்து வரும் பாலின் மணம். எரிவது, குருதியை நினைவூட்டுவது, உதடுகளில் பட்டால் கொப்பளிக்கும்.கண்களில் பட்டால் உடனே நீர்விட்டு கழுவவேண்டும். முலைப்பால் விடவேண்டும்.

ஆனால் அந்த மணம்தான் கோடைக்குரியது. கோடை என் இளமையில் இனிய நீண்ட கனவு. பள்ளி விடுமுறை. அன்றெல்லாம் பிள்ளைகளை மே மாதம் மேலும் கடுமையான பயிற்சிகளுக்கு அளிக்கும் வழக்கமில்லை. மே மாதம் முழுக்க அலைச்சல்தான். காடுகளில் வேட்டை. வயல்களில் வெள்ளரிக்காய் தோட்டம் அமைத்திருப்பார்கள், அவற்றில் இரவுக்காவல். ஆறுகளிலும் ஓடைகளிலும் குளியல்.

மேமாதம் திருவிழாக்களுக்குரியது. ஓர் ஊருக்குச் சென்று திருவிழா முழுக்க கதகளி பார்த்து அது முடிந்ததும் அப்படியே அடுத்த ஊர். மே இறுதியிலேயே எங்களூரில் வானம் கறுக்கலாகும். அவ்வப்போது இடியுடன் கோடை மழை பெய்யும். ஜூனில் மழை கொட்டத் தொடங்கும்போது பள்ளிகள் திறக்கும்.

கோடையை மாம்பிஞ்சுக்காலம், மாங்காய்க்காலம், மாம்பழக்காலம் என மூன்றாகவே பிரிக்கலாம். முதல் மாம்பிஞ்சுகள் மிக அரியவை. அவற்றுக்காக அடிதடிகள் நிகழும். அவை மிகப்பிஞ்சாக இருக்கையில் துவர்ப்புச்சுவை மிகுந்திருக்கும். மென்று சக்கையை துப்பவேண்டியிருக்கும். முற்றிய மாங்காய் கடும்புளிப்பு. பின்னர் உள்ளுறைந்த மென்சிவப்பாக இனிமை. அதன்பின் மாம்பழங்கள்…

அன்றெல்லாம் சில வகை மாங்காய்களுக்கு விலையே இல்லை. காட்டுமாம்பழம் என்பார்கள். புறம்போக்கில், கோயில் நிலங்களில், காடுகளில் தானாகவே வளர்ந்து பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றிருக்கும் மாமரங்கள் உண்டு. அவற்றின் காய்கள் மிகச்சிறியவை. மிக உயரத்தில் அவை நிற்பதனால் எறிந்து வீழ்த்த முடியாது. ஏறிப்பறிப்பதும் மிகக்கடினம்.

ஆனால் அவை காற்றில் உதிர்ந்துகொண்டே இருக்கும். சதைப்பற்று குறைவானவை. கெட்டியான தோல்கொண்டவை. கையில் வைத்து ஓர் உருட்டு உருட்டி உறிஞ்சினால் மாம்பழச்சாறு. ஒருநாளில் ஐம்பது நூறு மாம்பழங்கள் சாப்பிட்டுவிடுவோம். மதிய உணவுக்கு வீடுதிரும்பும் வழக்கமே அன்று கிடையாது.

மாங்காய்த்தோழர்கள் என பல முகங்கள் நினைவிலெழுகின்றன. ராதாகிருஷ்ணன் இன்றில்லை. எட்டான் இல்லை. ராபின்ஸன் இல்லை. பலர் என்னை விட வயதானவர்கள். மாங்காய் ஒன்றை கையில் எடுக்கையில் நான் வாழ்ந்து நிறைத்துக்கொண்ட அரிய நாட்களின் சுவையை மணமாக, இனிப்பாக அறிகிறேன்.

நான் எதையும் தவறவிடவில்லை. எனக்கு இலக்கியச்சுவையை ஊட்டிய அம்மாவை விட சுதந்திரத்தின் சுவையை அனுமதித்த அப்பா ஒரு படி கூடுதலாக நன்றிக்குரியவரா? எங்கு சுற்றி எப்போது திரும்பினாலும், முகமெல்லாம் மாங்காய்ப்பால் பட்ட கரிய வடுவுடன் இருந்தாலும், வெயிலில் தலைமுடி காய்ந்து செம்புச்சுருள் போலிருந்தாலும், உடலெங்கும் வேர்க்குரு படர்ந்திருந்தாலும் ஒரு சொல்கூட சொல்லாத வயக்கவீட்டு பாகுலேயன் பிள்ளையின் மணம் இந்த இளமாங்காய்களுக்கு. புளிப்பு, துவர்ப்பு. ஆனால் அவை மெல்ல இனிமையாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

முந்தைய கட்டுரைகே.தாமோதரன்
அடுத்த கட்டுரைதத்துவத்தால் மனிதனுக்கு என்ன பயன்?