தமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-1
ஒரு மொழியின் நவீனத்தன்மையே அதன் செறிவும் கூர்மையும் எனலாம். அவ்வகையில் ஆங்கிலம் தமிழை விட நவீனமானது என்பதில் ஐயமே இல்லை.
ஆங்கிலத்தின் சொற்றொடர்களின் சாத்தியக்கூறுகள் அபாரமானவை. தமிழில் உள்ள மொழிப்பழமைவாத – இலக்கணவாத நெருக்கடிகள் ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கில இலக்கணம் நெகிழ்வானது. ஆங்கிலம் என்பதே கிரேக்க, லத்தீன் மொழிகளின் நவீனப்படுத்தப்பட்ட கூட்டுதான் என்று எலியட் எழுதியுள்ளார்.
பதினெட்டு– பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் கவிதைகளால் இன்றைய ஆங்கில புனைவுநடை உருவாகியது. பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகள் ஆங்கில மொழிக்கு ஏராளமான புத்தம்புதிய சொற்றொடர் வாய்ப்புகளை அளித்தன. ஏனென்றால் அவை ஒருவகை தியான நிலையில் தர்க்கத்தை உதறிவிட்டு எழுதப்பட்டவை. தர்க்கமீறல் என்பது இலக்கணமீறலும்தான்.அந்தக் கவிதைகள் வால்டர் ஸ்காட் போன்றவர்களின் புனைவுகளின் உரைநடையை வடிவமைத்தன. ஜான்ஸன் போன்றவர்களின் கட்டுரை நடையை உருவாக்கின. ஜே.எஸ்.மில் போன்றவர்களின் ஆய்வுநடையே கூட அவ்வாறு உருவானதே. வெவ்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அதே அளவுக்கு வில்லியம் பிளேக் போன்றவர்களின் வசை – பகடிக் கவிதைகளும் மொழியை புதுப்பித்தன என்று ஹரால்ட் புளூம் எழுதியிருக்கிறார். ஜி.கே.செஸ்டர்டன், ஸ்டீவன் லீகாக், ஸக்கி, ஜெரோம் கே ஜெரோம், சார்ல்ஸ் டிக்கன்ஸ் (பிக்விக் பேப்பர்ஸ்) என ஒரு மிகப்பெரிய பகடி எழுத்தாளர்களின் வரிசை ஆங்கிலத்தில் உருவானது. அவர்கள் ஆங்கில மொழிச் சொற்றொடர்களில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கினர். பஞ்ச் என்னும் பகடி இதழ் நூறாண்டுக்காலம் வெளிவந்து ஆங்கில மொழியில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது
(இன்றும் நான் ஆங்கில மொழியின் புதிய சொல்லாட்சிகளுக்காகப் படிக்கும் பெருநூல் பி.ஜி.வுட்ஹவுஸ் தொகுத்த நூறாண்டு நகைச்சுவை (One century of Humour) என்னும் கதை – கட்டுரை தொகுப்பு. படித்துத் தீராத நூல் அது. அதிலுள்ள கதைகளை மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தால் தமிழின் எல்லைகள் தெரியலாகும். நான் ஸக்கி எழுதிய சில கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன்)
பதினெட்டாம் நூற்றாண்டு முதல் ஆங்கிலத்தில் மொழியாக்கங்கள் வந்து குவிந்துகொண்டே இருந்தன. அவை ஆங்கிலத்தை பேருருக் கொள்ளச் செய்தன. உதாரணமாக, சித்திர எழுத்துக்களும் சுருக்கமான பலபொருள் தன்மையும் கொண்ட ஜப்பானிய மொழியில் இருந்து வந்த மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் எத்தனை புதிய அழகை கொண்டு வந்து சேர்த்தன என்று காணலாம். ஆங்கில நவீன உரைநடையே கிங் ஜேம்ஸ் பைபிள் மொழியாக்கம் வழியாக உருவானது என்று எலியட் சொல்கிறார்.
தமிழில் பாரதியில் இருந்து நவீனமயமாதல் ஆரம்பித்தது. ஆனால் அதேசமயம் இங்கே மொழிப்பழமைவாதம் அதற்கிணையான சக்தியாக நீடித்தது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் நவீனத்தமிழ் நமது கல்வித்துறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதே இல்லை. மரபான அறிஞர்களே கல்வித்துறையை தீர்மானித்தனர். கேரளத்திலும் அப்படித்தான். இன்றும் நவீனமொழிக்கு எதிரான மொழிப்பழமைவாதம், இலக்கணவாதம் தமிழில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.
வாங்க
ஆகவே நவீனத்தமிழ் மிகமிக சிறிய அளவில், இதழியல் மற்றும் வணிக இலக்கியம் வழியாகவே மக்களிடம் செல்லமுடிகிறது. இன்றும் நவீன இலக்கியத்திற்கும் பொதுவாசகர்களுக்கும் இடையே தமிழில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. சிந்தனைத்துறையின் கலைச்சொற்கள் பொதுவாசிப்பில் அறிமுகமாகவே இல்லை. ஆகவே தொடர்புறுத்தலுக்காக மொழி தன் கூர்மையை இழக்கவேண்டியிருக்கிறது.
நான் கூடுமானவரை தெளிவாக, திட்டவட்டமாக எழுதுபவன். அதற்காக தொடர்ச்சியாக முயன்றுகொண்டே இருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டுரையை நம் பொதுவாசகன் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. இதன் சொற்றொடரமைப்பும் கலைச்சொற்களும் அவனுக்கு விளங்காது.
ஆங்கிலத்தின் மேலாதிக்கத்திற்கான காரணங்கள் பல. ஒன்று அது புதிய மொழி. ஆகவே இறுகிப்போன இலக்கணம் அதற்கில்லை. கெட்டிதட்டிப்போன மரபுகளும் இல்லை. அது காலனியாதிக்கம் வழியாக உலகமெங்கும் சென்றது. உலகிலுள்ள எல்லா மொழிகளில் இருந்தும் சொற்களையும் சொற்றொடரமைப்புகளையும் பெற்றுக்கொண்டது. நவீன அறிவியலின் மொழியாக அது ஆனபோது அதற்குள் பல லட்சம் கலைச்சொற்கள் உள்ளே வந்தன.
நவீனத்தன்மையை எவ்வகையிலும் விலக்காதது ஆங்கிலம். புதியவற்றை உடனடியாக அது ஏற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில அகராதியில் பல்லாயிரம் புதிய சொற்கள், அயல்மொழிச்சொற்கள் சேர்க்கப்படுகின்றன. ஆங்கில மொழியில் எழுதிய ஜோசப் கான்ராட் போன்ற அயல்மொழி எழுத்தாளர்கள் அந்த மொழியை புதுப்பித்தனர். மொழியாக்கங்கள் வழியாக அந்த மொழி தொடர்ந்து மறுபிறப்பு கொள்கிறது.
A Fine Thread and Other Stories வாங்க
தமிழ் ஏன் நவீனமயமாக்கலில் பின்னடைந்துள்ளது எனில் மேற்குறிப்பிட்ட மனநிலைகள் நமக்கில்லை என்பதனால்தான். நாம் தமிழ் தமிழ் என அரசியல் கூச்சலிடுவோமே ஒழிய மொழியை கற்க மாட்டோம். இன்றைய அரசியலையே பாருங்கள், தமிழை ஓர் அரசியல் கருவியாகக் கொண்டு கடுங்கூச்சல் இடுபவர்களுக்குத்தான் நவீனத்தமிழில் அறிமுகமே இல்லை. அவர்கள்தான் புதியன எதையுமே வாசிப்பதில்லை. எதையும் தெரிந்துகொள்வதுமில்லை
இப்படித்தான் நூறாண்டுகளாக இருந்து வருகிறோம். நமக்கு பழம்பெருமையே முக்கியம். நம் மொழியே உலகின் தொல்மொழி என பெருமைபேசுவோம். ஆனால் எதையும் வாசிக்க மாட்டோம். மிக எளிமையான எழுத்தைக்கூட புரியவில்லை என்று சொல்லி ஏளனம் செய்வோம். புரிந்துகொள்ள நம் தரப்பில் இருந்து எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டோம். நம் மொழியிலுள்ள நவீன இலக்கியங்களை முற்றாகப் புறக்கணிப்போம்.
இந்தக் கட்டுரையை நான் ஒரு யூடியூப் உரையாக போட்டால், அதன் தொடக்கம் மற்றும் அங்குமிங்கும் சில பகுதிகளைக் கேட்டுவிட்டு அதன்கீழே வசைகளைக் கொட்டும் ஒரு பெருங்கும்பல் இங்குள்ளது. ‘தமிழ் ஆர்வலர்’ என சொல்லிக்கொள்வார்கள். ஆனால் ஐந்து நவீன எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்ல அவர்களால் முடியாது. ஏன் தமிழ் பின்தங்கியுள்ளது என்றால் இவர்களால்தான்.
வாங்க
நாம் மொழிப்பழமைவாதமே மொழியை பாதுகாக்கும் என நம்புவோம். மொழியை மாற்றமில்லாத பாறையாக அப்படியே உறைய வைக்க முயல்வோம். பெருமை என்பது நேற்றில் இல்லை, இன்றிலுள்ளது என்னும் எளிய உண்மையை நம்மால் உணரவே முடியாது. நாம் ‘தமிழ்விரோதி’களுக்கு எதிராக இருபத்துநான்கு மணிநேரமும் கம்புசுற்றுவோம். நாமேதான் அந்த எதிரிகள் என உணர்வதில்லை
எந்தப் பண்பாடும் எதிர்நிலைகள் வழியாக வளர்வதில்லை, வாழ்வதுமில்லை. நேர்நிலை முயற்சிகள் வழியாகவே நிலைகொள்கிறது. அப்படி தமிழுக்குப் பெரும்பணி ஆற்றிய பேரறிஞர்கள் இங்கே முற்றிலும் மறக்கப்பட்டவர்கள். பெரியசாமித் தூரன் போல. அல்லது வசைபாடப்பட்டவர்கள் எஸ்.வையாபுரிப் பிள்ளை போல. கொண்டாடப்படுபவர்கள் வெறும் வசைபாடிகள். இதுதான் நம் தேக்கநிலைக்குக் காரணம்.
தமிழ் மொழி மாட்டுவண்டி ஏறிச்சென்ற பாம்பு போல முன்னகர்கிறது என்று சுந்தர ராமசாமி சொல்வார். நவீன இலக்கியம் என்னும் தலை உந்தி உந்தி முன்னகர்கிறது. பின்பக்கம் தமிழின் உடல் நசுங்கி மண்ணுடன் ஒட்டி எடையுடன் அசைவில்லாமல் கிடக்கிறது. தலை அதை இழுத்துச்செல்லவேண்டியிருக்கிறது.
ஜெ