கண்ணனை அறிதல் – கடிதம்
அன்புள்ள ஐயா
நாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகளில் மார்ச் 22 முதல் 24 வரை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
நான் தமிழ் பாடல்களையும் இலக்கியங்களையும் படித்தது இல்லை. சமஸ்கிருத ஸ்லோகங்கள் மட்டும் சிறு வயதில் கற்று கொடுத்து வளர்க்கப்பட்டேன். கோயில்களில் பாடப்படும் தமிழ் பாசுரங்களின் ஓசை மற்றும் கோவில்களில் உள்ள விஷ்ணுவின் உருவங்களால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை பற்றி அறிய இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவு செய்தேன்.
ஆசிரியர் திரு ராஜகோபாலன் அவர்களின் விளக்கம் வகுப்புகளில் பலமுறை சிலிர்ப்பூட்டியது. தத்துவம், வைணவ சித்தாந்த விளக்கம், பக்தியின் பெருமை, பக்தி இலக்கியத்தை வாசிக்கும் முறை, சரணாகதி தத்துவம் என்று இந்த வகுப்புகள் மெல்ல மெல்ல நம் புரிதலை படிப்படியாக மேலே ஏற்றிக் கொண்டே சென்றது. பாசுரங்களும் இதே போல் பல தலைப்புகளாக பிரிக்கப்பட்டு புரிதலை மேலே விரிவடையச் செய்தது. ‘பின்னும் ஆளும் செய்வன்‘ தலைப்பில் இருந்த ஆண்டாள் பாசுரங்களை ஆசிரியர் விளக்கியது கண்ணில் நீர் வரும் படி இருந்தது. அவர் பாசுரங்களில் இருந்த தமிழ் பேச்சு வழக்கில் உள்ள திருநெல்வேலி மொழியை எடுத்துக் கூறியது வகுப்புகளை இன்னும் சுவாரஸ்யமாக்கியது. பக்தி இலக்கியத்தின் தாக்கம் மற்ற கிறித்துவ, இஸ்லாமிய பாடல்களில் இருப்பதை அவர் எடுத்து காட்டியது அவரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியது.
என்னல் இன்னும் இந்த வகுப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை.
திரு மாலோலன் அவர்கள் சந்தை முறையில் பாசுரங்களை பாடிக்காட்டியது, பல கோவில்களில் நடக்கும் விழாக்களின் கதைகள் பற்றி கூறியது சுவையாக இருந்தது, அவர் கோவில்களின் பெருமாள், தாயார், உற்சவர் திருநாமங்கள், உற்சவங்கள், சம்பரதாய முறைகள் எல்லாம் கேட்டவுடன் தங்கு தடை இன்றி கூறி வியப்படைய வைத்தார்.
‘என்ன தவம் செய்தனை‘ இந்த அனுபவத்தை அடைய (தொடங்க) என்று என்னையே நான் கேட்டுக் கொண்டு உள்ளேன். இந்த அனுபவத்தை வழங்கிய ஆசிரியருக்கும், விஷ்ணுபுரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி. சுட சுட உணவு, தங்குமிடம் என்று எல்லா ஏற்பாடுகளையும் திரன்பட செய்த திரு அந்தியூர் மணி அவர்களுக்கும் நன்றி.
முதல் முறை தமிழில் டைப் செய்துள்ளேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி
உமா
*
அன்புள்ள உமா,
இந்த வகுப்புகள் ஓர் ஒருங்கிணைந்த பார்வையை (சமன்வய திருஷ்டி)யை அளிக்கும் நோக்கம் கொண்டவை. இதே ஆர்வத்துடன் சைவத் திருமுறை வகுப்புகளிலும், பைபிள் வகுப்புகளிலும் கலந்துகொள்பவர் அடையும் முழுமையறிவு ஒன்று உண்டு
ஜெ