அறச் சிக்கல் மூட்டிய முதற்கனல்  

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

“பிரபஞ்சத்தையும் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் பிரக்ஞையோடு ஊன்றிக் கவனிக்கவும், புரிந்துகொள்ளவும், அடுத்தவருடன் தொடர்பு கொள்ளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவும் ஒரே கலை, இலக்கியம் மட்டும்தான்!” என்பது பஞ்சாப் எழுத்தாளர் முனைவர் குர்தயாள் சிங் அவர்களின் பிரபலமான கூற்று.

அதற்கேற்ப, பலமுறை, பற்பல வடிவங்களில் அறிந்த மஹாபாரதத்தை, ஒவ்வொருவரின் வாழ்வோடும் தொடர்புபடுத்தவல்லதாக மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ள இலக்கியப் படைப்பே, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘வெண்முரசு’.

இருபத்து ஆறு பகுதிகளாக படைக்கப்பட்ட இந்நூல் தொகுப்பில், குருஷேத்ர ரணபூமியில் நடந்த பேரழிவிர்க்கான முதல் விதை தூவப்பட்ட கதையே, முதல் நூலான ‘முதற்கனல்’.

நாகர்குலத் தலைவியான மானசாதேவியின் சொற்களாக, இப்புடவியின் தோற்றம் குறித்த விவரனையோடு தொடங்கும் இந்நூல், புடவியின் உயிர்ப்பைக் காக்கும் கடமையை அவள் மகன் ஆஸ்திகனுக்கு அளிக்கிறது.

அக்கடமையோடு பயணப்படும் ஆஸ்திகன், பேரழிவிற்கான விதைகளான காமத்தையும், அகங்காரத்தையும் அழிக்கவல்ல சர்ப்பசத்ர வேள்வியைத் தடை செய்கிறான்.

உலகைக் காக்கும் ஒரே வழியாக இவ்வேள்வியை நம்பி நடத்த முயன்ற அபிமன்யூவின் பேரனான ஜனமேஜையனிடம், பிரபஞ்சப் பேரியக்கத்திற்கு அடிப்படையான அதன் முக்குணங்களின் சமநிலை விளக்கப்படுகிறது.

ஆஸ்திகனின் விளக்கத்தை ஜனகன் மறுக்க, அவரின் முதுபெரும்தந்தையான வியாசரை வரவழைத்து சொல்லப்படும் மஹாபாரதப் பெருங்கதையாக இந்நூல் விரிகிறது.

காலம் தோறும் மாமனிதர்கள் எதிர்கொள்ளும் அறச்சிக்கல்களை, பீஶ்மர் மற்றும் வியாசகவியின் வாழ்வு மூலம் எடுத்துக்காட்டியிருப்பதே இந்நூலின் தலையாய அம்சமாகும்.

அஸ்தினபுரியைக் காக்க, காசிநாட்டுப் பெண்களை கவரச் சென்றாலும், செல்லாமல் இருந்தாலும் பெரும் பழியே தன்னைச் சூழும் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பீஶ்மரின் நிலை, வாசிப்போர் அனைவரின் நெஞ்சையும் உருக்கவல்லது.

“தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் மாமனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது என்று அறிக! அவர்களின் குருதியை உண்டுதான் எளியமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தசைகள்மேல் வேரோடியே தலைமுறைகளின் விதைகள் முளைக்கின்றன.” என்பதே இந்நூலில் என்னை மிகவும் கவர்ந்த வரியாகும்.

நெருப்பாக இறையுடன் கலந்த தாட்சாயணியின் துளியாக நெருப்பில் விழுந்து இறக்கும் அம்பை காட்டப்படல், காம இச்சையால் தவித்த யயாதியின் ஆடிப்பிம்பமாக காமத்தைத் தந்தைக்காக துறந்த பீஶ்மர் சித்தரிக்கப்படல் போன்ற அழகியலும், தத்துவமும் நிறைந்த கதாப்பாத்திரப் படைப்புகள் இந்நூலில் ஏராளம்.

“அறிவு என்பது அதிகாரம். அதிகாரம் பொறுப்புகளுடன் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். எப்பொறுப்பை ஒருவன் வகிக்கிறானோ அப்பொறுப்புக்குரிய அறிவு மட்டுமே அவனுக்கு அளிக்கப்படவேண்டும்” போன்ற எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வைர வரிகளும் இந்நூலில் ஏறாளம்.

அத்தோடு, மஹாபாரதத்தின் மாமனிதர்கள் அடையும் குழப்பங்களுக்கான தீர்வுகளாக, அதன் கிளைக்கதைகள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டதின் பின்னுள்ள ஆசிரியரின் கற்பனை வளமும், உலகு குறித்த புரிதலும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்பவை.

இங்கனம், அறச்சிக்கல்களால் மூண்டிருக்கும் இம்முதற்கனலை என்னைப்போலவே, நீங்கள் அனைவரும் வாசித்து மகிழுங்கள்.

நட்புடன்.

இரா. அரவிந்த்.

முந்தைய கட்டுரைஅருவருப்பின் நடுவே ஓர் அற்புதத்திற்கான காத்திருப்பு
அடுத்த கட்டுரைஇசையின் ஆசாரவாதம்