வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு
நண்பர்களே! உங்கள் அனைவரின் மீதும் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக…
நமது வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் விசேஷம் என்னவென்றால், வெறுமனே ஒரு புத்தகத்தை எடுத்தோம் வாசித்தோம் அதை பதிவு செய்தோம் என்று இல்லாமல், வாசிப்பில் புதுமையாக எதாவது ஒன்றை முன்னெடுத்து செய்வது.
அப்படி ஒரு சுபயோக சுபதினத்தில் நமது அட்மின் @கதிரவன் அவர்கள் மிகவும் கடுப்பாக இருந்த நாளில் அவரது “எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உக்காந்து வெண்முரசு படிக்க தோணுது” எனும் போஸ்ட் தான் குழுவாசிப்பு என்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்திருக்க வேண்டும். பிறகு குழுவாசிப்பிற்கான Terms & Condictions முடிவு செய்து அவர் ஒரு பதிவு போட்டதும், நானும் ஆர்வமாக சேர்ந்து விட்டேன்.
கடந்த வருட ஏப்ரல் மாத (30 Days Challenge) வேகவாசிப்பில் கலந்து கொண்டதில் மூச்சு வாங்கி (Ofcourse! என் உடம்பை வைத்துக்கொண்டு நான் ஓடுவதை முயற்சி செய்திருக்க கூடாது தான்…) இளைப்பாறுதலுக்காக மாராத்தான் கூட ஓடாமல் கழன்றுக் கொண்டேன்.
இதோ இந்த வருடம் வெண்முரசின் முதல் பாகமான முதற்கனல் மூலமாக ஆரம்பிக்கின்றது எனது வாசிப்பு.
சிறுவயதில் இருந்து புத்தகம் படிக்கும் பெரும்பாலானோரை போலவே எனக்கும் காமிக்ஸ் தான் ஆரம்ப புள்ளி. அதிலும் கிரீடம் வைத்து, வில்-அம்பு, கத்தி, கதை போன்ற ஆயுதங்களுடன் ஒரு அட்டைப் படத்தை பார்த்துவிட்டால் உடனே வாங்கிவிடுவேன். அந்த அளவிற்கு மாயாஜால கதைகளுக்கும், ராஜா-ராணி காலத்து பேண்டஸிகளுக்கும் மயங்கி கிடந்த நான், இது போன்ற கதைகளின் ஊற்றுக்கண்ணான மாகாபாரதம் எனும் சாகரத்தை அடைந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. இப்படியாக அங்கும் இங்கும் பாரத கதைகள் எனும் சிறு சிறு குளங்களில் மூழ்கி இருந்தாலும், கடலில் நீந்துவது போன்று முழுமையாக வாசித்தது இல்லை.
இனி எனது வாசிப்பு அனுபவம்.
எனக்கு முன்பு பலர் (குறைந்தது 20 பேராவது எழுதிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன்) இங்கு முதற்கனல் பற்றி பதிவு எழுதி விட்டதால், கதைக்குள் போகாமல் என் கருத்துக்களையும் அனுபவங்களையும் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
சிறப்பு:
* ஆசிரியரின் அசாதாரண உழைப்பு : முதலில் ஆசிரியரின் இந்த இமாலய முயற்சிக்கு பாராட்டுக்கள். 7 வருடங்கள் தினம் ஒரு அத்தியாயமாக, 26 பாகங்கள் – 25000+ பக்கங்கள். மகாபாரதத்தின் ஆதிகர்த்தாவாகிய வியாசர் கூட செய்யாத செயல். ஏழு வருடம் பள்ளி படிப்பே கூட பெரும்பாடாக இருக்கும் இந்த காலத்தில், ஒவ்வொரு நாளும் விடாமல் இதற்கென உடலையும் உள்ளத்தையும் ஒருங்கமைத்து தொடர் வேலையாக செய்தல் என்பதற்கு சொல்லில் வடிக்க முடியாத உழைப்பு வேண்டும்.
* பெயர்கள் : அப்பப்பா எவ்வளவு பெயர்கள்! நபர்களின் பெயர்கள், உயிரினங்களுக்கு பெயர்கள், இடங்களுக்கு பெயர்கள், இன்னும் சொல்லப்போனால் செயல்களுக்கு கூட பெயர்கள். ஆம் செயல்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார் ஆசிரியர். ஐம்பதாவது (கடைசி) அத்தியாயத்தில் தட்சனும் தட்சகியும் முயங்கி ஒன்றிணைவதை இவ்வாறு குறிப்பிடுகிறார்
/// அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திசையழிந்து பரந்த கருமையின் வல்லமைகள் முழுக்க அவர்களிடம் வந்து குவிந்தன. அடியின்மையின் மேலின்மையின் வலமின்மையின் இடமின்மையின் முன்பின்மையின் பின்பின்மையின் இன்மையின் மையத்தில் ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர் ///
இந்த ஒன்பது யோகங்களுக்கும் (கூடுதலின் நிலைகள்) கூட பெயர் வைத்திருக்கிறார் ஜெமோ.
* திருஷ்டம்,
* சுவாசம்,
* சும்பனம்,
* தம்ஸம்,
* ஸ்பர்ஸம்,
* ஆலிங்கனம்,
* மந்திரணம்,
* போகம்,
* லயம்
ஒரு சாதாரண செயல், கதையின் முக்கிய பாத்திரம் கூட கிடையாது. அவர்கள் செய்யும் செயலையும் கூட விளாவரியாக விளக்குகிறார். அசுர உழைப்பு.
* வர்ணனைகள் : ஒரு இடத்தை வர்ணிக்க ஆரம்பித்து விட்டால், நாமே நேரில் சென்றால் கூட இவ்வளவு விஷயங்களை கவனித்து இருப்போமா என்று நினைக்கும் அளவிற்கு வர்ணனைகள் நம்மை ஆட்கொண்டு விடுகிறது. மகாபாரதத்தில் பல நாடுகளின், அரசர்களின், அரச வம்சத்தினரின் கதையும் அடக்கம் என்பதால், [பல நாடுகளையும், அதன் பலம்/பலகீனம் பற்றியும், அதன் ஆட்சி அதிகாரத்தைப் பற்றியும், அதன் அரச மகளிரையும், மந்திரி பிரதாணிகளையும், தேர் பாகன், சேடி பெண்டிர் போன்றோரையும் கூட விடவில்லை] அதன்/அவர்களின் வரலாறையும் நம் கண் முன் காட்சிப்படுத்த வேண்டி நீண்ட வர்ணனைகள் கொண்டு அந்த தேசத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
* மேலதிக கதை மாந்தர்கள்: மகாபாரதம் இயல்பிலேயே பல கதை மாந்தர்களைக் கொண்டது. அதை, இன்னும் பல துணை பாத்திரங்கள் மூலமாக மிக கணப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நாம் அறிந்த வரையில் பீஷ்மரின் தந்தை சாந்தனு ஒற்றை பிள்ளை தான். ஆனால் அந்த சாந்தனுவிற்கு சகோதரனை சமைத்து, அவனுக்கும் ஒரு வாழ்வை அளித்திருக்கிறார் ஆசிரியர். கங்கைக்கு பிறந்தவர் பீஷ்மர் என்று தானே அறிந்திருக்கிறோம். அவ்வாறல்ல, கங்கை என்பது கங்கர் குலபெண் ஒருத்தி. அவளுக்கும் குடும்பம் இருக்கு, குலம் இருக்கு, ஊர் இருக்கு என்று ஒரு இனத்தையே உருவாக்கி இருக்கிறார். போலவே அம்பை சகோதரிகளின் தாயையும் முழுமையாக படைத்திருக்கிறார். விதுரனின் தாய் பற்றி என்ன தெரியும் நமக்கு? வியாசம் கூறும் போது போகிற போக்கில் சேடி பெண்டிரில் ஒருத்தி என்று சொல்வதை ஜெமோ சிவை எனும் முழுமையானதொரு பாத்திரமாக்கி இருக்கிறார். சிவைக்கு ஒரு குலத்தை கொடுத்து, அவள் தந்தையை நாடறிந்த சூதராக்கி, அவளுக்கு பணி நேரங்களை ஒதுக்கி, அதன் மூலமாக அவள் இன்னொரு மனிதனின் அருகாமையை அடைய முடியாதவளாக்கி… அப்பப்பா! வடிவேலுவின் வாக்கியத்தில் சொல்வதானால் – என்னா டீடெயிலு!
அறியாத மாந்தர்கள் பலரை இப்படி முழுமையாக உருவாக்கி கதை நெடுக அலைய விட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டால், “இத்துடன் முடியவில்லை. இதோ பார் நீ அச்சரியப்பட இன்னொரு கணை!” என்று தெரிந்த கதாபாத்திரங்களை புது புது வடிவமாக வடித்தெடுக்கிறார். எனக்கு அம்பை, அம்பிகை, சத்தியவதி, விசித்திரவீரியன் போன்றோரை புதிய கோணத்தில் காட்டி இருப்பதாக தோன்றியது. அதுவும் விசித்திரவீர்யன்-அம்பிகையின் நெருக்கம் மனதிற்கு மிகவும் பிரியப்பட்டதாக இருந்தது. அம்பா-பீஷ்மர் மோதலாகட்டும், சத்தியவதி-பீஷ்மர் உரையாடலாகட்டும் மிகவும் அருமையாக இருந்தது. பீஷ்மர்-வியாசரின் உரையாடலும் அவ்விதமே.
சிகண்டியை சுற்றி ஒரு பகுதியே எழுதி வைத்திருக்கிறார். பின்னே பீஷ்மர் முக்கியம் என்றால் அவரை வதம் செய்ய சபதம் செய்த சிகண்டி முக்கியமில்லையா? அவனுடைய கதாபாத்திரமும் முழுமை செய்யப்பட்டுள்ளது.
பீஷ்மரை சமருக்கு அழைத்த பால்ஹிகர் பாத்திரம் எனக்கு பிடிந்திருந்தது. போலவே, பீஷ்மரிடமே அவரது பிறந்த கதையை சொல்லும் சூதனின் அந்த கதையாடல். நான் மிகவும் ரசித்த பகுதி அது. ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியின் எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு பகுதி அது. இவ்வளவு சீரியஸான ஒரு கதையில் இதை சொருகிய ஜெமோவின் திறமையை பாராட்டாமல் இருக்க இயலாது.
பீஷ்மர்! எப்படிப்பட்ட கதாபாத்திரம்? அவர் இல்லாமல் மகாபாரதமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரிய மனிதர். எங்கு நின்றாலும் அனைவருக்கும் மேலே பல படிகள் உயர்ந்து நிற்கதக்க ஒரு ஆளுமை. 90களில் டீவி-யில் தொடராக வந்த போது, முகேஷ்கண்ணா (சக்திமானாக நடித்தவர்) அவர்களை வைத்தகண் வாங்காமல் பார்த்து வளர்ந்தவன். காரணம் பீஷ்மர் எனும் ஆகிருதி அப்படிப்பட்டது. ஆனால் அவரும் மனிதர் தானே. அவருக்குள்ளும் குழப்பங்களும், சந்தேகங்களும், வருத்தங்களும், ஏக்கங்களும் இருக்கத்தானே செய்யும்?. ஆம்! அப்படித்தான் வெண்முரசின் பீஷ்மர் இருக்கிறார். இன்னும் சில பொழுதுகளில் பரிதாபமாக கூட தெரிகிறார். யுதிஷ்டிரனின் தேர் சக்கரம் போல ஒரு அடி உயரத்தில் சஞ்சரித்த அவரை ஜெமோ கீழே பிடித்து பூமியில் கால்பதித்து நடக்க வைக்கிறார். அது வரை அண்ணாந்து பார்த்து பழக்கப்பட்டவருடன் நாமும் ஒன்றாக சேர்ந்து நடக்க முடிகிறது இந்த வெண்முரசு உலகில்.
மன்னிக்க வேண்டும். பதிவு நீண்டு கொண்டே போகிறது…
சத்தியவதி – பீஷ்மரே கூட முகம் பார்த்து பேச தயங்கும் பேரரசி. வியாசரைக் கூட “கட்டளை வந்ததும், கட்டுப்பட்டேன்” என்று வந்து நிற்க வைக்கும் ராஜமாதா. ஆனால், அவரை “தீச்சொல்” (சாபத்திற்கு ஜெமோ வைத்திருக்கும் புதுப் பெயர்) சொல்லி நாமே திட்டும் அளவிற்கு உருமாற்றி இருக்கிறார் ஆசிரியர். அது சரி! அவர் என்ன செய்வார்? எல்லாவற்றிற்கும் இருக்கவே இருக்கு நெறிநூல்கள். அவைகள் தானே மகாபாரதத்தில் அனைவரையும் ஆட்டி வைக்கும் சூத்திரதாரி. ஆனாலும் ஆண்களின் உலகில் வாழ வேண்டுமானால், அரசாட்சி செய்ய வேண்டுமானால், ஆணுக்கு சார்பான ஆண் உருவாக்கி வைத்த சட்டங்களின் வழி தான் நடக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் அரசி.
இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே ஜெமோவின் கைப்பட்டு வேறுபட்ட உருவங்களாக மாறித்தான் விட்டார்கள் என்று சொல்ல வேண்டும். ஆகவே, கதாபாத்திரங்களைப் பற்றி சொல்லிக்கொண்டு போனால் இன்னும் இன்னும் என பதிவு இழுத்துக்கொண்டு தான் போகும். நிறுத்திக் கொள்கிறேன்.
* மொழி : ஜெமோ தமிழ் மொழியின் மறுக்க முடியாத ஆளுமை என்பதை இந்த வெண்முரசு கட்டியம் போட்டு கூறுகிறது. சிற்சில அத்தியாயங்களை ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று கூட வாசித்து இருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு அந்த மொழியில்.
* ஓவியங்கள் : இந்த நாவலுக்கு மிகப்பெரிய பிளஸ் ஷண்முகவேல் அவர்கள் வரைந்த ஓவியங்கள். இன்றெல்லாம் பார்த்துக்கோண்டே இருக்க வைப்பவை அவை. பல அத்தியாயங்களின் கதையை அந்த ஒற்றை வண்ணப்படம் சொல்லிவிடுகிறது. செந்நிற அம்பையின் ஓவியம் ஒற்றை சோறு பதம்.
சில நெடுடல்கள் (எனக்குள்):
* ஆங்கில கனவு புதினங்களுக்கு இணையாக இங்கு புத்தகங்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. அதை இந்த வெண்முரசு தீர்த்து வைத்தது. அதற்கு ஆசிரியருக்கு ஒரு சல்யூட்! ஆங்கில நாவல்களில் ORDER/CHAOS என்று இருவேறு பிரிவாக பிரித்து விடுவார்கள். நல்லது / கெட்டது. இதில் (கேயாஸ்) கெட்டதை பிரதிநிதித்துவப் படுத்துவது நாகங்கள் தான் பெரும்பாலும்.
அது போன்றதன் வெளிப்பாடு தான் நாவலின் ஆரம்பத்திலும் முடிவிலுமாக நம் கண் முன் விரியும் நாகலோக காட்சிகளும், நாவல் முழுக்கவே எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நாகங்கள் மற்றும் நாகர்கள் என்று நான் புரிந்துகொண்டேன். ஆனால், இவர்கள் யார்? நம்மை போன்ற மனிதர்களா? அல்லது வேறு ஒரு இனமா? நம்மை போன்ற உருவம் கொண்டவர்களா? அல்லது நாகம் போன்ற உருவம் கொண்டு உலாவுபவர்களா?
வாலி, சுக்ரீவன், அனுமன் போன்றோர் வானரம் என்று ஒரு தனி இனம் என்பதில் நமக்கு தெளிவு இருக்கிறது. அவர்கள் நம்மை போன்ற உருவம் உள்ளவர்கள். முகம் மட்டும் குரங்கை ஒத்து இருக்கும். பலசாலிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாவலில் வரும் நாகர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஆயிரம் தலைகளுடன் தட்சனும் தட்சகியும் ஆடுபவர்கள் என்றால், அவர்கள் நாக உருவமா? அல்லது முதுநாக சூதர்கள் கதை சொல்லும் போது நம்மை போன்ற மனிதர்களா? ஆசிரியர் இதை தெளிவு படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஓரு வேளை – எல்லாவற்றையும் போல – அதன் விளக்கம் பின்னால் வருகிறதோ…?)
* தனித்தமிழ் நடையில் எழுதப்பட்டது என்று தான் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால், நிறைய வடமொழி சொற்கள்/பெயர்கள். அது நாவலுக்கு ஒருவிதமான சர்ரியல் (Surreal) தன்மையை கொடுக்கிறது தான். இருந்தாலும் சில அமைச்சர்களின் பெயர்கள் வாயிலேயே நுழையவில்லை. சரி! கதை நடப்பது வடநாடு என்பதால் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், பாரதவர்ஷம்?! ஏன் அதை தமிழில் சொல்ல முடியாதா என்ன?
* ஒரு காட்சி நடந்து முடிந்த பின் அதை விரிவாக விளக்கும் பாணியை இந்த நாவலில் கடைபிடிக்கிறார் ஆசிரியர். அதாவது பீஷ்மர் அம்பை சகோதரிகளை தூக்கி கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு வந்த பிறகு, அம்பை சகோதரிகளும் அங்கு சுயம்வரத்தில் இருந்தவர்களும் என்ன நினைத்தார்கள் என்பதை சொல்லுதல் போன்று. அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் தினம் ஒரு அத்தியாயம் என்று படிக்கும் போது சில நேரங்களில் குரூப்பில் “பல்பு” வாங்க வேண்டியது வந்து விடுகிறது. வியாசரை ஏன் பீஷ்மருக்கு தமையனாக்கினார் (அண்ணன்) எனும் என் கேள்விக்கு இன்னும் ஜெமோ பதில் தரவில்லை – அட! நாவலில் தான்.
இப்போதும் கூட இந்த பதிவை முடிக்க மனது வரவில்லை. இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு என்பது போன்ற ஒரு உணர்ச்சி எழுகிறது. அப்படி எழுதினால் நீங்கள் அனைவரும் என் வீடு தேடி வந்து அடிப்பீர்களோ என்ற பயம் இருப்பதால் – இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
நன்றி! அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
சிநேகத்துடன்
சிராஜூதீன்