சினிமா, இரட்டை நிலைபாடுகள்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்

மஞ்ஞும்மல் பாய்ஸ்- கடிதம்

குடியும் கோமாளிகளும்

அன்புள்ள ஜெ

நான் ஒரு பொதுவான வாசகி. தீவிரமாக இலக்கியமெல்லாம் வாசிப்பதில்லை. திராவிட இயக்க ஆதரவாளரும்கூட. என் குடும்பப் பின்னணியும் அப்படித்தான். என் நண்பர்கள் பலர் உங்களைப் பற்றிச் சொல்லும்போது இங்கே பலர் (குறிப்பாக திராவிட இயக்க எழுத்தாளர்கள்) உங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்பால் மட்டுமே நிலைபாடு எடுக்கிறார்கள் என்று சொல்வார்கள். அவர்களுக்கு அரசியலை விடவும் கொள்கைகளை விடவும் உங்கள் மீதான வெறுப்பே முக்கியம் என்பார்கள். அதை நான் மறுத்து வாதாடி வந்தேன்.

ஆனால் அண்மையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் விவகாரத்தில் உங்கள் மீதான விமர்சனங்களைப் பார்த்தேன். அந்த சினிமா தமிழர்களால் கொண்டாடப்பட்டது. அதை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். இந்தச் ஆகவே உங்கள் மேல் சாதாரண ரசிகர்களின் கடும் எதிர்ப்பு வரும். இந்தச் சமயத்தில் உங்களை அடித்தால் பத்துபேர் ஆதரவு தெரிவிப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. இதை மட்டும்தான் உங்கள் எதிரிகள் யோசித்தார்கள் என்று தெரிகிறது. எந்த வகையான நிலைபாடும் இல்லை. கீழ்த்தரமான வசைகள்.

என் ஆச்சரியம் என்னவென்றால்  பெண்கள் பலர் இந்த விஷயத்தில் உங்களை வசைபாடியிருந்ததுதான். அவர்களும் இதே காழ்ப்பு கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் “எப்படி பொறுக்கி என்று சொல்லலாம்?” என்றார்கள். அவர்களிடம் நான் இந்தச் சிதம்பரம் என்ற இயக்குநர் மேல் மிடூ குற்றச்சாட்டுகள் உள்ளன என்று தெரியுமா? அப்படி குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை நீங்கள் பொறுக்கி என்றுதானே இது வரை வசைபாடினீர்கள். இப்போது ஜெமோ அவரை திட்டிவிட்டால் அவர் உடனே இடதுசாரியும் முற்போக்கும் ஆகிவிடுவாரா என்று கேட்டேன்.

பலருக்கு மேலும் கோபம்தான் வந்தது. ஒரு பெண் உடனே மீடூ குற்றம் சாட்டிய பெண் ஒரு கீழ்த்தரமான நடிகை என பேச ஆரம்பித்துவிட்டார். சமூக வலைத்தளங்களில் குறைந்தபட்ச நேர்மை என்பதுகூட இல்லை வெறும் காழ்ப்புதான் என்ற நினைப்பு வந்துவிட்டது

தீபிகா அருண்

 

அன்புள்ள தீபிகா,

சமூகவலைத்தளங்களில் கொள்கைகள் உள்ளன என இதுவரை நம்பியிருந்தமைக்கு வாழ்த்துக்கள். சிதம்பரம் என்ற இயக்குநர் மேல் மிடூ குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருடைய ‘இமேஜ்’ அத்தகையது. அதன் கதைநாயகன் ஸ்ரீநாத் ஃபாஸி போதை வழக்கில் கைதானவர்.

இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  ஆகவேதான் உடனடியாக அந்த சினிமாக்கும்பல் தங்களுக்கு எதிரான விமர்சனத்தை ‘சங்கி’ விமர்சனம் என திசைதிருப்புகிறது. அது உடனடியாக ஆதரவும் பெறும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு ஆதரவாகக் கருத்து சொன்ன எழுத்தாளர்கள், அமைச்சர் உட்பட அனைவருக்குமே தெரிந்தவைதான். வைரமுத்துவுக்கு ஒரு கேரள விருது வந்தபோது அங்குள்ள நடிகையர் முன்னிலை வகித்த அமைப்புகள் அவர் மிடூ வழக்கில் சிக்கியவர் எனச் சொல்லி கண்டித்து விருதை திரும்பப்பெச்செய்தனர். இந்த விவகாரத்தில் அவர்கள் ஏன் சிதம்பரமும் அதே குற்றச்சாட்டு கொண்டவர் என்பதனால் அவர் மேல்  ஓர் எளிய கண்டனத்தைக்கூட செய்யவில்லை? எழுத்தாளர்கள் எப்படி அவரை முற்போக்கு என முத்திரையடிக்கின்றனர்? ஏனென்றால் சிதம்பரம் பிரதிநிதித்துவம் வகிப்பது ஒரு பெரிய சினிமாக்கும்பலை.

இங்கும் அதேதான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வசைபாடி இன்பமடையலாம் என்பது மட்டுமே திட்டம். அதற்கு ஒரு கூட்டம் சேரும் என அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் இதெல்லாம் எந்தவகையிலும் நீண்டகால அளவில் பயனளிக்காது. ஏனென்றால் நான் பேசிக்கொண்டிருப்பது கொஞ்சம் வாசிக்கும் வழக்கமும், கொஞ்சம் நுண்ணுணர்வும் கொண்ட சிலரிடம். சினிமா அன்றி வேறு விவாதங்களையே கவனிக்காத கும்பல் இப்போது அடுத்தக் களத்துக்குச் சென்றுவிட்டிருப்பார்கள்.. என்னை வாசிக்க வந்தவர்கள்: இங்கே நீடிப்பார்கள்.

*

மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் வெளிவந்து தமிழகத்தில் வெற்றிபெற்றபோது இங்கே சினிமா உலகில் ஓர் அதிர்வு உருவானது. அதை ஒட்டி உருவான சர்ச்சைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் இருப்பதாக அங்கேயும் இங்கேயும் சோட்டா அறிவுஜீவிகள் சொன்ன ’உழைக்கும் மக்களின் வாழ்க்கை’  ‘இன்றைய இளைஞர்களின் தியாக உள்ளம்’ என எதையுமே சினிமாக்காரர்கள்  சொல்லவில்லை. அவர்கள் பேசிக்கொண்டிருப்பதே வேறு

சினிமாக்காரர்களின் பார்வையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் survival movie எல்லாம் இல்லை. அது இன்றைய ‘Low Level Youth’  எனப்படும் ஒரு கூட்டத்தின் ‘vibe’ ஐ சரியாகப் பிடித்த படம். அந்தப் படம் ஓடியது அதன் முதல்பகுதியில் அந்த குடியும் கொண்டாட்டமும் காட்டப்பட்டிருந்தமையால் மட்டும்தான். அதை நியாயப்படுத்த கடைசியில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட சாகசம், செண்டிமெண்ட்.

உண்மைக்கதை என்ற பாவலாதான் மிகப்பெரிய வணிக மோசடி. உண்மையில் அந்த நிகழ்வு சாதாரணமாக நிகழ்ந்தது. தீயணைக்கும்படையினரும் தயங்குமிடத்தில் முழுப்போதையில் ஹீரோ இறங்குவதெல்லாம் எந்த யோக்கியமான மலையாளப்படமும் காட்டுவது அல்ல.  வணிகசினிமாவின்  வழக்கம்போல பல மடங்கு மிகையாக்கப்பட்டுள்ளது.அத்துடன் அந்த கிளைமாக்ஸின் செயற்கை உச்சம். தமிழ்ப்பாட்டு ஒன்றை பின்னணியில் ஒலிக்கவிட்ட உணர்வுச்சுரண்டல். இது மலையாள சினிமாவின் சிறந்த படங்கள் எதிலும் இல்லாத வழக்கம்.

மஞ்ஞும்மல் பாய்ஸ் கொரிய சினிமாவை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழர்களை உத்தேசித்து எடுக்கப்பட்ட ஒரு போலிப் படம். அதன் வெற்றியின் காரணம் ‘யூத்துகளின் கொண்டாட்டம்தான்’ .அதே ஃபார்முலாவைத்தான் மறுபடி நிகழ்த்தவேண்டும், அதுதான் வெற்றிபெறும். இதுதான் இன்று தமிழ் படவுலகின் மனநிலை. இதேபோன்ற பல படங்கள் உடனே வருமென நினைக்கிறேன்

அந்த குடிக்கூத்தாட்டம்தான் படத்தை வெற்றிபெறச் செய்தது என வாதாடிய ஒரு சினிமா நிபுணர் சொன்னார், ”சர்வைவல் சினிமா என்றால் தமிழ்ப்படமான அறம் மேலும் பலமடங்கு நேர்மையானது, உண்மையானது. அதை ஏன் இளைஞர்கள் கொண்டாடவில்லை? ஏனென்றால் அதில் இளைஞர்களின் ‘வைப்’ இல்லை'”

சினிமாக்காரர்களுக்கு இங்கே மஞ்ஞும்மல் பாய்ஸை கொண்டாடும் சோட்டா அறிவுஜீவி ஒரு மடையன் என்று தெரியும். சினிமாக்காரர்கள் பணம் முதலிடு செய்யவேண்டும். யதார்த்தத்தை நம்பியே முதலீடு செய்யமுடியும். பொய்களை பொய் என அறிந்தே ஆகவேண்டும். அவர்களின் புரிதல் என்பது Feedback வழியாக உருவாவது. நேரடியாக திரையரங்கிலிருந்து பெறப்படுவது.

*

வணிக சினிமா மக்களை உடனடியாக மாற்றிவிடும் என நான் நினைக்கவில்லை. வணிக சினிமா நல்லுபதேசமாக இருக்கவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. வணிக சினிமா ஒரு கேளிக்கை, ஒரு தொழில். அது வாழ்க்கை அல்ல. கலையும் அல்ல. அந்த எல்லை பார்ப்பவர்களுக்கும் தெரியும். வணிக சினிமாவில் கதைநாயகன் அநீதியை தட்டிக்கேட்பதனால் எந்தச் சாமானியனும் அநீதிக்கு எதிராக எழுந்துவிடுவதில்லை.

நான் எதிர்வினையாற்றியது மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தில் குடி, பொறுப்பின்மை ஆகியவற்றை இயல்பாக்கம் செய்திருப்பதைக்கூட அல்ல. அந்தப்படம் காடுகளில் மதுவருந்தி ஆட்டம்போடுவதை நியாயப்படுத்தியிருப்பதைத்தான் என்னால் தாளமுடியவில்லை.

ஏனென்றால் டாப் ஸ்லிப்பில் மதுக்குப்பி குத்தி கால் வீங்கி அழுகி சாகும் நிலையில் இருந்த யானை ஒன்றை 2007ல் கண்டது முதல் என்னுள் அது கெட்ட கனவாக நீடிக்கிறது. மதுக்குப்பிகளை வீசுபவர்களுக்கு எதிராக பலமுறை மிகையாக எதிர்வினையாற்றியிருக்கிறேன். அடிதடி வரைக்கும்போனதுண்டு. யானை டாக்டரில் உ உள்ளது அந்த உணர்ச்சிதான். அதுதான் அக்கட்டுரையின் உணர்ச்சிகளின் சாரமும்.

ஜெ

Manjummel Boys director Chidambaram faces allegations of sexual assault by Jan E Man actress Prapti Elizabeth

Social Media Storm: Actress Makes Shocking Allegation Against ‘Manjummel Boys’ Director

Malayalam film industry caught in drug abuse scandal, Kerala police launch inspections and investigation

முந்தைய கட்டுரைவிந்தன்
அடுத்த கட்டுரைஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா