நண்பர் ஈரோடு கிருஷ்ணன் பொறுப்பில் கே.வி.அரங்கசாமி, பிரதீப் முதலிய நண்பர்களின் உதவியுடன் நிகழும் யான் அறக்கட்டளை ஈரோடு பகுதிகளில் கல்விப்பணிகளை ஆற்றி வருகிறது. பழங்குடிகளிடம் பணியாற்றி வரும் அன்புராஜ்,தோழர் வி.பி.குணசேகரன், காந்தியச் செயல்பாட்டாளர் சுனீல் கிருஷ்ணன், கல்வியாளர் அனீஷ்கிருஷ்ணன் நாயர், தாவரவியலாளர் லோகமாதேவி என பலர் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். திருப்பூர் அனந்தகிருஷ்ணன் போன்ற நண்பர்கள் உதவுகின்றனர். மாநில அரசின் பழங்குடிநலத்துறை, கல்வித்துறை அமைச்சக ஆதரவும் உள்ளது.
பழங்குடி மாணவர்களுக்கான கல்வியுதவிகள், ஈழ அகதி மாணவர்களுக்கான உதவிகள் ஆகியவற்றுடன் கல்லூரி மாணவர்களுக்கான சிந்தனைத்துறை அறிமுக நிகழ்வுகளையும் செய்து வருகிறார்கள். அண்மையில் அவர்கள் செய்த ஒரு பணி சோளகர் குழந்தைகளை மலையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து விமானத்தில் சென்னைக்குக் கொண்டுசென்று, அங்கே ஒருநாள் கோளரங்கம் முதலியவற்றைச் சுற்றிக்காணவைத்து, ரயிலில் திரும்பக் கொண்டுவந்து விடுவது.அம்மாணவர்கள் பலர் பேருந்தில்கூட ஏறியிராதவர்கள். அந்தியூர் வரைக்கும்கூட வந்திராதவர்கள்.
அம்மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை ஏற்கனவே அளிக்கப்படுகிறது. வெளியுலக அறிமுகம் அவர்களுக்குக் கல்விகற்கும் ஊக்கத்தை அளிக்கும் என்பது எதிர்பார்ப்பு. இத்தகைய முயற்சிகள் ஏற்கனவே பயனளித்துள்ளன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மிகச்சிறப்பான நிகழ்ந்தேறியது அம்முயற்சி.
நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஜெ
கிருஷ்ணன் கடிதம்
பறந்து முடித்த பின்…
ஒரு பத்து நிமிடம் உனக்கு சிறகு முளைத்து நீ வானில் பறந்து பார்க்கும் அனுபவத்தை கற்பனையில் விவரி என்பது நாங்கள் வைத்த கேள்வி:
” அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பறவைகளுக்கு இணையாக பறந்து செல்வது மகிழ்ச்சியாக இருக்கும், புது பறவை நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் அவை 10 நிமிடம் தான் நீடிக்கும் பின்னர் தரையிறங்கியதும் பெரிய சோகம் இருக்கும் ” இது 8 ஆம் வகுப்பு படிக்கும் அருண் என்கிற பழங்குடி மாணவன் பதில்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் என்பது ஒரு மலை கிராம பஞ்சாயத்து. அங்கு சோளகர் இனத்தை சேர்ந்த பழங்குடிகள் உள்ளனர். மொத்தமே இவர்கள் 40,000 பேர் தான் உள்ளனர். கார்நாடகாவிலும் ஈரோடு மாவட்டத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். ஊராளிகள் போன்ற உட்பிரிவும் உண்டு. சோளகர் மொழி என்பது கன்னடம் தமிழ் மற்றும் சோளக மொழியின் கலவை இதற்கு எழுத்துக்கள் இல்லை. இவர்கள் பெரும்பாலும் போக்குவரத்து குறைவான வனப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். நீங்கள் சோளகர் இன அரசு அதிகாரிகளையோ அல்லது தனியார் துறையில் உயர் நிலையில் இருப்பவரையோ பார்ப்பது அரிது. பர்கூர் மலைப்பகுதியில் போதுமான அளவுக்கு அரசு பள்ளிகள் இருந்தாலும் இந்த இனத்தை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை குறைவு, இவர்களின் இடை நிற்றல் மிக அதிகம். இவர்கள் உயர்கல்விக்கு செல்லுதல் மிக மிக அரிது. இயல்பிலேயே கல்வி இவர்களுக்கு கடினமாக உள்ளது. இவர்களின் பள்ளி வருகையை அதிகப்படுத்த நான் ஒருங்கிணைப்பாளராக உள்ள யான் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று சோளகர் பழங்குடி மாணவர் ஒருவர் பள்ளிக்கு வந்தால் தினமும் உதவித் தொகை வழங்குவது. கடந்த ஒரு ஆண்டாக இது பயனளித்து வருகிறது. இப்போது சுமார் 50 மாணவர்கள் இந்த உதவி பெறுகிறார்கள், ஒரு மாணவருக்கு மாதம் சுமார் 400 கிடைக்கும்.
இவர்களின் கல்வி ஆர்வத்தை அதிகப்படுத்த ஆறு மாதம் முன் நானும் ஆசிரியர் நவநீதனும் இந்த மாணவர்களை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காட்டலாம் என திட்டமிட்டோம். இப்போது இவர்கள் விமானம் ஏறி ரயிலில் திரும்பி உள்ளனர். இந்த ஒரு நாள் அவர்கள் கனவுக்குள் சென்று திரும்பினார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்புக்கு மேல் ஒன்பதாம் வகுப்புக்குள் உள்ள 7 பள்ளிகளில் சுமார் 75 பேருக்கு தேர்வு நடத்தி இந்த 19 சோளகர் மாணவர்களை தேர்வு செய்தோம், இருவர் பழநியைச் சேர்ந்த இருளர் மாணவர்கள். மாணவர் நலனில் அக்கறை கொண்ட மூன்று ஆசிரியர்கள், யான் கல்லூரி மானவர்கள், பர்கூர் பழங்குடி ஊராட்சி தலைவர் திரு மலையன் ஆகியோர் கொண்ட குழு அமைந்தது. 32 பேர் கொண்ட குழுவில் 29 பேர்களுக்கும் திரு மலையனுக்கும் இது முதல் விமான பயணம், முதல் மெட்ரோ பயணம். கோளரங்கம், ஐ டி நிறுவனம், கடற்கரை போன்றவற்றை சுற்றிக் காட்டினோம். இவர்கள் பெரு நகரையோ, ரயில் நிலையத்தையோ பார்த்தது இல்லை. ஏற்கனவே இதை பற்றி இவர்கள் பர்கூர் மலை முழுவதும் பரப்பி விட்டார்கள்.
இந்த பயணத்தை ஆவணப் படமாக எடுத்து மற்ற மாணவர்களுக்கும் திரையிட்டு காட்ட முடிவுசெய்தோம். திட்ட ஏற்பாடுகள் துவங்கியதில் இருந்தே உற்சாகம் ஒருபுறமும் எதிர்பார்ப்பு ஒருபுறமும் தொற்றிக் கொண்டது. இதுபோன்று ஒரு மாணவனுக்கு சிக்கப்பூர் செல்ல வாய்ப்பு கிடைத்தும் அவர் பெற்றோர் கடைசி நேரத்தில் அனுப்ப மறுத்துவிட்டார் என்ற செய்தி கேட்ட எங்களுக்கு சற்று கவலை பற்றிக் கொண்டது. கட்டணத்தில் கழிவு கொடுக்கச் சொல்லி அனைத்து விமான நிறுவனத்திடமும் கோரிக்கை விடுத்தோம், மின் அஞ்சலில் வெற்றுப் பொன்னாடைகளை போற்றினார்களே ஒழிய எவ்விதத்திலும் உதவவில்லை. சென்னைக்கு வந்து பழங்குடி நலத்துறை இயக்குனரிடம் ஒரு அனுமதி, பள்ளிக் கல்வி துறையிடம் இன்னொரு அனுமதி என வாங்க வேண்டி இருந்தது. நண்பர் வழக்கறிஞர் செந்திலும் செய்தியாளர் தங்கமணியும் உதவினார்கள். ஒவ்வொரு மாணவரின் ஆதார் சேகரித்தல், அவர்களின் பெற்றோரை மூன்றுமுறை சந்தித்து உறுதி படுத்திக் கொள்ளல் என சற்று அலைக்கழிப்பு இருந்தது. எங்கள் குழு மலையில் வனத்துக்குள்ளும் கடினமான சாலைகளில் சென்றும் இந்த ஏழு பள்ளிகளை அணுக வேண்டி இருந்தது. நாள் நெருங்க நெருங்க மாணவர்களின் உற்சாக நிலை பொங்கத் துவங்கியது நமது கவலை கரையாமல் அப்படியே இருந்தது. இதற்கு இடையே திண்டுக்கல் ஆவணப் பட இயக்குனர் சாவியோ தனது குழுவுடன் வந்து யான் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து சாத்தியமான அனைத்து இடத்திலும் படப்பிடிப்பு நடத்தினார்கள். தொலைதூரத்த்தில் வீடு அமைந்துள்ள மாணவரின் வீட்டுக்கு சென்று அவன் அன்றாடம் பள்ளிக்கு வரும் பாதையை பதிவு செய்துள்ளார். அவனுக்கு கிட்டத்தட்ட தினமும் ஒரு சபரிமலை ஏற்றம். இறுதி நாள் படப்பிடிப்பில் கடினமான மலையை கடந்து சென்று ஒரு மாணவனை சந்திக்கச் சென்ற போது அந்த மாணவனின் தாய் அவனை அனுப்ப முடியாது என இயக்குனர் சாவியோவிடம் கூறி விட்டார் , சற்று விரக்தி அடைந்த சாவியோ “நான் திண்டுக்கலில் இருந்து இவ்வளவு மேலே வரக் காரணம் உங்கள் மகனை வாழ்வில் மேலே கொண்டு வரத் தான்” எனக் கூறினார். அவனின் தாய் ஒப்புக் கொண்டு பயணத்துக்கு அனுப்பி வைத்தார்.
கிளம்புவதற்கு முந்தைய நாள் ஒரு மாணவி பூப்பு எய்திவிட்டார், அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர். நவநீதன் சாரும் பிற ஆசிரியைகளும் அழைத்து பேசி இளநீரிலேயே அப்பெண்ணை நிரம்ப வைத்து அழைத்து வந்தனர், அந்த மாணவி பூப்படைந்த அனைத்து மகளிரிலும் வினோதமான ஒரு முதிர் வாழ்வுக்குள் புகுந்தார். 33 கிராமத்துக்கும் தலைவர் திரு மலையன், முதன் முதலில் விமானம் ஏறியவர் ரப்பர் நாவலில் வரும் கண்டன் காணியைப் போல இறங்கும் வரை நின்று கொண்டே வந்தார். அவரால் விமானம் வானில் நுழைவதை நம்ப இயலவில்லை. மாணவர்களை முதலில் வியப்படைய வைத்தது கோவை விமான நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டுகள், இது பாம்பு போல நெளிந்து நெளிந்து தங்களை சுமந்து செல்வதை அவர்களால் நம்ப முடியவில்லை. நமது கேள்வித் தாளில் பறக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என கற்பனையில் விவரி என ஒரு கேள்வி இருந்தது, விமானம் கிளம்பியதும் தங்களது பதிலை அனுபவத்தில் உணர்ந்தனர். பின்னர் குளிர்சாதன பஸ், ஐ டி நிறுவனம் மற்றும் கோளரங்கம் இது அவர்கள் முன்பின் அறியாதது. இறுதி ஆச்சர்யமாக மெரினா கடலும் மணலும். அச்சம் வியப்பு ஆனந்தம் ஒரே நேரத்தில் அவர்களை தாக்கியது. நிலவின் அடியில் வாழ்வின் உன்னத இரவில் திளைத்தனர்.
ஊர் திரும்பிய காலை ஈரோடு ரயில் நிலையத்தில் இக் குழுவை சந்தித்த போது ஒரு பெருவாழ்வின் ஒரு நாளை வாழ்ந்து தீர்த்த நிறைவுவும் சோர்வும் இவர்களுக்கு இருந்தது. மலை கிராமத்தில் வீடு திரும்பும் ஒவ்வொரு மாணவனின் வீட்டின் முன்பும் சக மாணவர் கூட்டம், அருகே வசிப்போர் கூட்டம். ஒரு சாதனை நிகழ்த்தி வந்தது போல இந்த சிறுவர்கள் உணர்ந்தனர். இப்போது பள்ளி சேர்க்கை நடைபெறுகிறது, இதை நோக்கித் தான் இந்த முயற்சி. பள்ளிவாரா மாணவர்கள், இடை நின்ற மாணவர்கள் ஆகியோரை ஈர்க்க இந்த திட்டம். கல்வியில் இருந்து ஒதுங்கிய மாணவர்களுக்கு ஒரு இழப்புணர்வு இப்போதே தோன்றிவிட்டது, கூடவே சில ஆசிரியர்களுக்கும். அடுத்த ஆண்டு இன்னொரு குழு இன்னொரு பயணம்.
கிருஷ்ணன், ஈரோடு.