கொரியாவில் ஒரு சந்திப்பு

கொரியாவிற்கு வந்திருந்த கப்பல்காரன் சாகுல் அண்ணாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கடிதம்மூலம் தான் உந்தப்பட்டு சுக்கிரி குழுமத்தில் இணைந்தேன். 2020 கொரானா காலகட்டம் முதல், வாரம் ஒரு சிறுகதை என்று வாசித்து கலந்துரையாடி வருகிறோம். ஒத்த மனம் கொண்ட நண்பர்கள் கூட்டம் எங்களுக்கு இன்று உலகெங்கும் அமைந்துள்ளது

சாகுல் அண்ணா தற்போது வேலை பார்த்து கொண்டிருக்கும் ‘LNG Alliance” கப்பல் இந்தோனேசியாவில் இருந்து அகழ்தெடுக்கபட்ட இயற்கை எரிவாயுவை( LNG – liquified natural gas) கொரியாவில் இறக்குமதி செய்ய திங்கள் (மார்ச் 25)மாலை 5 மணிக்கு வந்தது.

முன்னரே என்னை கப்பலுக்கு வந்துப்பார்க்க சொல்லி இருந்தார். அதற்குண்டான அனுமதியையும் கப்பல் கேப்டனிடம் வாங்கி தந்திருந்தார். பொதுவாக LNG கப்பலில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்க படுவது இல்லை. கப்பலின் கேப்டன் கொரியன் என்பதால் அனுமதி வாங்க முடிந்தது என்றார். 

மைனஸ் 160 டிகிரி க்கும் குறைவான வெப்ப நிலையில் உறையவைக்கபட்ட திரவவடிவ இயற்கை வாயுவை கப்பலில் கொண்டு வந்திருந்தனர். நான்கு பெரும் ராட்சத குழாய்கள் மூலம் 15மணி நேரத்திற்கு தொடர் விநியோகம் செய்து முழு LNG யும் இறக்குமதி செய்யப்படும் போலும். ராட்சத குழாய்களை அவர் அணியினர் இணைத்து கொண்டிருக்கும் போது சென்று அவரை சந்தித்தேன். இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து முழு ஆப்ரேஷன் முழுவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் தனி அறைக்கு சென்று குளித்து விட்டு சாப்பிட மெஸ் க்கு கூட்டி சென்றார். அவருடன் நான்கு நண்பர்கள் சேர்ந்து ரம்ஜான் நோன்பு திறந்தனர். என்னையும் சாப்பிட  சேர்த்து கொண்டனர். துண்டாக நறுக்கி வைத்த பழங்கள், பழரசம், சப்பாத்தி, சாதம், பருப்பு கூட்டு, சிக்கன் கறி, மீன் வறுவல் என்று நடந்த விருந்தோம்பல், நன்றாக இருந்தது. வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இந்தியர்கள் என்பதால் இந்திய ருசியுடன் கூடிய சமையல்.

பிறகு கப்பல் கேப்டன்,பைலட் மற்றும் மற்ற ஆபீசர்களை அறிமுகம் செய்து வைத்தார். சாகுல் அண்ணாவின் நண்பர்கள் கொரியாவிலும் இருக்கிறார்களா என்பதில் அவர்களுக்கு ஆச்சரியம். பிறகு கப்பல் முழுவதையும் சுற்றி காண்பித்தார். ராட்சத என்ஜின், ஜெனரேட்டர், நல்ல தண்ணீர் ஜெனரேட்டர், வாயு எரிக்கும் மாபெரும் கலம், வொர்க் சாப்ஸ் என்று சகல டேஞ்சர்களையும் சுற்றி காண்பித்தார். 

ஒரு இடத்தை கண்பித்ததும் அதை பற்றிய முழு தொழில்நுட்ப விவரங்களையும் பரவசத்துடன் விளக்கினார். என்னால் அவை முழுதையும் உள்வாங்க முடியவில்லை. நான் செல்லும் போதே கண்ணால் முடிந்தவரை அனைத்தையும் அள்ளவேண்டும் என்ற முன் முடிவோடு சென்றிருந்தேன். அவர் விளக்கியதில் சரி பாதி என் தலைக்கு மேலே பறந்து சென்று கொண்டிருந்தது. அதை கவனித்தாரோ என்னமோ ஒரு கட்டத்தில் சடாரென்று பேச்சை நிப்பாட்டி வாங்க அறைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்றுவிட்டார். பொதுவாக தற்போது கொரியாவில் அதிக குளிர் இல்லை, பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெப்பநிலை 8 லிருந்து 15 டிகிரி வரை போகிறது. ஆனால் கப்பல் நிற்கும் கடற்கரையில் அதிக குளிராக இருந்தது. மழை வேற தொடர்ந்து தூரி கொண்டிருந்தால் கொஞ்சம் குளிர் கூட இருந்தது என்று நினைக்கிறேன்.

அவர் அறைக்கு சென்று என் மனைவி கீர்த்தனாவிடம் video call செய்து பேசினோம். சாகுல் அண்ணனிற்கு தெரியாத ஊரே இருக்காது என்று நினைக்கிறேன். என் மனைவியின் ஊரான திருச்சியை பற்றி, அங்கிருக்கும் அவரின் நண்பர்கள் பற்றியும் பேசினார். திருச்சியை பற்றி சில பல வரிகள் சிலாகித்து காதில் விழுந்தன. நாம் மதுரைகாரன் வேற, நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கி கொண்டேன்.

பிறகு இரவு 12 மணி வரை பேசி இருந்துவிட்டு தூங்க சென்றோம். இல்லை சாகுல் அண்ணன் பேசி கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டார் 😊. ஒரு ஆள் மட்டுமே படுக்க கூடிய கட்டில் என்பதால் அதை எனக்கு கொடுத்து விட்டு கீழே ஒரு ஓரமாக படுத்து கொண்டார். கொஞ்சம் சங்கடமாகதான் உணர்ந்தேன் என்றாலும் சரி நம்மை  யார் பார்க்க வந்திருந்தாலும் நாமும் அதை தானே செய்திருப்போம் என்று மனசை தேற்றிகொண்டன்.

காலை 7:30க்கு எழுந்தேன். சாகுல் அண்ணா நோன்புக்காக அதிகாலை 4 க்கே எழுந்து சாப்பிட்டு, தொழுது முடித்து, மறுபடியும் குட்டித்தூக்கம் போட்டு என்னுடன் சேர்ந்தே எழுந்தார்.  பிறகு குளித்து முடித்து விட்டு, கப்பலில் உக்கார்ந்து ஜெ தளத்தை படித்தேன். திறந்தவுடன்கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா?” என்ற மறு பதிப்பு கட்டுரை. கட்டுரையின் மைய சாரம் மண்டையினுள் சுழன்று கொண்டிருக்க அப்படியே மெஸ்க்கு சென்று காலை உணவு முடித்துவிட்டு, அண்ணா வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று கைபேசியில் கொஞ்சம் படம் எடுத்தேன். பிறகு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு , அண்ணா கொடுத்த யதிஜெயமோகன் இணைந்திருக்கும் தன்னரம் போஸ்டர், நான்கு புத்தகங்கள் (கொடைமடம்சாம்ராஜ், தீர்த்த யாத்திரைஎம். கோபாலகிருஷ்ணன், ஈராக்பா.ராகவன், கிழவனும் கடலும்எர்நெஸ்ட் ஹெமிங்வே), அரை கிலோ கருப்பட்டி, ஒரு பாக்கெட் கடலை மிட்டாயுடன், 9:30 வாக்கில் கப்பலிலிருந்து வெளியேறி வந்துவிட்டேன். ரொம்ப வித்தியாசமான புதிய அனுபவம். சந்தோஷமாக இருக்கிறது.

அனைத்து அப்ரூவல்களும் சனிக்கிழமை தான் முடிந்து, நான் கப்பலுக்குள் நுழையலாம் என்று கன்பார்ம் ஆனது. அதுவரை எனக்கும் அதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. சாகுல் அண்ணா அறிமுகப்படுத்திய ஏஜண்டிடம் பேசி முடித்ததும்இப்படி LNG alliance கப்பல் உள் சென்று ஒருநாள் தங்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுஎன்று கீர்த்தனாவிடம் சொன்னேன். “என்னப்பா இப்படி டக்குன்னு ஒருத்தங்க கூப்டாங்கன்னு போற , பிரச்சனை எதும் ஆயுடாதேஎன்றாள். அதுவரை அப்படி ஒன்றை பற்றி நான் யோசிக்கவே இல்லை. இதுவரை சாகுல் அண்ணாவை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. ஆனால் என் உள்ளத்திற்கு தெரிந்திருந்தது எங்களை இணைக்கும் சரடு எப்பேற்பட்டது என்று. ஆசான் ஜெயமோகன் பெயரை சொல்லி எங்கும் நுழையலாம், வரும் யாரையும் அரவணைக்கலாம். என்ன! இங்க நிக்கிற கப்பலுக்கு தான கூப்பிட்டார். ஒரு வேளை அவர்சதிஸ் இங்க வாங்க, இத இப்படியே பிடிச்சுகொங்க, கொஞ்சம் நிலா முடிய போய் பார்க்கலாம்என்று சொல்லி இருந்தால் கூட, அந்தசரடைநம்பி  பல நூறு காலடிகள் முன்னோக்கி எடுத்து வைத்திருப்பேன். 

பாண்டியன் சதீஷ்குமார்
தென்கொரியா
முந்தைய கட்டுரைநீதிபதி சந்துரு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாடு வாசிப்பனுபவம் – இன்பா