கடம்பூர் வனப்பகுதியில் தொல் குடி தடங்கள் மிகுந்திருக்கும் கம்பட்ட ராயன் கிரி மலை அடிவாரத்தில் பவளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் உள்ள புலிக்குத்திக்கல் , குத்துக்கல் வகைமையை சேர்ந்த நன்றி நவிலும் வீரக்கல். 8” கனத்தில் 4 அடி அளவில் தரைக்கு மேல் தெரியும் புலிக்குத்திக்கல்லின் ஒரு பகுதி. இதில் மூன்று அடுக்குகளாக புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மேலாக முதல் பேனலில் வீரனின் கையை கவ்வும் புலியும், புலியின் நெஞ்சில் வாளை செலுத்தும் வீரக்காட்சி, ஓரத்தில் ஒரு பெண் உருவம், இந்த சித்திரம் சொல்லும் கதை பெண்ணை தாக்கிய புலியை வீரமாக தன் வாளால் / வேலால் எதிர் கொண்ட வீரன் புலியை கொன்று தானும் விண்ணகம் ஏகுகிறான். அல்லது கால்னடைகளுக்கு காப்பாக நின்ற வீரன், கால் நடையை தாக்க வந்த புலியை எதிர் கொண்டு களம் பட்ட காட்சி, கால் நடைகளுக்கு சொந்தகார ஆயச்சியர் பெண் அல்லது மனைவி பார்க்கவே புலியை கொன்று தானும் மாளும் வீரன் நினைவாக எடுப்பித்த கல்.
அதற்கு மேல் உள்ள காட்சி சட்டகம், சமூக நலனிற்காக தன் இன்னுயிரை ஈந்த வீரத்திருமகனை விண்ணகத்திற்கு அழைத்து செல்லும் விண்ணக மங்கையர் இருபுறமும் தோள் பற்றி வரவேற்கிறார்கள்.
அதற்கும் மேல் உள்ள சட்டகத்தில் வீரன் கைலாயத்தில் ஈசனின் பாதத்தில் ஈசனுக்கு பூச்சொறிந்தும், அபிஷேகித்தும் ஆனந்திக்கிறார். சிவலோகப்பதவியில் ஈசனின் திருவடியில் வீடு பேறு பெற்றிருக்கிறார்.
குத்துக்கல்கள்( menhir- மென்ஹிர்) குழுத்தலைவர், அல்லது முதன்மை வீரன், முதன்மை அறிஞனுக்காக வைக்கப்பட்ட பெருங்கற்கால நீத்தார் நினைவுதூணிலிருந்து துவங்கி நவீன சிலை வரையிலான நெடிய பண்பாட்டு பயணத்தில் ஒரு படி நிலை தான் . வீர நாயக கல், இதில் புலிக்குத்திக்கல், கோழிக்கல், மாசதிக்கல், நவகண்டக்கல், அரிகண்ட கல், தூம்புதலை என்று பல வகையிலும் வீரத்தை தியாகத்தை, காலம் தாண்டியும் தன் பண்பாட்டு அடையாளமாய் நிலை நிறுத்தி சூரிய சந்திரர் உள்ளளவும் அந்த உயர் விழுமியத்தை அனைத்து சந்ததியினரும் வணங்கி வழிபட்டு, அந்த மதிப்பீட்டின் வழியில் நின்று பண்பாட்டு பாய்ச்சலை நிகழ்த்த நம் முது தந்தையர் நம்மை நோக்கி கோருகிறார்கள்.
இது ஒரு பெருங்கற்கால நாகரீக காலம் முதல் இன்று வரை தொடரும் ஒரு கலாச்சார செயல்பாடு. பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும்‘ என்று சங்கப்பாடல்களில் வரும் நடுகல் தியாகம் மற்றும் வீர விழுமியத்தின் தடயமாக அகாலத்தை நோக்கி ஓங்கி உயர்ந்து நிற்கிறது. முதலில் தலைமகனுக்கான வெறும் நடுகல்லாக நின்றவை பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விவரணைகள் பெருகி தனித்தனி வகை மாதிரிகளாக நின்று பொருள் சொல்கின்றன. வேட்டை சமூகத்தில் இருந்து மேய்ச்சல் சமூகமாகவும், வேளாண் குடி சமூகமாகவும் பின்னர் தொழிற்சமூகமாகவும் தொடர்ந்தாலும் குடியின் முதல் மரியாதை வீரனுக்கும் தியாகிக்குமே. மேய்ச்சல் சமூகம் அல்லது வேளாண் சமூகத்தின் இன்றியமையாத சொத்து பண்டம் பாடிகள் எனும் கால்நடை செல்வங்கள், அவற்றை காட்டு விலங்கினங்களிடமிருந்து காத்தல் , எதிரி படைகள், சமூகங்களில் இருந்து காத்தல் ஒரு உயர் விழுமியமாக அங்கீகரிக்கப்பட்ட செயல். கால் நடைகளை காக்கும் பணியில் தன் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவாக இந்த வீரக்கற்கள் நடப்பட்டு அவற்றிற்கு மயிற்பீலி சூட்டப்பட்டும், மலரும் , நீரும் படையலிட்டும் வழிபடப்படும்.
வீரன் இறந்த இடத்தில் மன்று ஏற்படுத்தப்பட்டும், மரம் நட்டும் இந்த வீரக்கல்லை நிறுவுவார்கள். ஊர் எல்லையில், அல்லது களம் பட்ட இடத்தில் இந்த மன்றும் மரமும், குத்துக்கல்லோடு இருக்கும். அங்கு கள் முதல் பலிசோறு, கொய்மலர், நீரும் படையலிடப்பட்டு வழிபாடு நடக்கும்.
“ இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய மங்குல்
மாப்புகை மறுகுடன் கமழும்”
புற நானூற்றின் இந்த பாடலில் சொல்லப்படுவது போல காலையில் காய்ச்சப்பட்ட ஒரு மரக்கள்ளை கொண்டு படையலிட்டு வழிபாடு செய்யப்படும் . கள் படையலிடுவோர் நன்னீரால் நடுகல்லை கழுவி நெய் விளக்கேற்றி கள் படைத்து வழிபடும்போது எழும் நெய்யின் நறுமண புகை மேகத்தை மறைப்பது போல என்று வழிபாட்டு சிறப்பை புற நானூறு சொல்கிறது.
பண்டம் பாடிகளின் காவலராகிய கோவலர்கள், மணி கட்டிய கடிகை வேலைக் கையில் ஏந்தி மாட்டுமந்தைகளை மீட்டுவருவர். அப்போது பகைவர்களால் அம்பெய்து வீழ்த்தப்படும் வீரருக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். உயர்ந்த வேங்கை மரத்தின் பூங்கொத்துகள் கொய்யப்பட்டு பனையோலையில் தொடுக்கப்பட்டு, இலைமாலை சூட்டி அந்த நடுகற்களை வணங்கி வழிபடுவர். கால்நடைகளை கவரவும், நாட்டு எல்லையை விரிவுபடுத்தவும், பெண்ணின் மானத்தைக் காக்கவும், விலங்குகளிடமிருந்து ஊர்மக்களை பேணவும் உயிர்விட்ட வீரர்கள் நடுகற்களானார்கள். வீரர்களின் தீரச்செயலுக்கேற்ப நடுகற்கள் மானம் காத்தான் கல், ஊர் காத்தான் கல், அறம் காத்தான் கல் என்றும், புலிக்குத்திக்கல், யானைக்குத்திக்கல் என்றும் வெவ்வேறு பயர்களில் அழைக்கப்படும். சமண முனிவர்கள் சமாதியான இடத்திலும் கற்கள் நடப்பட்டன. அவை நிசீதிகை கற்கள் எனப்பட்டன.
கிமு 4,000 முதல் இன்று வரை தொடரும் ஒரு நன்றி நவிலும் வழிபாட்டு சடங்காக இந்த விழுமிய செயல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதில் கல் தேர்வு முதல் நடவு வரை 6 முக்கிய செயல்படிகளை பேணுவார்கள். காட்சி, – நடுகல்லுக்குரிய கல்லை பார்த்தலும் தேர்தலும் கால்கோல், – கல்லிடம் அனுமதி வேண்டி பிரார்த்தித்து அதை எடுத்து வருதல் நீர்ப்படை, – கங்கை, சிந்து , சரஸ்வதி முதல் காவிரி வரையிலான புண்ணிய நீர்களை கொண்டு தூய்மை படையல் நடுதல், – மன்றில் நடுதல் பெரும்படை, – உருவோடு , பெயரும், பெருமையும் பொறித்தல் வாழ்த்தல் / துதி என ஆறு படி நிலையில் இந்த வீரக்கல் கடந்து அகாலம் நோக்கி நிற்கும். பின்னர் மங்கல நீராட்டி, மயிற்பீலி சூடி, மலர் மாலை புனைந்து, வாழ்த்தி, வணங்கி விழாவெடுக்கவேண்டும்.
இந்த கடம்பூர் பவளக்குட்டை புலிக்குத்திக்கல் அதியமான் நெடுமான் காலத்தில் இருந்து கடம்ப மன்னர்களின் காலத்திற்குள் இருக்க கூடிய வீர வழிபாட்டுக்கல். ஆய் மன்னர்கள், கடம்பர்கள், போசாளர்கள்,சாளுக்கியர்கள், ஹோய்சாளர்கள் வரை இதன் காலத்தை ஊகிக்கலாம். கல்வெட்டின் கீழ் பகுதியில் வீரனின் பெயரும், குத்துக்கல்லின் நோக்கமும், களம் பட்ட நாளும், கோளும், பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எழுத்து அமைதி , பிராமி, வட்டெழுத்து, பிற்கால சோழர் கால எழுத்து என்று பார்த்து படித்து காலத்தை ஊகிக்கலாம். இங்கு அவை மண்ணில் மறைந்திருக்கிறது. தமிழகம் முழுக்க 150க்கும் மேற்பட்ட புலிக்குத்தி கற்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. கொங்கு பகுதி, தகடூர் பகுதிகள் எல்லாம் பெரும்பாலும் மேய்ச்சல் சமூகமாகவே 16,17 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தவை. இப்போதுமே கடம்பூர் பகுதி மக்கள் மேய்ச்சல் தொழிலில் தான் இருக்கிறார்கள். நிலம் வானம் பார்த்த புன்செய் பூமி, பெரும் வனங்களின் ஆதிக்கம். மனித விலங்கினங்கள் மோதலுக்கு 3000 ஆண்டு வரலாறு இருக்கிறது( human – animal conflict) . இங்கிருக்கும் இந்த வீரனின் மறத்திறன் போற்றும் புலிக்குத்தி கல்லுக்கு அரிமலரும், நீரும், குருதி பலிசோறும் வைத்து படையலிடுவது நம் மூத்த முதுதந்தைகள் நமக்கிட்ட் ஆணை, அதை மீற நமக்கு உரிமை இல்லை . அதை தலை கொண்டு இன்று வரை பேணி வருகிறார்கள்.
எதோ ஒரு காலத்தில் கால் நடைகளின் உயிருக்கு பதிலீடாக தன் உயிரை ஈந்த அறச்செல்வனுக்கு காலம் காலமாய் ஒரு பண்பாட்டு விழுமியத்திற்கு இன்றும் மலரும் நீரும் விட்டு மக்கள் தங்கள் நன்றியை நவில்கிறார்கள். ஒரு நெடிய பண்பாட்டின் அறுபடாத கண்ணி இன்னும் அநாதி காலம் தொடரும்.
ராஜமாணிக்கம்