வேட்டைக்காரன் ஜட்டு

ஒரு வேட்டைக்காரனின் நினைவுகள் கேடம்பாடி ஜட்டப்ப ராய்

இனிய ஜெயம்

மிகத் தற்செயலாகத்தான் பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில் அந்த நூலைக் கண்டெடுத்தேன். கேடம்பாடி ஜட்டப்ப ராய் எழுதிய ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் எனும் தலைப்பு கொண்ட 2007 இல் nbt வெளியிட்ட ஜெயசாந்தி மொழியாக்கம் செய்த நூல்.

பிரிட்டிஷ் இந்தியாவில் கிட்டத்தட்ட 1940 களில் ஐட்டப்ப ராயின் 15 வயதில் துவங்கி 1972 இல் புலிகள் பாதுகாப்பு சட்டம் போன்றவை வந்த உடன் தனது பிந்தைய வயதில் பழைய நினைவுகளை கூட்டி அவர் எழுதிய தனது  இளம் வயது வேட்டை அனுபவங்கள் சிவற்றைக் குறித்த நூல்.

கர்நாடகாவின் குதிரே முக் பகுதியின் பிலிமஜாலு  (புலிக்காடு என்று பொருளாம்) கிராமத்தில் அதன் தலைவர் கோரகப்பா வின் பேரன் ஐட்டப்பா. 1940 களில் அந்த வனப்பகுதி எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம், அதன் அருகே உள்ள கிராமம் அதன் விவசாய நிலம் எதிர் கொள்ளும் பிரச்னைகளையும் சொல்லவே வேண்டாம்.

கோரகாப்பா நல்ல வேட்டைக்காரர்தான் என்றாலும், காடு விட்டு கிராமத்துக்குள் புலி நுழைந்தால் என்ன செய்ய முடியும்? கலக்டருக்கு எழுதி அவரை வரவழைக்கிறார். கலக்டரும் துப்பாக்கி வெடி பொருட்கள் சகிதம் வேட்டைக்கு வருகிறார். அங்கே துவங்குகிறது 15 வயது ஜட்டுவின் முதல் வேட்டை அனுபவம்.

முதல் வேட்டை அனுபவமே கலெக்டரின் நவீன துப்பாக்கி, கிராமத்தான் பெல்த்தா வைத்திருக்கும் ஆதிகால வில் இவற்றுக்கு இடையேயான ஈகோ மோதலித்தான் துவங்குகிறது. அன்றைய மாபெரும் வேட்டைத் திருவிழாவில் பெல்த்தா கலெக்டர் விட்ட சவாலில் வென்று அந்த காலத்தில் பெரிய தொகையான 15 ரூபாயை பரிசாக வெல்கிறான். கோரகாப்பா தனது பழைய துப்பாக்கி கொண்டு கலெக்டரின் புதிய துப்பாக்கியை முந்துகிறார். கலெக்டர் அந்த ஆற்றலுக்கு பரிசாக கோரகாப்பாவுக்கு தனது துப்பாக்கியை பரிசாக அளிக்கிறார். தாத்தாவின் துப்பாக்கி ஜட்டு கைக்கு வருகிறது. தாத்தா போல வெள்ளைக்காரர் புகழும் பெரிய வேட்டைக்காரனாக மாற ஜட்டு முடிவு செய்கிறார்.

இந்த முதல் வேட்டையில் ஒரு சம்பவம் வருகிறது. பெல்த்தா உடன் அவன் மனைவி சோமுவும் வருகிறாள். அவள்தான் அம்புகளை சுமந்து வருகிறாள். அவள் எதற்கு என்று கலெக்டர் வினவ, அம்பை வேட்டை மிருகத்தின் உடலில் இருந்து உருவியதும், அந்த அம்பில் இருந்து சொட்டும் குருதியை சோமு ருசிப்பாள் என்று பதில் சொல்கிறான் பெல்த்தா. வேட்டை முடிந்ததும் வேட்டை குழுவில் உள்ள முஸ்லிம்கள் காட்டு மான் ஆடு போன்றவற்றை ஹலால் செய்கிறார்கள். கன்று குட்டி அளவு பன்றி ஒன்று பிற வேட்டைக்காரர்களுக்கு கலக்டரால் முழுதாகவே பரிசாக அளிக்கப்படுகிறது. வேட்டை ஆடியதன் பொருட்டு வன தேவதைகளுக்கு மன்னிப்பு கேட்கும் சடங்கு, சமைத்த கறியில் கொஞ்சத்தை வணங்கி படைக்கும் சடங்கு எல்லாம் முடிந்து பெரிய உண்டாட்டு நிகழ்கிறது.

ஊருக்குள் வரும் கலக்டருக்கு ஊர் மக்கள் தரும் விருந்து அதன் முறை வகைகள், அடுத்து வரும் வேட்டை உண்டாட்டு, சடங்குகள், கிராம சமுதாயத்தின் அடுக்கு முறைகள், அவர்களுக்கு இடையேயுள்ள அணுக்கம், பழக்க வழக்கங்கள் அந்த ஊருக்கு வர நேத்ராவதி நதி வழியே உள்ள பாதை படகுத் துறை, அன்றைய பாதைகள், வாகனங்கள் வசதி குறைவுகள் என பலவற்றை  ஆங்காங்கே சிற்சில விரிப்புகள் வழியே சுட்டி அன்றைய காலம் ஒன்றின் நிலத்தின் மக்களின் சித்திரத்தை ஒரு கோட்டு சித்திரம் போல வழங்கி விடுகிறது இந்நூல்.

நூலின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று ஜட்டு வெள்ளைக்கார தோழி ரோஸ்லின் உடன் செய்யும் வேட்டை. குதிரே முக் பகுதி ஒன்றில் குறிப்பிட்ட உயரத்தில் நின்று இருவரும் காட்டெருமை கூட்டம் ஒன்றை பார்க்கிரார்கள். ஜட்டு குறிப்பிட்ட மாடு ஒன்றை தேர்வு செய்து அதை சுட சொல்கிறான். ரோஸ்லின் தயங்குகிறாள். அவள் கொண்ட வேட்டை விதிகளின் படி பெண் இனத்தை அவள் கொல்ல மாட்டேன் என மறுக்கிறாள். ஜட்டு அது ஆண்தான் சுடு என்கிறான். இங்கிருந்து அது ஆண் தான் என்று உனக்கு எப்படி தெரிந்தது என்று வாதிடுகிறாள் ரோஸ்லின். இதற்கு இடையே எருது கூட்டம் உஷார் ஆகிவிட, ஜட்டு சட்டென துப்பாக்கியை முழங்கி அந்த மாட்டை சரிக்கிறான். பிற மாடுகள் ஓடி விடுகிறது. இருவருக்கும் முட்டல் வலுக்கிறது நீ சுட்டது பெண் மாடு எனில் உன்னை கடுமையாக தண்டிப்பேன், ஆண் மாடு எனில் நீ கொடுக்கும் தண்டனையை ஏற்று கொள்கிறேன் என்கிறாள் ரோஸ்லின். அருகே சென்று பார்க்க, அது ஆண் மாடு. தூரத்திலிருந்தே மந்தையில் ஆண் மாடு எது என்று அறியும் வழிமுறையை சொல்லி தருகிறான் ஜட்டு. ஒரு ஆளை விட்டு வேட்டையாடிய மாட்டின் விதைகளை மட்டும் வெட்டி சமைத்து ரோஸ்லினுக்கு உண்ண தருகிறான். அவள் அதை முழுவதும் உண்ண வேண்டும். அதுவே தண்டனை. பின்னர் ரோஸ்லின் அப்பா  ” தம்பி அது நீ அளித்த தண்டனை அல்ல, பரிசு. அந்த கறி மிக ருசியாக இருந்ததாக மகள் சொன்னாள்” என்கிறார்.

இப்படியெல்லாம் செல்லும் இந்த நூல் எந்த அளவு நம்பகமான சித்திரங்களை க் கொண்டது என்பதை ஜிம் கார்பெட் எழுத்துக்களுடன் ஒப்பிட்டால் மட்டுமே புரியும். எனக்கு ஜிம் கார்பெட் ஒரு சைக்கோபாத் சீரியல் கில்லர் போலத்தான் மனதில் பதிந்திருக்கிறார். பிலிப் மெடோஸ் டெய்லர் என்ற எழுத்தாளர் எழுதிய பிரபல நூல் ஒரு வழிப்பறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்.(தமிழிலும் வாசிக்க கிடைக்கிறது) இந்த நூல் தக்கிகளை ஒடுக்கும் ஆங்கிலேய அதிகாரிகள் நடவடிக்கை மீது அமைந்த நூல். இந்த நூல் வழியே இந்தியா எப்படி சட்டம் ஒழுங்கு இன்றி ரத்த வெறியர்களின் நிலமாக இருக்கிறது, பிரிட்டிஷார் எப்படி படாத பாடு பட்டு சட்டம் ஒழுங்கை கொண்டு வந்து அப்பாவி இந்தியர்களின் காவலர்களாக இருக்கிறார்கள் என்று, இந்தியாவை அடிமை செய்தது சார்பாக ஆங்கிலேயர்களின் சிவில் சமூக மனதின் ஒப்புதலை நோக்கி ‘கதை விட்டது’. இப்படி ஆங்கிலேயரின் அடிமை வெறியை நியாயம் செய்த இந்த நூலை போன்றதே, ஜிம்மின் வேட்டை வெறியை நியாயம் செய்த நூல்களே அவரே கதை விட்டு வைத்த வேட்டை இலக்கியங்கள். அவர் கொன்று குவித்த புலிகளில் முதல் புலி, அவரால் கொல்லப் படும் முன் 400 மனிதர்களை கொன்று விட்டதாம். நானூறு மனிதர்கள். ஜிம் மனிதர்கள் மீது ஏசுவை மீறிய கருணையோடு வேறு வழியே இன்றி அந்த புலியை கொல்கிறார். இப்படி அவர் சுட்ட 20 புலியில் ஒவ்வொரு புலியும் தலா நூறு பேரை கொன்றிருக்கிரது. ஜிம்மும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு இனி இந்த புலி திருந்த வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பின்னரே அதை கொல்கிறார். அவரை விட அவரை பற்றி எழுதிய கதைகள் இன்னும் கூடுதல் சுவாரஸ்யம். ஜிம் தனது 64 ஆவது வயதில் ஒரு ஆண் புலியை, தானே பெண் புலி போல குரல் எழுப்பி வரவழைத்து, அப்படி ஏமாந்து வந்த அந்த முட்டா புலியை சுட்டு கொல்கிறார்.

இந்த நூலில் ஜட்டுவின் முதல் புலி வேட்டை சுவாரஸ்யமும் நம்பகமும் மிக்கது. பக்கத்து ஊரில் புலி அடிக்கடி தென்படுகிறது என்று அதை வேட்டையாட சொல்லி ஜட்டுவை அழைக்கிறார்கள். ஜட்டு அதற்கு முன் புலிவேட்டை செய்தது இல்லை. உண்மையாகவே பயம்தான். மறுக்கவும் முடியாது கிராம தலைவர் வாரிசு என்ற கவ்ரவம் வேறு குறைந்து விடும். வேறு வழியே இன்றி சமாளிப்போம் என்ற முடிவுடன் நண்பனுடன் அந்த கிராமத்துக்கு போகிறார் ஜட்டு. இரவில் சில பல களேபரங்களுக்கு பிறகு ஊருக்குள் வந்து விட்டு ஜட்டு கண்ணில் படாமல் தப்பிய புலி இருக்கும் இடம் தெரிந்து விடுகிறது. அந்த புலி ஒரு கிணற்றில் விழுந்து கிடக்கிறது. குறி வைத்து தலையில் சுட்டு புலியை கொன்று விடுகிறார் ஜட்டு. புலி வெளியே தூக்கப் பட்ட பிறகே தெரிகிறது அது கண் சரியாக தெரியாத, இன்னும் பத்து நாள் உணவு உண்ணா விட்டால் அதுவே செத்து போகும் எனும்படிக்கான பலவீனம் கொண்ட பல் போன கிழட்டுப் புலி. அது கிழட்டுப் புலி என்ற சமாச்சாரமும் அது கிணற்றில் விழுந்து கிடந்த புலி என்ற சமாச்சாரமும் வெளியே தெரிந்து விடாத வண்ணம் ‘மேக்அப்’ செய்து தனது முதல் புலி வேட்டையை ஊருக்கு பிரகடனம் செய்கிறார் ஜட்டு.

மெல்லிய நகைச்சுவை இழையோட வேட்டை அனுபவங்கள் விவரிக்கப்படும் இந்த நூலின் முக்கிய அம்சம் இதில் வரும் வேட்டைக்கார்கள் எல்லாம் அஞ்சா நெஞ்சம் கொண்ட சாகச நாயகர்கள் அல்ல, அவர்களும் சராசரி மனிதர்கள் கொண்ட பீதியை கடக்க முடியாதவர்களே எனும் விவரிப்பு.

இரவில் புலி வேட்டை ஒன்றுக்கு ஊரிலேயே மிகுந்த தைரியசாலி என்று பெயரெடுத்த ஒருவரை அழைத்து போகிறார் ஜட்டு. ரத்த வாடை வீசும் கறி தொங்கும் பொறி நோக்கி புலி வந்தால் அதன் கால் கயிறு மேல் பட்டு மணி அடிக்கும். அப்போது சட்டென புலி மேல் திடீர் வெளிச்சம் போட்டால் புலி ஸ்தம்பித்து நிற்கும். அந்த கணம் புலியை சுட்டு விட ஏற்பாடு. நேரம் நகர மணி சத்தம். ஆனால் விளக்கு எரியவில்லை. ஜட்டு வேறு வழி இன்றி தன் பாதுகாப்பான இடம் விட்டு எழுந்து சென்று பார்க்கிறார். ஆசாமி பீதியில் மூத்திரம் போய் அதன் மேலேயே மயங்கி விழுந்து கிடக்கிறார். ஜட்டு விளக்கை அடித்து பார்க்கிறார். அங்கே ஒரு நரி நின்றுகொண்டு இருக்கிறது.

அதே போல சென்னைப்பா எனும் வேட்டைக்காரன் தன்னை நோக்கி பாயும் ஒரு புலியை சுடுகிறான். சூடு வாங்கிய புலி அவன் மேல் செத்து விழுகிறது. பாய்ந்து வந்து அவன் மேல் செத்து விழுந்த புலி அளித்த பீதியில் அவன் 5 நாள் கடும் காய்ச்சலில் கிடக்கிறான். நில்லாத பேதி. காய்ச்சல் உச்சத்தில் புலி போலவே உருமுகிறான். இப்படி கிடந்து பிழைத்து எழுகிறான் அந்த வன காவல் அதிகாரி சென்னைப்பா. எழுந்ததும் முதல் குரலாக ஜட்டுவைத்தான் தேடுகிறான். மான் வேட்டைக்கு என அழைத்து வந்து புலி வேட்டைக்குள் தள்ளி விட்ட ஜட்டுவை.

ஜட்டு ஒரு முறை இரவில் புலி வேட்டைக்கு போகிறார். தூரத்தில் தன்னை நேருக்கு நேராக நோக்கும் புலியின் ஒளிரும் கண்களை குறி வைக்கிறார். பின்னர்தான் தெரிகிறது அது புலி அல்ல. ராஜ நாகம். உச்ச கட்ட பீதியில் இரண்டு ஒளிரும் கண்கள் மத்தியில் சுட்டு விட்டு, எதிர் திசையில் விழுந்து வாரி ஓடி ஊர் போய் சேர்கிறார் ஜட்டு.

நூலின் அழகிய கதாபாத்திரம் ஜட்டுவின் முஸ்லிம் நண்பனான குன்னி மோனு. எப்போதும் ருசியின் பின்னால் ஒடுபவன். ஜட்டு சுடும் எதையும் ஓடிப்போய் முதல் ஆளாக அதை தொட்டு பிஸ்மில்லா சொல்லி ஹலால் முறைப்படி அறுப்பான். ஒரு முறை மான் கறி மீது ஆசை வந்து வேட்டைக்கு கிளம்புகிறார்கள் .அந்த இரவில் புதரில் ஜோடி  விழிகளை கண்டு அதோ மான். சூடு என்கிறான் குன்னி மோனு. ஜட்டு சுடுகிறான். விழுகிறது. குன்னி பாய்ந்து ஓடி அதன் கழுத்தில் கத்தியை வைத்து பிஸ்மில்லா சொல்ல துவங்கி அல்லா என்று மரண ஓலம் எழுப்புகிறான். ஜட்டு ஓடி போய் பார்க்கிறான். அது மான் அல்ல கழுத்தை புலி. அதன் தலையில் சுட்டு குன்னுவை விடுவிக்கிறான் ஜட்டு. மான் கறி தேடி ஓடிய குன்னு பத்து நாள் காய்ச்சலில் கிடந்து பத்திய கஞ்சி குடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்.

குன்னுவின் மரண தருவாயில் ஜட்டு அவனை சென்று பார்க்கிறார். குன்னி ‘நண்பா எனக்கு காட்டு ஆடு கறி சமச்சி தரியா” என்று கேட்க்கிறான். ஜட்டு வேட்டையை விட்டு விட்டதெல்லாம் அவனுக்கு தெரியாது. ஜட்டு ஹலால் செய்த வளர்ப்பு ஆட்டை, சமைக்க பட்டது காட்டு ஆடுதான் என்பதை போல பக்குவமாக சமைத்து கொடுத்து அனுப்புகிறார். குன்னி மோனுவின் இறுதி விருந்து அதுதான்.

மிக மிக வித்தியாசமான, நம்பகமான இந்த வேட்டை இலக்கியத்தை எழுதியஜட்டப்ப ராய் எழுத்தாளர் அல்ல. 1972 வுக்கு பிறகு தனது இளமை நாட்களின் வேட்டை  அனுபவங்கள் பொக்கிஷம் என்பதை உணர்ந்து தனக்கு வசதிப்பட்ட, நினைவுகள் செல்லும் வழியில் தனது வேட்டை அனுபவங்களை ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் என்ற தலைப்பில் எழுதுகிறார். துளு இலக்கியத்தில் அது பெஞ்ச் மார்க் போல அமைந்து விடுகிறது. மேலும் இந்த வரிசையில் மூன்று நூல்கள் எழுதுகிறார். சிவராம காரத், தாகூர் போன்ற சிறந்த ஆக்கங்களை துளுவில் தொடர்ந்து மொழி ஆக்கம் செய்திருக்கிறார். இவர் குறித்து மேலதிகம் தெரிந்து கொள்ள தேடிப் பார்த்த வரையில் இணையத்தில் எந்த தகவலும் இல்லை.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைEducation and Insight
அடுத்த கட்டுரைசெறிவான உரை -கடிதம்