வரலாறுகள், கடிதம்

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -4

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -2

தொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -1

ஆசிரியருக்கு இனிய வணக்கங்கள்!

இன்று காலை, நான் யூடியூப்பைத் திறந்தபோது, பிபிசி தமிழ் பக்கத்தில் ஒரு பதிவு இருந்தது, அதன் தலைப்பு இவ்வாறாக இருந்தது “திருமண வரி: சோழர் ஆட்சியில் திருமணம் செய்ய வரி செலுத்திய குடிமக்கள்”. இதனைப் பற்றி மேலும் படிக்க அவர்களுடைய வலைதளத்தின் இணைப்பை அவ்விடம் இட்டிருந்தார்கள். நானும்,”சரி போய் பார்ப்போம்” என அவர்களுடைய வலைத்தளத்திற்கு சென்று அந்த கட்டுரையைப் படித்தேன். நல்ல கட்டுரையாக இருந்தது. அதில் ஒன்றும் அரசியல் இல்லை. சோழர் காலத்தில் பல்வேறு வரிகள் மற்றும் விசித்திரமான வரிகளை (அதாவது நம் காலத்திற்கு அது விசித்திரம்) குறித்த விவரங்கள் அதில் இருந்தது. கல்வெட்டுச் சான்றுகளும் இடம் பெற்று இருந்தது.

இப்போது, விஷயத்துக்கு வருகிறேன், அந்த பிபிசி பதிவுற்க்கு கீழ் உள்ள கருத்துகள் உண்மையில் எனக்கு எரிச்சலும், வருத்தத்தையும் அளித்தன. காலையிலே இப்படியா என்று நொந்து போனேன். நம் மக்கள், அல்ல நம் சமுதாயத்தின் நோக்க்கம் தான் என்ன?  ஒரு சில  கருத்துக்களை இவ்விடம் சொல்கின்றேன், “இதெல்லாம் செம்ம உருட்டு….” என்கிறார் ஒருவர். “பிரிட்டிஷ் செய்த கொடுமைகளும், அவர்கள் காலத்து வரிகளையும் பற்றி தைரியம் இருந்தால் போடு” என்று சவால் விடுகிறார் இன்னொருவர். “ராணி விக்டோரியா 10 ஆண்களுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்” என்று உரக்கச் சொல்கின்றார் மற்றொருவர். “பிபிசி மாமா பையன், நீ உருட்டு” என்று நக்கல் செய்கின்றார் இன்னொருவர்.

சமூகத்தில் இந்த வகையான மனநிலை இருந்தால், எவ்வாறு ஒரு கலப்படமில்லாத வரலாற்றாய்வு இங்கு நிகழும்? எது செய்தாலும் அரசியலும் காழ்ப்புமா? பிபிசியின் பதிவை விடுங்கள், ஒரு வரலாற்று ஆய்வாளர் எந்த அரசியல் சித்தாந்த்தச்சாய்வும் இல்லாமல் ஒரு ஆய்வு அல்ல ஒரு கட்டுரையோ எழுதி, அது வெகுஜன கருத்திற்க்கோ அல்ல நம்பிக்கைக்கோ எதிராக அமைந்து விட்டால், அவ்வளவு தான் போலும். அவர் கதை முடிந்தது போல. சோழரின் பெருமைகளை மட்டுமே விரும்பி அறிய நினைக்கும் சமுதாயம், ஏன் ஒரு விரும்பதகாத உண்மையை பற்றி அறிய விரும்புவது இல்லை? கல்வெட்டு ஆதாரம் காட்டினாலும் அதை எளிதாக “உருட்டு” என்று சொல்லி அசட்டை செய்கின்றனர்.

இந்த நிலையைக் கண்டு, இளம் வரலாற்று ஆய்வாளர்கள், ஒரு “genuine” ஆன‌ வரலாற்று ஆய்வை நிகழ்த்த முன்வருவதில்லை, திறனாய்வுக்கான ஏற்ற கேள்விகளும் கேட்பதில்லை. நம் வரலாற்றில், ஒரு கெட்டது அல்ல
விரும்பதகாத விஷயம் இருந்தால், உடனே அதற்கு விடை, “பிரிட்டிஷ் மட்டும் நல்லவனா?” “முகலாயன் என்ன கொடுமை செய்தான் என்று தெரியுமோ?” என்று இன்னொருவர் மீது குற்றம் சாட்டுகின்றனர். அது உண்மையாகவே இருக்கட்டும், ஆனால், ஒரு அறிவார்ந்த சமூகம், வரலாற்றில் உள்ள விரும்பதகாத விஷயம் ஏன் வந்தது? எவ்வாறு நிகழ்ந்தது? பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? அது எப்படி முடிவுக்கு வந்தது? என்று ஒரு சில அடிப்படை கேள்விகளை கேட்க அல்ல அதற்கான விளக்கங்களையோ விரும்புவது இல்லை.

அவர்கள் சொல்லும் பிரிடிஷர்களே இப்போது “ஆம், காலனித்துவ காலத்தில் நாங்கள் செய்தது தவறு” என்ற மனநிலைக்கு வந்து விட்டு பல ஆண்டுகள் ஆயிற்று. ஆனால், இன்னும் இங்கு, “காலனித்துவ ஆட்சியின் காரணமாகத்தான், நாம் இந்த மோசமான நிலையில் இருக்கிறோம்” என்று பழிபோட்டு கொண்டிருக்கின்றோம். பழி போட வேண்டிய காலம் முடித்தாயிற்று என்று நினைக்கின்றேன். நாம் இனி “நம் பிழைப்பை பார்ப்போம்”, அல்லது “நாம் இழந்ததை இனி நாமே கட்டி எழுப்புவோம்” என்ற மனநிலைக்கு எப்போது தான் வருவோம்?

நான் இப்போது சுமார் 5 ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் பயணம் செய்து வேலை செய்கின்றேன். இந்த மாதிரியான மிகுதியான இனப்பெருமை மனநிலையை நான் இங்கு பார்த்ததில்லை. ஆம், இங்கு நிச்சயமாக சில இனவாதிகள் உள்ளனர், ஆனால் அவர்கள் குறைவு. இங்கனம் இருக்க, தரமான வரலாற்று ஆராய்ச்சி மற்றும் விவாதத்தை ஆதரிக்கும் சூழலை எவ்வாறு இங்கு மேம்படுத்துவது? தங்களின் பார்வையை எதிர்நோக்குகின்றேன்.

 

இப்படிக்கு,
ஜோசப் பால்ஸன்

 

அன்புள்ள ஜோசப்,

நான் என்னுடைய நான்கு பகுதிகள் கொண்ட கட்டுரையில் இந்த மனநிலையின் அடிப்படைகளைத்தான் விரிவாகப் பேசியிருக்கிறேன். நீங்கள் கவனிக்கலாம்.

வரலாற்று மனநிலை என்பது ஒன்று அல்ல. இரண்டு. ஒன்று தொல்வரலாற்றெழுத்து சார்ந்த மன்நிலை. அது தன்னைப்பற்றி தானே உருவாக்கும் வரலாறு. அதற்கு தன்னைத் தொகுத்துக்கொள்ளுதல், தனக்கான மரபை கற்பனை செய்தல், தன்னைப்பற்றிய பெருமித வரலாறுகளை உருவாக்குதல் ஆகிய இயல்புகள் உண்டு. நவீன வரலாறு என்பது இன்னொன்று. அது புறவயமான வரலாற்றை உருவாக்குதல் மானுட வரலாறு என்னும் பெரும்பரப்பில் தன் வரலாற்றையும் தர்க்கபூர்வமாக இணைத்தல்.

இரண்டாம் மனநிலை இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் உருவாகவில்லை. எல்லா இடங்களிலும்தான். கேரளம் போன்று இடதுசாரிப்பார்வை கொண்ட, கல்வியுள்ள மாநிலங்களில்கூட தொல்வரலாற்றுப்பார்வையே மேலோங்கியுள்ளது. ஆனால் அந்த தொல்வரலாற்றுமனநிலையுடன் நவீன வரலாற்றாய்வு உருவாக்கும் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே திரிபுகள் நிகழ்கின்றன.

இத்தனை மூர்க்கமும் காழ்ப்பும் வரலாற்றைச் சுற்றி வெளிப்படுவது அதிலுள்ள தொல்வரலாறு சார்ந்த மனநிலையால்தான். நவீனக் கல்வி, நவீன வாழ்க்கைமாற்றம் வழியாக அந்த பழைய மனநிலையில் இருந்து விடுபட்டால்தான் நவீன வரலாற்றாய்வை நோக்கிச் செல்லமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைதீயின் தொடக்கம்
அடுத்த கட்டுரைவிந்தன்