நாலாயிர திவ்யப் பிரபந்தம் வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது (இந்துமதிக்கு நன்றி!) உயரங்களுக்கு அஞ்சும், சர்வசகஜமாக சமநிலத்திலேயே சறுக்கும் எனக்கு குடும்பத்தினர் துணையின்றி மேற்கொள்ளும் முதல் மலைப் பயணம் வெளித்தெரியாத ஓர் அச்சத்துடனே தொடங்கியது. இந்துவுடன் மலைச் சாலையில் ஒரு நடை நடந்தபிறகு அந்த அச்சம் இன்னும் கொஞ்சம் பதுங்கிக்கொண்டது, நீங்கிவிடும் என்ற நம்பிக்கை முதல் முறையாக வந்திருக்கிறது. அந்தியூர் மணியின் உபசரிப்பில் இன்னும் கொஞ்சம் தெம்பு வந்து சேர்ந்தது. அவருக்கும், சமைத்த, அதற்கு உதவிய கரங்களுக்கும் அன்பும் நன்றியும்.
என் தமிழ் எவ்வளவு அழகு பாரேன் என்று நினைக்கச் செய்யும் ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன், கொண்டாடுகிறேன். பிரபந்த வகுப்பில் ஜா.ராஜகோபாலன் எடுத்துக் காட்டிய பாடல்கள், அவற்றுக்கான விளக்கம் மட்டுமல்லாமல் இடையிடையே அவர் சுட்டிய உதாரணங்களும், புன்னகையும், முறுவலும், சிரிப்புமாக, இந்த மூன்று நாட்களில் எத்தனையோ முறை அப்படி நினைக்கச் செய்தன. பிரபந்தப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதிலும், விளக்குவதிலும், கேட்போரும் அவற்றை ரசிக்கும்படி வகுப்பை அமைப்பதிலும் ஒளிரும் அவரது அர்ப்பணிப்புக்கு வந்தனம். அவருக்கு மனம் நிறைந்த நன்றியும், வணக்கமும் உரித்தாகட்டும்.
குமரித்துறைவியை வாசித்த பிறகான மதுரை பயணத்தில், குடும்ப நண்பர் இல்லத் திருமணத்துக்காகச் சென்றிருந்தோம். எதோ நேரப்பிசகோ அல்லது சரியாக விசாரிக்கவில்லையோ, காலையில் வெறும் வயிற்றுடன் அவசர அவசரமாகச் சென்றபோதும் சந்நிதி அடைக்கப்பட்டு, மீனாட்சியைக் காண ஒன்றரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அதற்கு முன்பு அப்படி நேர்ந்திருந்தால், ‘தாயே இப்படி சோதிக்கிறாயே…’ என்றுதான் நினைத்திருப்பேன். ஆனால், இம்முறை, ‘மகளே, மற்றவர்களை கவனி. உன் அலுவல்களை முடித்துவிட்டு வா, நான் காத்திருக்கிறேன்..’ என்று பெருமிதத்துடன் நின்றிருந்தேன். இத்தனை மாதங்களாகியும், இன்று இதை எழுதும்போதும் அந்த உணர்வு அப்படியே மீண்டும் மேலெழுகிறது. அது புத்தம் புதியது. இந்த வகுப்பில், இத்தனை ஆழ்வார்கள் கண்ணனுக்கு அன்னையாக, அவனையே எண்ணி ஏங்கும் பிச்சியைப் பெற்ற அன்னையாக, பா’வமெடுத்து எழுதிய பாடல்களுக்குள் திளைத்திருந்தபோது, அந்தப் பெருமிதத்தை அவ்வப்போது நினைத்துக்கொண்டேன்.
எல்லோரையும் சமமாகப் பார்ப்பதென்பது எல்லோருக்கும் வாய்க்குமா, என்ன? எப்படிப் பார்த்தாலும், ஆண்டாளுக்குக் கொஞ்சம் அதிகமாகத்தான் மனம் குழைகிறது. அவளுடைய சொற்கள், அவளுடைய அன்பு, அவளுடைய கோவிந்தன் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுக் கூடுதல்தான். பணியப் பணிய அவள் நிமிர்வும், நிமிர நிமிர அவள் பணிவும் வரைந்து காட்டிய சித்திரம் மிக அழகியது.
இந்த வகுப்பிலிருந்து எத்தனையோ சொற்கள் மனத்தை இழுத்து இழுத்து வைத்துக்கொண்டன, அவற்றிலிருந்து ‘மழை மொக்குளின்’ என்ற சொற்களை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்கிறேன். தேங்கிய மழைநீரில் சொட்டும் மழைநீர் உண்டாக்கும் குமிழிகளாம் இவ்வாழ்க்கைக் காட்சிகள்! சின்னஞ்சிறியது உருவாக்கும் பிரம்மாண்டம் பற்றிய வியப்பு அதிகரித்தபடியே இருக்கிறது.
மீண்டும் சென்னைக்கு ரயிலில் திரும்புகையில் முன்னிருக்கையில் இருந்த பிள்ளை, தன் பொம்மையை உணவுத் தட்டு வைக்கும் இடத்தில் உட்கார்த்திவிட்டு, கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அத்தனை தனிமையில் அந்த பொம்மையைப் பார்த்தபோது, தன்னை வைத்தாடும் கரங்களின் ஓய்தலைக் கொஞ்சமும் விரும்பாத, அவை மீண்டும் வந்து தூக்கிச் சுழற்றக் காத்திருக்கும் உயிர் என்றே தோன்றியது! வாழ்தல் இனிது!
நன்றி,
தென்றல்.