இவ்வளவு உழைப்பு மிக்க கட்டுரையை சமீபமாக வாசித்ததில்லை. சரியான ஆட்களே விஷ்ணுபுர விழா மேடைகளில் ஏறியிருக்கிறார்கள்.
ராஜகோபாலன்
மொழியாக்கமும் தமிழும்
கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே எழுதப்பட்டதாகக் கூறப்படும் தொல்காப்பியத்திலேயே நூல்களின் நான்கு வகைகளுள் மொழிபெயர்ப்பு நூலும் ஒருவகையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே”
(தொல்நூற்பா – 1597)
எனவே மொழிபெயர்ப்பு குறித்த தெளிவும் புழக்கமும் கிமு காலத்திலிருந்தே தமிழ் இலக்கிய மரபில் இருந்து வந்திருக்கின்றது. சங்க காலம் தொடங்கி பல்லவர் காலம் ஊடாக பல்வேறு வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்மொழிச் சொற்கள் இலக்கிய நூல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதனையடுத்து ஆங்கிலேயர்கள் அரேபியர்கள் என வேற்று நாட்டவர்கள் வணிகத்தின் பொருட்டு இந்தியாவிற்குள் ஆளுகை செலுத்தத் துவங்கியபின் ஆங்கிலம் உருது உள்ளிட்ட மொழிகளிலான நூல்களும் தமிழுக்கு வரத்துவங்கின. செயிண்ட் ப்ரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய Doctrina Christam – டாக்ட்ரினா க்றிஸ்தம் என்னும் பதினாறு பக்க கிறிஸ்துவக் கோட்பாட்டு நூல் ஆண்ட்ரிக்ஸ் பாதிரியாரால் ’தம்பிரான் வணக்கம்’ என்னும் பெயரில் 1578ஆம் ஆண்டில் வரிக்குவரி மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
இலக்கிய மொழிபெயர்ப்பு என எடுத்துக்கொண்டால், மும்பையில் பிறந்து சென்னையில் வளர்ந்த கிருபாபாய் சத்தியநாதன் ஆங்கிலத்தில் எழுதிய சகுனா மற்றும் கமலா ஆகிய இருநாவல்களும் அவை எழுதப்பட்ட 1890களிலேயே தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் ஆவணக்காப்பகத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டதை “நூற்றாண்டு கண்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்கள்” என்னும் கட்டுரையில் சா. கந்தசாமி குறிப்பிடுகிறார்.
தமிழுடன் நீண்டகால மற்றும் நெருங்கியத் தொடர்பு கொண்டவையாக இரண்டு மொழி இலக்கியங்களைக் கூறலாம்: இந்திய அளவில் வங்க மொழி, அயல் தேசத்தில் ரஷ்ய மொழி.
வங்க மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து சேர்த்தவர்களில் முதன்மையானவர் கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி என அறியப்பட்ட சு. கிருஷ்ணமூர்த்தி. 1955ல் வங்காளத்தில் சென்று பணியாற்ற நேர்ந்த அவர் 1960களிலேயே பல முக்கியமான வங்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துவிட்டிருந்தார். நீலகண்டப் பறவையைத் தேடி, காட்டில் உரிமைகள், தன் வெளிப்பாடு போன்ற நூல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதற்குமுன்பே, த. நா. குமாரஸ்வாமி சாந்திநிகேதனில் தங்கி தாகூரின் நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் தனக்கென ஓர் இடம்பிடித்திருந்தார்.
இதே போலவே 1968 முதல் 1978 வரை ரஷ்யாவிலேயே சென்று முன்னேற்றப் பதிப்பகத்தில் பணிபுரிந்த ரா. கிருஷ்ணையா ஏராளமான ரஷ்ய இலக்கியங்களை மூலமொழியிலிருந்து நேரடியாக தமிழுக்குக் கொணர்ந்தார். புத்துயிர்ப்பு, வெண்ணிற இரவுகள், மூலதனம் ஆகிய நூல்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம். அதற்கு முன்னதாக 1946ல் சட்டக்கல்லூரியில் பயின்ற போதே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கட்டுரைகளை மொழிபெயர்த்துவந்த கிருஷ்ணய்யா, 1954ல் சோவியத்நாடு இதழை தமிழில் கொணர்ந்த குழுவிலும் முக்கியப் பங்காற்றியிருந்தார். ரஷ்ய இலக்கியங்களை தமிழுக்குத் தந்ததில் பூ.சோமசுந்தரம். . நா. தர்மராஜன், ரகுநாதன் டி.எஸ்.சொக்கலிங்கம், பாஸ்கரன் ஆகியோரது பங்களிப்பும் அதிமுக்கியமானது. முன்னேற்றப்பதிப்பகம் மூலம் வெளிவந்த ஏராளமான ரஷ்ய நூல்கள் சமீபகாலம்வரைகூட வெறும் ஐந்து ரூபாய்க்கு தமிழகத்தில் கிடைத்திருக்கின்றன. இதற்கு வெகுமுன்னதாகவே 15ஆம் நூற்றாண்டிலிருந்தே ரஷ்யாவுடன் வணிகம் சார்ந்த தொடர்புகள் தமிழகத்திற்கு இருந்துவந்த நிலையில், தமிழை ஒரு படைப்பு மொழியாகக் கற்ற இலக்கியவாதி என பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞரும் மொழியியலாளருமான ஜெராஸிம் லெபதேவைக் குறிப்பிடலாம்.
அரசியல்பூர்வமாக கம்யூனிசம் என்கிற ரஷ்யாவின் கருத்தாக்கம் மீது தமிழர்களுக்கிருந்த வசீகரத்தைத் தாண்டி, ரஷ்ய வங்க இலக்கியங்களின் தத்துவார்த்தப் பார்வையும் மதம் ஆன்மீகம் மற்றும் உறவுகள் சார்ந்த விசாரணைகளும் இயல்பாகவே அவற்றிற்கு நல்கியிருக்கும் செவ்வியல் தன்மையின் காரணமாக இன்றளவும் அவை தொடர்ந்து தமிழ்வாசகர்களால் தேடவும் வாசிக்கவும் கொண்டாடவும் படுகின்றவையாய் இருக்கின்றன. குடும்ப அமைப்பிற்கான முக்கியத்துவம், இம்மை மறுமை சார்ந்த நம்பிக்கைகள் போன்ற குணநலன்கள் தமிழர் வாழ்வியலோடு ஒப்பிடத்தகுந்தவை என்பதும் வாசகர்களிடையே இவை செலுத்திவரும் ஆதிக்கத்திற்குக் காரணமாக அமைகின்றன.
இவற்றைக் கடந்து வெளியில் வந்து பார்த்தால் கிட்டத்தட்ட அதே 1960கள் தொடங்கி தமிழில் வரவேற்புப் பெற்று வருகிற மலையாளத்தைக் குறிப்பிட வேண்டும். நில அமைப்பிலும் திராவிட மொழிக்குடும்பம் என்னும் அடிப்படையிலும் மலையாளம் தமிழுக்கு நெருக்கமாய் இருப்பதைத்தாண்டி, முன்னரே குறிப்பிட்ட ரஷ்ய வங்க அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திவந்த கம்யூனிஸ சித்தாந்தம் மலையாளதேசத்திலும் முக்கியமானதாய் இருந்துவந்ததும் கணக்கில்கொள்ளவேண்டியதே.
இதனையடுத்து முக்கியத்துவம் பெறுபவை 1980களில் ஆரம்பித்து இன்றளவும் வெகு தீவிரமாக மொழிபெயர்க்கப்படுகிற லத்தீன் அமெரிக்க இலக்கியங்களாகும். 1982ல் மார்க்வெஸ் நோபல் பரிசு வாங்கியதிலிருந்து தன் ஆர்வம் லத்தீன் அமெரிக்காவின் மீது திரும்பியதாக மொழிபெயர்ப்பாளர் அமரந்தா குறிப்பிடுகிறார்.
இதற்கும் முன்னதாகவே பாரதியின் காலத்திலிருந்தே ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகம் ஆகத் தொடங்கியிருந்தன. ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்தவரை, ஷேக்ஸ்பியரின் கிட்டத்தட்ட அனைத்து நாடகங்களுக்குமே தமிழில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. பைபிளுக்கும் அப்படியே. பேக்கன், ஷெல்லி ஆகியோரது ஆக்கங்களும் தமிழில் வந்துகொண்டிருந்தன. காம்யூ, யூர்சினார், பால்ஸாக் ஆகியோரது ஆக்கங்களை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு வந்துள்ளவற்றிற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளல்லாம்.
ஐரோப்பிய ஆங்கில இலக்கியத்தில் தீவிர மேதைமை கொண்டிருந்த க.நா.சு முக்கியமான ஐரோப்பிய எழுத்தாளர்களை 1950கள் முதலே தமிழுக்குக் கொணரத் தொடங்கியிருந்தார். நிலவளம், மதகுரு, விருந்தாளி ஆகியவை சில எடுத்துக்காட்டுகள். அடுத்த தலைமுறையாக இருபதாம் நூற்றாண்டின் முக்கிய இலக்கியகர்த்தாக்களையும் நூல்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் பிரம்மராஜனின் பங்கு அடிப்படையானது. சமகால உலகக் கவிதைகள், இலையுதிராக் காடுகள் போன்ற அவரது நூல்கள் சில எடுத்துக்காட்டுகள்.
ஒரு அலைபோல மொழிபெயர்க்கப்பட்ட ரஷ்ய, வங்க, மலையாள, லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் மட்டுமல்லாது ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க, ஜப்பானிய, சீன, தெலுங்கு, கன்னட நூல்களும் தமிழுக்கு அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள முரகாமியின் நூல்களோடு, பத்து இரவுகளின் கனவுகள், தூங்கும் அழகிகளது இல்லம், கனலி பதிப்பகம் மூலம் வெளியான ஜப்பானியச் சிறுகதைகள் தொகுப்பு ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. தெலுங்கு, கன்னட, ஆஸ்திரேலிய நூல்கள் மூலமொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுவது சிறப்பு. யாத்வஷேம், காச்சர் கோச்சர், ஹென்றி லாஸன் கதைகள் போன்ற நூல்களை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
விருதுகளின் வழியாக:
பொதுவாகவே, நோபல், புக்கர், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை வெல்லும் நூல்கள் மொழிபெயர்ப்பில் முக்கியத்துவம் பெறுபவையாக இருக்கின்றன. தாகூர், நட் ஹாம்சன், காம்யூ, மார்க்வெஸ், யசுவநாரி கவபெட்டா என இது பல்வேறு தசாப்தங்களுக்கும் பொருந்தும். கூடவே அவற்றிற்கான பதிப்புரிமை பெறுவதில் உள்ள சாத்திய அசாத்தியங்களும் இதில் பங்குவகிக்கின்றன.
2022ல் நோபல் பரிசினை வென்ற அன்னி எர்னோவின் இருநூல்கள்(ஒரு பெண்மணியின் கதை, தந்தைக்கோர் இடம்) காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக 2023லேயே தமிழுக்கு வந்துவிட்டதை கவனிக்கவேண்டும். உலகின் பல்வேறு புத்தகச் சந்தைகளின் வாயிலாக புத்தக வர்த்தக நிறுவனங்களை அணுகி ஒப்பந்தங்கள் இடுவதற்கான வாய்ப்புகளை தமிழ்ப்பதிப்பகங்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.
பதிப்பக உரிமைகள் பற்றிக் குறிப்பிடும்போது, மறுபதிப்புக் காண இயலாத காரணத்தால் தற்போதைய வாசகர்களால் வாசிக்க இயலாமல் போகின்ற புத்தகங்களைப் பற்றியும் அவசியம் குறிப்பிட வேண்டும். மதனகல்யாணியின் கொள்ளை நோய் புதிய மொழிபெயர்ப்பில் தற்போது வெளிவந்துள்ளது. யுவன் சந்திரசேகரின் பெயரற்ற யாத்ரீகன் நூல்வனம் வழியாக மறுபதிப்பு கண்டுள்ளது, யுவான் ரூல்ஃபோவின் புத்தகங்கள் எதிர்வெளியீடு மூலம் வெளிவர இருப்பதாகத் தெரிகிறது. தூங்கும் அழகிகளின் இல்லம் உள்ளிட்ட வேறு சில நூல்களுக்கு இருக்கும் இதேபோன்ற பிரச்சனை களையப்பட்டு மீண்டும் வாசிப்பிற்குக் கிடைக்க வேண்டும்.
வகைமை(Genre)யின் அடிப்படையில்:
நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரைகள் என இலக்கிய வகைமைகளின் அடிப்படையில் பார்த்தால், நாவல்களும் கவிதைகளுமே பெரிதும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை ஒரு வாசகராக நாம் அனுமானிக்க முடியும். சொல்வனம் கனலி தமிழினி உள்ளிட்ட இணைய இதழ்களிலும் மணல்வீடு காலச்சுவடு உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் ஏராளமான சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டாலும் அவை புத்தகமாகத் தொகுக்கப்படுவது குறைவாகவே உள்ளது.
கவிதைகளைப் பொறுத்தவரை ரில்கே, ப்ரக்ட், சில்வியா ப்ளாத், அனா ஸ்விர், நெரூடா, புக்கோவ்ஸ்கி உள்ளிட்ட கவிஞர்கள் தமிழின் கவிதை வாசக உலகில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக உள்ளார்கள். பெர்ஸியக் கவிஞரான ரூமி இங்கு கோலோச்சும் விதம் பிரபல்யமானது. கலில் கிப்ரானும் அவ்வாறே.
யூமா வாசுகி உள்ளிட்டோரால் சிறுவர்களுக்கான நூல்கள் ஓரளவிற்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகையில், பதின்பருவத்தினருக்கான நூல்கள் அதிகம் மொழிபெயர்க்கப்படாமல்தான் உள்ளன. அவர்கள் விரும்பிப்படிக்கிற சீன அமெரிக்க காமிக்ஸ் சாகச நூல்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஹாரி பாட்டர், ஜுஜுட்சூ கைசன் இவற்றைக் கூறலாம். இவ்வகைமைகள் மொழிபெயர்க்கப்படுவதே இல்லை எனத் தோன்றுகிறது.
தற்போதைய இலக்கிய வாசகர்களின் பெரும்பான்மையினராக அடுத்து இருக்கப்போவது இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் குழந்தைகளே. அவர்களது வாசிப்பு மனநிலை பெரிதும் மாறியிருக்கிறது. சிறிய அளவிலான பத்திகளுக்கும் கதைகளுக்கும் புத்தகங்களுக்குமே அவர்கள் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தீவீர இலக்கியத்திற்கான வாசிப்புப் பழக்கத்திற்குச் செல்வதற்கு முன் சிறிய வடிவங்களைக் கொண்ட வகைமைகளில் இலக்கியங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவது முக்கியம். அதன் ஒருபகுதியாகவே உலக அளவில் குறுங்கதைகள் நுண்கதைகள் போன்றவை உருவாகி வருகின்றன.
குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு குறுங்கதைகளின் வரவு அதிகரித்துள்ளது. வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இதில் பின்வரும் பல்வேறு வகைமைகளைக் குறிப்பிடுகின்றனர்: 6 வார்த்தைகள் கொண்டவை – six-word story; 280 வார்த்தைகள் – ’character story’ அல்லது “twitterature”; 50 வார்த்தைகள் – “dribble” அல்லது “minisaga”; 100 வார்த்தைகள் -“drabble” அல்லது “microfiction”; 750 வார்த்தைகள் – “sudden fiction”, 1000 வார்த்தைகள் – “flash fiction” ; மற்றும் “microstory”. தற்போது இவ்வடிவில் எழுதி வருகிறவர்கள் ஏராளம் பேரை நியூ யார்க்கர் இதழ் அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி 2020ஆம் ஆண்டில் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் ஃப்ளாஷ் பிக்ஷன் சார்ந்து 250 எழுத்தாளர்களது படைப்புகள், இதழ்கள், கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்து நிறுவியுள்ளது. இதில் கடந்த தலைமுறையிலேயே குறுங்கதைகள் வடிவில் எழுதிவந்த ஹெமிங்க்வே முரகாமி போன்றோரும் அடங்குவர். தற்போதைய தலைமுறை குறுங்கதை எழுத்தாளர்கள் மட்டுமின்றி முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் குறுங்கதைகளும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பிரம்மராஜனின் போர்ஹே படைப்புகள் நூல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி – புத்தக வெளியீடுகள் – ஒரு ஒப்பீடு:
தமிழ் இலக்கிய உலகின் அதிமுக்கியத் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி 47வது ஆண்டாக தற்போதுதான் (3.01.24 முதல் 21.01.24 முடிய) நடந்து முடிந்தது. இதுவரை இக்கட்டுரையில் கூறப்பட்டுவந்த தகவல்களை, இந்தப் புத்தகக்கண்காட்சியில் மூன்று பதிப்பகங்களின் வாயிலாக வெளியாகியிருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் பட்டியலை உரைகல்லாக வைத்து சோதித்துப் பார்க்கலாம். மேலும் நான்கு பதிப்பகங்கள் இதுவரையில் மொத்தம் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பு நூல்களின் தரவுகளும் தரப்பட்டுள்ளன. (check the image attached)
புகைப்படத்தில் உள்ள அட்டவணையை வகைமையின் அடிப்படையில் பார்க்கும்போது காலச்சுவடு, எதிர் வெளியீடு, தமிழினி பதிப்பகத்தில் 2024 ஜனவரியில் வெளியிடப்பட்ட மொத்த நூல்களில் 25 சதவீத நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்களாக உள்ளன. கால்பங்கு நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள் என்பது மகிழ்ச்சி தரும் எண்ணிக்கைதான் என்றபோதும் அதில் கிட்டத்தட்ட 40 சதவீத நூல்கள் அபுனைவு நூல்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த அபுனைவிலேயும் பெரும்பாலானவை வரலாறு மற்றும் அரசியல் சார்ந்தவையே. இலக்கிய விமர்சனம் மற்றும் அயல் இலக்கிய அறிமுக நூல்கள் கிட்டத்தட்ட இல்லை. பயண நூல்கள் ஓர் ஆறுதல்.
பிற பதிப்பகங்களின் ஒட்டுமொத்த நூல்களில் ஐந்து சதவீதம் மட்டுமே மொழிபெயர்ப்பு நூல்களாக இருக்கின்றன. அதில் தொண்ணூறு சதவீத நூல்கள் புனைவுகள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. போலவே, கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்புகளின் எண்ணிக்கையும் இதில் அதிகம்.
புகைப்படத்தில் உள்ள பட்டியலை மூல மொழிகளின் அடிப்படையில் பார்க்கும்போது,
காலச்சுவடு நூல்கள், அல்பேனியா, ஃப்ரான்சு, மலையாளம், இந்தி, ஸ்லோவேனியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, இந்தோ ஆங்கிலம், வங்காளம் ஆகிய நாடுகளிலிருந்து/மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
எதிர் வெளியீடு நூல்கள் இஸ்ரேல், ஆங்கிலோ இந்தியா, ஆப்பிரிக்கா, பாலஸ்தீன், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து/மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழினி பதிப்பக நூல்கள் ஃப்ரான்ஸு, அமெரிக்கா, ஜெர்மன் ஸ்விஸ், ஜப்பான், வியட்நாம், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடையவையாய் இருக்கின்றன.
தமிழ்வெளியின் நூல்கள் பாலஸ்தீனம், சைனா, போர்ச்சுகீஸ், இத்தாலி நாடுகளைச் சேர்ந்தவையாய் உள்ளன.
யாவரும் பதிப்பக நூல்கள் லத்தீன் அமெரிக்கா, கனடா-ஸ்ரீலங்கா, நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.
மேற்கண்ட பதிப்பகங்கள் தவிர, சாகித்ய அகாதமி மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய இரு அமைப்புகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற புத்தகங்களை மொழிபெயர்த்துவருகின்றன.
இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில்:
இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ, பின்நவீனத்துவ, மாய யதார்த்த, பின்காலனத்திய இலக்கிய அலைகளைத் தமிழ்ச்சூழல் மிகுந்த ஆவலுடன் ஸ்வீகரித்துக் கொண்டது தெள்ளத் தெளிவு.
இவ்வகைமைகளின் மொழிபெயர்ப்புகள் இதே போன்ற நூல்கள் தமிழில் எழுதப்படவும் காரணமாக அமைந்தன. பின்நவீனத்துவ அலை குறித்து சாருநிவேதிதா தொடர்ந்து பேசி வருகிறார். அவரது ஆரம்பகட்ட புனைவுகள் இவ்வகைமையில் நன்கு அமைந்தவை.
ஆனால் பெண்ணியம், சூழலியல், அறிவியல் புனைகதைகள், மெய்யியல் சார்ந்த அறிமுகங்களும் மொழிபெயர்ப்புகளும் மிகமிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளன.
முதல் பத்தியில் உள்ள கருத்தாக்கங்கள் கூறும் மனநிலை ஒரே காலகட்டத்தில் உலகம் முழுவது உணரப்படுகின்றவையாய் இருந்ததும், ஒரு மூன்றாம் உலக நாடாக இரண்டாம் பத்தியின் கருத்தாக்கங்களது முக்கியத்துவத்தை இந்தியா உட்கிரகித்துக்கொள்வதில் ஏற்படுகிற கால தாமதமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இரண்டாம் பத்தியிலுள்ள கருத்தாங்கள் சார்ந்த நூல்கள் மொழிபெயர்க்கப்படுவது மட்டுமின்றி அவை குறித்த அறிமுக நூல்களும் தேவையான அளவு எழுதப்பட வேண்டும்.
மார்கரெட் ஆட்வுட்டின் ஆரிக்ஸ் அண்ட் க்ரேக், ரிச்சர் பவர்ஸின் தி ஓவர் ஸ்டோரி, ஸோஃபியா சமடாரின் டெண்டர் சிறுகதைத் தொகுப்பு போன்றவை சூழலியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள முக்கியமான புத்தகங்கள். ஆர்தர் சி க்ளார்க் அறிவியல் புனைகதை எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.
பெண்ணிய எழுத்துக்களில் சில்வியா ப்ளாத்தின் கவிதைகளில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, ஆட்வுட்டின் சேடிப்பெண் சொன்ன கதை தமிழில் வந்துள்ளது, இஸபெல் அயாந்தேவின் சில சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன எனினும் வர்ஜினியா வுல்ஃப், ஆலிஸ் வாக்கர், சிமன் தி போவா உள்ளிட்டோரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியதும் அவசியம்.
மெய்யியல் மற்றும் தத்துவார்த்தம் சார்ந்த நூல்களைப் பொறுத்தவரை, தோரோவை காந்தி தனது ஆதர்சமாகக் குறிப்பிட்டிருந்தபோதும் அக்கருத்தாக்கங்கள் சார்ந்த நூல்களுக்கான வரவேற்பு அதிகம் இல்லை. ஒப்பிட, ஹெர்மன் ஹெஸின் சித்தார்த்தா நூல் இன்றளவும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்க்கப்படுகின்றது. போலவே ஓஷோவின் நூல்களும் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவம், பின்நவீனத்துவம், மாய யதார்த்தம், இருத்தலியல், சர்ரியலிசம் உள்ளிட்ட பல்வேறு வகைமைகளுக்கு இணையானதாக பின்காலனியத்துவத்தையும் கூறலாம். ஜே எம் கூட்ஸியின் மானக்கேடு, அருந்ததி ராயின் சிறிய விஷயங்களின் கடவுள் ஆகியவை பின்காலனிய வகைமையில் தமிழுக்கு வந்துள்ள நூல்களுக்கான எடுத்துக்காட்டுகள். அப்துல் ரஸாக் குர்னாவின் மூன்று நூல்கள் சமீபத்தில் எதிர்வெளியீடு மூலம் வந்திருக்கின்றன.
பின்காலனித்திய வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது புலம்பெயர் வாழ்வு. ஆனால் புலம்பெயர் இலக்கியங்கள் தமிழில் போதுமான அளவு மொழிபெயர்க்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. வி எஸ் நெய்ப்பால், ஜும்பா லகரி போன்ற கடந்த தலைமுறை மட்டுமின்றி சமகாலத்தின் கென் லியூ, அனுக் அருட்ப்ரகாசம் போன்றோரும் மொழிபெயர்க்கப்படவேண்டியோரே. சமகாலப்புலம்பெயரிகள் எழுதிய சிறுகதைகளின் மொழிபெயர்ப்பான இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் நூல் இவ்வகைமையில் தமிழுக்கு ஒரு புது வரவு.
பல்கலைக்கழகங்கள் வாயிலாக:
மொழிபெயர்ப்பானது மாற்றுமொழி நூலை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மட்டுமின்றி அது ஒரு தனிப்பட்ட கலையாகவும் தற்போது வளர்ந்து வருகிறது. தமிழில் மொழிபெயர்ப்பவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ் இலக்கிய உலகின் பெரும்பாலான விழாக்கள் கூட்டங்கள் விருதுப்பட்டியல்களில் மொழிபெயர்ப்புக்கும் ஓர் இடம் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மூலமும் தற்போது நிறைய இந்திய நூல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. சாகித்ய அகாதமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் மாதிரியான அரசு அமைப்புகளும் நிறைய புத்தகங்களை மொழிபெயர்க்கின்றன.
என்றாலும், பல்கலைக்கழகங்களது மானியங்களுடனும் நல்கைகளுடனும் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலக்கியம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும் இடமாக கல்லூரிகளில் இருப்பதனால், சமகால உலக இலக்கியத்திற்கான அறிமுகத்தை பேராசிரியர்களும் மாணவர்களும் அறிந்துகொள்ள இது கூடுதல்வகை செய்யும். மேலும் ஃப்ரெஞ்ச், ரஷ்யா, ஸ்பானிஷ் போன்ற மொழிகளைப் பாடமாக எடுத்துப் பயிலும் மாணவர்களாலும் தமிழ் மொழிபெயர்ப்பு உலகிற்கு வளம் சேர்த்திட முடியும்.
குறிப்பு: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறையின் இணையப் பக்கத்தில் பின்வரும் நோக்கங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன: தமிழிலிருந்தும் தமிழுக்கும் மொழிபெயர்த்தல், மொழிபெயர்ப்பு சார்ந்த நுணுக்கங்களை ஆய்தல் மற்றும் ஆய்வுகளுக்குத் துணை நிற்றல், மொழிபெயர்ப்பு நுணுக்கங்களையும் திறன்களையும் கற்பித்தல். அவர்களின் செயல்பாடுகள் குறித்த தரவுகள் இக்கட்டுரையில் விடுபட்டுள்ளன. அவை இந்த உபதலைப்பிற்கு மேலும் வலுசேர்க்கக்கூடும்.
மூல மொழியிலிருந்து நேரடியாக:
கடந்த நூற்றாண்டின் முக்கியமான, இலக்கிய நடையின் போக்கை மாற்றிய, அதிகம் செல்வாக்கு செலுத்திய நாவல்களின் ஒன்றான ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன் நாவலது முதல்வரியான “Aujourd’hui, maman est morte,”குறித்த ர்யான் ப்ளூமின் கட்டுரை ஒன்று, அதன் முதல் வார்த்தை எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது என்பது அந்நூலின் முழுவாசிப்பின்மீது ஏற்படுத்துகிற செல்வாக்கைக்குறித்து விவாதிக்கிறது.
அந்நூலை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்டூவர்ட் கில்பர்ட் இவ்வாக்கியத்தை ”Mother died today” என்று மொழிபெயர்த்திருந்தார். maman என்கிற சொல்லை mommy என்றோ mama என்றோ மொழிபெயர்த்திருந்தால் இவ்வாக்கியத்தில் இருக்கிற உலர்ந்த உணர்வற்ற தன்மை சற்றுக் குறைந்துபோயிருக்கும், போலவே Today என்கிற சொல் முதலில் வந்திருந்தாலும் இவ்வாக்கியம் வாசகனில் ஏற்படுத்துகிற/ஏற்படுத்தத் தவறுகிற உணர்வெழுச்சியில் மாற்றம் இருந்திருக்கும் என விவாதிக்கிறார். இந்நூலுக்கான மாத்யூ வார்டின் சமீபத்திய ஆங்கில் மொழிபெயர்ப்பு “Maman died today.” எனத் தொடங்குகிறது. வாழ்வின் அபத்தம் குறித்த முக்கியமான நூலாகக் கருதப்படும் இதனை வெ ஸ்ரீராம் நேரடியாக ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்குக் கொணர்ந்திருந்தார். ஒருவேளை இதனை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தால் ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைத் தேர்வும் அதில் ஆதிக்கம் செலுத்தி இருக்கும். எனவே மூலமொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் நல்லது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, குப்தர் கால காளிதாசரின் சாகுந்தலம் தொடங்கி தற்போது நடைபெறுகிற பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் சார்ந்து எழுதப்படும் கவிதைகள் வரை தமிழுக்கான மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. உலகின் அனைத்து வகை இலக்கியங்களும் பல்வேறு முன்னோடிகளால் தொடர்ந்து தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பரந்துபட்ட வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்களாலும், மொழி மற்றும் இலக்கியம் மீதான காதல் கொண்டவர்களாலும் இது நிகழ்கிறதென்றாலும் அவற்றில் சில வகை இலக்கியங்கள் மட்டுமே வரவேற்புப் பெற்று அவ்வகைமையின்கீழ்வரும் அதிக எண்ணிக்கையிலான நூல்கள் மொழிபெயர்ப்பு பெறுகின்றன. இதனைப் பாதிக்கிற/முடிவுசெய்கிற காரணிகளாக கீழ்கண்டவற்றைப் பட்டியலிடலாம்:
– சர்வதேச, தேசிய அளவிலான விருதுகள்
– பதிப்புரிமை சார்ந்த சிக்கல்கள்
– அரசியல், தத்துவம் மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்து நம்மோடு ஒப்பிடவல்ல தேசத்தைச் சேர்ந்த நூல்கள்
– உலக அளவில் ஏற்படும் சமூக மாற்றங்களை (பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு) ஒரு மூன்றாம் உலகநாடாக நாம் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்வதில் இருக்கும் காலதாமதம்
– நூலின் வகைமை(genre)
– சமகால அரசியல் மற்றும் போர்ச்சூழல்கள்
– சமகாலத்தில் மேலெழுந்துவரும் இலக்கியக்கோட்பாடுகள் மற்றும் அக்கோட்பாடுகள் சார்ந்து வாசகர்களுக்கு இருக்கும் அறிமுகம்
– ஆன்மீக மற்றும் செவ்வியல் அடையாளம்
– சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்கள்
தற்கால அயல் இலக்கியங்களை ஆய்வு நோக்கில் தமிழுக்கு அறிமுகப்படுத்தும்படியான, அவற்றைத் தொடர்புபடுத்தும்/வேறுபடுத்தும் சித்திரத்தை அளிக்கும்படியான அபுனைவு நூல்கள் அதிகம் எழுதப்படாமல் இருப்பதை இன்றைய மொழிபெயர்ப்பு சார்ந்த போதாமையாகக்கூறலாம். வெறுமனே புனைவுகளை மட்டும் மொழிபெயர்த்துக்கொண்டே செல்வதோடல்லாமல், அவற்றின் முக்கியத்துவத்தைப் பேசுகிற, அவற்றை நம் வாழ்வோடு பொருத்தப்படுத்தி உரையாடுகிற அபுனைவு நூல்கள் அதிகமும் எழுதப்பட வேண்டும். அதற்கான பரந்த வாசிப்பிற்கும் உழைப்பிற்கும் நாம் தயாராக வேண்டும்.
(“பா வெங்கடேசன் ஒருங்கிணைத்த ஓசூர் புரவி இலக்கியக் கூடுகை முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் (ஏலகிரி, 2024 பிப். 24-25) நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம்”)