கண்ணனை அறிதல் – கடிதம்

அன்புள்ள ஜெ,

நீண்ட காத்திருப்பிற்கு பின் சென்ற வாரம் நடந்த நாலாயிர திவ்வியப் பிரபந்த வகுப்பில் கலந்து கொண்டேன்.

மன்னார்குடியில் பிறந்ததால் சிறு வயது முதல் ராஜகோபாலனை அருகில் சென்று வழிபடும் பேறு பெற்றிருக்கிறேன்.இடையர் கோலத்தில் ஒற்றை வஸ்திரத்தை இடையிலும், சிரசிலும் தரித்து, தன் குட்டித்தொப்பையையும், வளமையான குட்டி பிருஷ்டத்தையும் முன் பின் தள்ளி, ஆவினங்களை மேய்க்கும் கோலத்தில் ,
வாயில் குறுநகையுடன், கையில்சிறு கோலுடன் ஒய்யாரமாக, அன்று பூத்த மலர்‌போல என்றும் காட்சி தருவான்.

அவன் முன் நிற்கும்போதெல்லாம் இன்று இவனை கடத்தி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தோன்றும்.  சிறு பிள்ளையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு
வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழாத நாளில்லை.ஆழ்வார்களால் பாடப்படவில்லையே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும்,
பாடி இருந்தால் திவ்ய தேசத்தில் ஒன்றாக ஆகி கோவிலுனுள் கூட்டம் அதிகமாகியிருக்கும். ஊரார் கண் பட்டிருக்கும் என்று நினைத்து ஆறுதல் சொல்லிக் கொள்வேன்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!

இன்றும் திருப்பாணாழ்வாரின் இப்பாடலில் அவனைத் தவிர,
மற்ற எந்த கோவில்களிலும் கண் பொருத்தி நிலைப்பதில்லை.

சிறுவயதில் அவனைதேர்ந்த நண்பனாக பாவித்து உரையாடுவதில் இன்பம் இருந்தது‌.
இப்பொழுதோ அப்போதைய மனநிலைக்கு ஏற்றவாறு நான் தாயாக, அவன் பிள்ளையாக / நண்பனாக/நாயகனாக என்றெண்ணி உரையாடல் செல்கிறது.
மனதளவில் அவனருகில் இன்னும் நெருங்கிச்செல்ல சமீபகாலமாக புல்லாங்குழலையும் கற்று வருகிறேன்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்த பாடல்களை விளக்குவதற்காக ஆசிரியர் ஜாஜா அமைந்தது மீண்டும் எங்கள் பேறு.பாடல்களின் விளக்கத்தின் நடுவே,கோடிட்ட இடங்களை நிரப்புவதைப்போல, “எது இங்கே செய்யுது, யாரு சொல்றது?!”போன்ற  கேள்வியைக்கேட்டு அதற்கு சரியான பதில் சொல்பவருக்கு சாக்லேட் பரிசு என்று இரண்டரை நாட்களும் அவர்  எவ்வயதினராயினும் மாணவப்பருவத்திற்கு இட்டுச் சென்று அறிவு புகட்டியது தேர்ந்த நல்ஆசிரியரின் திறனைக் காட்டியது.

ஒவ்வொருவரையும் பாடலை உரக்க வாசிக்க வைத்துப் பொருள் கூறும் முறை மிக நேர்த்தி.பொருளை விளக்கும்போது கூறிய உவமைகள், குட்டிக்கதைகள் திருநெல்வேலி சார்ந்த உப கதைகள் அனைத்தையும்  திருநெல்வேலிக்காரர்களுக்கே  உரிய சிறு குறும்புடன் விளக்கியது ஆசிரியரின் நாவன்மை.

சில நாட்களுக்கு முன்பு நானும், சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் என் மகளும் பாலியல் வன்கொடுமையை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வன்கொடுமையை பெண்களின் பிரச்சனையாக மட்டும்  சமுதாயம் எண்ணுவதாக கேள்வி எழுப்பினாள்.அதற்கு நான் பெண்ணை போகப் பொருளாக அணுகும் ஆண்களின் சிந்தை தெளிந்தால் மட்டுமே சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறையும். பெண்களின் பிரச்சனை என்பதிலிருந்து பொதுப்  பிரச்சனையாக மாறும் என்றேன்.

இதே கருத்தினை வலியுறுத்தும் விதமாக, பாதியும் உறங்கிப் போகும் (2)ல் என்ற தலைப்பில் ஐந்தாவதாக ‘கொங்கை’ எனும் தொடங்கிய பாடலில் பெரியாழ்வார் பெண்மோகத்தினை குறிப்பிட்டு அதிலிருந்து விடுவித்து இறைவன் ஆட்கொண்டமையை விவரித்துருப்பார்.

இந்த பாடலை எடுத்துரைக்கும்போது ஆசிரியர் ஜாஜா, சென்ற வகுப்பில் பெண்களில் சிலர் இது பெண்ணை குறைத்து மதிப்பிடுவதாக எழுப்பிய வினாவிற்கு தான் உரைத்த பதிலை கூறினார். அதில் இங்கு பெண் மோகம் என்று குறிப்பிடுவது பெண்ணின் மீதான ஆணின் பார்வை அல்லது இச்சை என்பதை எடுத்துரைத்தார்.

பாடலின் வரிகள் பெண்ணை சிறுமைப்படுத்தும் பொருளில் அல்ல, அது ஆணின் சிறுமையை சுட்டுவது என சமுதாய அக்கறையுடன் உணர்த்திய ஆசிரியருக்கு நன்றி. பல பாடல்கள் தொடர்ந்து இருந்ததால், நேரமின்மை காரணமாக வகுப்பில் இக்கருத்தினை உடனே பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

இக்கடிதத்தில் என்னால் அடக்கி விட முடியுமா என்பது ஆசிரியர் எடுத்துரைத்த பாடலின் கவித்துவ மற்றும் சித்தாந்த பகுதிகள். சபரி ருசித்த பழம் போல் ஒவ்வொரு பாடலின் கவித்துவமும், சித்தாந்தமும் எங்களுக்கு வழங்கப்பட்டது எங்களின் நல்லூழ்.

சற்றும் தொய்வில்லாமல் ஒரு உரையாடலாகவும் பக்தி இலக்கியத்தை கொண்டு சேர்க்க முடியும் என்பது ஆசிரியர் ஜாஜாவுக்கு கிடைத்த வெற்றி. விடுபட்ட நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களுக்காகவும், கம்பராமாயணம் என ஆசிரியரின் தொடர் வகுப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

இரண்டரை நாட்கள் கண்ணனை சிறுபிள்ளையாக, நண்பனாக, தாயாக, நற்கதி ஊட்டும் தெய்வமாக அனுபவித்த பாவம் ஊற்றுக்கேணி போல் மனதில் சுரந்து கொண்டிருக்கிறது. இதனை அருளிட்ட  பெருங்கருணையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்து கோபால்.

முந்தைய கட்டுரைமுடிவிலா முகங்கள்
அடுத்த கட்டுரைதத்துவ வகுப்புகள் மீண்டும்?