ஒரு தனித்த புரவி

பெங்களூர் கட்டண உரை

பெங்களூரில் ஒரு கட்டண உரை நிகழ்த்தவிருக்கிறேன் – வரும் மார்ச் 30 அன்று.

எல்லா பெரிய சொற்பொழிவுகளுக்கு முன்னாலும் எனக்கொரு பதற்றம் உருவாகும். நான் தலைப்பு கொடுக்கும்போது ஒரு மாதிரி குருட்டடியாகத்தான் சொல்வேன். என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனைகளின் மையம் என நான் அப்போது நினைப்பதை ஒரு சொல்லிணைப்பாக ஆக்கி கொடுத்துவிடுவேன். அது அழைப்பிதழாகவோ  அறிவிப்பாகவோ வந்தால் அதைக் கண்டதும் திக் என்றிருக்கும். அந்த சொற்றொடருக்கும் எனக்கும் சம்பந்தமே இருக்காது. மிகவும் விலகி வந்துவிட்டிருப்பேன். அதைத் தொடர்ந்து ஒரு சொல் கூட யோசிக்க முடியாது.

என் இயல்பு, நான் திட்டமிட்டு யோசிக்க ஆரம்பித்தால்  உறைந்துவிடுவேன் என்பது. எத்தனை முட்டினாலும் சிந்தனை நகராது. ஒரே வழி ஏதாவது ‘லைட்’ ஆக வாசிப்பது. பி.ஜி.வுட்ஹவுஸ் தொகுத்த நகைச்சுவைக் கதைகள், பேய்க்கதைகள் என ஒரு பெரிய நூல் தொகுப்பு கையருகிலேயே வைத்திருக்கிறேன். அப்படியே மறந்து எங்கெங்கோ செல்லலாம். அண்மைக்காலமாக யூடியூபில் பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிறேன். சுட்டுச் சுட்டுத் தள்ளுகிறார்கள். பேசாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆனால் ஒரு பதைப்பு இருந்துகொண்டே இருக்கும். இரண்டு மணிநேரம் பேசவேண்டும். அதற்கு குறிப்புகளாகவே இருபது பக்கம் தேவைப்படும். தமிழ் மேடைப்பேச்சு என்பது கதைகள், சம்பவங்கள், திரும்பத் திரும்ப ஒரே இடத்துக்கு வருதல் என நீர்த்துத்தான் இருக்கும். இரண்டு மூன்று மணி நேரமெல்லாம் ஓரிரு வரிகளையே வெவ்வேறு வகையில் சொல்பவர்கள் உண்டு. புகழுடனும் இருக்கிறார்கள். ஆனால் நான் தொடக்கம் முதலே அப்படி அல்ல. செறிவாகப் பேசவேண்டும், முன்பு பேசாததை பேசவேண்டும் என்று எனக்கே ஆணையிட்டிருக்கிறேன். அப்படி என்னிடம் எதிர்பார்க்கச் செய்திருக்கிறேன்.

அத்துடன் கட்டண உரை என்பது கூடுதலான எதிர்பார்ப்பை அளித்து கூடுதலான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வது. அதற்காகவே கட்டண உரை. எந்த வகையிலும் ஒப்பேற்ற முடியாது. ஏற்கனவே யோசித்து, தெளிந்திருப்பவற்றை அங்கே பேசப்போவதில்லை. அங்கே நான் சிந்தனைசெய்து முன் செல்ல வேண்டும். அங்கே பயணத்துக்கான ஒரு வரைபடத்துடன் மட்டுமே செல்லவேண்டும். சென்றடையும் இடம் அங்கே நிகழவேண்டும். அங்கே முற்றிலும் புதியதாக எனக்கு ஏதேனும் சிக்கவேண்டும்.பெரும்பாலும் அப்படி வந்தவற்றையே மேலும் சிந்தித்து கட்டுரைகளில் முன்னெடுத்திருக்கிறேன். அது பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிந்தனை நிகழ்வதை நேரில் காணும் அனுபவம்தான்.

உலகமெங்கும் தத்துவவாதிகளின் வழி அதுவாக இருந்திருக்கிறது. இங்கும் அதை செய்தாலென்ன என்ற எண்ணமே இப்படி உரையாற்ற என்னை உந்தியது. அது பயனளித்தது. உரை என் வடிவமல்ல என்றுதான் இப்போதும் நம்புகிறேன். ஆனால் இப்படி எனக்கு பிரியமான முகங்கள் கண் முன் அரங்கென நிறைகையில், என்னுடன் சேர்ந்து வருபவர்களிடம் பேசுகையில்,  தீவிரம் கூடிவருவதையும் உத்தேசிக்காதவை நிகழ்வதையும் காண்கிறேன். எனக்கு இது முக்கியம், அவர்களுக்கு என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

ஆகவே ’கேட்டுத் தெரிந்துகொள்ள’ வரும் அரங்கினர் அதற்கு உகந்தவர்கள் அல்ல. உடன் பயணம் செய்ய முன்வருபவர்கள் தேவை. அவர்களில் பலர் குழம்பி விடலாம். அவர்களுக்கு விடைகளை விட கேள்விகள் கிடைக்கலாம். ஆனால் அந்த பயணம் அவர்களுக்குள் நிகழும். எனவே என் அரங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆனதாக இருக்கவேண்டும். அவர்களுக்கு நிபந்தனைகள் இருக்கவேண்டும். ஒரு சல்லடைக்குப்பின் அவர்கள் அரங்குக்கு வரவேண்டும். கட்டணம் அதைச்செய்கிறது என கண்டுவிட்டோம்.

ஆனால் அந்த பீதி தொடர்ந்து அழுத்துகிறது. ஒரு வரைபடமாக என் உரையின் வழியை அமைக்க இன்று அமர்ந்தேன். இரண்டு மணிநேரம் வீணாகப் போயிற்று. ஒன்றும் நிகழவில்லை. டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் இரண்டு வாசித்துவிட்டு படுக்கச் செல்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் என ஆறுதல் கொள்கிறேன். என்னை மீறி சில நடந்துவிடுகின்றன. அந்த தற்செயலையே கதைகள் எழுத எப்போதுமே நம்பியிருக்கிறேன். எல்லா கதைகளும் என்னை மீறி நடந்தவைதான். முதல் வரி எழுதுவது மட்டுமே என் முயற்சி. ஒரு நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் என்னை மீறி நிகழ்பவை. எல்லா அபிப்பிராயங்களும் அப்படித்தான். இந்த உரைக்கும் அதை நம்பலாம்.

ஆனால் கதை கட்டுரைகளில் அப்படி நிகழவில்லை என்றால் எவருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை. ஒரே தொடுகையில் முக்கால்வாசி எழுதிய நாவலை அழித்திருக்கிறேன். இங்கே முன்னால் வந்து அமரவிருக்கிறார்கள், டிக்கெட் எடுத்து பயணம் செய்து வந்து ,கட்டணம் கட்டி, செவிகொடுக்கிறார்கள். அது ஒரு சவுக்கோசை போல உடனிருக்கிறது. தயங்கி, பிடரி நடுங்கி, செவி கோட்டி, ஓசைக்குக் கூர்ந்து, முன்குளம்பு எடுத்து வைத்து,  அதை பின்னுக்கு இழுத்து நின்றிருக்கும் இப்புரவியை நான் இன்னும் நம்பித்தான் ஆகவேண்டும்.

கட்டண உரை, கடிதம்

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவம் மூன்றாம் வகுப்பு
அடுத்த கட்டுரைமுதல்கதவம்